.jpg)
"காதல்" அணி சேர்க்கும் என்பது தமிழக தேர்தல் களத்திற்கு புதிய கருவாக அமைந்திருக்கிறது. "நமக்குள் கூட்டணியா? இல்லவே இல்லை" என்று டாக்டர் ராமதாஸும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் ஆளுக்கொரு பக்கமாக ஆர்த்தெழுந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கட்சி நிர்வாகிகள் விட்டு பேச வைக்கிறார்கள். அதுவும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டாக்டர் ராமதாஸ் அங்கு இருந்து கொண்டே இந்த "பாலிடிக்ஸை" செய்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியே தன் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அதே மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை மையமாக வைத்து "பாலிடிக்ஸ்" பண்ணுகிறார். தமிழக அரசியலில் "ஆஸ்பத்திரி பாலிடிக்ஸ்" அரசியல் தோட்டத்தில் பூத்த புதிய மலராக இப்போது இருக்கிறது.
"காதல்" தேர்தல் மோதலாக மாறும் என்பதை தமிழக தேர்தல் களம் முதன் முதலாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்கப் போகிறது. அதற்கான விதையை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் மிக அழகாக விதைத்துவிட்டார். ஆனால் அறுவடையை அவர் செய்யுமளவிற்கு அக்கட்சிக்கு படை பலம் இல்லை என்பதுதான் இந்த நாடகத்தின் சோகக் காட்சியாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக, "காதல் நாடக திருமணத்தை" ஒரு சமுதாய புரட்சியாக்க டாக்டர் ராமதாஸ் முயற்சி செய்து வருகிறார். அதை எதிர்த்து முதலில் களம் இறங்கிய அவர் ஒரு கட்டத்தில் இரு அரசியல் கட்சிகளுக்கும் (தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.) ஒரு முக்கிய கேள்வியை விடுத்தார். அந்த கேள்வி இதுதான். "உங்களுக்கு 19 சதவீதம் வேண்டுமா (தாழ்த்தப்பட்ட சமுதாய வாக்கு) அல்லது 81 சதவீதம் வேண்டுமா" (முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய வாக்கு) என்பதுதான். இந்தக் கேள்வி தமிழகத்தில் "தீ"யாக பற்றிக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், (அ.தி.மு.க.) திராவிட முன்னேற்றக் கழகமும் (தி.மு.க.) கையைப் பிசைந்து கொண்டு நின்றன. ஏனென்றால் இது இரு கட்சிகளின் அடிப்படை வாக்கு வங்கியை அசைத்துப் பார்க்கும் அதிரடி முயற்சி.
இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. "மரக்காணம்" கலவர பின்னணியில் முதலில் டாக்டர் ராமதாஸை கைது செய்தார். அடுத்தடுத்த வழக்குகளுக்குப் பிறகு, விடுதலையான டாக்டர் ராமதாஸ் நேராக அப்பல்லோ மருத்துமனையில் அட்மிட் ஆனார். அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் குணமடைந்து இருக்கிறார். இங்குதான் "அரசியல்" காட்சிகள் ஆட்டம் போட தொடங்கியது. முதலில் இவரை தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக இருக்கும் டி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்தார். டாக்டர் ராமதாஸ் "அவசரப் பிரிவில்" இருந்ததால், அவரை சந்திக்க டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. ஆகவே டாக்டர் ராமதாஸின் மனைவியை சந்தித்து ராமதாஸின் உடல் நலம் விசாரித்து விட்டு வந்தார். அதேபோல் தி.மு.க. தலைவரின் மகள் கனிமொழியும் சந்தித்தார். இவற்றில் இளங்கோவன் சந்தித்தது மட்டும்தான் அபிஷியலான சந்திப்பு. மற்றபடி கனிமொழி போனது எல்லாம் வேறு விடயம். அதே மருத்துமனையில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை சந்திக்கச் சென்ற கனிமொழி டாக்டர் ராமதாஸின் உறவினர்களையும் சந்தித்தார். அவ்வளவுதான்! ஏனென்றால் மருத்துவமனையில் துரைமுருகன் இருக்கும் அறைக்கு நேர் எதிரேதான் டாக்டர் ராமதாஸின் மனைவியும், உறவினர்களும் தங்கியிருக்கிறார்கள். அதனால் துரைமுருகனை சந்திக்கச் செல்பவர்கள் டாக்டர் ராமதாஸின் உறவினர்களையும் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ஆனால் இந்த சந்திப்புகளுக்கு "தி.மு.க.விற்கும், பா.ம.க." விற்கும் கூட்டணி என்று கூறி சடங்கு சுற்ற ஆரம்பித்து விட்டார்கள். டாக்டர் ராமதாஸின் கைதுக்கு முன்பும் சரி, அதன் பிறகும் சரி, "திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை" (தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.) என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார் டாக்டர் ராமதாஸ். தனக்கு அதிக தொகுதிகள் கொடுக்கமாட்டார்கள் என்பதும், தொடர்ந்து இரு தோல்விக் கூட்டணியில் இருந்து விட்டோம் (2009 நாடாளுமன்ற தேர்தல், 2011 சட்டமன்ற தேர்தல்) என்பதுமே ராமதாஸின் இந்த மூவிற்கு காரணம். "நானும் ராமதாஸுக்கு சளைத்தவன் அல்ல" என்பதுபோல் தி.மு.க. பேச்சாளர்கள் கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, "திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று ஒரு குரல் கேட்கிறது" என்று கூறி டாக்டர் ராமதாஸை நேரடியாகவே அட்டாக் பண்ணி பேசி விட்டார். அது உள் அரங்கத்தில் நடைபெற்ற பேச்சாளர்கள் கூட்டத்தில் பேசியது என்றாலும், அதை அப்படியே பத்திரிகை குறிப்பாக வெளி அரங்கத்திற்கு தி.மு.க. கொடுத்தது. அதாவது "நீங்கள் என்ன கூட்டணி வேண்டாம் என்று சொல்வது. நாங்களே சொல்கிறோம். நீங்கள் தி.மு.க.விற்கு வேண்டாம்" என்ற பாணியில் அமைந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேச்சு.
இதையும் மீறித்தான் பாட்டாளி மக்கள் கட்சியை தி.மு.க. கூட்டணியாக சேர்த்துக் கொள்ளப்போகிறது. அதனால்தான் டாக்டர் ராமதாஸை மருத்துவமனையில் போய் பார்க்கிறார்கள் என்ற பேச்சு எழுந்தது. அதை முறியடிக்க விரும்பிய டாக்டர் ராமதாஸும் தன் மகன் அன்புமணி ராமதாஸை அழைத்து பேட்டி கொடுக்கச் சொன்னார். அவரும் உடனே பத்திரிகையாளர்களை சந்தித்து, "தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் எந்தவிதமான கூட்டணியும் இல்லை. நாங்கள் தனித்தே போட்டியிடுவோம்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு இன்னொரு முக்கியப் பின்னணி உண்டு. 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பொடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்தார் வைகோ. அவரது விடுதலைக்காக போராடிய தி.மு.க. அதை பயன்படுத்திக் கொண்டது. குறிப்பாக சிறையிலிருந்து விடுதலையான வைகோ, "நான் இங்கிருந்தே பிரசாரத்தை தொடங்கி விட்டேன்" என்று வேலூர் மத்திய சிறை சாலையில் நின்று 2004 நாடாளுமன்ற தேர்தலின் போது சொன்னார். அது மாதிரி, டாக்டர் ராமதாஸ் கைதால் வன்னியர் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை தி.மு.க.விற்கோ, அல்லது அ.தி.மு.க.விற்கோ விட்டுக் கொடுக்க அவர் தயாராக இல்லை. அந்த தாக்கத்தை பா.ம.க.வின் வாக்கு வங்கியை உயர்த்த மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கருதியதால்தான் டாக்டர் அன்புமணி ராமதாஸை விட்டு அப்படி பேட்டி கொடுக்க வைத்தார் என்றால் மிகையாகாது.
இந்த பேட்டிகள் எல்லாம் தி.மு.க.- பா.ம.க. கூட்டணி செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. அது தொடர் கதையாகவே இன்னும் இருக்கிறது. இப்போது ராஜ்ய சபை தேர்தலில் தி.மு.க.வின் சார்பில் நிறுத்தப்படலாம் என்று கருதப்படும் கனிமொழிக்கு பா.ம.க.வின் மூன்று எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை தி.மு.க. பெற முயற்சிக்கிறது என்ற "புதுக்கரடி" புறப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க. தரப்பிலோ அதை அடியோடு மறுக்கிறார்கள். "பாட்டாளி மக்கள் கட்சியை தி.மு.க. நோக்கி தள்ளிவிடுவது "அரசியல் சூது" செய்பவர்களின் முயற்சி. அதற்கு எங்கள் தலைவர் பலியாக மாட்டார்" என்கிறார் தி.மு.க.வின் மூத்த கட்சி நிர்வாகிகளில் ஒருவர். அவரே ஏன் இந்த "சூது" செய்கிறார்கள் என்பதையும் விளக்கினார். அவர் கூற்றில் சொல்ல வேண்டுமென்றால், "எங்களுடன் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது இல்லை. டாக்டர் ராமதாஸ் மீது ஜெயலலிதா எடுத்துள்ள கைது நடவடிக்கையால் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் எங்களுடன் எதிர்காலத்தில் இருப்பது கடினம். இந்த நேரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.) எங்களுடன் கூட்டணி வைத்து விடக்கூடாது என்று திட்டமிடுகிறார்கள். ஆகவே விஜயகாந்த் இங்கு வருவதை தடுக்க எங்களுடன் டாக்டர் ராமதாஸ் சேரப் போகிறார் என்று "வதந்தீ" கிளப்பி விடுகிறார்கள்" என்றார் முத்தாய்ப்பாக.
இது என்ன புது பின்னணி? தமிழக தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இருந்த 5 சதவீத வாக்கு வங்கி இப்போது 2 சதவீதமாக குறைந்து நிற்கிறது. அந்த வாக்கு வங்கியை உயர்த்தவே "சென்சிட்டிவ்" விவகாரமான "காதல் நாடக திருமணத்தை" கையிலெடுத்திருக்கிறா டாக்டர் ராமதாஸ். அந்த இரு சதவீத வாக்கு வங்கியும் வட மாவட்டங்களில் மட்டுமே இருக்கிறது. குறிப்பாக சொல்லப் போனால் தமிழக சட்டமன்றத்தில் இருக்கும் 234 எம்.எல்.ஏ. தொகுதிகளில் டாக்டர் ராமதாஸின் செல்வாக்கு பயன்படும் தொகுதிகள் என்று எடுத்துக் கொண்டால் 70 முதல் 80 தொகுதிகள் இருக்கலாம். பா.ம.க.வின் ஆதரவு வாக்கு எப்படி ஒரு கூட்டணிக்கு கிடைக்குமோ அதேபோல் பா.ம.க. எதிர்ப்பு ஓட்டும் அக்கூட்டணிக்கு கிடைக்கும் ஆபத்து வட மாவட்டங்களைப் பொறுத்தவரை உண்டு. ஏனென்றால் "எதிர்ப்பு வாக்கு" அடிப்படையிலேயே வளர்ந்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால் விஜயகாந்த் அப்படியல்ல. பாஸிட்டிவ் வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் தே.மு.தி.க.விற்கு தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. அதுவும் அனைத்து ஜாதிக்கும் பொதுவான கட்சி என்ற பெயர் தே.மு.தி.க.விற்கு உண்டு. காங்கிரஸுக்கு எப்படி ஒரு காலத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்கும் வாக்கு வங்கி இருந்ததோ, அது மாதிரியொரு வாக்கு வங்கி இப்போது தே.மு.தி.க.விற்கு தமிழகத்தில் இருக்கிறது. ஆகவே தி.மு.க.வை பொறுத்தமட்டில் பா.ம.க.வை கூட்டணியில் எடுத்து வரிசையாக இரு தேர்தல்களில் கையை சுட்டுக் கொண்டு விட்டது.
2006 சட்டமன்ற தேர்தலில் ஒருமுறை. இப்போது 2011 சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறை. ஆகவேதான் பா.ம.க.வை இனி எடுக்க வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறது தி.மு.க.
தி.மு.க.வின் இந்த நிலைப்பாடு தே.மு.தி.க.விற்கு அக்கட்சி தலைமை விரித்துள்ள சிவப்புக் கம்பள வரவேற்பு என்பது அரசியல் வியூகங்கள் செய்வோருக்கு விவரமாகப் புரிகிறது. குறிப்பாக, சில வாரங்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூரில் "சட்டமன்றத்தில் ஜனநாயகம்" என்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, "தம்பி விஜயகாந்தை அரசியல் ரீதியாக ஒழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்" என்று அ.தி.மு.க.வை சாடியதும் இந்த பின்னணியில்தான். கடந்த வாரம் நடைபெற்ற தி.மு.க. பேச்சாளர்கள் கூட்டத்தில் தே.மு.தி.க. பற்றி எந்த விமர்சனமும் செய்யாமல், பாட்டாளி மக்கள் கட்சியையும், வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வையும் அவர் பின்னி பெடலெடுத்து விட்டார். அந்த அட்டாக்கும் இதே கோணத்தில் நடந்ததுதான்! இந்த பின்னணியில் தே.மு.தி.க.- தி.மு.க. கூட்டணி உருவாகி விட்டால், அது வருகின்ற நாடாளுமன்றத்தில் ஒரு முக்கிய அணியாக உருவெடுக்கும். இப்போதைக்கு எந்த முக்கிய கூட்டணியும் இல்லாமல் இருக்கும் அ.தி.மு.க.விற்கு அந்த தேர்தலை சந்திப்பது சவாலாக இருக்கும். ஆகவேதான் பாட்டாளி மக்கள் கட்சியும், தி.மு.க.வும் கூட்டணி சேரப் போகின்றன என்ற பேச்சுக்கு வடிவம் கொடுக்கப்படுகிறது. "ஒஹோ! பா.ம.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைக்கப் போகிறதா. நாம் தனியாகவே போட்டியிடுவோம்" என்ற முடிவை விஜயகாந்த் எடுக்க வேண்டும் என்ற வியூகம் வகுக்கப்படுகிறது. அதில் விழுவதற்கு தி.மு.க. தயாராக இல்லை. அதனால்தான் டாக்டர் ராமதாஸை சந்திக்க கட்சியின் சார்பில் அமைப்பு செயலாளரை அனுப்பினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இது ஓர் அடையாள நலம் விசாரிப்பு. அந்த அளவிற்கே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் தி.மு.க.வின் அடிப்படை வாக்கு வங்கிகளில் டாக்டர் ராமதாஸ் சார்ந்திருக்கும் வன்னியர் சமுதாயத்தின் வாக்கு வங்கியும் கணிசமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்தை மனதில் வைத்து "டாக்டர் ராமதாஸ் வேண்டாம்" என்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. "என்னை வைத்து யாரும் பயனடைய முடியாது" என்று கருதி, "தி.மு.க.வும் வேண்டாம். அ.தி.மு.க.வும் வேண்டாம்" என்கிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸ். ஒரு காலத்தில் "நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்" என்றார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்த காமராஜர். இப்போது "நான் படுத்துக் கொண்டே அரசியல் பண்ணுவேன்" என்கிறார் பாட்டாள் மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ். ஆனால் இந்த பாலிடிக்ஸ் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல், "வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் டிமாண்ட் நமக்குத்தான். நாம் ஏன் அவசரப்பட வேண்டும்" என்று அமைதி காக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். இந்த அமைதி தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது என்பது என்னவோ நூறு சதவீத உண்மை!