.jpg)
குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடியை முன்னிறுத்தி இந்திய அரசியல் களம் இரு பிளவுகளாக நிற்க முற்படுகிறது. சமீபத்தில் மோடி அளித்த பேட்டியொன்றில் இஸ்லாமியர்களை நாயுடன் (பப்பி) ஒப்பிட்டுச் சொல்லி விட்டார் என்று அரசியல் கட்சிகள் அனைத்துப் போர்க்கொடி தூக்கியுள்ளன. இரண்டு சதவீத வாக்குகளே கொண்டுள்ள மாநிலமான தமிழகத்தில் கூட பாரதீய ஜனதாக் கட்சியின் அலுவலகம் முன்பு இந்திய தேசிய லீக் கட்சியினர் மோடியைக் கண்டித்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். நரேந்திர மோடியை முன்னிறுத்தும் பாரதீய ஜனதா கட்சியோ "மோடியின் கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளது. மோடியைப் பார்த்து காங்கிரஸ் பயப்படுகிறது" என்று கூறியிருக்கிறது.
இதன் பிறகு மஹாராஷ்டிர மாநிலம் பூனாவில் பேசிய நரேந்திர மோடி, "காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற தன்மை என்ற திரைச்சீலையைப் பயன்படுத்துகிறது" என்று கூற, காங்கிரஸ் செய்தி தொடர்பாளரோ, "மதவாதத்தை விட மதசார்பற்ற தன்மை (செக்யூலரிஸம்) எவ்வளவோ பரவாயில்லை" என்று பதிலடி கொடுத்தார். இந்த "வார்த்தை யுத்தத்திற்கு" வழி விட்டது மோடியின் நெருங்கிய நண்பரும், உத்தரபிரதேச பாரதீய ஜனதா கட்சியின் பொறுப்பாளருமான அமித் ஷா என்றால் சாலப்பொருத்தம். அவர் பொறுப்பாளராக பதவியேற்றவுடன் உத்தரபிரதேசம் போனார். அங்கு அயோத்திக்கு சென்று ராமரை வணங்கினார். ராமர் கோயில் வாசலிலேயே நின்று கொண்டு, "வெகு விரைவில் இந்த இடத்தில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்படும். ராமரை அவருக்கு உரிய இடத்தில் அமர்த்துவோம்" என்று கிடங்கில் இருந்த வெடியைத் தூக்கி வெளியில் கொளுத்திப் போட்டார்.
மோடியை முன்னிறுத்தி "மதசார்பற்ற தன்மை"க்கும், மதவாதத்திற்கும் இடையேயுமான போட்டி இதன் மூலம் "ப்ளஷ் லைட்" போல் வெளிச்சத்திற்கு வந்து விட்டது. இந்திய நாடாளுமன்ற தேர்தலை "காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள், நிர்வாகத் திறமையின்மை" போன்றவற்றை முன்னிறுத்தி சந்திக்கும் நோக்கத்தில்தான் பா.ஜ.க. முண்டாசு கட்டி நின்றது. ஆரம்பகட்ட முஸ்தீபுகள் பா.ஜ.க.விற்கு இந்த அடிப்படையில்தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களால், வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் அக்கட்சிக்கு தலைமை தாங்கிய போது கிடைத்த கூட்டணிக் கட்சிகள் ஏதும் இந்த முறை இதுவரை பா.ஜ.க.விற்கு கிடைக்கவில்லை. வாஜ்பாய் காலத்தில் 28இற்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகளை வைத்திருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்றைக்கு உருப்படியாக இருப்பது மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிளவுபட்ட சிவசேனா கட்சியும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அகாலி தளம் கட்சியும் மட்டுமே! மற்ற கட்சிகள் எல்லாம் தங்கள் தங்கள் மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் வைக்கப்படும் கூட்டணியால் ஏற்படும் "கூட்டல், கழித்தல்களுக்கு" அஞ்சி அலறி விலகி விட்டார்கள். கடைசியாக மோடியை பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமித்தவுடன் எஞ்சியிருந்த முக்கியக் கூட்டணிக் கட்சியான பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் "எஸ்கேப்" ஆகிவிட்டது.
பா.ஜ.க.வின் நிலைமை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சி மெல்ல மெல்ல தன் கூட்டணிக் கட்சிகளை மீண்டும் கவர்ந்து வருகிறது. வேண்டாம் என்று சென்ற கட்சிகள் விரும்பி வரும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அந்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டதும் நரேந்திரமோடிதான். ஏனென்றால் "வளர்ச்சி, நிர்வாகத் திறமை" என்ற கோஷத்தை நரேந்திர மோடி முன் வைத்தால், அதை சமாளிக்க காங்கிரஸ் கஷ்டப்பட வேண்டும். ஆனால் அந்தப் பாதையிலிருந்து விலகி, "நான் இந்து தேசிய வாதி" என்ற ரீதியில் மோடி தன்னை ப்ரஜெக்ட் பண்ணுவதால், தங்களுக்கு தேர்தல் களம் எளிதாகி விடும் என்று காங்கிரஸ் கணக்குப் போடுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் கட்சி, "பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து" (அதிக அளவில் மத்திய அரசின் நிதி அளிப்பதற்கான அந்தஸ்து இது) வழங்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூறியது. நிதிஷ் குமாரின் மோகம் காங்கிரஸ் பக்கம் திரும்பியது. பிரதமர் மன்மோகன் சிங், "நிதிஷ்குமார் மதசார்பற்ற தலைவர்" என்று மனதார பாராட்டினார். உடனே நிதிஷ் குமாரும் "நன்றி" தெரிவித்தார். இது அம்மாநிலத்தில் காங்கிரஸுடன் இருக்கும் லாலுபிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் போன்றோருக்கு டென்ஷன் என்றாலும், காங்கிரஸ் கட்சி இப்போதைக்கு பீஹார் மாநிலத்தில் வலுவான கூட்டணி அமைக்கும் பலத்தில் இருக்கிறது.
அதேபோல் தமிழ்நாட்டிலும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறியிருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்ய சபை தேர்தலில் தி.மு.க. தலைவரின் மகள் கனிமொழியே வேட்பாளர். அவர் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி உதவியதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. இடம்பெறுவதற்கான அஸ்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. அதை இப்போது ரத்து செய்து அங்கே சிபுசோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சி, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனின் மகன் ஹேமந்த் சோரனை ஜார்கண்ட் முதலமைச்சராக்கியிருக்கிறார்கள். இதற்காக அங்கு அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் அடங்கிய கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 நாடாளுமன்ற தொகுதிகளில் பத்து தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், நான்கு தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோட்சாவும் போட்டியிடும் என்று "தொகுதி ஒப்பந்தமே" செய்யப்பட்டு விட்டது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு செய்யப்பட்ட முதல் தொகுதி ஒப்பந்தம் இது என்றே கூறலாம்.
காங்கரஸுக்கு தலைவலி ஆந்திர மாநிலம்தான். ஏனென்றால் சென்ற (2009) நாடாளுமன்ற தேர்தலில் இங்குள்ள 42 தொகுதிகளில் 33 எம்.பி. தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பெற்றது. ஆனால் இங்கு காங்கிரஸிலிருந்து மறைந்த முதலமைச்சர் ராஜசேகரரெட்டியின் மகன் ஜெகன்ரெட்டி தனியாக காங்கிரஸ் உருவாக்கி விட்டார். அதற்கு "ஒய்.எஸ்.ஆர்" காங்கிரஸ் என்று பெயர். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன் ரெட்டியை கடந்த ஒரு வருடமாக சிறையில் வைத்திருந்தாலும், அவர் கட்சிக்கு ஆந்திராவில் கிடைத்துள்ள பாப்புலாரிட்டி காங்கிரஸ் கட்சியை பாதிக்கும். இதனால் இப்போது அதற்கும் செயல்திட்டம் ரெடி பண்ணியுள்ள காங்கிரஸ் கட்சி ஜெகன் ரெட்டியை சமாதானம் செய்வது, அம்மாநிலத்தின் பல்லாண்டு கோரிக்கையான "தெலுங்கானா" தனி மாநிலம் அமைக்க வழி விடுவது போன்ற அதிரடி வியூகங்களை கையில் எடுக்கிறது. ஆக, ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தன் கூட்டணிக் கட்சிகளை அரவணைக்கவும், தன் கட்சியை பலப்படுத்தவும் நடவடிக்கைகளை ஜரூராக முன்னெடுத்துச் செல்கிறது. பா.ஜ.க.விற்கு "பொருத்தமான மாற்று காங்கிரஸ் கட்சி மட்டுமே" என்ற இமேஜ் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் உருவாகி வருவது சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் கைகொடுக்கும்.
பா.ஜ.க.விற்கு மாற்று காங்கிரஸ் என்ற சூழ்நிலை உருவாகியிருப்பதற்கு காரணம் கம்யூனிஸ்டுகள்தான். இந்திய அரசியலில் பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் இந்த இரு கட்சிகளும் ஒரு மாற்று சக்தியை தேர்தல் களத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்கள். ஆனால் இந்த முறை தங்களின் முக்கிய மாநிலமான மேற்குவங்கத்தில் ஆட்சியைத் தொலைத்து விட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்படியொரு வியூகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். ஜூலை முதல் திகதி டெல்லியில் கூடி நான்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு பிரகடனத்தை அறிவித்தார்கள். அது டெல்லி பிரகடனம் என்று பேசப்பட்டது. அதில், "காங்கிரஸ் கட்சி பணக்காரர்களுக்கு சலுகைகளையும், ஏழைகளுக்கு சிக்கனத்தையும் கொடுக்கிறது. பா.ஜ.க.வோ கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், முஸ்லிம்களுக்கு கலவரத்தையும் கொடுக்கிறது. ஆகவே காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும். பா.ஜ.வை தனிமைப்படுத்த வேண்டும்" என்று பிரகடனப்படுத்தி, தங்கள் தலைமையில் "மாற்றுக் கொள்கை கொண்ட அணி" உருவாகும் என்று கூறினார்கள். அதற்காக மாற்றுக் கொள்கைகளையும் வெளியிட்டார்கள்.
ஆனால் பிரதமர் வேட்பாளர் என்று நரேந்திர மோடி களத்தில் இறக்கப்படும் போது கம்யூனிஸ்டுகளை நம்பி அவர்கள் பக்கம் அணி சேருவது "தற்கொலைக்கு" சமம் என்று மாநிலக் கட்சிகள் நினைக்கின்றன. அதனால் எந்த மாநிலக் கட்சியும் இடது சாரி கட்சிகளின் இந்த "டெல்லி பிரகடனத்தை" சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு முக்கியக் காரணம் அந்தந்த மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகளுக்கு வெற்றி பெறும் வாக்குகளை கொடுக்கும் அந்தஸ்தில் கம்யூனிஸ்டுகள் இல்லை என்பதே! இப்படிப்பட்ட சூழ்நிலையில், நரேந்திர மோடி பிரதமராவதை எதிர்ப்பவர்களும், மைனாரிட்டி வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மாநிலக் கட்சிகளும் தங்கள் தங்கள் மாநிலத்தில் தனித்து நிற்போம். அப்படியில்லையென்றால் காங்கிரஸுடன் கூட்டணி வைப்போம் என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள். அந்த மாநிலக் கட்சிகள் எதுவும் கம்யூனிஸ்டுகளுடனோ, பா.ஜ.க.வுடனோ தேர்தலுக்கு முன்பு கூட்டணி வைக்க தயாராக இல்லை.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஒடிஷா பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க திரினாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பாணர்ஜி, பீஹார் மாநில ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தலைவர் நிதிஷ் குமார் ஆகியோரில் சிலர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று நினைக்கிறார்கள். பலர் காங்கிரஸுடன் கூட்டணி வைப்போம் என்ற கருதுகிறார்கள். ஏன் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள பகுஜன் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ் வாதிக் கட்சி தலைவர் முலயாம் சிங் யாதவ் போன்றவர்களே அந்த எண்ணத்தில்தான் இருக்கிறார்கள்.
ஆகவே அகில இந்திய அரசியலில் பா.ஜ.க.விற்கும், காங்கிரஸுக்கும் போட்டியாக மாநிலக் கட்சிகள் அடங்கிய தனி அணியை உருவாக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் இடது சாரிகள். அவர்கள் மனதில் காங்கிரஸ் ஜெயிக்காமல் பா.ஜ.க. ஓரளவு வெற்றி பெற்றால்தான் மாநிலக் கட்சிகள் தம்மைத் தேடி வரும் என்ற எண்ணம் குடியிருக்கிறது. அதனால்தான் இடதுசாரிகளின் டெல்லி பிரகடனத்தில், "காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும். பா.ஜ.க.வை தனிமைப்படுத்த வேண்டும்" என்று அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல தேர்தல்களுக்குப் பிறகு இடது சாரிகள் இந்திய அரசியலில் இப்படியொரு இக்கட்டான நிலையில் தவிப்பது இப்போதுதான் நடக்கிறது!