.jpg)
ஒருபுறம் வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் மாகாணசபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிட்டே அத்தேர்தலை நடத்தவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கர்ஜிக்க, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே இரத்துச் செய்யவேண்டும் என ஜாதிக ஹெலஉறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க மிரட்டுகிறார். மறுபுறம் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைக்கவேண்டாம் என இந்தியா கூறுகிறது. இலங்கை அரசாங்கம் என்ன செய்யப்போகிறது?
விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக கடந்த மார்ச் மாதம் வெலிஒயாவிற்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடமாகாணசபைத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதாக கூறியதை அடுத்தே மாகாண சபை அதிகாரங்கள் மற்றும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றிய புதிய சர்ச்சை தலைதூக்கியிருக்கிறது.
ஜனாதிபதி வடமாகாணசபைத் தேரதலை நடத்துவதாக கூறியபின் அதனை எதிர்த்து குரல் எழுப்புவது ஒருவகையில் ஜனாதிபதிக்கே சவால் விடுவதற்குச் சமமாகும். ஆனால், ஜனாதிபதி அவ் எதிர்ப்புக் குரல்களை தமக்கு எதிரான சவாலாக ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. சிலவேளைகளில் தேர்தலை அறிவித்தாலும் அவரும் அக் குரல்களை விரும்புகிறாரோ தெரியாது.
வடமாகாணசபைத் தேர்தலோ 13ஆவது அரசியலமைப்புத் திருத்தமோ சிங்கள தேசியவாத கட்சிகளுக்கு நீண்டகாலமாக அவ்வளவு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக அக் கட்சிகள் மாகாணசபை முறையை பெயரளவில் எதிர்த்தாலும் அவையும் கடந்த காலங்களில் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டன. ஜாதிக ஹெலஉறுமயவின் தலைவர்களில் ஒருவரான உதய கம்மன்பில - மேல் மாகாணசபையில் அமைச்சர் ஒருவராகவும் இருக்கிறார்.
அதுமட்டுமல்ல நாம் இதற்கு முன்னர் சுட்டிக் காட்டியதைப்போல் வடமாகாணசபைத் தேர்தலை நியாயமாக நடத்தி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அச் சபையின் நிர்வாகத்தை ஏற்க இடமளித்துவிட்டு அக் கட்சியை தமிழ் மக்கள் முன் அம்பலப்படுத்தவேண்டும் என்றும் 2011ஆம் ஆண்டு அமைச்சர் கம்மன்பில - லங்காதீப பத்திரிகையில் அவர் எழுதிவரும் பத்தியொன்றில் வாதிட்டு இருந்தார்.
பொதுபலசேனா என்ற புதிய இனவாத, மதவாத அமைப்பு அண்மைக் காலமாக இனவாதத்தை தூண்ட முற்பட்டதை அடுத்து இனவாத கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட போட்டியின் விளைவாக நாட்டில் பெரும்பான்மை ஆதிக்கவாதம் புதிய பரிமானத்தை பெற்றுள்ளது. பலம்வாய்ந்த பலர் பின்புலத்தில் இருந்து அதற்கு உதவி புரிந்துவருவதால் இந்த வகுப்புவாத போக்கு மேலும் வலுப்பெற்றுவருகிறது.
இந்தநிலையில் விமல் வீரவன்ச மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்கவேண்டும் என்று கூறியபோது தாம் அதைவிட ஒருபடி முன் சென்று சிங்கள மக்கள் மத்தியில் வீரத்தை காட்டவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஹெலஉறுமயவின் தலைவர்களுக்கு ஏற்பட்டது. எனவே அவர்கள் அதிகாரங்களை குறைப்பதல்ல, மாகாணசபைகளுக்கு அடிப்படையாக உள்ள சட்டமான 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே இரத்துச் செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள். இப்போது அதைவிஞ்சி எதையும் கேட்க வீரவன்சவால் முடியாமல் இருக்கிறது.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்வதற்கான தனிநபர் சட்ட மூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஹெலஉறுமய கட்சி கூறுகிறது. அவர்கள் அச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால் இரண்டு பிரதான கட்சிகளையும் சேர்ந்த சிங்கள எம்.பீக்கள் அதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றே ஹெலஉறுமய கூறுகிறது.
ஆனால் அரசாங்கம் அதனை விரும்பினால் மட்டுமே ஹெலஉறுமயவிற்கு அதனை சமர்ப்பிக்க இடமளிக்கும். அரசாங்கம் விரும்பாவிட்டால் ஹெலஉறுமய ஏதாவது சாக்குப்போக்குக் கூறி தமது சட்ட மூலத்தை ஒதுக்கிக்கொள்ளும். 2010ஆம் ஆண்டிலும் ஹெலஉறுமயவும் வீரவன்சவும் இதேபோல் மாகாணசபைகளை இரத்துச் செய்யவேண்டும் என்று கூறினர். ஆனால் அப்போது ஜனாதிபதி அதற்குத் தயாராக இருக்கவில்லை. எனவே வாயை மூடுங்கள் என்று அவர் கூறினார். அதேபோல் அவர்களும் வாயை மூடிக் கொண்டனர். இதனை ஜனாதிபதியே இந்து பத்திரிகைக்கு கூறியிருந்தார்.
ஆனால், இன்றைய நிலைமை வேறு. ஜனாதிபதியின் சகோதரர்களான அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் சில வாரங்களுக்கு முன்னர் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்யவேண்டும் என்றனர். ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் இப்போது வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதை எதிர்க்கவில்லை. அந்த மனமாற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தெளிவில்லை. சிலவேளை இந்தியா அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
அவ்வாறாயின் ஹெலஉறுமய மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த வழக்கை பாவித்து 2006ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரித்ததைப்போல் சிலவேளை அரசாங்கம் ஹெலஉறுமயவின் சட்ட மூலத்தைப் பாவித்து 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்ய முற்படுகிறதா என்றும் சிலர் சந்தேகிக்கலாம்.
ஆனால், இந்தவிடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அவ்வளவு இலகுவானதல்ல. இலங்கைக்கான இந்தியத் தூதுவராக இருந்த நிருபமாராவ் பின்னர் இந்திய வெளியுறவுச் செயலாளராக இருக்கும் போது வெளியிட்ட ஒரு கருத்து இங்கு குறிப்பிடுவது முக்கியமாகும். இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டுத் தலைவர்களின் ஆதங்கத்தை இந்திய அரசாங்கத்தால் நிராகரிக்க முடியாது என்றும் தமிழ்நாடு என்பது இந்தியாவின் ஒருபகுதி என்பதால் அம் மாநிலத்தின் மக்களின் குரலை புறக்கணிக்க இந்திய மத்திய அரசாங்கத்திற்கு முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.
இலங்கையிலும் இந்தியாவிலும் அரசியல்வாதிகளும் இலங்கை அதிகாரிகளும் குறிப்பிட்ட ஒரு விடயத்தைப் பற்றி இன்றொன்றும் நாளை ஒன்றுமாக பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுவந்த போதிலும் இந்திய அதிகாரிகள் நினைத்தபடி கருத்து வெளியிடுவதில்லை. எனவே நிருபமாராவுவின் கருத்தை நாம் பாரதூரமாகவே கருத வேண்டியுள்ளது.
இந்த நிலையில் தான் சிலநாட்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கான முயற்சிகளுக்கு எதிராக இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுடன் கருத்து தெரிவித்து இருந்தார். அது இலங்கையின் இறைமைக்கு சவாலான கருத்து என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதுதான் யதார்த்தம். அந்த யதார்த்தத்தைப் புறக்கணித்து இலங்கை அரசாங்கம் செயற்படவும் முடியாது.
இந்த விடயத்தில் அக்கறை செலுத்துவது இந்தியா மட்டுமல்ல. ஐ.நா. மனித உரிமை பேரவையும் இலங்கையின் அதிகார பரவலாக்கல் மற்றும் மாகாணசபை விடயங்களில் அக்கறை கொண்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையின் கூட்டத்தின்போது இலங்கை விடயத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை அதற்கு சான்றாகும்.
இரண்டு காரணங்களை அந்தப் பிரேரணை வலியுறுத்தியிருந்தது. முதலாவதாக அது பொதுவாக இலங்கையில் அதிகார பரவலாக்கல் முறையை பலப்படுத்த வேண்டும் என்கிறது. இரண்டாவதாக அது குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் வாக்குறுதியளித்ததன் பிரகாரம் வடமாகாணசபைத் தேர்தலை இவ் வருடம் செப்டெம்பர் மாதம் நடத்தவேண்டும் எனறு வலியுறுத்துகிறது.
அதாவது இலங்கை அரசாங்கம் தாமாகவோ அல்லது ஏதாவது ஒரு கட்சியை பாவித்தோ 13ஆவது அரசியலமைப்புத் திருத்தததை இரத்துச் செய்தால் அது இந்தியாவுக்கு மட்டுமன்றி ஐ.நா. மனிதஉரிமை பேரவைக்கும் விடும் சவாலாகும். அந்த நிலைமையை அரசாங்கம் விரும்பாவிட்டால் ஒன்றில் ஹெலஉறுமயவிற்கு அதன் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இடமளிக்காது. இடமளித்தாலும் அதனை நிறைவேற இடமளிக்காது.
அரசாங்கம் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இடமளிக்காவிட்டாலும் ஹெலஉறுமய அரசாங்கத்திலிருந்து விலகப்போவதில்லை. ஏதாவது சாக்குப் போக்குக் கூறி சமாளித்துவிடும். அதனால் அதன் ஆதரவாளர்கள் அக் கட்சியிலிருந்து பிரிந்துபோவதுமில்லை. அவர்களும் ஏதாவது கூறி நாளைப் போக்கிக் கொண்டு இருப்பார்கள்.
அரசாங்கம் இச் சட்ட மூலத்தை சமர்ப்பிக்க இடமளித்து அதனை நிறைவேறவும் இடமளித்தால் அரசாங்கமே அதன் பின்னால் இருக்கிறது என்றோ அல்லது குறைந்தபட்சம் அரசாங்கம் அதனை விரும்புகிறது என்றோ விளங்கிக் கொள்ளவேண்டும். ஆனால் அவ்வாறானதோர் நிலைமை இந்தியாவுடனான உறவை வெகுவாக பாதிக்கும் அபாயம் இருக்கிறது. அதேவேளை அடுத்தவருடம் இலங்கை - ஐ.நா. மனிதஉரிமை பேரவைக் கூட்டத்திலும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.