2025 மே 19, திங்கட்கிழமை

இந்தியாவையும் தேசியவாதிகளையும் சமாளிக்கும் அரசாங்கத்தின் சட்ட திருத்தம்

Menaka Mookandi   / 2013 ஜூன் 07 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளின் சில அதிகாரங்களை ரத்துச் செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் சில சிங்கள தேசியவாத கட்சிகள் மிக ஆவலோடு விரும்பிய மாகாண சபைகளிடம் இருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பறித்தல் அரசாங்கத்தின் உத்தேச திட்டத்தில் இல்லை. 

அரசாங்கம் முன்வைத்திருக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் இரண்டுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைந்து தனி மாகாணமாவதற்கு இருந்த வாய்ப்பு ரத்துச் செய்யப்படுகிறது. அதேவேளை சில விடயங்களுக்கு சகல மாகாண சபைகளிடமும் அங்கீகாரம் பெற்றே அரசாங்கம் அவ்விடயங்கள் தொடர்பாக சட்டம் இயற்றலாம் என்ற நிலையும் இல்லாமல் செய்யப்படுகிறது.

சில சிங்கள தேசியவாத கட்சிகள் நீண்ட காலமாக விடுத்து வந்த கோரிக்கையின் பிரகாரம் அரசாங்கம் மாகாண சபைகளுக்குறிய காணி மற்றும் பொலிஸ் அதகாரங்களை ரத்துச் செய்யாமல் மிக அண்மையில் ஜாதிக்க ஹெல உறுமய விடுத்த கோரிக்கையொன்றில் இருந்த சில விடயங்களை மட்டும் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது ஏன்? மாகாண சபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அனுபவிப்பதை அரசாங்கத்தின் தலைவர்கள் விரும்புகின்றார்களா?

அவர்கள் அதனை விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அவ்வாறு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களில் கை வைக்காமல் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்றே விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அண்மைக்கால சில சம்பவங்களை அலசிப் பார்த்தால் அது தெளிவாகிவிடும்.

வட மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்தே அதிகார பறிப்பு பற்றிய கூச்சல் எழத் தொடங்கியது. ஏனைய மாகாண சபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வைத்திருப்பதைப் பற்றி சிங்கள தேசியவாத கட்சிகளுக்கு எவ்வித பயமும் இருக்கவில்லை.

வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக 2012ஆம் ஆண்டு இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதன் முதலாக கருத்து வெளியிட்டு இருந்தார். 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இத்தேர்தலை நடத்துவதாகவே அப்போது ஜனாதிபதி கூறியிருந்தார்.

உண்மையிலேயே 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்தேர்தலை நடத்துவது என்று பாரதூரமாக நினைத்தே ஜனாதிபதி அப்போது அவ்வாறு கூறினாரோ என்னவோ தெரியாது. ஆனால் இந்தியா இந்த கூற்றை பற்றிப் பிடித்துக் கொண்டது. அதன் பிரகாரமே கடந்த மார்ச் மாதம் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தின் போது இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலும் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தல் நடத்துவதென்ற விடயமும் உள்ளடக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளுக்கு தமது இருப்பை மக்களுக்கு அறிவிக்க பொருளாதார பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் அரசாங்கத்தில் உள்ள சிறு கட்சிகளுக்கு, குறிப்பாக சிங்கள தேசியவாத கட்சிகளுக்கு தமது இருப்பை அறிவிக்க பொருளாதார பிரச்சினைகளை தொட முடியாது. அது அரசாங்கத்தின் தலைவர்களின் கோபத்திற்கு உள்ளாகும் காரணமாகும். எனவே அவர்கள் அடிக்கடி இனப்பிரச்சினையை பிடித்துக் கொள்கிறார்கள்.

செப்டம்பர் மாதம் நெருங்கவே அவர்கள் வட மாகாண சபைத் தேர்தலைப் பற்றி கூச்சலிட ஆரம்பித்தனர். முதலில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சவே சர்ச்சையை ஆரம்பித்தார். அவரே பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என முதலில் கோஷம் எழுப்பினார்.

பின்னர் ஜாதிக்க ஹெல உருமயவும் அதில் தொற்றிக் கொண்டது. சிங்கள மக்களின் கண்ணோட்டத்தில் தாம் தேசிய சுதந்திர முன்னணியை விட சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்காக மாகாணசபை முறையையே இல்லாமல்; செய்யும் வகையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே ரத்துச் செய்ய வேண்டும் என அக்கட்சி கோஷமிட ஆரம்பித்தது. இதற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவும் கிடைத்தது.

அவர்களது குரல் வலுப்பெற்று வரும் நிலையில் கடந்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குரஷித் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸூடன் தொலைபேசி மூலம் பேசி மாகாண அதிகாரங்களை பறிக்க எடுக்கும் முயற்சிகளைப் பற்றி தமது அதிருப்தியை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் அரசாங்கம் பெரும் அசௌகரித்திற்கு உள்ளாகியிருக்கும் என்று ஊகிக்க முடியும் ஏனெனில் தாமே சிங்கள மக்களின் பாதுகாவலன் என்று காட்டிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தினால் தேசியவாத கட்சிகளின் கோரிக்கைகளை முற்றாக நிராகரிக்கவும் முடியாது. அதேவேளை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பிரேணையின் போது இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தாலும் இந்தியாவை பகைத்துக் கொள்ளவும் முடியாது.

இதனிடையே ஹெல உறுமய, அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை தயாரித்து வெளியிட்டது. இதனால் அரசாங்கம் மேலும் அசௌகரியத்திற்குள்ளாகும் என பலர் நினைத்த போதிலும் அந்த திருத்தத்திற்குள் அரசாங்கத்திற்கு பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பும் இருந்தது.

முன்னர் கூறியதைப் போல் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முற்றாக ரத்துச் செய்வதற்காக ஹெல உறுமய இந்த திருத்த சட்;ட மூலத்தை கொண்டு வரவில்லை. மாறாக மாகாண சபைகளுக்குறிய சில அதிகாரங்களை ரத்துச் செய்வதனையே அது நோக்கமாக கொண்டது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்பதற்கு மேலதிகமாக மாகாணங்கள் இணையும் அதிகாரத்தையும் ரத்துச் செய்து சில விடயங்களுக்கு சகல மாகாண சபைகளிடமும் அங்காரம் பெற வேண்டும் என்ற நிலையும் ரத்துச் செய்ய வேண்டும் என்றே ஹெல உருமய கேட்கிறது.

தற்போதைய தேசிய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே ரத்துச் செய்ய வேண்டும் என்று கேட்பது யதார்த்தம் அல்ல என ஹெல உறுமயவின் தலைவர்களில் ஒருவரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில கடந்த செவ்வாய்க்கிழமை மேல் மாகாண சபைக் கூட்டத்தின் போது கூறியிருந்தார். அதாவது இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் நெருக்குவாரம் பலித்துள்ளது. அது தான் அவர் கூறும் சர்வதேச நிலைமை என்பது புலனாகிறது.

ஆனால் சர்வதேச சமூகத்தின் கோபத்திற்குள்ளாகாமல் தேசியவாதிகளோடு சேர்ந்து செயற்பட ஹெல உறுமயவின் இந்த திருத்த சட்ட மூலம் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பத்தை கொடுத்தது. அரசாங்கம் என்ன செய்ததென்றால் ஹெல உறுமயவின் சட்டமூலத்தில் இருந்த நான்கு காரணங்களில் இரண்டை மட்டும் எடுத்து அரசியலமைப்பை திருத்தப் போகிறது.

அதன் பிரகாரம் பொலிஸ், காணி அதகாரங்களில் கை வைப்பதில்லை. ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைந்து தனி மாகாணமாவதற்கு இருந்த வாய்ப்பு ரத்துச் செய்யப்படுகிறது. அதேவேளை சில விடயங்களுக்கு சகல மாகாண சபைகளிடமும் அங்கீகாரம் பெற்றே அரசாங்கம் அவ்விடயங்கள் தொடர்பாக சட்டம் இயற்றலாம் என்ற நிலையும் இல்லாமல் செய்யப்படுகிறது. இனி 9 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் விரும்பினால் போதும்.

இதனை அனேகமாக இந்தியா எதிர்க்காது. ஏனெனில் தமிழீழத்தை அமைப்பதற்காகவே தமிழ் கட்சிகள் ஆரம்ப காலத்தில் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை கோரின. இந்தியா தமிழீழத்தை விரும்பவில்லை. அக்காலத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களை சமாளிப்பதற்காகவே இந்தியா அப்போது மாகாண இணைப்பை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொண்டது.

அதிகர பரவலாக்கல் என்ற அர்த்தத்தில் மாகாண இணைப்பு அவசியமானதொன்றல்ல. ஏனெனில் அதிகார பரவலாக்கலின் ஒரு நோக்கம் நிர்வாகத்தை மக்களுக்கு சமீபமாக்குவதேயாகும். ஆனால் மாகாண இணைப்பானது இப்போது தமிழர்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக இருப்பதால் அவர்கள் அதனை தொடர்ந்து கோரி வருகிறார்கள். இந்தியாவுக்கு அதைப் பற்றி இப்போது அவ்வளவு அக்கறை இருக்கும் என்று கூற முடியாது. அது இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியும்.

அரசியலமைப்பில் மாகாண சபை அதிகார பட்டியல், (மத்திய அரசாங்கத்திறகு) ஒதுக்கப்பட்ட அதிகார பட்டியல் மற்றும் ஒருங்கியல் (பொது) அதிகார பட்டியல் என மூன்று பட்டியல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒருங்கியல் பட்டியலில் உள்ள ஒரு விடயம் தொடர்பாக நாடாளுமன்றம் ஏதாவது தீரமானம் எடுப்பதாக இருந்தால் சகல மாகாண சபைகளினதும் ஒப்புதல் அதற்காக பெற வேண்டும். அரசாங்கத்தின் புதிய திருத்தத்தின் படி இனி பெரும்பாலான மாகாண சபைகளின் ஒப்புதல் பெற்றால் போதுமானதாகும்.

அனேகமாக மத்திய அரசாங்கத்தில் பதவியில் இருக்கும் கட்சியே தெற்கில் பெரும்பாலான மாகாண சபைகளிலும் பதவியில் இருக்கும். எனவே அரசாங்கத்தின் புதிய திருத்தத்தின் படி இனி எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஒருங்கியல் பட்டியலில் உள்ள எந்தவொரு விடயம் தொடர்பாகவும் இலகுவில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற முடியும்.

சுருக்கமாக கூறின் இதன் மூலம் ஒருங்கியல் பட்டியலில் உள்ள அதிகாரங்களை அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது. பெரும்பாலான மாகாண சபைகள் விரும்பினால் அரசாங்கத்தின் மோசமான திட்டங்களை தோற்கடிக்க முடியும் என சித்தாந்த ரீதியில் வாதிட முடியுமாக இருந்த போதிலும் அது நடைமுறையாகப் போவதில்லை.

ஒருங்கியல் பட்டியலில் உள்ள ஒரு விடயம் தொடர்பாக நாடாளுமன்றம் ஏதாவது தீரமானம் எடுப்பதகற்காக சகல மாகாண சபைகளினதும் ஒப்புதல் பெற வேண்டும் என்றால் ஒரு மாகாண சபை விரும்பாவிட்டாலும் அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியாது. எனவே அது ஏனைய மாகாண சபைகளுக்கு இழைக்கும் அநீதி என ஹெல உறுமய வாதாடுகிறது. அதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் அதேவேளை நடைமுறையில் இனி ஒருங்கியல் பட்டியல் விடயத்தில் மாகாண சபைகளுக்கு அதிகாரமே இல்லாமல் போய்விடுகிறது.

இதனையும் இந்தியா எதிர்க்கும் என்று எதி;ப்பார்க்க முடியாது. ஏனெனில் சித்தந்த ரீதியில் இதில் தவறு இல்லை. சிலவேளை இதன் மூலம் தமிழ் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை பகிஷ்கரிக்கச் செய்து, ஆளம் கட்சி; மாகாண சபையை கைப்பற்றிக் கொண்டு, போரின் பின்னர் தமிழ் மக்கள் தம்மோடு இருக்கிறார்கள் என்று உலகுக்கு காட்டிக் கொள்வதும் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X