2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையப் போகிறதா?

A.P.Mathan   / 2013 மே 13 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.சஞ்சயன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பான ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவற்காக, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகை தலைமையில் நடத்தப்பட்ட கூட்டம் இணக்கப்பாடு ஏதுமின்றி முடிவடைந்துள்ளது.
 
வடக்கு மாகாணசபைத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்ற சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பான சிக்கலும் தீவிரம் பெற்று வருகிறது. இந்தப் பதிவுச் சிக்கல், இதற்குத் தீர்வு காண்பதற்காக நடத்தப்பட்டுள்ள கலந்துரையாடல்கள் எல்லாமே – மேன்போக்காக ஒரு விடயத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
 
அதாவது, வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துப் பலவீனப்படுத்துவதற்கான தூண்டுதல்கள் அதிகரித்துள்ளன என்பதே அது. இது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், இத்தகைய தூண்டுதல்களும், முயற்சிகளும் தான், இந்தவேளையில் அவசர பேச்சுக்கள், கலந்துரையாடல்களில் இறங்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளன.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஐந்து கட்சிகளும் மட்டுமன்றி, அதற்கு வெளியே உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளது.
 
உண்மையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கும், இந்தப் பதிவுச் சிக்கலுக்கும் தொடர்புகள் இல்லை. ஏனென்றால், மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்குப் போதிய காலஅவகாசம் கிடைக்கப்போவதில்லை.
 
ஆனாலும், வடக்கு மாகாணசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விவகாரம் தலையெடுத்திருப்பதைப் பார்க்கும்போது, தமிழ் மக்களிடத்தில் பல்வேறு கேள்விகள் எழுவது இயல்பு. வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தி விடவேண்டும் என்று விரும்பும் சக்திகளின் தூண்டுதல்களுக்கு யாரேனும் ஆளாகியிருக்கலாம். அதைவிட, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இறுக்கமான போக்கில் உள்ள தமிழரசுக் கட்சியை தமது வழிக்குக் கொண்டு வரலாம் என்று ஏனைய கட்சிகள் நினைத்திருக்கலாம். இந்த இரண்டு காரணங்களில் ஒன்று அல்லது இரண்டுமே கூட, இப்போதைய அழுத்தங்களின் பின்னணியில் இருந்திருக்கலாம்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளைப் பொறுத்தவரையில், தாம் எழுப்பும் பிரச்சினையில் நியாயம் இருப்பதாகவோ, இந்தச் சூழலில் இதை எழுப்புவதால் தமக்கு நியாயம் கிடைக்கும் என்றோ கருதியிருக்கலாம். ஆனால், பொதுப்படையாக தமிழ் மக்கள் இந்த விவகாரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது குறித்து அந்தக் கட்சிகள் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
 
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள சிக்கலை, தேவையற்றதொரு அதிகார மோதலாகவே பார்க்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்துகொள்வதில், தமிழரசுக் கட்சி காட்டி வருகின்ற இறுக்கமான போக்கையும் சரி, அதற்காக பிடிவாதம் காட்டும் ஏனைய கட்சிகளின் போக்கையும் சரி, எவரும் நியாயமானதொன்றாக கருதவில்லை.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் - இன்னும் வலுப்பெற வேண்டும் என்பதே பெரும்பாலான தமிழர் மக்களின் நிலையாக உள்ளதேயன்றி, அதிகாரச் சிக்கலாக இந்தப் பிரச்சினை உருவெடுப்பதை அவர்கள் விரும்பவில்லை.
 
ஆனால், இதனை அதிகாரச் சிக்கலாக உருவகப்படுத்தி, முறுகல் நிலையை தோற்றுவிக்கவும், பலவீனப்படுத்தவும் பிற தரப்புகள் மட்டுமன்றி ஊடகங்களும் கூட முனைகின்றன என்பதில் சந்தேகமில்லை.
 
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்த முயற்சிகளிலும் முன்னேற்றம் எட்டப்படாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்குள் முரண்பட்டுக் கொள்வது ரசனைக்குரிய அரசியல் நகர்வாக ஒருபோதும் அமையாது.
 
வடக்குத் தேர்தலை வைத்து தமிழரசுக் கட்சியை மிரட்டும் போக்கு எந்தளவுக்கு மட்டமானதாக மதிக்கப்படுகிறதோ, அதேயளவுக்கு, முன்னாள் ஆயுத அமைப்புகள் என்று அடையாளப்படுத்தி ஏனைய கட்சிகளை ஒதுக்க முனைவதும் மட்டமான செயலே.
 
தமிழரசுக் கட்சி தம்மைக் கறைபடியாத கரங்கள் என்று சொல்லிக் கொள்வதை உலகம் வேண்டுமானால் நம்பலாம். ஆனால் தமிழரசுக் கட்சியின் இன்றைய தலைவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டத்தைத் தூண்டியவர்கள், தூண்டும் விதத்தில் செயற்பட்டவர்கள் என்ற வரலாற்றை மறந்து போய்விட முடியாது.
 
தமிழரசுக் கட்சியின் வாதத்தின்படி பார்த்தால், முன்னாள் போராளிகளுடன் விரோதப்போக்கைக் கடைப்பிடிக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்ப வைக்கும். இப்போது உள்ள பிரச்சினை யார் கறைபடிந்தவர்கள் என்பதல்ல. ஒன்றுபட்டு நிற்றலே முக்கியமான பிரச்சினை. அதற்காகத் தான் மன்னார் ஆயர் உள்ளிட்ட சிவில் சமூகம் முயற்சிக்கிறது.
 
இந்த முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றி பெறப்போகிறது என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கைகளில் தான் உள்ளது.
 
அனுபவம்மிக்க தலைவர்கள், சட்டத்தரணிகள், ஆயுதமேந்திப் போராடிய தலைவர்கள் என்று பல முகங்களைக் கொண்டவர்கள் இருந்தாலும், இவர்கள் எல்லோருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே முகம் இருப்பதையே தமிழ் மக்களின் விருப்பமாக இருக்கும்.
 
இன்னொரு கட்டத்தை நோக்கி நகர வேண்டியுள்ள சூழலில், சுயமுகங்களை தலைவர்களை வெளிப்படுத்த முனைவது தான் தமிழர் தரப்பில் பெருங்கவலைக்குரிய விவகாரமாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள இந்தச் சிக்கல் ஒன்றும் தீர்க்கப்பட முடியாத ஒன்று அல்ல.
 
இந்தச் சிக்கலில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவிலேயே விடுபடத் தவறினால், தொடர்ந்தும் நீளுகின்ற ஒன்றாக இருக்குமேயானால், தமிழ் மக்களுக்கு ஒரு சந்தேகம் பிறக்கும். தமக்குள் உள்ள சிக்கலையே பேசித் தீர்க்க முடியாத தலைவர்களா, தமிழர்களின் தேசியப் பிரச்சினையை அரசுடன் பேசித் தீர்க்கப் போகின்றனர் என்பதே அது.
 
அத்தகைய கேள்வியை - சந்தேகத்தை தமிழ் மக்களிடம் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் அனைத்தினதும் பொறுப்பு. அத்தகையதொரு கேள்வி தமிழ் மக்களிடம் எழுந்து விட்டால், அது தமிழ் மக்களின் சார்பில் பேசும் சக்தியாக இன்று, சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இருந்து கூட, தூக்கி வீசப்படும் நிலை ஏற்படலாம்.
 
ஏனென்றால், தமிழர் தரப்பின் பிரதிநிதி என்பதை நிர்ணயிக்கப்போவது - எந்தவொரு கட்சியோ, அதன் சின்னமோ, அதன் பெயரோ அல்ல. ஜனநாயக ரீதியாக தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் தமிழ் மக்களே.

You May Also Like

  Comments - 0

  • shan Tuesday, 14 May 2013 10:38 AM

    தமிழ் கட்சிகள் கூட்டாக போட்டியிட வேண்டும். ஆனால் சில கட்சிகள் விட்டிட்டு போகலாம். ஓட்டு வாங்கின பிறகு அது மாத்திரமில்லை அரசாங்கத்திடம் போய் சேரலாம். அது கவனிக்க வேண்டும்.

    Reply : 0       0

    hasifa Wednesday, 15 May 2013 08:56 AM

    விரைவில் நடக்கலாம். இந்த தலைமைத்துவத்தை உடைப்பதே இப்போதைய தலைமைத்துவம் தயாராக இருக்கிறது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X