பாரதீய ஜனதா கட்சியின் பிரசாரக்குழுத் தலைவராக நரேந்திரமோடி நியமிக்கப்பட்டிருக்கிறார். "என் மீது பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. அதை நிறைவேற்ற நான் பாடுபடுவேன். பாதி வேலை சரியாக செய்து முடித்து விட்டாலே மீதி எல்லாம் வெற்றி" என்று அறைகூவல் விடுத்துள்ளார் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி. இவ்வளவு அதி முக்கியத்துவம் வாய்ந்த பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டத்தை 1980இற்கும் பிறகு முதன் முறையாக புறக்கணித்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி. பா.ஜ.க. இன்று இந்திய தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு இரு கதாநாயகர்கள்தான் முக்கியமானவர்கள். முதலாமவர் அதல் பிஹாரி வாஜ்பாய். அக்கட்சியன் சார்பில் ஆறு வருடம் பிரதமராக இருந்த ஒரே தலைவர். இவர் அக்கட்சியின் "மதசார்பற்ற முகமாக" திகழ்ந்தவர். இரண்டாவது கதாநாயகர் அத்வானி. ரத யாத்திரைகள் நடத்தி அக்கட்சியின் "இந்துத்துவா முகமாக" திகழ்ந்தவர். இந்த இரட்டையர்களில் ஒருவரான வாஜ்பாய் தீவிர கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். அத்வானி இன்னமும் ஆக்டீவ் அரசியலில் இருக்கிறார். பா.ஜ.க. மட்டுமின்றி, அக்கட்சி வழி நடத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் "பீஷ்மராக" ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
அந்த "பீஷ்மருக்குத்தான்" இப்போது குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி வடிவில் சோதனை வந்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் செல்வாக்கு பெற்றுள்ள மோடி அகில இந்திய அரசியலுக்கு முன்னிறுத்தப்படுகிறார். இதற்கு முன்பு பிரசாரக் குழுத் தலைவர்களாக இருந்த அருண் ஜேட்லி, பிரமோத் மகஜன் போன்றோர் பிரதமர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்படவில்லை. ஏனென்றால் அப்போது "ஸ்டார்" தலைவர்களான வாஜ்பாயும், அத்வானியும் பா.ஜ.க.வின் தேரின் சாரதிகளாக முன்னணியில் நின்றார்கள். இன்று வாஜ்பாய் ஒதுங்கியிருக்கிறார். அத்வானி ஒதுக்கப்பட்டுள்ளார். "நரேந்திரமோடியை ஏற்றுக்கொள்" என்று அவர் வீட்டு முன்பே "ஹிந்து சேனா" கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தும் அளவிற்கு அத்வானியின் முக்கியத்துவம் பா.ஜ.க.விற்குள் குறைந்திருக்கிறது. இது அத்வானிக்கு மனதளவில் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டது. கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் அத்வானியின் குரலுக்கு கட்சிக்குள் மரியாதை இல்லையே என்ற ஆதங்கம் அவர் மனதிற்குள் புயலாக மையம் கொண்டிருந்தது. அப்படி மையம் கொண்டிருந்த புயல் வீசத் தொடங்கியது. அத்வானி பா.ஜ.க.வின் முக்கிய பொறுப்புகள் அனைத்திலும் இருந்து ராஜினாமா செய்து விட்டார்.
காங்கிரஸுக்கு மாற்று நாங்கள் என்று முன்னிறுத்த புறப்பட்ட பா.ஜ.க.வினை இந்தப் புயல் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. "அத்வானியின் ராஜினாமாவை ஏற்க மாட்டோம்" என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கும், "அத்வானியை இப்படிப் போக அனுமதிக்க முடியாது" என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் வைத்யாவும் "வாய்ஸ்" கொடுத்துள்ளார்கள். பா.ஜ.க. முன்னாள் தலைவர் வெங்கய்யா நாயுடு, அனந்தகுமார் போன்றோர் அத்வானி வீட்டில் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். ராஜ் நாத் சிங்கே நேரில் சென்று "உங்கள் ராஜினாமாவை ஏற்க முடியாது" என்று அத்வானியிடம் கூறி, சமாதானப் புறாவை பறக்க விட்டுள்ளார். ஆனால் இந்த சலசலப்புகள், சங்கடங்கள் தீர்ந்து மீண்டும் காங்கிரஸுக்கு மாற்றாக பா.ஜ.க, புறப்படுவதற்குள் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படப் போகிறதோ என்ற அச்சம் மற்ற பா.ஜ.க.வை நம்பியிருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கே வந்து விட்டது. குறிப்பாக ஐக்கிய ஜனதா தளம் "நாங்கள் பா.ஜ.க.வுடனான உறவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார். சிவசேனாவோ, "அத்வானியை கன்வின்ஸ் பண்ண வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
பரபரப்பான இந்த வேளையில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை முன்னிறுத்தியிருப்பதாலேயே பா.ஜ.க.வின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விடுமா? இதுதான் இப்போது அனைவரது முன்பும் இருக்கின்ற "ஆச்சர்யக் கேள்வி" மட்டுமல்ல அதிசயமான கேள்வி. காலப்போக்கில் பிரசாரக்குழுத் தலைவரான மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இப்போதே அக்கட்சி தலைமை தாங்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம், "பிரச்சாரக்குழு தலைவராக மோடியை நியமித்தது பா.ஜ.க.வின் உள்கட்சி விவகாரம். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக வருபவர் அனைத்து கூட்டணி கட்சிகளும் ஏற்றுக் கொள்ளப்படுபவராக இருக்க வேண்டும்" என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து விட்டது. பீஹார் மாநிலத்தில் இந்த ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தயவு பா.ஜ.க.விற்கு நிச்சயம் தேவை. அம்மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாருக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போரின் உச்சகட்டமாகவே ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் இப்படியொரு கருத்தை தெரிவித்துள்ளார்.
நரேந்திரமோடிக்கு கட்சிக்குள் எதிர்ப்பு. மூத்த தலைவரான அத்வானி நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்ட அன்று நடிகர் கமல்ஹாசனின் "விஸ்வரூபம்" படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் பா.ஜ.க.வின் தலைவர் ராஜ்நாத் சிங்கோ, "அத்வானிக்கு உடல் நலம் சரியில்லை. டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் நான்தான் அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறேன் என்றார். ஆனால் இதையெல்லாம் மீறி, "நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். விஸ்வரூபம் படம் பார்த்தேன்" என்று தன்னுடையை ப்ளாக்கரில் போட்டு கலக்கி விட்டார் அத்வானி. நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்ட பிறகு பேச இருந்த பா.ஜ.க.வின் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஸ்மா சுவராஜ் "எனக்கு ப்ளைட்டிற்கு நேரமாகிவிட்டது" என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்று விட்டார். இவ்வளவுக்கும் பிறகு நரேந்திர மோடியை முன்னிறுத்தவே இப்போது அத்வானி ராஜினாமாவே செய்து விட்டார். இத்தனைக்கும் "குஜராத் மத கலவரத்திற்கு" (2002) பிறகு, நரேந்திரமோடி "ராஜ தர்மத்தை மீறி விட்டார்" என்று அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அறிவித்த போது, அதனால் ஏற்பட்ட விளைவுகளை தடுத்து இந்த நரேந்திர மோடியை காப்பாற்றியவர் அத்வானிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் கலவரத்திற்குப் பிறகு பா.ஜ.க.விற்குள் உள்ள தீவிர இந்துத்துவா முகத்திற்கு சொந்தக்காரர் நரேந்திர மோடி என்பது இந்தியாவில் உள்ள சிறிபான்மையினர் மனதில் வேறூண்றிப் போயிருக்கிறது. 2009 நாடாளுமன்ற தேர்தலின் போதும், சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போதும் நரேந்திர மோடியின் பிரசாரம் பா.ஜ.க.விற்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தரவில்லை. ஆனாலும் பா.ஜ.க. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை இந்துத்துவா வாக்காளர்கள் மத்தியில் "மோடி" என்ற பாஸிட்டிவ் இமேஜுடனும், சிறுபான்மையின மக்கள் மத்தியில் "மோடி" என்ற நெகட்டிவ் இமேஜூடனும் தன் பயணத்தை தொடக்குகிறது. இது அக்கட்சிக்கு பலம் சேர்த்துக் கொடுக்குமா அல்லது 2009இல் அத்வானியே அடுத்த பிரதமர் என்று செய்த பிரசாரத்திற்கு கிடைத்த தோல்வி போல் அமைந்து விடுமா என்ற அச்சம் பா.ஜ.க.வில் உள்ள "மதசார்பற்ற" தலைவர்கள் மனதில் எழாமல் இல்லை. அத்வானியை புறக்கணித்து, குஜராத் கலவரத்தை மறந்து, இத்தனைக்குப் பிறகும் நரேந்திர மோடியை பா.ஜ.க. முன்னிறுத்துவதில் ஒரேயொரு நோக்கம்தான் இருக்க முடியும். இருக்கின்ற கட்சிகளுக்குள் தனிப்பெரும் எண்ணிக்கையுள்ள எம்.பி.க்களை பெறும் கட்சியாக பா.ஜ.க.வை வளர்ப்பதற்கு நரேந்திரமோடி தேவை என்ற வியூகம்தான் அது.
ஏன் இந்த சிந்தனை அக்கட்சிக்கு ஏற்பட்டது? இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இந்திரா காந்தி (1969) காலத்திலேயே கூட்டணி அரசு சகாப்தம் தொடங்கினாலும், முற்றிலும் மத்திய அரசில் கூட்டணி ஆட்சியே என்ற கோட்பாடு 1989 வி.பி.சிங் பிரதமராக இருந்த போதுதான் அமலுக்கு வந்தது. நாடாளுமன்ற மொத்த எம்.பி.க்கள் 545-பேரில் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் 143 எம்.பி.க்களையும், பா.ஜ.க. 85 எம்.பி.க்களையும் பெற்றது. இடது சாரிகள் 45 எம்.பி.க்களை பெற்றார்கள். கொள்கை மற்றும் சித்தாந்த ரீதியாக எதிரும் புதிருமாக இருந்த இம்மூவரும் சேர்ந்துதான் வி.பி.சிங் தலைமையில் ஆட்சியை தொடங்கினார்கள். அந்த கூட்டணி அரசு இரு வருடங்கள் கூட நீடித்து நிற்கவில்லை. ஒருபுறம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கிய மண்டல் கமிஷன், இன்னொரு பக்கம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது- இந்த இரு பிரச்சினைகளும் இந்த கூட்டணி அரசை ஆட்டிப் படைக்க, இறுதியில் பதவியிழந்தார் வி.பி.சிங். அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சி 197 எம்.பி.க்களை பெற்றது. ராஜீவ் காந்தி கட்சி தலைவராக இருந்த நேரம் அது. தேசிய அளவிலும் 39.53 சதவீத வாக்குகளை வைத்திருந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் பா.ஜ.க.வோ கூட்டணியாக தேர்தலை சந்தித்ததால் அந்த தேர்தலில் 11.36 சதவீத வாக்குகளே கிடைத்தது. இந்த சூழ்நிலை, இந்திய தேர்தல் வரலாற்றில் காங்கிரஸுக்கு பா.ஜ.க. மாற்று சக்தி அல்ல என்ற "இமேஜை" கொடுத்தது. ஏனென்றால் 39 சதவீதத்தை 11 சதவீதம் ஏணி வைத்து கூட எட்டிப் பிடிக்க முடியாது என்று அப்போது கணக்கிடப்பட்டது.
அடுத்து வந்த 1991 நாடாளுமன்ற தேர்தல் அப்படியில்லை. பா.ஜ.க.விற்கு பலத்தை கொடுத்தது. அக்கட்சி எம்.பி.க்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது. வாக்கு வங்கியும் 20.11 சதவீதமாக எகிறியது. ஆனால் காங்கிரஸ் கட்சி 232 எம்.பி.க்களை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 1970 களில் ஆட்சி அமைத்த இந்திரா காந்திக்குப் பிறகு (இந்த சமயத்தில் தி.மு.க.வின் ஆதரவுடன் பிரதமரானார் இந்திரா காந்தி) 1991-ல்தான் காங்கிரஸின் பிரதமர் நரசிம்மராவ் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சிக்கு வந்தார். அந்தக் காலத்தில்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த வழக்கு எல்லாம் இந்திய அரசியலுக்கு இழுக்கை ஏற்படுத்தியது. ராவ் பிரதமராக வந்ததற்கு அப்போது நடந்த ராஜீவ் படுகொலை காரணம். அந்த "கொலை ஜூரம்" தேர்தலின் போது இருந்ததால் காங்கிரஸின் வாக்கு வங்கி பெரிதாக குறைந்து விடவில்லை. முந்தைய தேர்தலில் இருந்த 39 சதவீதம் 36 ஆக குறைந்தது அவ்வளவுதான்! ஆனால் பா.ஜ.க. 20 சதவீதத்தைத் தொட்டது. இந்த நேரத்தில்தான் காங்கிரஸுக்கு மாற்று பா.ஜ.க. என்ற இமேஜ் இந்திய வாக்காளர்கள் மத்தியில் உருவாகத் தொடங்கியது. அதே நேரத்தில் மத்தியில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் மெல்ல மெல்ல உருவானது. அதற்கு விதை போட்டது தமிழக கட்சியான அ.தி.மு.க. என்றே சொல்லலாம். 1991இல் அ.தி.மு.க.வின் தயவில்தான் நரசிம்மராவ் ஆட்சி நடத்தினார்.
அக்கட்சியை தன் கைக்குள் வைத்துக்கொள்ள சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கத் துறை அனைத்தையும் பயன்படுத்தினார் என்பது வேறு கதை. மாநில கட்சிகளின் இந்த ஆதிக்கம் 1996இல் மேலும் வளர்ந்தது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி 28 சதவீத வாக்குகளுக்கு வந்து, வெறும் 140 எம்.பி.க்களை மட்டுமே அந்த தேர்தலில் பெற்றது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 எம்.பி.க்களை அக்கட்சி பெறவில்லை. ஆனால் பா.ஜ.க.வோ தன் அதே 20 சதவீத வாக்கில், 161 எம்.பி.க்களை பெற்றது. அப்போதுதான் பிரதமர் பதவிக்கு வந்த வாஜ்பாய் 13 நாட்களில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் பதவி விலக நேர்ந்தது. அந்த வகையில் ஆட்சியில் அமர்ந்து 13 நாளில் மெஜாரிட்டியை காட்ட முடியாமல் ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் என்ற பெயரைப் பெற்றார்.
இது பா.ஜ.க.விற்கு அனுதாப அலையாக மாறியது. அது மட்டுமல்ல, அதுவரை தீண்டத்தகாத கட்சி பா.ஜ.க. என்று நினைத்து இருந்த பல மாநிலக் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியையும் முதன் முதலில் எடுத்தவர்கள் வாஜ்பாயும், அத்வானியும்தான். அப்படித்தான் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உருவானது. அது மட்டுமின்றி 1996 முதல் 1999இற்குள் மூன்று நாடாளுமன்ற தேர்தல்கள். மூன்று பிரதமர்கள்- இப்படி நாட்டின் ஜனநாயகம் திண்டாடியதைப் பார்த்து மக்கள் நொந்தே போய் விட்டார்கள். இந்த தாக்கம் 1998 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஒரு "மெகா கூட்டணி"யைக் கொடுத்தது. அதுதான் ஏற்கனவே உருவான தேசிய ஜனநாயக கூட்டணி. அதனால் அந்த தேர்தலில் 182 எம்.பி.க்களைப் பெற்று வாஜ்பாய் பிரதமரானார். பா.ஜ.க.வின் வாக்கு வங்கியும் 25.59 சதவீதத்தை எட்டியது. காங்கிரஸின் வாக்கு சதவீதமோ 25.82 சதவீதத்திற்கு கீழே இறங்கி வந்தது. காங்கிரஸை விட 28 சதவீத வாக்குகள் குறைவாக தன் தேர்தல் பயணத்தை 1989இல் தொடங்கிய பா.ஜ.க., 1998இல் காங்கிரஸுக்கு இணையான வாக்கு வங்கியைப் பெறும் "அசத்தல்" கட்சியாக மாறியது. இந்த சம பலம் மாநில கட்சிகளை பா.ஜ.க. பக்கம் சுண்டி இழுத்தது. ஆனால் ஆட்சியிலிருந்த பா.ஜ.க. விற்கு இறங்கு முகம் மிகக் குறைந்த காலத்திலேயே தொடங்கியது. அடுத்து வந்த 1999 நாடாளுமன்ற தேர்தலில் அதே 182 எம்.பி.க்களை பெற்றாலும், அக்கட்சிக்கு இரு சதவீத வாக்கு வங்கி சரிவு ஏற்பட்டது. அது மேலும் ஒரு சதவீதம் 2004 நாடாளுமன்ற தேர்தலில் குறைந்து, பிறகு 2009 நாடாளுமன்ற தேர்தலில் இன்னும் குறைந்தது. அதாவது 2009 நாடாளுமன்ற தேர்தலில் 116 எம்.பி.க்களை மட்டும் பெற்று 18.80. சதவீத வாக்குகளை மட்டுமே பா.ஜ.க. பெற்றது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டது. அந்த தேர்தலில் 206 எம்.பி.க்களை பெற்று, 28.55 சதவீத வாக்குகளை எட்டிப் பிடித்தது. மீண்டும் பா.ஜ.க.விற்கும், காங்கிரஸுக்கும் இடையே உள்ள வாக்கு வங்கி சதவீத இடைவெளி பத்து என்ற இலக்கை எளிதில் தொட்டது.
இந்த வாக்கு வங்கி சரிவுதான் பா.ஜ.க.வை மிரள வைத்துள்ளது. வாஜ்பாய் என்ற "மதசார்பற்ற முகம்" ஒதுங்கி விட்டதால், அத்வானி என்ற "இந்துத்துவா முகம்" மட்டுமே போதும் என்று நினைத்து களத்தில் இறங்கிய பா.ஜ.க, 2009 நாடாளுமன்ற தேர்தலில் சிக்கலை சந்தித்தது. அக்கட்சி மீண்டும் தனது 1991ஆம் வருட வாக்கு வங்கி பலத்திற்கே திரும்பிச் சென்றது. இதனால்தான் இந்த முறை அத்வானி சுருதி மாறி முன் எச்சரிக்கையுடன் பேசுகிறார். "நம்மிடம் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் போதாது. மேலும் சில கூட்டணி கட்சிகளை சேர்த்து வருகின்ற தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போதுதான் காங்கிரஸை வீழ்த்த முடியும். இப்போது நாம் நடத்தும் ஊழல் எதிர்ப்புப் போர் மட்டும் காங்கிரஸை வீழ்த்த போதாது" என்பது பா.ஜ.க.வை பதினோரு வருடம் வழி நடத்திய மூத்த தலைவர் அத்வானியின் கருத்து. ஆனால் பா.ஜ.க.வோ, "தீவிர இந்துத்துவா முகமாக இருந்த அத்வானிக்கு கிடைக்காத" செல்வாக்கு, "இந்துத்துவா மற்றும் டெவலப்மென்ட் இமேஜ்" உள்ள நரேந்திரமோடியால் கிடைக்கும் என்று திடமாக நம்புகிறது. அதனால்தான் அத்வானி எதிர்ப்பையும் மீறி நரேந்திரமோடியை களத்தில் இறக்குகிறது. இதில் ஒரு விஷயத்தை பா.ஜ.க. கவனிக்கத் தவறி விட்டதோ என்றே தோன்றுகிறது. அதுதான் காங்கிரஸுக்கு இருக்கும் அடிப்படை வாக்கு வங்கி. இன்றும் நாட்டில் உள்ள 545 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தும் சக்தியுள்ள கட்சி காங்கிரஸ் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேபோல் அந்தக் கட்சியின் "ஸ்டார்" தலைவர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரெல்லாம் மறைந்த பிறகும் கூட, இன்று வரை அந்தக் கட்சி பா.ஜ.க. போல் 18 சதவீத வாக்குகளை பெறும் அளவிற்கு கீழே இறங்கி விடவில்லை.
கடந்த 1989இலிருந்து 2009 வரை நடைபெற்ற ஏழு நாடாளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸின் வாக்கு வங்கி 39 சதவீதத்திலிருந்து 28 சதவீதத்திற்குள்தான் அங்கும் இங்கும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் சோனியா காந்தி பேக்ரவுண்டில்தான் இருக்கிறார். பிரதமராக காங்கிரஸின் "காந்தி குடும்பத்தில்" வராத மன்மோகன்சிங் ஏறத்தாழ 9 வருடமாக ஆட்சி நடத்துகிறார். அவருக்கு முன்பு இதே மாதிரி காந்தி குடும்பத்தில் வராத நரசிம்மராவ் பிரதமராக ஐந்து வருடம் இருந்தார். ஆனால் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியோ 1989 முதல் 1998 வரை நடைபெற்ற நான்கு நாடாளுமன்ற தேர்தலில் ஏறுமுகமாக இருந்தது. அதன் பிறகு 1999 முதல் 2009 வரையுள்ள மூன்று நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து இறங்கு முகமாக இருக்கிறது. இந்த மூன்று நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் இழப்பு ஐந்து சதவீத வாக்குகள் என்றால், காங்கிரஸிற்கோ வாக்கு வங்கி இழப்பு ஏதுமில்லை என்ற நிலையையே தேர்தல் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. "பாஸிட்டிவ் ப்ளஸ் நெகட்டீவ்" இமேஜ் உள்ள நரேந்திர மோடியால் இந்த ஐந்த சதவீத இழப்பை சரி செய்து, பா.ஜ.க.வை முதலில் முந்தைய பலத்திற்கு கொண்டு வர வேண்டும். பிறகு அக்கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர தேவையான எம்.பி.க்கள் எண்ணிக்கையை பெற முடியுமா என்பது "இமாலயன் கேள்வி"! இந்த இரு நோக்கங்களில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி சரிவை தடுத்து நிறுத்தி விடலாம் என்பதே மோடியைக் கொண்டு வருவதன் முக்கிய நோக்கம்.
ஆனால் பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய சவால் "மத்தியில் காங்கிரஸ் கட்சியை அகற்றுவோம்" என்ற மூத்த தலைவர்களின் கோஷத்திற்கு ஏற்ப கூட்டணி கட்சிகள் கிடைக்குமா என்பதுதான். மோடியின் தலைமையை தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஏற்றுக் கொள்ள இயலாத சூழ்நிலை எழும். அத்வானி மறுத்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைவராக நரேந்திரமோடி வர முடியாத நிலையும் ஏற்படும். இது ஒரு புறமிருக்க, வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு தங்கள் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய மாநிலக் கட்சிகளும் மோடியிருக்கும் பா.ஜ.க. கூட்டணியில் சேர விரும்பாது. இப்போது மோடியின் நண்பர் என்று சொல்லப்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட, "என் நண்பர் என்ற முறையில் என் வாழ்த்துக்கள் அவருக்கு உண்டு" என்று மிகவும் கவனமாகத்தான் மோடியின் நியமனம் குறித்து கருத்துச் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஜெயலலிதாவே இப்படிக் கருத்து தெரிவித்துள்ளதால், மற்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் மோடியின் விஷயத்தில் "உஷாராகவே" அபிப்பிராயம் சொல்வார்கள் என்றே எதிர்பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலங்கள் என்று எடுத்துக் கொண்டால் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், பீஹார், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற ஆறு மாநிலங்கள்தான். இங்குதான் மொத்த எம்.பி. தொகுதிகளான 545இல் 291 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் மாயாவதி, முலயாம் சிங் யாதவ் ஆகியோருக்கு இடையே பாலிடிக்ஸ். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, இடது சாரிகளுக்கு இடையே போட்டி. தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு இடையே போட்டி. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸ் ஆகியோருக்கு இடையே போட்டி. மஹாராஷ்டிராவில் சிவ சேனா கட்சியின் உத்தவ் தாக்ரே, சரத்பவார், காங்கிரஸ் கட்சி ஆகியோருக்கு இடையே போட்டி. இந்த அடிப்படையில் பார்த்தால் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் பா.ஜ.க.விற்கு கை கொடுக்கலாம். தேர்தலுக்கு முன்னால் இந்த மாநிலங்களில் இருந்து யாரும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முன்வருவது சந்தேகமே! இப்படி எல்லாவற்றையும் "கூட்டி- கழித்து" பார்த்தால், பா.ஜ.க. தன் வாக்கு வங்கியை உயர்த்திக் கொண்டு, "வாஜ்பாய்- அத்வானி" ஆகியோர் தலைமையின் கீழ் 182 எம்.பி.க்களை பெற்றது போன்ற சூழ்நிலை வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட வேண்டும். அதற்கு நரேந்திர மோடி உதவினால் மட்டுமே, மற்ற மாநில கட்சிகள் பா.ஜ.க.வை நோக்கி வந்து கை கொடுக்கும். மத்தியில் ஆட்சி அமைய உதவி செய்யும். ஏனென்றால் 1991இல் மாநில கட்சிகளின் எம்.பி.க்கள் வெறும் 50 ஆக மட்டுமே இருந்தது. ஆனால் இன்றோ 2009 தேர்தல் நிலவரத்தின் படி மாநில கட்சிகளின் சார்பில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 146. இந்த மாநில கட்சிகளின் தயவு இன்றி காங்கிரஸோ, பா.ஜ.க.வோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் கடந்த காலம் காட்டியுள்ள வரலாறு.
"வாஜ்பாய்- அத்வானி" என்ற "இரட்டை முகத்துடன்" பா.ஜ.க. இதுவரை பயணித்து வந்தது. பா.ஜ.க. துவங்கிய இந்த 33 வருடங்களில் ஆறு வருடங்கள் வாஜ்பாய் தலைமையேற்று நடத்தினார். அத்வானி பதினோரு வருடம் தலைமையேற்று பா.ஜ.க.வை வழி நடத்தினார். பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நரேந்திர மோடி இனி பா.ஜ.க.வை வழிநடத்திச் செல்வார் என்பதற்கான அறிகுறிகள் தொடங்கி விட்டன. அத்துடன் அத்வானி ராஜினாமா என்ற சர்ச்சையும் கிளம்பி விட்டது. மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டது பா.ஜ.க. என்றாலும், "அத்வானி- மோடி" மோதல் அடுத்த ரவுண்டில் பா.ஜ.க.விற்குள் என்ன மாதிரியன குழப்பங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் "மதசார்பற்ற மற்றும் இந்துத்துவா முகங்களாக" இருந்து வாஜ்பாயும், அத்வானியும் சாதித்ததை, "இந்துத்துவா மற்றும் டெவலப்மென்ட்" முகமாக தூக்கி நிறுத்தப்படும் நரேந்திரமோடி செய்து காட்டுவாரா? இந்தக் கேள்விக்குப் பதில், நரேந்திரமோடியின் எதிர்கால செயல்பாடுகளும், பா.ஜ.க.வின் தாய் கட்சியான ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு தூரம் சுதந்திரமாக அவரை செயல்பட விடப்போகிறது என்பதும், இனி வரும் காலங்களில் மோடி எதிர்ப்பாளர்கள் (அத்வானி ஆதரவாளர்கள்) என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் வைத்தே இருக்கிறது என்பதே இன்றைய நிலைமை. பா.ஜ.க.வின் கோவா தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிறகு, நரேந்திரமோடி வடிவில் ஒரு நல்ல ஆரம்பத்தை முடுக்கி விட்டுள்ளதாக பா.ஜ.க. தலைவர்கள் "முஷ்டியை" தூக்கிக் கொண்டு கிளம்பினார்கள். ஆனால் அந்த முறுக்கேறிய கையில் "அத்வானி ராஜினாமா" என்பது அவசரமாக ஏறி அமர்ந்துவிட்டது. இதையெல்லாம் சமாளித்து, காங்கிரஸுக்கு மாற்றாக பா.ஜ.க.வை களத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்ற "கட்டாயம்" இரண்டாவது முறையாக தலைவராகியிருக்கும் ராஜ்நாத் சிங்கின் தலையில் வந்து விழுந்திருக்கிறது.