2025 மே 19, திங்கட்கிழமை

உயர் பாதுகாப்பு வலயம்: தீர்க்கப்பட முடியாத சிக்கல்

A.P.Mathan   / 2013 மே 20 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்
 
அண்மையில் வடக்கிலும் கிழக்கிலும் உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் படைத்தளங்களுக்காக காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, படைச்செறிவு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
 
யாழ்ப்பாணத்தில், வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மட்டும் படையினர் தமது படைத்தளங்களை கட்டியெழுப்புவதற்காக, காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் 6381 ஏக்கர், 38.97 பேர்ச் காணியை சுவீகரிக்கவுள்ளனர். இது சுமார் 25.8 சதுர கி.மீ பரப்பளவுக்குச் சமமான நிலப்பரப்பு.
 
இதுதவிர வேறும் பல இடங்களில், படைத்தளங்களுக்காக தனியார் காணிகள் கட்டாயமாகப் பெறப்படுகின்றன. சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத்தரப்பு கூறுகிறது.
 
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மிகப்பெரியளவு பிரதேசம் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக சுமார் 1400 பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். அதேவேளை, இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்திய, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தார்மீக ஆதரவும் அரசியல் மட்டங்களில் இருந்து கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
இதன் தொடர்ச்சியாக அண்மைக்காலத்தில் அமெரிக்க, இந்திய அதிகாரிகள் உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் அரசாங்கத்தைப் பெரிதும் சினங்கொள்ள வைத்துள்ளதாகத் தெரிகிறது.
 
குறிப்பாக பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயத்தில் கடும்போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். வடக்கிலும் கிழக்கிலும், படைகளை நிலைநிறுத்தும் விடயத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்பதே அவரது இறுக்கமான நிலைப்பாடாக உள்ளது. 
 
போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலிலும் வடக்கு, கிழக்கு இன்னமும் இராணுவ மயப்பட்ட சூழலில் இருந்து விடுபடவில்லை என்பது வெளிப்படையான விடயம்.
 
படைச்செறிவும், உயர் பாதுகாப்பு வலயங்களும் தான், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பது கோட்டாபய ராஜபக்ஷவினது சித்தாந்தமாக உள்ளது. போர் முடிவுக்கு வந்தாலும், பிரிவினைவாதச் சிந்தனை முடிவுக்கு வரவில்லை என்பதால், படைச்செறிவு அவசியம் என்று வலியுறுத்துகிறார் அவர்.
 
ஆனால், கடந்த சனியன்று வெற்றி விழா அணிவகுப்பில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, வடக்கு, கிழக்கு மக்களின் இதயத்தை தனக்கு நன்றாகவே தெரியும் என்றும், அவர்கள் ஒன்றிணைந்து வாழவே விரும்புகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 
இது கோட்டாபய ராஜபக்ஷவினது இராணுவ மயமாக்கல் சிந்தனைக்கு முரண்பாடானதாகத் தெரிகிறது.
 
அதாவது வடக்கு, கிழக்கில் பிரிவினைவாத சிந்தனை இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதைக் காட்டி படைச்செறிவை நியாயப்படுத்துகிறார் கோட்டாபய ராஜபக்ஷ. ஆனால் வடக்கு, கிழக்கு மக்கள் ஒன்றிணைந்து வாழவே விரும்புகிறார்கள் என்று அடித்துக் கூறுகிறார் ஜனாதிபதி. அவ்வாறாயின், உண்மை நிலை என்ன என்ற வினா எழுகிறது.
 
தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல்தீர்வு ஒன்று காணப்படாத நிலை நீடிக்கும் வரை, பிரிவினைச் சிந்தனையையோ, அதுபற்றிய கருத்துகளையோ முற்றாக இல்லாமல் செய்து விடமுடியாது.
 
இன்னொரு வகையில் இதையே காரணம் காட்டி அரசாங்கம், வடக்கு - கிழக்கில் படை நிலைப்படுத்தலை நியாயப்படுத்திக் கொள்கிறது. 
 
போருக்குப் பின்னர், அரசியல்ரீதியான நல்லிணக்க முயற்சிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தால், இந்தப் பிரச்சினை எழுந்திராது. அதாவது இன்னொரு பிரிவினைப் போராட்டம் பற்றிய அச்சம் அரசுக்கு எழுந்திருக்கவோ, அதையே காரணமாக வைத்து வடக்கு, கிழக்கில் படைகளை அதிகளவில் நிலை நிறுத்துவதையோ நியாயப்படுத்தியிருக்க முடியாது.
 
போரில் வென்ற அரசாங்கம், அரசியல் ரீதியான நகர்வுகளில் வெற்றிபெறத் தவறியுள்ளதானது, இராணுவ ரீதியான அதன் நகர்வுகளை நியாயப்படுத்துவதற்கு வசதியாகிப் போயுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
 
படைகளை விலக்கிக் கொள்வதில்லை என்பதிலும் படைத்தளங்களை விலக்கிக் கொள்வதில்லை என்பதிலும் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியாக இருக்கிறார். கடந்த காலங்களில் அவர் அதற்குப் பல நியாயப்பாடுகளை கூறி வந்துள்ளார். ஆனால் அவை எதுவும் சர்வதேச சமூகத்தின் முன் எடுபடவில்லை.
 
வடக்கில் போர் முடிவுக்கு வந்த பின்னர் கணிசமான படையினரை விலக்கிக் கொண்டுள்ளதாக அரசாங்கம் கூறியது. அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளைப் போலவே வடக்கு, கிழக்கிலும் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறியது.
 
வடக்கில் போர் முடிவுக்கு வந்த பின்னர், படையினர் விலக்கப்பட்டனர் என்பது உண்மையே. ஆனால், அது எந்தளவு படையினர் என்பதே முக்கியமான கேள்வி. 53ஆவது டிவிசனின் ஒருபகுதி தெற்குப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. 63ஆவது டிவிசன் அல்லது அதிரடிப்படை 3 அக்கரைப்பற்றுக்கு நகர்த்தப்பட்டது. 58ஆவது டிவிசனின் ஒரு பகுதி கிழக்கிற்கு நகர்த்தப்பட்டது.
 
இவை தவிர, டிவிசன், பிரிகேட் மட்டத்தில் பெரியளவிலான பின்வாங்கல் ஏதும் இடம்பெறவில்லை.
 
ஒரு காலத்தில் 40 ஆயிரம் படையினர் நிலை கொண்டிருந்த யாழ்ப்பாணக் குடாநாட்டில் இப்போது 13,200 படையினர் தான் உள்ளனர் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அங்கு 3 இராணுவ டிவிசன்கள் நிலைகொண்டுள்ளன. 
 
இலங்கை இராணுவத்தின் ஒரு இராணுவ டிவிசனில் குறைந்தது 8000 படையினர் இருப்பது வழமை. ஆனால், அரசாங்கம் கூறும் கணக்குப்படி பார்த்தால், ஒரு டிவிசனில் 4400 படையினர் தான் இருக்க முடியும். இந்தக் கணக்கு இராணுவ நியமங்களை நகைப்புக்குள்ளாக்குவதாக உள்ளது.
 
போர்க்காலத்தில், படையினர் அழிவுகளை சந்தித்திருந்த போது கூட, இப்படியொரு நிலையில் எந்தவொரு டிவிசனும் இருந்ததில்லை. வன்னியைப் பொறுத்தவரையில், வன்னி, முல்லைத்தீவு, கிளிநொச்சி என மூன்று படைத்தலைமையகங்கள் உள்ளன. முல்லைத்தீவில் 31 பற்றாலியன்களும், கிளிநொச்சியில் 39 பற்றாலியன்களும், வன்னியில் 43 பற்றாலியன்களும் நிலைகொண்டுள்ளன. இதன்படி வன்னிப் பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 113 பற்றாலியன் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
 
கிழக்கைப் பொறுத்தவரையில், 49 பற்றாலியன் படையினர் நிலைகொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலும் 35 வரையிலான பற்றாலியன்கள் நிலைகொண்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்ற நிலையில், இலங்கை இராணுவத்தில் மொத்தமுள்ள பற்றாலியன்களில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு வடக்கு, கிழக்கிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
 
இதுதவிர, நாட்டின் மொத்த கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட வடக்கு, கிழக்கில் சுமார் 55 ஆயிரம் பேர் கொண்ட இலங்கைக் கடற்படையின் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான படையினர் நிறுத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.
 
சுமார் 30 ஆயிரம் பேர் கொண்ட விமானப்படையைப் பொறுத்தவரைவில், மூன்றில் ஒரு பங்கிற்கும் குறையாதளவு படையினரை வடக்கு, கிழக்கில் நிறுத்தியுள்ளது.
 
இது நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்ற படைச்செறிவா என்று வெளிநாடுகள் பதில் கேள்வியை எழுப்ப வசதியாகிவிட்டது. அரசாங்கத்தைப் பொறுத்தவரைவில், இப்போது படைவிலக்கம் நடந்துள்ளது என்பதையோ, ஏனைய பகுதிகளைப் போலவே அங்கும் படையினர் நிலைகொண்டுள்ளனர் என்பதையோ நம்பகரமான முறையில் உறுதிப்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
 
இதனால் தான், இப்போது, படையினரை நிறுத்துவதும், தளங்களைப் பேணுவதும் அரசாங்கத்தின் தனியுரிமை, அதில் எந்த வெளிநாடும் தலையிட முடியாது என்ற கருத்தை வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.
 
ஒரு இறைமையுள்ள நாட்டுக்கு இத்தகைய தனியுரிமை, சுதந்திரம் உள்ளது என்பது உண்மையே. ஆனால், நாட்டின் இறைமை, சுதந்திரம் என்பது, இன்னொரு நாட்டின் கதவுகளைத் தட்டாதவரை தான் நிலைத்திருக்கும் என்பதை உலக நடப்புகள் நிரூபித்துள்ளன.
 
ஒரு வீட்டுக்குள் நடக்கும் சண்டைகளில் பொலிஸாரோ வெளியாரோ தலையிடும் வழக்கமில்லை. ஆனால் அது வீட்டுக்கு வெளியே வந்து விட்டாலோ, அல்லது அது குறித்து அயலவரிடம் அல்லது பொலிஸாரிடம் முறையிடப்பட்டாலோ அது பொதுவான விவகாரமாகி விடும்.
 
அதுபோலத் தான், பிரச்சினைகளை அரசாங்கம் உள்ளுக்குள் தீர்த்துக்கொள்ள தவறியுள்ளதால், வெளிநாடுகளின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்துள்ளது.
 
உயர்பாதுகாப்பு வலய காணி சுவீகரிப்பு விவகாரத்தை உள்நாட்டு பாதுகாப்பு என்றும், அதில் யாரும் தலையிட முடியாது என்றும் அரசாங்கம் நியாயப்படுத்தினாலும், இந்த விவகாரம் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடையது என்பதால் சர்வதேசத்தின் கவனத்தில் இருந்து முற்றிலும் மறைத்து விடமுடியாது. 
 
அத்துடன் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகளை நிராகரித்து, அரசாங்கம் காணி சுவீகரிப்புகளையும் இராணுவ மயமாக்கலையும் உலகளவில் நீண்டகாலத்துக்கு நியாயப்படுத்திக் கொள்ளவும் முடியாது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X