2025 மே 19, திங்கட்கிழமை

'விலகி நில்லும் பிள்ளாய்': சீனிவாசனுக்கு உத்தரவிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம்

A.P.Mathan   / 2013 ஜூன் 03 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் (பி.சி.சி.ஐ.) பதவியிலிருந்து பிரபல தொழிலதிபர் என்.சீனிவாசன் விலகி நிற்கிறார். தமிழகத்தில் மிகவும் பிரபல்யமான நந்தனார் தெருக்கூத்தில் சிவபெருமானை வழிபட நந்தனாருக்கு வழிவிடாமல் மறித்து நிற்கும் நந்தியைப் பார்த்து "விலகி நில்லும் பிள்ளாய்" என்று நந்தனார் பாடும் பாடல் மிகவும் பிரபல்யம். அதுபோல் இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து "விலகி நிற்கும்" சீனிவாசன், இடைக்கால தலைவர் பொறுப்பை ஜக்மோகன் டால்மியாவிடம் கொடுத்திருக்கிறார். சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பி.சி.சி.ஐ.யின் அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு அதிரடியாக எடுக்கப்பட்டிருக்கிறது.
 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் "மேட்ச் பிக்ஸிங்" நடைபெற்ற புகார் கிளம்பியவுடன் சென்னையில் சில ப்ரோக்கர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். மும்பையிலும் கைது செய்யப்பட்டார்கள். கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டதும் மற்ற நகரங்களில் உள்ள ப்ரோக்கர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதைத் தொடர்ந்தே மும்பையில் நடிகர் விண்டு தாரா சிங், அவருடன் தொடர்புள்ள சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் ஆகியோரெல்லாம் மும்பை பொலிஸால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார்கள். சென்னை ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலும் இந்த சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். சென்னையில் மட்டும் பிரஷாந்த், சஞ்சய், கிட்டி என்று பிடிபட்ட ப்ரோக்கர்களின் பட்டியல் நீளுகிறது. கோவா, கல்கத்தா, அகமதாபாத், கேரளா, டெல்லி என்று ப்ரோக்கர்கள் பிடிபடாத மாநிலமே இல்லை என்ற அளவிற்கு இந்த "கிரிக்கெட் ஊழல்" கொடிகட்டி பறக்கிறது. இந்த கைதுகள் ஒருபுறமிருந்தாலும், இந்திய கிரிக்கெட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த "ஐ.பி.எல்." கிரிக்கெட் புயலில் இந்தியாவில் "ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் பதவியை விட்டுப் போக வேண்டுமா அல்லது வேண்டாமா" என்ற விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது. இதுவரை அரசியல்வாதிகள் மத்தியில்தான் இப்படியொரு அலசம் அரங்கேறியது. இப்போது விளையாட்டிலும் அது புகுந்திருக்கிறது. அரசியல்வாதிகள் மீது அவ்வப்போது ஊழல் புகார்கள் எழும். "நான் நிரபராதி" என்று முதலில் பீற்றிக் கொண்டிருப்பார்கள். பிறகு அக்குற்றச்சாட்டிற்கு உள்ளானவர் மத்திய அமைச்சராக இருந்தால், நாடாளுமன்றம் முடக்கப்படும். அதே நேரத்தில் பொதுநல வழக்குகள் மூலம் இந்திய சுப்ரீம் கோர்ட்டின் கவனம் ஈர்க்கப்படும். நாடாளுமன்ற முடக்கத்திற்கு அஞ்சுவதா, சுப்ரீம் கோர்ட்டிற்கு மரியாதை கொடுப்பதா என்ற சிக்கலில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் மாட்டிக் கொள்வார்கள். இறுதியில் சுப்ரீம் கோர்ட்டின் வம்பில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற முடிவிற்கு வரும் அரசியல்வாதிகள் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வார்கள். இப்படித்தான் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அ.ராஜா, தயாநிதி மாறன், அஸ்வனிகுமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.
 
ஆனால் பி.சி.சி.ஐ. விவகாரம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. இந்த விவகாரத்திற்குள் தென்னிந்தியா, வட இந்தியா என்ற "ஈகோ" போர் தொடங்கி விட்டது. மத்திய அமைச்சர் சரத்பவார் எப்படியாவது சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அதற்கான பிரசாரத்தை அவர் முடுக்கி விட்டுள்ளார். ஐ.பி.எல். மேட்ச் பிக்ஸிங் புகார் வெளிவந்தவுடன், "நான் என்ன தவறு செய்தேன்? என்னை ராஜினாமா செய்ய வைக்க முடியாது" என்று ஆணித்தரமாக வாதிட்டார் சீனிவாசன். இது அகில இந்திய அளவில், குறிப்பாக வட இந்திய பத்திரிகைகள், டெலிவிஷன் சேனல்கள் போன்றவற்றின் கோபத்தை கிளறி விட்டது. அங்குள்ள அரசியல் தலைவர்களையும் டென்ஷனாக்கியது. "தனது மருமகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சீனிவாசன் எப்படி இப்படி அடம்பிடிக்க முடிகிறது" என்ற கேள்வி எழுந்தது. பேனல் டிஸ்கஷன்கள் டெலிவிஷன் சேனல்களில் தூள் பறந்தது. "சீனிவாசன் பதவி விலக வேண்டும்" என்று கருத்துக் கூறாத அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் எல்லாம் "ஊழல் பற்றி அக்கறையில்லாதவர்கள்" என்று முத்திரை குத்தப்பட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் கல்கத்தாவில் "சென்னை சூப்பர் கிங்" கிற்கும், "மும்பை இந்தியன்" டீமுக்கும் இடையே இறுதி போட்டி நடைபெற்றது. அப்போட்டியினை மேற்குவங்க கவர்னர் எம்.கே. நாராயணனுடன் அமர்ந்து ரசித்தார் ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா. அவருக்கு அருகிலேயே "மேட்ச் பிக்ஸிங்" பற்றி முதல் ரவுண்டில் விசாரிக்க நியமிக்கப்பட்ட கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு குழு தலைவர் ஆர்.என். சவானியும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
மீடியாக்களின் பிரசாரத்தில் மிரண்ட மத்திய அமைச்சர் ஜோதியார்த்திய சிந்தியா முதலில் கருத்துச் சொன்னார். "சீனிவாசன் மனச்சாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்" என்று வற்புறுத்திய அவர், சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அதைத் தொடரந்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தன் பதவியை ராஜினாமா செய்தார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகமே சீனிவாசன் பதவியை விட்டு விலக வேண்டும் என்ற கருத்து வலுப்பெறும் விதத்தில் பத்திரிகை குறிப்பை வெளியிட்டது. இதற்கிடையில் ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங், "அரசியலையும், கிரிக்கெட்டையும் கலக்கக் கூடாது" என்று கூறி, "வழக்கு விசாரணையில் இருப்பதால் அது பற்றி கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை" என்றார்.
 
ஆனாலும் "நான் என்ன தவறு செய்தேன்" என்று சீனிவாசன் முதலில் அமைத்த அஸ்திவாரம் கலைய ஆரம்பித்தது. எங்கு திரும்பினாலும் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்ற குரல் கோரஸாக கிளம்பியது. "இனிமேலும் நாம் தாக்குப் பிடிக்க முடியாது" என்ற முடிவிற்கு வந்த சீனிவாசன், பி.சி.சி.ஐ.யின் அவசரக் கூட்டம் ஜூன் எட்டாம் திகதி நடைபெறும் என்று அறிவித்தார். அக்கூட்டத்தில் சீனிவாசன் ராஜினாமா செய்வார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் திடீரென்று ஜூன் 2ஆம் திகதியன்றே சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பி.சி.சி.ஐ.யின் அவசரக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படியே கூட்டமும் தொடங்கியது. நாட்டில் உள்ள பத்திரிகையாளர்கள் முழுவதும் அங்கே கூடியிருந்தார்கள். "மின்மினிப் பூச்சிகள்" போல் கமெராக்கள் பளிச், பளிச் என மின்னிக் கொண்டிருந்தன. 200இற்கும் மேற்பட்ட கமெராக்கள், பத்திரிகை நிருபர்கள் சகிதமாக சென்னையில் உள்ள அந்த "பார்க் ஷெரட்டன்" ஹோட்டல் திக்கு முக்காடியது.
 
கூட்டத்திற்கு வரும் பி.சி.சி.ஐ. உறுப்பினர்களை எந்த பத்திரிகையாளரும் நெருங்கி விடாதபடி "பவுன்ஸர்களை" நிறுத்தி வைத்திருந்தனர். நட்சத்திர ஹோட்டல்களில் "பவுன்ஸர்கள்" என்பவர்கள் வெளியிடங்களில் இருக்கும் "அடியாட்கள்" போன்றவர்கள். குறிப்பாக பார் உள்ள ஹோட்டல்கள், டான்ஸ் நடைபெறும் ஹோட்டல்கள் போன்றவற்றில்தான் இது மாதிரி "பவுன்ஸர்கள்" இருப்பார்கள். இவர்களின் பணி அங்கு வருவோர் ஏதேனும் தகராறு செய்து கொள்ளாமல், டான்ஸில் பங்கேற்றுள்ள பெண்களுக்கு ஏதும் ஆபத்து வராமல் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களிடம் விடப்பட்டிருக்கும். இது போன்ற பவுன்ஸர்கள் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் பத்திரிகையாளர்களை பார்த்து விடாமல் இருக்க நிறுத்தப்பட்டது வித்தியாசமான காட்சியாக இருந்தது. இக்கூட்டத்திற்கு முதல் நபராக வந்தார் சீனிவாசன். இவர் அதற்கு முன்பு தன் ஆஸ்தான இஷ்ட தெய்வமான சென்னை மைலாப்பூர் ஆதிகேசவர் பெருமாளை தரிசித்து விட்டு, அங்கே விசேஷ அர்ச்சனை செய்து விட்டு பி.சி.சி.ஐ. கூட்டத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியும், அதேபோல் பிரபல கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேயும் வரவில்லை. ஆனாலும் அவர்களுடன் பேசுவதற்கு "வீடியோ கான்பரன்ஸிங்" உடன் கூடிய கான்பரன்ஸ் அரங்கம் அசத்தலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றதாம். ஆனாலும் தன் விருப்பத்திற்கு மாறாக பி.சி.சி.ஐ. சென்று விடாதபடி பார்த்துக் கொண்டார் சீனிவாசன். அதற்கு முன்பே அனைத்து உறுப்பினர்களிடமும் பேசி ஒரு சுமூகமான முடிவை எட்டுவதற்கு தயாரான சூழ்நிலையிலேயே பி.சி.சி.ஐ.க்கூட்டம் கூடியது என்று கூட தகவல்.
 
"சீனிவாசன் ராஜினாமா செய்வது" என்ற கேள்விக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் பேசவில்லை என்று கூறும் விவரமறிந்த வட்டாரம் அக்கூட்டம் முழுக்க முழுக்க அவரது கட்டுப்பாட்டை மீறி விடாதபடியே நடந்து முடிந்தது என்கிறது. அக்கூட்டத்தில் சீனிவாசன் முன் வைத்த ப்ரப்போஸல் இதுதான். "கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் பற்றி விசாரிக்கு மூன்று பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டு விட்டது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் தவிர கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் செகரட்டரி ஜட்கேல் ஆகியோர் அடங்கிய மூவர் குழு அது. புகாருக்குள்ளான குருநாத் மெய்யப்பன் ஏற்கனவே பொலிஸ் விசாரணை வளையத்திற்குள் வந்துவிட்டார். அதில் நான் எந்த விதத்திலும் தலையிடவில்லை. பொலிஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். என் மருமகன் மீது விசாரணை நடக்கும்போது நான் தலைவராக இருக்கலாமா என்றுதான் கேள்வி எழுப்பப்படுகிறது. அந்த விசாரணையில் நான் தலையிட மாட்டேன் என்று கூறினாலும் அதை வாரியம் ஏற்றுக் கொண்டாலும், வெளியில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அது மாதிரியான சந்தேகத்திற்கும் இடமளிக்காத வகையில் மூவர் குழு விசாரணை முடியும்வரை நான் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கி நிற்கிறேன். தற்காலிக தலைவராக டால்மியாவை நியமிப்போம். நான் குற்றமற்றவன் என்பது நிரூபணம் ஆன பிறகு மீண்டும் தலைவர் பதவிக்கு வருகிறேன்" என்று உருக்கமாக பேசினாராம்.
 
ஆனால் இந்த உருக்கமான உரைக்கு எல்லாம் பஞ்சாப் கிரிக்கெட் வாரியத் தலைவர் பிந்தரா மனம் இறங்கி விடவில்லை. "ஊழல் விடயத்தில் பி.சி.சி.ஐ. உறுதியாக இருக்கிறது என்றால் சீனிவாசன் ராஜினாமா செய்தே தீர வேண்டும்" என்ற கோரிக்கையை கூட்டத்தில் முன் வைத்தார். ஆனால் மைனாரிட்டி, மெஜாரிட்டி அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது. இறுதியில் சீனிவாசன், "நான் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கி நிற்கிறேன். விசாரணையில் நான் குறுக்கிட மாட்டேன். அதற்கு அத்தாட்சியாக டால்மியாவை இப்போது முதல் தற்காலிக தலைவராக்க சம்மதிக்கிறேன்" என்று கூற, கூட்டத்தில் ஜக்மோகன் டால்மியா நியமனம் உறுதியானது. இவர் மீதும் முன்பு குற்றம் சாட்டப்பட்டு பிறகு அந்த குற்றச்சாட்டு நிரூபணம் ஆகாமல் போனது என்பது ஒரு புறமிருக்க, சரத்பவாருக்கு நேர் எதிராக இருப்பவர் ஜக்மோகன் டால்மியா. சீனிவாசன் ராஜினாமாவை கேட்ட சரத்பவாருக்கு பதிலடியாக டால்மியாவை தற்காலிக தலைவராக நியமித்து "செக்" வைத்து விட்டார் சீனிவாசன் என்பதே தற்போதைய பேச்சு. அதாவது கிரிக்கெட்டில் "கல்கத்தா" ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி "மும்பை ஆதிக்கம்" வந்தது. அந்த ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி "சென்னை ஆதிக்கம்" வந்தது. இப்போது மீண்டும் "கல்கத்தா ஆதிக்கம்" அமலுக்கு வருகிறது. புதிய தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டால்மியா கல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டால்மியா நியமிக்கப்பட்ட பிறகு நட்சத்திர ஹோட்டலில் உள்ள பின் புற கேட் மூலமாக பத்திரிகையாளர்களுக்கு "டிமிக்கி" கொடுத்து விட்டு வெளியேறினார் சீனிவாசன்.
 
பி.சி.சி.ஐ.யை உறுப்பினர்களைப் பொறுத்தவரை "சீனிவாசன் ராஜினாமா" என்பது அவர்களின் கோரிக்கையே இல்லை. அதனால் "பி.சி.சி.ஐ. இமேஜ் காப்பாற்றப்பட வேண்டும்" என்பது மட்டுமே அஜெண்டா. ஆகவேதான் இக்கூட்டம் முடிந்ததும் "பி.சி.சி.ஐ.யின் நம்பகத்தன்மை காப்பாற்றப்பட்டு விட்டது" என்று பா.ஜ.க. முன்னணித் தலைவர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். இருபதுக்கு 20 கிரிக்கெட் மோகம் என்பது ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஜிவ்வென்று எகிறிக் கொண்டிருக்கிறது. அந்த கிரிக்கெட் மோகத்தை சீர்குலைக்கும் வகையில் வெளிவந்துள்ள "மேட்ச் பிக்ஸிங்" குற்றச்சாட்டு இந்திய கிரிக்கெட்டிற்கு புதிதல்ல. அதை கட்டுப்படுத்தவே முடியாது என்று பி.சி.சி.ஐ. சொல்வதற்கு பதில், "கிரிக்கெட்டில் புகுந்துவிட்ட பிக்ஸிங் என்ற புரையை எப்படி நீக்குவது" என்பதில் முழுக்கவனம் செலுத்தினால் மட்டுமே கிரிக்கெட் ஓர் ஆக்கபூர்வமான விளையாட்டாக இருக்கும். இல்லையென்றால் மேட்சில் வீசப்படும் "நோ பால்கள்" போல் கிரிக்கெட் மாறி விடும் ஆபத்து இருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X