2025 மே 19, திங்கட்கிழமை

வேடிக்கையான காணி, பொலிஸ் அதிகாரங்கள்

Menaka Mookandi   / 2013 மே 17 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தேச வட மாகாணசபைத் தேர்தலைப் பற்றி அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். முன்னர் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தற்போது வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்று கூறுகிறார்.

அமைச்சர் விமல் வீரவன்ச, தேர்தலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக கூறுகிறார். அதே அமைச்சர் வீரவன்ச, மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அவற்றிடமிருந்து நீக்கிவிட்டு வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் தாம் அதனை எதிர்ப்பதில்லை என்றும் கூறுகிறார்.

அதேவேளை இரண்டு வருடங்களுக்கு முன்னர் வட மாகாணசபைத் தேர்தலை நியாயமாக நடத்தி அதில் வெற்றி பெறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் முன் அம்பலப்பட இடமளிக்க வேண்டும் என்று வாதாடிய ஜாதிக்க ஹெல உருமய கட்சி, இப்போது 13ஆவது அரசியலமைப்பை ரத்துச் செய்வதற்காக சட்டமூலமொன்றை முன்வைக்க இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் வட மாகாணசபைத் தேர்தலோடு மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துவதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. ஆனால் மற்றைய இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை பின்னர் நடத்தவும் வட மாகாண சபைக்கான தேர்தலை மட்டும் செப்டெம்பர் மாதம் நடத்தவும் இப்போது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அதே பத்திரிகைகள் கடந்த செவ்வாய்க்கிழமை கூறின.

வட மாகாண சபைத் தேர்தலுக்கு அரசாங்கம் எந்தளவு பயந்து இருக்கிறது என்பதையே இந்த குழப்பம் மற்றும் தடுமாற்றத்தின் மூலம் தெரிகிறது. இதன் காரணமாக அரசாங்கம் ஏதாவது சாக்குப் போக்குக் கூறி இம்மாகாண சபைத் தேர்தலை ஒத்திப் போடலாம் என்று சிலர் கூறுகின்றனர். அமைச்சர் வீரவன்ச மூலம் வட மாகாண சபைத் தேர்தலுக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்து அதனை காரணமாகக் காட்டி அரசாங்கம் அத்தேர்தலை ஒத்திப் போடலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகிறார்.

அதுவும் நியாயமான சந்தேகம் தான். சிலவேளை 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்வதற்கான ஹெல உருமயவின் உத்தேச சட்ட மூலமும் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தோடு கொண்டு வரப்படுவதாகவும் இருக்கலாம். அந்த சட்ட மூலம் தனிப்பட்ட உறுப்பனரின் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும் அதனை எதிர்க்க எந்தக் கட்சியைச் சேர்ந்தாலும் பெரும்பான்மையின உறுப்பனர்கள் தயங்குவார்கள்.
 
இது உண்மையிலேயே அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் தான் முன்வைக்கப்பட்டதாக இருந்தால் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் இருப்பதால் நிச்சயமாக அது நிறைவேறும். அத்தோடு மாகாண சபைகள் இல்லாமல் போய்விடும். அரசாங்கத்தில் உள்ள இருநூறுக்கு மேற்பட்ட மாகாண சபை உறுப்பினர்கள் அதனை விரும்புவார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

எவ்வாறாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாத நிலை ஏற்பட்டால் அரசாங்கம் நிச்சயமாக வட மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தும். அப்போது ஆளும் கட்சியே அம்மாகாணத்திலும் வெற்றி பெறும். அதன் பின்னர் போர் இடம்பெற்ற சகல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தம்மை ஆதரிப்பதாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் கூறித் திரியும். சில தமிழ் தலைவர்களும் அரசாங்கத்தின் இந்த நோக்கத்திற்கு அமைய செயற்பட்டு வருவதாக தெரிகிறது. 
 
அமைச்சர் விமல் வீரவன்ச மட்டுமின்றி வேறு சில அமைப்புக்களும் இப்போது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளிடமிருந்து அகற்றிவிட்டு வட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கூறி வருகின்றன. இதனை பொதுவாக சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். தமிழ் மக்கள் மீதான நம்பிக்கையின்மையையே இது எடுத்துக் காட்டுகிறது. இந்த அதிகாரங்களை பாவித்து தமிழ் மக்கள் தனி நாடாக பிரிந்து செல்லக்கூடும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

நீண்ட கால பிரிவினைவாத போரொன்றுக்குப் பின்னர் சிங்கள மக்கள் அவ்வாறு சிந்திப்பதில் நியாயம் இல்லாமலும் இல்லை. தற்போதைய தமிழ்க் கட்சிகளின் சில தலைவர்கள் புலம்பெயர் தமிழர்களின் மனதை கவருவதற்காக சிலவேளைகளில் பேசும் பேச்சுக்களும் அதற்குக் காரணமாகும்.

ஆனால் தமிழ் மக்கள் விரும்பினாலும் நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் பாவிப்பதற்கு மாகாண சபைகளுக்கு 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் காணி அல்லது பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவ்விடயங்கள் தொடர்பான பூரண அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை.

அவ்விடயங்கள் தொடர்பாக மாகாண சபைகள் எடுக்கும் எந்தவொரு பாரதூரமான முடிவையும் இரத்துச் செய்யும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கும் வகையிலேயே 1987ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை வரைந்திருக்கிறார். எனவே பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கக் கூடாது என்ற சிங்கள் தலைவர்களின் வாதமானது சிங்கள் சாதாரண மக்களின் இன உணர்வுகளை தூண்டி அரசியல் இலாபம் பெறுவதற்கு எடுக்கும் முயற்சியேயன்றி வேறொன்றுமல்ல.

காணி மற்றும் பொலிஸ் ஆகிய இவ்விரண்டு விடயங்களும் உணர்வுகளுக்கு மிகவும் சமீபமான விடயங்களாகும். காணி உரிமையானது ஓரிடத்தில் ஒருவரது இருப்பை உறுதிப்படுத்துகிறது. காணிப் பிரச்சினைகளால் நாட்டில் மட்டுமன்றி உலகில் எங்கும் பல சந்தர்ப்பங்களில் குடும்பங்களும் பிரிந்துள்ளன. அந்நிய சமூகமொன்று காணிகளை பிடித்துக் கொள்வது என்ற எண்ணமே எந்தவொரு சமூகத்தையும் கிளர்ந்தெழச் செய்யும்.

அதைத் தவிர வட மாகாண சபைக்கு காணி அதிகாரத்தை வழங்குவதில் சிங்கள மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்பேவதில்லை. வடக்கில் உள்ள அரசாங்க காணிகளை எவரும் பிடித்துக் கொள்ளலாம் என்று அரசாங்கம் பிரகடனப் படுத்தினாலும் அதற்காக எத்தனை சிங்களவர்கள் அங்கு செல்வார்கள்? கிழக்கில் தீகவாபீ விகாரையை சுற்றியுள்ள காணிகளில் குடியேறவே அவ்விகாரையைப் பற்றி கூச்சலிடும் எவரும் முன்வருவதில்லை. ஏனெனில் அங்கு வசதிகள் இல்லை.

பொலிஸ் அதிகாரமும் அதேபோன்று உணர்ச்சிகரமான விடயமாகும். ஏனெனில் அது பாதுகாப்பு சம்பந்தமான விடயமாக இருக்கிறது. இந்த அதிகாரம் குறிப்பிட்ட ஒரு இனத்திடம் போய்ச் சேர்வதை மற்றைய சமூகங்கள் விரும்புவதில்லை. 

ஆனால் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் போது ஜனாதிபதி ஜயவர்தன விருப்பத்தோடு அவற்றை வழங்கவில்லை. எனவே அவர் கூடிய வரை மத்திய அரசாங்கம் மாகாணசபை விடயங்களில் தலையிடக் கூடிய வகையிலேயே அவற்றுக்கு அதிகாரங்களை வழங்கியிருக்கிறார் மாகாண சபைகளுக்கும் மத்திய அரசாங்கத்தற்கும் பொதுவாக உரித்தான அதிகாரங்களைக் கொண்ட பொதுப் பட்டியலை (Concurrent List) அதனால் தான் அவர் அரசியலமைப்பில் சேர்த்தார். வரையறுக்கப்பட்ட காணி அதிகாரங்களையே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

காணி அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட போதிலும் அடிப்படையில காணி என்ற விடயம் மத்திய அரசாங்கத்தின் விடயமாகவே அரசியலமைப்பு கருதுகிறது. காணி பகிர்வுக்கான இறுதி அதிகாரம் ஜனாதிபதியிடமே வழங்கப்படடுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் காணிக் கொள்கைகளை மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள காணி ஆணைக்குழுவே வகுக்கும். அவ்வாறிருக்க காணி அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் இருந்து பறிக்கப்பட வேண்டும் என்று கூச்சலிடுவதில் அர்த்தமே இல்லை.

பொலிஸ் அதிகாரங்களும் அவ்வாறே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாகாண பொலிஸ் பிரிவிற்கு தலைமை தாங்கும் பிரதி பொலிஸ் மா அதிபரை மத்திய அரசாங்கத்தின் பொலிஸ் மா அதிபரே நியமிப்பார். மாகாண பொலிஸ் பிரிவு என்ன ஆயுதங்களை பாவிக்க முடியும் என்பதை மத்திய அரசாங்கமே தீர்மானிக்கும். அவசரகால நிலை ஏற்பட்டால் ஜனாதிபதி மத்திய அரசாங்கத்தின் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் படையினரை மாகாணங்களின் பாதுகாப்புக்காக சேவையில் ஈடுபடுத்துவார். மத்திய அரசாங்கத்தின் பொலிஸ் மா அதிபருக்கும் அந்த அதிகாரம் இருக்கிறது.

அவ்வாறாயின் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் சிங்கள் மக்கள் அச்சப்பட எவ்வித நியாயமான காரணமும் இல்லை என்பது தெளிவானதாகும். மாகாண சபைகளுக்கு எதிராக மத்திய அரசாங்கத்திடம் அற்றொரு பலத்த ஆயுதமும் இருக்கிறது. அதாவது மாகாண சபைகளை கலைத்து விடும் அதிகாரமே. இது முதலில் 1987ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாகாண சபைச் சட்டத்திலோ அல்லது 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திலோ இருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது புலிகளின் தேவைக்கேற்ப கொண்டுவரப்பட்ட திருத்தம் ஒன்றின் மூலமே அரசாங்கத்திற்கு இந்த அதிகாரம் கிடைத்தது.

1989-90  ஆம் ஆண்டுகளில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்த காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பீ.ஆர்.எல்.எப்) முதலான கூட்டணியொன்றே வடக்கு கிழக்கு மாகாண சபையை நிர்வகித்தது. வரதராஜப் பெருமாளே முதலமைச்சராகவிருந்தார். எனவே இந்த மாகாண சபையை கலைத்து விடுமாறு புலிகள் பிரேமதாசவிற்கு அழுத்தம் கொடுத்தனர்.

ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இருக்கவில்லை. மாகாண அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்கும் அதிகாரம் இருந்த போதிலும் மாகாண சபையை கலைக்க அதிகாரம் இருக்கவில்லை. எனவே மாகாண சபைகளை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் வகையில் மாகாண சபை சட்டத்திற்கு திருத்தம் ஒன்று 1990ஆம் ஆண்டு முற்பகுதியில் வகுக்கப்பட்டது. அச்சட்டம் நிறைவேற்றப்படும் முன்னரே, அதாவது 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி புலிகள் மீண்டும் போரை ஆரம்பித்தனர்.

ஆனால் புலிகளை மீண்டும் வளைத்தெடுக்க அரசாங்கம் முயற்சி செய்தது. மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள கிடைத்த இந்த வாய்ப்பை கைவிடவும் அரசாங்கம் விரும்பவில்லை. எனவே போர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்களில் இந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நறைவேற்றப்பட்டது.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் முழுமையாக மாகாண சபைகளுக்கு வழங்கப்படவும் இல்லை. முதலமைச்சரின் அதிகாரங்களை கைப்பற்றிக் கொள்ளும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருக்கிறது. போதாக்குறைக்கு மாகாண சபைகளை கலைத்துவிடும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு கிடைத்திருக்கிறது. இந்த நிலைமையில் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதை எதிர்ப்பதானது வெறுமனே இன உணர்வுகளை தூண்டி சிங்கள மக்களின் நற்சான்றிதலை பெறுவதற்கு எடுக்கும் முயற்சியேயன்றி வேறொன்றும் அல்ல.
 
1994ஆம் ஆண்டு மேல் மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சந்திரிகா குமாரதுங்க, மாகாண சபைகளுக்கு இவ்வதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வாதாடினார். ஆனால் அதே ஆண்டு அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற போது அதற்குறிய வர்த்தமானியில் அவரும் கையெழுத்திடவில்லை.

இப்போது ஐ.தே.க, மாகாண சபைகளுக்கு இவ்வதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அக்கட்சியும் 1988ஆம் ஆண்டு மாகாண சபைகள் நிறுவப்பட்டது முதல் 1994ஆம் ஆண்டு தாம் பதவியில் இருந்து தூக்கியெறியப்படும் வரை இவ்வதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க தயாராக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • Ram Friday, 17 May 2013 02:56 PM

    நாம் எமது தாயகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். சோல்பரி யாப்பினாலேயே தற்போதைய இலங்கை உருவானது. உங்கள் தளத்தில் நின்று எம்மை ஆய்வு செய்வதை தவிர்க்கவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X