2025 மே 19, திங்கட்கிழமை

அமெரிக்கன் கோணர் விவகாரத்தில் ஏன் இந்த முறுகல்?

A.P.Mathan   / 2013 மே 28 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் மேலும் நெருடல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
 
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்கள் மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி வருவது போன்ற காரணங்களால், அமெரிக்கா மீது இலங்கைக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது தெளிவு.
 
வெளிப்படையாக இலங்கை அரசாங்கம் அமெரிக்காவை எதிர்த்து நிற்காமல் போனாலும், அவ்வப்போது மறைமுகமாக அமெரிக்காவைச் சாடுவதை அரசாங்கம் வழக்கமாகவே கொண்டுள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவில் இருந்து அமைச்சர்கள், அதிகாரிகள் வரை இதற்கு விதிவிலக்கான நிலையில் இல்லை.
 
போருக்குப் பின்னர், இந்த விடயங்களில் அமெரிக்கா கடைப்பிடித்து வரும் இறுக்கமான நிலை இலங்கை அரசாங்கத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் நெருக்கடிகளுக்குள் தள்ளிவிட்டுள்ளது.
 
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதால் தான், ஏனைய பல நாடுகளும் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.
 
இதற்கு உதாரணம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா எடுத்த முன் முயற்சியினால் தான், இரண்டு தடவைகளும் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.
 
இதுவே வேறோரு நாடு எடுத்த முயற்சியாக இருந்திருந்தால், 2009இல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் சுவீடன் கொண்டு வந்த கண்டனத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது போன்ற நிலையே ஏற்பட்டிருக்கலாம்.
 
ஏனென்றால், கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்ற கருத்து கனடா போன்ற நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட போதும், லண்டனில் கடந்த மாதம் நடந்த கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் அதற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
 
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தின்போது, சந்தர்ப்ப சூழ்நிலைகளால், அமெரிக்காவின் பின்னால் நின்ற இந்தியாவே, கொமன்வெல்த்தில் இலங்கையை நெருக்கடியில் இருந்து காப்பாற்றியது.
 
இதே கொமன்வெல்த் அமைப்பில் அமெரிக்கா இருந்திருந்தால், நிலைமை வேறாகியிருந்திருக்கக் கூடும். எனவே தான், இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்காவின் மீது அவ்வளவு கோபம் இருக்கிறது.
 
அதேவேளை, தனது சொற்படி நடந்து கொள்ளாமல், சீனாவின் பக்கம் சாய்ந்து செல்வது குறித்து இலங்கை மீது அமெரிக்காவுக்கும் கோபம் உள்ளது.
 
இரு நாடுகளுமே இராஜதந்திர உறவுகளையும், தூதரக உறவுகளையும் வைத்துக் கொண்டிருந்தாலும், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ளது போன்ற நெருக்கமான உறவுகள் அமெரிக்காவுடன் கிடையாது.
 
அதிலும் தற்போதைய அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் கொழும்பில் கடமையைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே அரசாங்கத்துக்கும் அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து விட்டன.
 
கொழும்புக்கான தூதுவராக பரிந்துரைக்கப்பட்ட பின்னர், செனெட் சபையின் வெளிவிவகாரக் குழு முன்பாக மிச்சேல் ஜே சிசன் உரையாற்றிய போது, இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
 
அது அப்போது அரசாங்கத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவரது நியமனத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தியிருந்தனர்.
 
எனினும், அமெரிக்காவின் விரோதத்தை சம்பாதிக்க நேரிடும் என்பதால், அரசாங்கம் அப்போது எந்த எதிர்ப்பையும் காட்டாமல் இருந்து கொண்டது.
 
மிச்சேல் ஜே சிசன் உலகின் பல்வேறு கொந்தளிப்பு பிரதேசங்களில் பணியாற்றிய மூத்த இராஜதந்திரி. அவரது வருகை இலங்கைக்கு நெருக்கடியாக அமையலாம் என்று அரசாங்கம் எற்கனவே எதிர்பார்த்திருந்தது. ஆனால், கொழும்பில் கடமைகளைப் பொறுப்பேற்ற சிறிது காலம் வரை அமெரிக்கத் தூதுவர் பெரிதாக எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை. அது அரசாங்கத்துக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தவே செய்தது.
 
ஆனால், இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், அமெரிக்கத் தூதுவர் வெளியிடும் கருத்துகள் அரசாங்கத்துக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
 
அவர் உயர் பாதுகாப்பு வலயம், படைகளை நிறுத்துவது, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் ஏற்கனவே கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தன.
 
உள்நாட்டு விவகாரங்கள் குறித்து கருத்துகளை வெளியிடவோ, அதில் தலையிடவோ வெளிநாட்டு இராஜதந்திரியான அவருக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
 
இந்தநிலையில், தற்போது, அமெரிக்கத் தூதரகமும், திருகோணமலை நகரசபையும் செய்து கொண்டுள்ள உடன்பாடு அரசாங்கத்தை விசனத்தில் ஆழ்த்தியுள்ளது. திருகோணமலையில் அமெரிக்கன் கோணர் எனப்படும் தகவல் நிலையத்தை அமைப்பதற்கான உடன்பாடே அது.
 
இதுபோன்று ஏற்கனவே கண்டியிலும், யாழ்ப்பாணத்திலும் அமெரிக்கன் கோணர் இயங்கி வருகின்றது. இந்த உடன்பாடு குறித்து, வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தவோ, முன் அனுமதி பெறப்படவோ இல்லை என்பது அரசாங்கத்தின் குற்றச்சாட்டு.
 
பொதுவாக உள்ளூரில் எந்தவொரு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதானாலும், வெளிநாட்டுத் தூதரகங்கள் அதுபற்றி வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தி அனுமதி பெற்றுக்கொள்வது தான் நடைமுறை. இந்த நடைமுறை இலங்கையில் மட்டும் பின்பற்றப்படும் ஒன்று அல்ல. ஏனைய நாடுகளிலும் அதே வழக்கம் தான் உள்ளது.
 
ஆனால் அமெரிக்கத் தூதரகம் அவ்வாறு அனுமதி பெற்றுக்கொள்ளாதது ஏன் என்பது மர்மமாக உள்ளது. இலங்கையில் எத்தனையோ திட்டங்களை முன்னெடுக்கும் அமெரிக்காவுக்கு இந்த நடைமுறை தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை.
 
கிழக்கு மாகாணசபையின் ஊடாக, இந்தத் திட்டத்தை முன்னெடுக்காமல், திருகோணமலை நகரசபையின் ஊடாக இதனை முன்னெடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்க  ஒரு விடயமே.
 
கிழக்கு மாகாணசபை அரசின் கட்டுப்பாட்டின் கீழேயே இருப்பதால், அதனுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த அமெரிக்கா விரும்பாமல் போயிருக்கலாம். ஆனால் அமெரிக்கா புரிந்துணர்வு உடன்பாடு செய்துள்ள கொண்டுள்ள திருகோணமலை நகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அரசாங்கம் விசனம் கொண்டுள்ளதற்கு இதுவும் ஒரு காரணம்.
 
சிலவேளைகளில் ஆளும்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இன்னொரு பிரதேசசபையுடன் அமெரிக்கா இந்த உடன்பாட்டைச் செய்திருந்தால், அதை அரசாங்கம் கண்டும் காணாமல் விட்டிருக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் உள்ள ஓர் உள்ளூராட்சி சபையுடன் அமெரிக்கா புரிந்துணர்வு உடன்பாட்டை செய்துள்ளதை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 
இலங்கை அரசாங்கத்துக்கு வெறுப்பேற்றும் வகையில், அமெரிக்கா திட்டமிட்டே இதனைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆனால் அது உறுதிப்படுத்தப்பட்டது அல்ல.
 
இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உதவித் திட்டங்கள் தொடர்பான முரண்பாடுகள் அண்மையில் தலைதூக்கியுள்ளன. வடக்கில் சில திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்றபோது இராணுவத்தினர் தலையிட்டதால் அவற்றைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டதாக சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கத் தூதுவர் குற்றம்சாட்டியிருந்தார். அதன் பின்னர், இலங்கைக்கான நிதியுதவியை 20 சதவீதத்தினால் குறைக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி நடவடிக்கை எடுத்திருந்தார்.
 
அதனையடுத்து, நீதித்துறை மறுசீரமைப்புக்காக அமெரிக்கா வழங்க முன்வந்த 450 மில்லியன் ரூபா நிதியை அமெரிக்கா மீளப்பெற்றது. பிரதம நீதியரசர் விவகாரத்தில் எழுந்த சர்ச்சையால் தான் இந்த நிதி திரும்பப் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இத்தகைய பின்னணியில் தான், அமெரிக்கன் கோணரை அமைக்கும் உடன்பாட்டை திருகோணமலை நகரசபையுடன் செய்து கொண்டுள்ளது. இந்த விடயத்தில் அமெரிக்கா இராஜதந்திர நெறிமுறைகளை மீறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டாலும், அதை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.
 
ஏற்கனவே கண்டியிலும், யாழ்ப்பாணத்திலும், அமெரிக்கன் கோணரை அமைக்கும் போது பின்பற்றப்பட்ட வழிமுறையே இங்கும் பின்பற்றப்பட்டதாக அமெரிக்கத் தூதரகத்தின் சார்பில் உடன்பாட்டில் கையெழுத்திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் இதனை இப்படியே விடுவதாகத் தெரியவில்லை.
 
அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் முடிவில் அரசாங்கம் இருப்பதாகத் தெரிகிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் முன்கூட்டிய எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. ஆனாலும் அமெரிக்கா இதனை ஓர் உள்நோக்கத்துடன் தான் செய்துள்ளது போலத் தோன்றுகிறது. ஏனெனில், அரசாங்கத்தின் போக்கு அதற்கு பிடிக்கவில்லை என்பது தெரிகிறது.
 
அதைவிட, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்திலும் இலங்கை மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தான், 2012ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படவேயில்லை என்று அரசாங்கம் அறிவிக்க வேண்டியேற்பட்டது. இப்போது பல்வேறு தளங்களிலும் அமெரிக்க - இலங்கை உறவு நிலை தளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது.
 
இந்த நிலைக்கு இலங்கை அரசாங்கத்தின் போக்கும் ஒரு காரணம். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இரண்டு மாதங்கள் முடிந்துள்ள நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த அறிகுறிகளும் அரசாங்கத்திடம் இருந்து வரவில்லை.
 
தன்னால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் அலட்சியப்படுத்துவதாக அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ள நிலையில் தான், தற்போதைய முறுகல்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. இந்த முறுகல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்தடுத்து கூட்டத்தொடர்கள் நெருங்கும் போது இன்னும் அதிகமாகலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X