2025 மே 19, திங்கட்கிழமை

ராஜீவ் வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனை: குறைக்க உதவுமா இந்திய சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள்?

A.P.Mathan   / 2013 மே 06 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஸாம் மாநில வழக்கு தமிழகத்தில் எதிரொலிக்கிறது. அம்மாநிலத்தில் மகிந்திர நாத் தாஸ் என்பவருக்கு வழங்கிய தூக்கு தண்டனையை மே மாதம் 1ஆம் திகதி ஆயுள்தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது இந்திய சுப்ரீம் கோர்ட். இந்த ஆயுள் தண்டனை குறைப்பு தமிழகத்தில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை மேலும் வலுப்பெற வைத்துள்ளது. இந்திய வரலாற்றில் "கருணை மனு" விவகாரம் இந்திரா காந்தி கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட "கேகர் சிங்" வழக்கிற்கு பிறகு, இப்போதுதான் இந்த அளவிற்கு பரபரப்பாக பேசப்படுகிறது. குடியரசு தலைவரின் அதிகாரம் என்ன? கவர்னரின் அதிகாரம் என்ன? நீதிமன்றங்கள் எந்தெந்த விஷயங்களில் தலையிட முடியும் என்பதெல்லாம் கடந்த ஒன்றரை வருடங்களாக இந்தியாவில் அனல் பறக்கும் விதத்தில் அலசப்படுகிறது என்றால் ராஜீவ் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் எழுந்த கோரிக்கையின் விளைவுதான். குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக சட்டமன்றமே இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்ற போடப்பட்ட தீர்மானத்தின் தாக்கம்தான் என்றால் மிகையாகாது.

"இருப்பதா, இறப்பதா"- ஷேக்ஸ்பியர்!
இந்த பிரசாரம் தொய்வின்றி தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி சென்னையில் கூட இந்த மூவருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை குறைக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கம்யூனிஸ்ட் கட்சியின் சீனியர் லீடர் நல்லக்கண்ணு, தமிழ் தேசிய தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் உரக்க குரல் எழுப்பினார்கள். ஒரு சிலர் இந்த வழக்கிலேயே இந்த மூவரும் சம்பந்தமில்லாதவர்கள் என்றே கூட பேசினார்கள். இதில் பேசிய வைகோ, "இருப்பதா அல்லது இறப்பதா என்பார் ஷேக்ஸ்பியர். இன்றைக்கு இந்த மூவரும் அது மாதிரி நிலையில்தான் இருக்கிறார்கள். இந்த மூவரின் தூக்குக்கயிறு நிச்சயம் அறுக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏழு கோடி தமிழ் மக்களின் உணர்வும் அதுதான். ஒருவேளை தூக்கு போடப்படுவார்களேயானால் அன்றோடு இந்தியாவின் ஒருமைப்பாடும் தூக்கிலிடப்படும். அந்த விபரீத விதையை தமிழ் மண்ணில் விதைக்காதீர்கள்" என்று எச்சரிக்கை விடுத்தவர், "தமிழகத்தில் பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி உள்பட அனைவரும் தூக்குத் தண்டனைக்கு எதிராகவே இருந்தார்கள்" என்பதை சுட்டிக்காட்டினார் வைகோ. இதுபோன்ற சூழ்நிலையில்தான் "தேவிந்தர் பால் சிங் புல்லர் வழக்கு", "மகிந்திரநாத் தாஸ் வழக்கு" என்ற இரு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பு மூவரின் தூக்குத் தண்டனை விவகாரத்தில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தேவிந்தர் பால் சிங் புல்லர் வழக்கும், கருணை மனுவும்!
முதலில் வெளிவந்த "தேவிந்தர் பால் சிங் புல்லர்" வழக்கில், "தூக்கு தண்டனை கயிற்றின் முன்பு நிற்பவர் கொடுக்கும் கருணை மனு மீது முடிவு எடுப்பதில் ஏற்படும் காலதாமதத்தை மனதில் கொண்டு பயங்கரவாத செயலில் ஈடுபட்டோருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது. கருணையே இல்லாமல் அப்பாவி மக்களை கொலை செய்தவர்களுக்கு எப்படி கருணை காட்ட முடியும்?" என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிங்வியும், முகோபாத்யாவும் தீர்ப்பளித்தார்கள். அது "மூவருக்கும் தூக்குத் தண்டனையை" குறைக்க வேண்டும் என்று தமிழகத்தில் எழுந்த குரலுக்கு கிடைத்த "அதிர்ச்சி தீர்ப்பு" என்றே கருதப்பட்டது. இந்த தீர்ப்பு "காலதாமதம்" என்ற காரணத்தைச் சொல்லி கருணை மனுக்களை ஏற்றுக் கொள்வதில் ஒரு புதிய நிபந்தனையை ஏற்படுத்தியது. குறிப்பாக "திருவேனிபன்" என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் இதுபோன்று காலதாமதத்தின் அடிப்படையில் கருணை மனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு வழி ஏற்கனவே அமைத்துக் கொடுத்தது. அது இந்திய சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சட்ட அமர்வு அளித்த தீர்ப்பு.

"திருவேனிபென்" வழக்கும், கருணை மனுவும்!
"கருணை மனுக்கள்" குறித்து, அந்த அமர்வு சொன்ன கருத்துக்கள் என்னென்ன? (1) கருணை மனுவின் மீது முடிவு எடுப்பதில் "தேவையில்லாத" காலதாமதம் இருந்தால் தண்டனை பெற்றவர் சுப்ரீம் கோர்ட்டை அணுகி தன் தண்டனையைக் குறைக்கக் கோரும் உரிமை உண்டு. அப்படி மனு வரும்போது நீதிமன்றம் இரு முக்கிய விஷயங்களை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று "எப்படிப்பட்ட காலதாமதம்" என்பதை பார்க்க வேண்டும். இன்னொன்று காலதாமதத்திற்கு பிறகு ஏற்பட்ட தொடர் சந்தர்ப்பங்கள் அல்லது விளைவுகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். (2) இது மாதிரி கருணை மனு மீது முடிவு எடுக்கும் முன்பு, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா அல்லது அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வேண்டுமா என்பதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். அதே சமயத்தில் இன்னொன்றையும் "திருவேனிபன்" வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெளிவு படுத்தியது. "இவ்வளவு காலம் தாமதம்" செய்தால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்றெல்லாம் வரைமுறை ஏதும் சொல்ல முடியாது என்றும் கூறியது. (3) காலதாமதம் என்று வரும்போது அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட காலதாமதத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தண்டனை பெற்றவர் ஏற்படுத்திய காலதாமதத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது- இப்படி மூன்று முத்தான ஷரத்துகள் அடங்கிய பரபரப்பு தீர்ப்பை "திருவேனிபன்" வழக்கில் சுப்ரீம் கோர்ட் சொன்னது. அதன் பிறகு, கருணை மனுக்களின் மீது முடிவு எடுப்பதில் ஏற்பட்ட காலதாமதம் பற்றி நீதிமன்றங்கள் எப்படி முடிவு செய்ய வேண்டும் என்ற ஒரு தெளிவு பிறந்தது என்றே கூட சொல்லலாம். இந்த தருணத்தில்தான் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த "தேவிந்தர் பால் சிங் புல்லர்" வழக்கின் தீர்ப்பில் "புதிய நிபந்தனை" வந்து விட்டது. இந்த வழக்கில், குறிப்பாக வெடிகுண்டு வழக்கில் சிக்கி தூக்கு தண்டனை பெற்ற புல்லர் ஒரு பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய குடியரசு தலைவரும், கருணை மனுவும்!
அடுத்ததாக இந்திய குடியரசு தலைவரின் இதுபோன்ற அதிகாரங்களுக்குள் எவ்வளவு தூரம் இந்திய சுப்ரீம் கோர்ட்டால் தலையிட முடியும் என்பதையும் "புல்லர் வழக்கில்" மீண்டும் சுட்டிக்காட்டியது. இந்திய அரசியல் சட்டம் 72 (குடியரசு தலைவருக்கு இருக்கும் தண்டனைக்குறைப்பு அதிகாரம்) மற்றும் 162 (மாநில கவர்னர்களுக்கு இருக்கும் தண்டனை குறைப்பு அதிகாரம்) போன்ற பிரிவுகளின் படி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுவதற்கு மிக குறைவான வாய்ப்புகளே உள்ளன என்று கூறியது. அதற்கு ஆதாரமாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் சொன்ன ஏழு தீர்ப்புகளை மேற்கோள் காட்டியது நீதிபதி சிங்வி தலைமையிலான பெஞ்ச். எப்படி தலையிட முடியும்? எவ்வளவு தூரம் தலையிட முடியும்? என்பதையும் இவ்வாறு குறிப்பிட்டார்கள் நீதிபதிகள். அதன் சாரம்சம் இதுதான், "இந்திய குடியரசு தலைவர் மற்றும் மாநில கவர்னர்கள் இது மாதிரி கருணை மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகளில் நீதிமன்றம் கீழ்கண்ட விஷயங்களில் மட்டுமே தலையிட முடியும். அவை (1) தனது மனதை செலுத்தாமல் முடிவு எடுத்திருந்தால் தலையிடலாம். (2) தேவையற்ற விஷயங்களை பரிசீலித்து முடிவு எடுத்திருந்தால் தலையிடலாம். (3) ஒருதலைப்பட்சமாகவோ, உள்நோக்கத்துடனோ முடிவு எடுத்திருந்தால் நீதிமன்றம் தலையிடலாம். இந்த மூன்று விஷயங்களின் அடிப்படையில் மட்டுமே குடியரசு தலைவரோ, மாநில கவர்னரோ எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும்"- இதுதான் "தேவிந்தர் பால் சிங் புல்லர்" வழக்கில் இந்திய நீதிபதிகள் சிங்வியும், முகாபத்யோயாவும் சொன்ன "முத்தான" விஷயங்கள்! இந்த வரைமுறைகள் ஏற்கனவே இந்திய குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் ஓர் அரசியல் சட்ட அதிகாரம். அந்த அதிகாரம் "தொடமுடியாதது" மட்டுமல்ல. "நெருங்க முடியாதது" என்று "மரு ராம்" வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ண ஐயர் கூறிய கருத்தின் அடிப்படையில்" சொல்லப்பட்ட விஷயங்கள்!

மகிந்திரநாத் தாஸும், கருணை மனுவும்!
"தேவிந்தர் பால் சிங் புல்லர்" வழக்கில் எந்த மாதிரியான விஷயங்களில் சுப்ரீம் கோர்ட் குடியரசு தலைவரின் அதிகாரங்களில் தலையிட முடியும் என்று சொன்னார்களோ அதைத்தான் இப்போது "மகிந்திரநாத் தாஸ்" என்ற அஸ்ஸாம் மாநில தூக்குத் தண்டனை கைதி மனுவின் மீது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் மகிந்திரநாத் தாஸ் கொடூர கொலையாளிதான் என்று கீழ் கோர்ட்டுகள் முடிவு செய்தன. ஏனென்றால் முதலில் ஒரு கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறான். அந்த வழக்கில் ஜாமினில் இருந்த நேரத்தில் இன்னொரு கொலை செய்கிறான். வெட்டிய தலையை ஒரு கையிலும், அதற்கு பயன்படுத்திய ரத்தம் தோய்ந்த ஆயுதத்தை இன்னொரு கையிலும் தூக்கிக் கொண்டு பொதுமக்கள் செல்லும் சாலையில் நடந்து பொலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஆஜராகிறான். ஆகவே, இதைவிட கொடூரமான கொலை எப்படியிருக்க முடியும் என்று கருதி நீதிமன்றங்கள் முதல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தாஸுக்கு, இரண்டாவது கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கிறது. உயர்நீதிமன்றமும், ஏன் சுப்ரீம் கோர்ட்டும் கூட அவனுக்கு இரக்கம் காட்டவில்லை. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது சரிதான் என்று முடிவு செய்து, தூக்கு கயிறு அவன் கழுத்தை இறுக்குவதற்கு தயாராக இருந்தது.

மகிந்திரநாத் தாஸை காப்பாற்றிய அப்துல்கலாம்!
இந்த நேரத்தில்தான் தன் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி இறங்கி விட்டு, கவர்னரிடம் மனு செய்கிறான். அங்கு கருணை காட்டப்படவில்லை. பிறகு இந்திய குடியரசு தலைவரிடம் கருணை மனு போடுகிறான். அந்த கருணை மனுவை நிராகரித்து அப்துல் கலாம் குடியரசு தலைவராக இருந்தபோது இந்திய உள்துறை அமைச்சர் கோப்பை அனுப்பினார். அதன் மீது குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் 30.9.2005 அன்று ஒரு குறிப்பு அனுப்புகிறார். அதில், "மகிந்திரநாத் தாஸின் செய்த கொலை திட்டமிட்ட கொலையாக தெரியவில்லை. மனநிலை ஒரே சீராக இல்லாத காரணத்தால் செய்த கொலை போல் தெரிகிறது. இந்த சந்தர்பத்தில் கருணை மனுவை ஏற்றுக்கொள்ளலாம். தாஸுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம். அந்த தண்டனை காலத்தில் மதகுருமாரை வைத்து தாஸுக்கு போதனைகள் செய்யலாம். மனநிலை சரியாவதற்கு அது பேருதவியாக இருக்கும்" என்று எழுதிய குறிப்பை இந்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்தார். "குடியரசு தலைவர் என்பவர் கருணை மனுக்கள் விஷயத்தில் அமைச்சரவை பரிந்துரையின் பேரில் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் அந்த பரிந்துரை வந்த பிறகு குடியரசு தலைவர் வழக்கின் அனைத்து தகவல்களையும் ஸ்கேன் செய்து பார்க்கலாம். கருணை காட்டலாமா வேண்டாமா என்பது பற்றி குடியரசு தலைவர் சுதந்திரமான முடிவுக்கு வரலாம்" என்று ஏற்கனவே பல்வேறு தீர்ப்புகளில் சுப்ரீம் கோர்ட் தெளிவாகக் கூறியிருக்கிறது. அதை வைத்துத்தான் அப்துல்கலாம் அப்படியொரு முடிவை எடுத்து இந்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பினார்.

ஆனால் உள்துறை அமைச்சகம் இந்த கோப்பை வைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கம் போட்டது. அப்துல்கலாம் பதவி விலகிய பிறகு புதிய குடியரசு தலைவராக பிரதீபா பாட்டில் வந்தார். அப்போதும் சில வருடங்கள் உருண்டோடின. திடீரென்று விழித்துக் கொண்ட உள்துறை அமைச்சர் 7.9.2010 அன்று குடியரசு தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி, "மகிந்திரநாத் தாஸ் சம்பந்தப்பட்ட கோப்புகளை அனுப்பி வையுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அந்த கோப்பு வந்த பிறகு, அதன் மீது மீண்டும் "மகிந்தரநாத் தாஸின் கருணை மனுவை நிராகரிக்கலாம்" என்று பரிந்துரை செய்தது இந்திய உள்துறை அமைச்சகம். குடியரசு தலைவராக இருந்த பிரதீபா பாட்டில் 8.5.2011 அன்று அதை ஏற்றுக் கொண்டார். மகிந்திரநாத் தாஸின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் கருணை மனு மீது முடிவு எடுக்க 12 வருடம் காலதாமதம் என்பதை சுட்டிக்காட்டி சுப்ரீம் கோர்ட்டிற்கு அப்பீல் செய்தான் மகிந்திரநாத் தாஸ். அந்த மனு மீதுதான் இப்போது இந்திய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதில்தான் "தேவிந்தர் பால் சிங் புல்லர்" வழக்கின் அளவுகோலை கையிலெடுத்து தீர்ப்பளித்துள்ளனர் நீதிபதிகள்.
குடியரசு தலைவரின் அதிகாரத்தில் தலையிட்ட நீதிபதிகள்!

நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யா ஆகியோர் அளித்த தீர்ப்பில், "கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்த போது அவர் முன்பு வைக்கப்பட்ட தகவல்கள் போதாது. குறிப்பாக அவருக்கு முன்பு இருந்த குடியரசு தலைவர் அப்துல்கலாம் கருணை மனுவை ஏற்கலாம் என்று எழுதிய குறிப்புகள் பிரதீபா பாட்டிலிடம் கொடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சர் கூட தனது குறிப்பில் அதை பதிவு செய்யவில்லை. அப்துல்கலாம் குறிப்பு அந்த கோப்பில் கூட இடம்பெற்றதா என்பதை மத்திய அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திடம் விளக்கவில்லை. அதற்கான ஆதாரங்களையும் சொல்லவில்லை. இந்நிலையில் குடியரசு தலைவர் தனது மனதை செலுத்தி, அனைத்து தகவல்களையும் ஆராய்ந்து மகிந்திரநாத் தாஸின் கருணை மனுவை பரிசீலிக்கவில்லை. ஆகவே குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்ததை தள்ளுபடி செய்கிறோம். மகிந்தரநாத் தாஸுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கிறோம்" என்று கூறியுள்ளார்கள். இந்த தூக்குத் தண்டனை ரத்து ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் பொருந்தும் என்பதுதான் தமிழ்நாட்டில் எழுந்துள்ள பிரசாரம். இதை வலியுறுத்தும் வகையில் ஏற்கனவே தமிழகத்தில் குரல்கள் வலுப்பெறத் தொடங்கிவிட்டன. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க வைத்துள்ளார். அவரிடம், "கருணை மனுவின் மீது முடிவு எடுப்பதில் 12 வருடம் காலதாமதம் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மகிந்திரநாத் தாஸுக்கு தூக்குத் தண்டனையை குறைக்கும் என்றால், ராஜீவ் வழக்கில் உள்ள மூவர் விஷயத்தில் 14 வருடம் காலதாமதம் இருக்கிறது. ஆகவே இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறையுங்கள்" என்று பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள் தி.மு.க. எம்.பி.க்கள். முதலில் தமிழக முதல்வரே அமைச்சரவையைக் கூட்டி பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்கள். ஆனால் கடைசியாக மூவரின் கருணை மனுவை நிராகரித்தது குடியரசு தலைவர் என்பதால், இந்தமுறை பிரதமரிடமே முறையிட்டு இருக்கிறார்கள். ஏனென்றால் அரசியல் சட்டப் பிரிவு 72இன் கீழ் குடியரசு தலைவருக்கு மத்திய அமைச்சரவைதான் பரிந்துரை செய்ய முடியும். அந்த பரிந்துரை மீதுதான் குடியரசு தலைவரும் முடிவு எடுக்க முடியும்.

இந்திய "தூக்கு தண்டனை" வரலாற்றில் ஏப்ரல் 14ஆம் திகதி வெளிவந்த தீர்ப்பு "தேவிந்தர் பால் சிங் புல்லர்" வழக்கு. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அந்த வழக்கில், "குடியரசு தலைவரின் அதிகாரத்தில் தலையிட எங்களுக்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே உள்ளன" என்று கூறி புல்லரின் தூக்குத் தண்டனையை நீக்க மறுத்தார்கள் நீதிபதிகள். அதே நீதிபதிகள் இப்போது மே 1ஆம் திகதி வழங்கியுள்ள தீர்ப்பு "மகிந்திரநாத் தாஸ்" வழக்கு. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்த வழக்கில், "குடியரசு தலைவர் கருணை மனுவை மனதளவில் பரிசீலித்த முடிவு எடுக்கவில்லை என்றால் அதில் நீதிமன்றம் தலையிடும்" என்று ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, மகிந்திரநாத் தாஸின் தூக்குத் தண்டனையை நீக்கி, ஆயுள் தண்டனை கொடுத்துள்ளார்கள் நீதிபதிகள். தூக்குத் தண்டனை விவகாரத்தில் 17 நாட்களுக்குள் வெளிவந்த இரு வேறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் ராஜீவ் வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற மூவருக்கு பொருந்துமா? உதவுமா? என்பதுதான் இப்போது தமிழகமே கேட்கும் கேள்வி. ஏன் இந்தியாவிலேயே உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கூட கேட்கும் கேள்வி!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X