2025 மே 19, திங்கட்கிழமை

வெற்றி பெறுவாரா விக்னேஸ்வரன்?

A.P.Mathan   / 2013 ஜூலை 17 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.சஞ்சயன்
 
வடக்கு மாகாணசபைத் தேர்தலில், ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் ஆவலில் இருந்தவர்கள் பலர். அவர்கள் அனைவரையும் புறந்தள்ளிக் கொண்டு அரசியலுக்கு வெளியே இதுவரை இருந்து வந்த முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
 
இவரைப் போட்டியில் நிறுத்தும் முடிவை கடந்த திங்கட்கிழமை (15) காலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும்வரை, ஓர் இழுபறி நிலை காணப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை முன்னிறுத்த ஒரு தரப்பினர் விரும்பிய அதேவேளை, சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்த மற்றொரு தரப்பினர் விரும்பினர். இதன் காரணமாக, ஏற்பட்ட இழுபறி நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலை தமிழர் தரப்பிடம் மேலோங்கியிருந்தது.
 
இறுதியாக, சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்தும் முடிவு ஒரு மனதாக எடுக்கப்பட்டது தமிழர் தரப்பை ஆறுதல் கொள்ளச் செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
 
வழக்கமாக கட்சிகளில் இத்தகைய சந்தர்ப்பங்களில், போட்டிக் களத்தில் இருப்பவர்கள் நேரடியாக மோதிக் கொள்வது வழக்கம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், அதிர்ஷ்டவசமாக அத்தகைய நிலை ஒன்று ஏற்படாதது குறிப்பிடத்தக்க விடயம்.
 
மாவை சேனாதிராசாவோ, சி.வி.விக்னேஸ்வரனோ தம்மை முன்னிறுத்தியோ அல்லது மறுதரப்பை பலவீனப்படுத்தியோ பிரசாரங்களை மேற்கொள்ளவில்லை. வேட்பாளராக நிறுத்தும் அறிவிப்பு வெளியாகும்வரை, சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் இறங்கும் முடிவை எடுக்காதிருந்தார்.
 
வடக்கு முதல்வர் பதவி குறித்த எதிர்பார்ப்பு அவரிடம் இல்லாதிருந்த நிலையில், அவருக்குப் போட்டிக் களத்தில் குதிக்க வேண்டிய கவலை எழவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லாக் கட்சிகளும் ஒருமித்துக் கேட்டுக் கொண்டால் மட்டுமே வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்துப் பரிசீலிப்பேன் என்று கூறியிருந்தார்.
 
அவரைச் சுற்றி ஒரு விவாதமே நடந்து கொண்டிருந்த போதிலும் அவர் அந்த வட்டத்துக்குள் நுழையவில்லை. அதுபோலவே, மாவை சேனாதிராசாவை முன்னிறுத்தி, ஒரு தரப்பினர் பிரசாரம் செய்ய முனைந்த போது, அது தவறான திசையில் செல்வதை உணர்ந்த அவர், தன்னால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்பட ஒரு போதும் விடமாட்டேன் என்று உறுதிபடக் கூறியிருந்தார்.

 
இவ்வாறு போட்டிக் களத்தில் இருந்த இருவருமே, விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளும் மனோநிலையில் இருந்ததால் தான், தமிழைத் தேசியக் கூட்டமைப்பினால் ஒருமித்த கருத்தை எடுப்பது சுலபமானதாகியிருக்கலாம்.
 
எவ்வாறாயினும், மாவை சேனாதிராசா இந்த விவகாரத்தில் ஒதுங்கிக்கொள்ள முடிவு செய்துள்ள போதிலும், அவரை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கு இது ஏற்றுக் கொள்ளத்தக்க முடிவாக இருக்குமா என்பதை, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஏனென்றால், மாவை சேனாதிராசாவை முன்னிறுத்துவதற்காக, இவர்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். இந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ள நிலையில், சி.வி.விக்னேஸ்வரனின் வெற்றிக்காக அவர்கள் எந்தளவுக்கு உழைப்பார்கள் என்ற கேள்வி உள்ளது.
 
ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள ஒரு தரப்பினர் தான்- குறுகிய வட்டத்துக்குள் நின்று இது குறித்துச் சிந்திப்பதாகத் தெரிகிறது. அதற்கு வெளியே உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுத் தளம், சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படுவதில் பேரார்வம் கொண்டுள்ளதாகவே அறிய முடிகிறது.
 
மாவை சேனாதிராசாவா, சி.வி விக்னேஸ்வரனா என்ற விவாதம் எழுந்தபோது - இருவருமே, குறைத்து மதிப்பிடத்தக்கவர்களாக இருக்கவில்லை. அதனால் தான், பெரும்பாலான தமிழ்மக்கள் இந்த விவகாரத்தில், நடுநிலையுடன் அணுகினர்.
 
மாவை சேனாதிராசாவின் அரசியல், போராட்ட அனுபவங்கள் வடக்கு மாகாணசபையை நிர்வகிப்பதற்கான ஆற்றலை அவருக்குக் கொடுக்கும் என்ற நம்பிக்கை தமிழ்மக்களிடம் இருந்தது. அதேவேளை, நீதித்துறை சார்ந்த விற்பன்னராக, அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவராக, எவராலும் தட்டிக்கழிக்க முடியாதவராக, சி.வி.விக்னேஸ்வரன் இருந்தார்.
 
இது சர்வதேச அரங்கிலும், உள்நாட்டு அரசியல் அரங்கிலும், தமிழர் தரப்புக்கு சாதகமான நிலையை கொடுக்கும் என்பதால் இவரது தெரிவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியம் இல்லை.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சி.வி.விக்னேஸ்வரனை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்து விட்டதால், எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தமில்லை. இனிமேல் தான் வேட்பாளர்கள் தெரிவு, பிரசாரம், தேர்தல், வெற்றி வாய்ப்பு என்று பல படிகளை கடந்து செல்ல வேண்டிய நிலையில், சி.வி. விக்னேஸ்வரன் இருக்கிறார். இவற்றையெல்லாம் அவர் சவால்களின்றி சமாளித்துக் கொண்டாலும் கூட, மாகாணசபைத் தேர்தலின் பின்னர், ஆட்சியமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமேயானால், அது தான் அவருக்குப் மிகப்பெரிய சோதனையாக இருக்கும். ஏனென்றால், 13ஆவது திருத்தச்சட்டம் மாகாணசபைகளுக்கு கொடுத்துள்ள அதிகாரங்களை விட்டுக் கொடுக்காமல் பிடித்து வைத்திருக்கின்ற மத்திய அரசுடன் அவர் அவ்வப்போது முட்டுப்பட வேண்டியிருக்கும். அதில் அவர் எந்தளவுக்கு - எவ்வாறு வெற்றிபெறப் போகிறார் என்பது எதிர்பார்ப்புக்குரிய விடயமாகவே உள்ளது.
 
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், குழப்பங்களை உருவாக்க முனையும், உள்ளக மற்றும் வெளியக சக்திகளுக்கு, சி.வி. விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்தும் ஒரு மனதான முடிவு நிச்சயமாக ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுப்பெறுவதை விரும்பாத சக்திகளுக்கு இந்த முடிவு கசப்பானதாகவே இருக்கும்.
 
இவர்கள், தேர்தலில் முதன்மை வேட்பாளராக களமிறங்கும் சி.வி.விக்னேஸ்வரனை தோற்கடிக்கும் முயற்சிகளில் இறங்கினாலும் கூட ஆச்சரியமில்லை. அத்தகைய தரப்பினரின் கருத்துகளை பெரும்பாலும் தமிழ்மக்கள் கருத்தில் கொள்வதற்கு வாய்ப்புகள் குறைவே. ஏனென்றால், சி.வி.விக்னேஸ்வரனை நிராகரிப்பதற்கு இவர்களால் இதுவரை எந்த வலுவான காரணங்களையும் முன்வைக்க முடியவில்லை. இத்தகைய நிலையில், அவரைத் தோற்கடிக்க முனைந்தால், அது தமக்குத் தாமே சேறுபூசிக் கொண்டதாகவே அமையும்.
 
சர்வதேச சமூகத்தின் இராஜதந்திர அங்கீகாரத்தைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமன்றி, சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடன் ஒரு நியாயத்தை எதிர்பார்க்கும் தமிழ்மக்களுக்கும் இந்தத் தேர்தல் ஒரு சோதனைக் களம். ஏனென்றால், இந்தத் தேர்தலின் ஒவ்வொரு அசைவுகளையும் உலகமே உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
 
போட்டி பூசல்களினால், இந்த உன்னிப்பாக அவதானிப்பை தொலைத்து விடாதபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எல்லாத் தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தான் இப்போது தமிழர் தரப்பிடம் வலுவாக உள்ளது.

You May Also Like

  Comments - 0

  • குமார் Wednesday, 17 July 2013 11:34 AM

    சிறப்பான ஆக்கம். பொறுப்புணர்ந்து முதலமைச்சர் வாய்ப்பை விட்டுக்கொடுத்தது மாவை அவர்களின் பெருந்தன்மை. அதேபோல் மக்களும் தமது பொறுப்புணர்ந்து பேரினவாதிகளின் வலையில் சிக்காமல் பெருவாரியாக வாக்களித்து திரு விக்னேஸ்வரன் அவர்களையும் கூட்டமைப்பினரையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X