2025 மே 19, திங்கட்கிழமை

கூட்மைப்பின் உள் முரண்பாடும் வடமாகாண சபை தேர்தலும்

A.P.Mathan   / 2013 மே 06 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபை தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்தமாதம் 20ஆம் திகதி வெலிஓயாவில் வைத்து கூறியபோதிலும் உண்மையிலேயே அரசாங்கம் அந்த அறிவித்தலுக்கு இணங்க அந்த தேர்தலை நடத்துமா என்பதைப் பற்றி பல்வேறு துறைகளில் சந்தேகம் எழுப்பப்பட்டுவருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அந்த சந்தேகத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அடுத்து 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாணசபை சட்டத்தின் கீழ் நிர்வாக ரீதியில் கிழக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்டு இருந்த வட மாகாணம், உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்பொன்றை அடுத்து 2006ஆம் ஆண்டு மீண்டும் கிழக்கு மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் இரண்டு முறை நடைபெற்ற போதிலும் வடமாகாண சபைக்கு இதுவரை தேர்தல் நடைபெறவில்லை. ஆளும் கட்சி தோல்வியடையும் என்ற பயமே அதற்குக் காரணமாகும்.

நாட்டிலுள்ள 9 மாகாணசபைகளில் வடமாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணசபைகளும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. எனவே வடமாகாண சபை மட்டும் தமது கட்டுப்பாட்டில் இல்லாமல் போவது ஆளும் கட்சிக்கு பெரும் பிரச்சினையல்ல. ஆனால் அந்தத் தோல்வி 1993ஆம் ஆண்டு தென் மாகாணசபைத் தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டியதைப்போல் வடமாகாணசபைத் தேர்தல் தமது ஆட்சிக்கு ஆப்பு வைக்குமோ என்று அரசாங்கம் அச்சப்படுகிறது.

1993ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சகல தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைதாங்கும் கூட்டணிகளே வெற்றிபெற்று வருவதைப்போல் 1977ஆம் ஆண்டுமுதல் 1993ஆம் ஆண்டுவரை ஐக்கிய தேசிய கட்சியே தேசிய மற்றும் பிராந்திய சகல தேர்தல்களிலும் வெற்றிபெற்று வந்தது. நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையின் காரணமாகவும் விகிதாசார தேர்தல் முறையின் காரணமாகவும் ஒரு கட்சி நாட்டில் பதவிக்கு வந்தால் வந்ததுதான். மற்றொரு கட்சி பதவிக்கு வருவது மிகவும் கடினமானதாகும். அதுதான் இப்போதும் நடைபெற்றுவருகிறது.

ஐ.தே.க.வின் உள் முரண்பாடுகள் காரணமாக 1993ஆம் ஆண்டு அக்கட்சி பலவீனமாக இருந்த நிலையில் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய 7 மாகாண சபைகளுக்கும் நடைபெற்ற தேர்தல்களின் போது 6 மாகாணசபைகளில் ஐ.தே.க. வெற்றிபெற்றது. எனினும் தென் மாகாணசபை தேர்தலில் குழப்பம் ஏற்பட்டு இரண்டாவது முறையாக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சி முதலான கூட்டணியொன்று வெற்றிபெற்றது.

17 ஆண்டுகளாக தொடர் தோல்விகளின் காரணமாக விரக்தியடைந்து இருந்த எதிர்க் கட்சிகள் பிரதான எதிர்க் கட்சியின் இந்த வெற்றியோடு உட்சாகம் பெற்று எழுச்சி பெற்றது. இந்த எழுச்சி வேறுபல காரணிகளின் உதவியோடு அதே ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களினூடாக ஐ.தே.க.வை ஆட்சி பீடத்திலிருந்தே தூக்கியெறியக்கூடிய அளவிற்கு trend setter ஆக அமைந்துவிட்டது.

இதுதான் இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திக்கும் இருக்கும் பயம். அன்று தென் மாகாண சபை, ஐ.தே.க.வின் ஆட்சியின் முடிவின் ஆரம்பமாக அமைந்ததைப்போல் வடமாகண சபைத் தேர்தல் தமது ஆட்சியின் முடிவின் ஆரம்பமாக அமையுமோ என்பதுதான் அரசாங்கத்தின் பயமாக இருக்கிறது போலும்.

இதனால் தான் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளாகியும் அரசாங்கம் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த தயங்கி வருகிறது. தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு கண்ணிவெடிகள் போன்ற காரணங்களை முன்வைத்தாலும் இதே அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேரதல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் போன்றவற்றை வடக்கில் நடத்தியமை உலகறிந்த விடயம்.

வடக்கில் கடந்தகாலங்களில் நடைபெற்ற அந்த அத்தனை தேர்தல்களிலும் ஆளும் கட்சியைவிட தமிழ் தேசிய கூட்டமைப்பையே தமிழ் மக்கள் ஆதரித்தனர். எவ்வளவுதான் அபிவிருத்தியைப் பற்றிப் பேசினாலும் அந்த நிலைமை மாறியிருக்கும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு இல்லை.

எனவே அரசாங்கம் செப்டெம்பர் மாதம் வடமாகாண சபைத் தேர்தலை நடத்துமா என்று பலர் நியாயமான சந்தேகத்தை கொண்டிருந்த போதிலும் அதனை நடத்தி வெற்றி பெற அரசாங்கம் சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.

வடமாகாண சபை வெற்றியானது அரசாங்கத்திற்கு தமது ஆட்சியை தொடர்வதற்கு மட்டும் தான் உதவப் போகிறது என்றில்லை. வடமாகாண சபையில் தம்மை ஆதரிக்கும் ஒரு தமிழர் முதலமைச்சராக 'தெரிவாகினால்' தமிழர்களும் தம்மோடு இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக அந்த முதலமைச்சர் அரசாங்கத்திற்கு உலக அரங்கில் நல்லதோர் காட்சிப் பொருளாகவும் மாறிவிடுவார் என்பது நிச்சயம். வடபகுதியில் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் உலக அரங்கில் எழுப்பப்பட்டுவரும் நிலையில் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு தமிழரே வட மாகாணத்தை நிர்வகிக்கிறார் என்ற நிலை வருமாயின் அது அரசாங்கத்திற்கு உலக அரங்கில் பெரும் வெற்றியாக அமையும்.

எனவேதான் அரசாங்கம் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரை தேர்தலில் நிறுத்தப் போகிறது போலும். பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயத்தைப் பற்றி தயா மாஸ்டருடன் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது. அன்று புலிகளுக்காக பேசியவர் இன்று அரசாங்கத்தின் சார்பில் சர்வதேச ஊடகங்களுக்கு பேசும் நிலை உருவாகினால் அது உலக அரங்கில் அரசாங்கத்திற்கு எந்தளவு பெரும் வெற்றியாக அமையும் என்பதை எவரும் ஊகித்துக் கொள்ள முடியும்.

வட மாகாணசபைத் தேர்தல் வந்தால் அரசாங்கத்திற்காக மேடைகளில் பேச முன் வருவது புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் மட்டுமல்ல. புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் மட்டுமன்றி பிரபாகரனுக்குப் பின்னர் புலிகளின் தலைவரான கே.பீயும் அப்போது அரசாங்கத்திற்காக மேடையேறலாம்.

இந்தநிலையில் தாமும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக நாட்டில் ஏனைய கட்சிகளும் கூறிவருகின்ற போதிலும் அவை போதியளவு பலத்தோடு இருப்தாக தெரியவில்லை. பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே.க.வோ அல்லது நாட்டில் மூன்றாவது அரசியல் சக்தியாகக் கருதப்படும் மக்கள் விடுதலை முன்னணியோ வடக்கில் அடித்தளம் இல்லாத கட்சிகள் என்றே கூற வேண்டும்.

அரசாங்கத்திற்கு சவாலாகக் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் பதிவு சம்பந்தமாக எழுந்துள்ள உட்கட்சி சர்ச்சையின் காரணமாக பிளவுபடும் நிலையில் இருப்பதாக அண்மையில் சில செய்திகள் கூறின. அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிப் பிரச்சினை காரணமாக வடக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் முரண்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வடமாகாண சபைத் தேர்தல் வருமாயின் இவை அரசாங்கத்திற்கு சாதகமான நிலைமைகளாகும்.

தற்போது நாட்டில் மாகாணசபைகள் இருந்த போதிலும் அரசாங்கம் தொடர்ந்து அவற்றின் அதிகாரங்களை பறித்துவருகிறது. எப்போதும் மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சியே மாகாணசபைகளிலும் அதிகாரத்தில் உள்ளதால் இந்த அதிகார பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வருவதில்லை. அந்த அர்த்தத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற அதிகார பரவலாக்கலை பூரணமாக ஆதரிக்கும் கட்சியொன்று வடக்கில் பதவிக்கு வருவது அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு சாதகமான நிலைமையாகும். ஏனைய எதிர்க்கட்சிகள் பதவிக்கு வருவதைப் பற்றி நினைத்தும் பார்க்கமுடியாது.

அதேவேளை நாட்டில் எதிர்க்கட்சியொன்று இல்லாததைப் போன்ற நிலைமை உருவாகியிருக்கிறது. எனவே அரசாங்கம் நினைத்ததையெல்லாம் செய்கிறது. நடைமுறையில் எதை செய்தாலும் ஜனாதிபதியும் நாட்டில் பலமான எதிர்க்கட்சியொன்று இருக்கவேண்டும் என்று பலமுறை கூறியிருக்கிறார். எனவே அந்த அர்த்தத்திலும் குறைந்தபட்சம் மாகாண சபையொன்றிலாவது எதிர்ப்புக் குரல் எழுப்பக்கூடிய கட்சியொன்று அதிகாரத்தில் இருப்பது நாட்டின் ஜனநாகத்திற்கு உதவியாகவே அமையும். அதைத் தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபையில் பதவிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு பெரிதாக வேறு நன்மை ஏதும் ஏற்படும் என்பதற்கில்லை.

ஆனால் அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிவினைவாத சக்தியொன்றாகவே தென் பகுதி மக்களுக்கு காட்டி வருகிறார்கள். போர் நடைபெற்று வந்த காலத்தில் கூட்டமைப்பு புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியென்று கூறிவந்ததையே அவர்கள் அதற்காக எடுத்துக் காட்டுகிறார்கள். இது தொடர்பாக கூட்டமைப்பின் நிலைப்பாடும் தெளிவில்லை. விந்தை என்னவென்றால் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக களத்தில் போரிட்ட முன்னாள் புலித் தலைவர்களையே தம்மோடு வைத்திருக்கும் அரசாங்கம், புலிகளின் முன்னாள் ஆதரவாளர்களை காட்டி தென்பகுதி மக்களை பயமுறுத்துவதே.

மறுபுறத்தில் கூட்டமைப்பும் சிலசமயங்களில் தென் பகுதி மக்களை குழப்புகிறது. கூட்டமைப்பு தனிநாட்டை இன்னமும் ஏற்கிறதா? அல்லது நிராகரிக்கிறதா? என்பதைப் பற்றி தென் பகுதி மக்களிடையே தெளிவு இருப்பதாக தெரியவில்லை.

அது அவ்வாறிருக்க, குறைந்தபட்சம் மாகாண சபையொன்றிலாவது எதிர்ப்புக் குரல் எழுப்பக்கூடிய கட்சியொன்று அதிகாரத்திற்கு வருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள பதிவுப் பிரச்சினை பெரும் இடையூறாக அமையும் என்பது தெளிவான விடயமாகும். பிளவுபடும் அளவிற்கு இந்தப் பிரச்சினை விவகாரமாகி விடுவதாயின் ஏன் அதைப் பெரிதாக்க வேண்டும்? கடந்த காலங்களில் போல் தத்தமது கட்சிகளின் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு கூட்டாக தேர்தல்களில் போட்டியிட வேண்டியதுதானே?

தேர்தல் நடைபெறும் என்று நிச்சயித்து கூற முடியாதுதான். நடந்தால் இந்த குழப்பம் அரசாங்கத்திற்கே சாதகமாக அமையும். எனவே சிலவேளை அரசாங்கமே முன் வந்து கூட்டமைப்புக்குள் இருக்கும் இந்த குழப்பத்தை வளர்த்துவிடக் கூடும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X