2025 மே 19, திங்கட்கிழமை

அந்த முப்பது நாட்கள்...

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தொடர் - 3)

-றிப்தி அலி

புகைப்பிடிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் மீறி இந்த பிரதேசங்களில் புகைப்பிடித்தால், டொனாடோ எச்சரிக்கை மணி போன்று புகைத்தல் எச்சரிக்கை மணி ஒலிக்கும். இந்த எச்சரிக்கை மணி ஒலித்து புகைப்பிடித்தவர்கள் கண்டறியப்பட்டால் தண்டப் பணம் விதிக்கப்படும்.

இதன் காரணமாக என்னுடன் செயலமர்வில் கலந்துகொண்டவர்களில் புகைத்தலில் ஈடுபடுவோர் புகைப்பிடிப்பதற்காக பல மைல் தூரம் நடந்து சென்று புகைப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது. எமது நாட்டில் தூரங்கள் கிலோ மீற்றரில் அளப்பது போன்று அமெரிக்காவில் தூரங்கள் மைலில் குறிப்பிடப்படும்.

தொடர்மாடி

இந்த தொடர் மாடியிலுள்ள ஒவ்வொரு வீடுகளிலும் நான்கு அறைகள் காணப்படும். இதனால் ஒருவருக்கு ஓர் அறை என்ற அடிப்படையில் நாங்கள் பகிர்ந்துகொண்டதுடன் சமயலறையினை அனைவரும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும். அத்துடன் இந்த தொடர்மாடியில் தங்கியிருந்த காலப் பகுதியில் தங்களுக்கு தேவையான உணவுகளை தாங்களே சமைத்து உண்ண வேண்டும். இது எனக்கு மற்றுமொறு புதிய அனுபவமாகும்.

மனைவி கற்றுத்தந்த சில சமையல் குறிப்புகளை கொண்டு சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டேன். என்னுடன் தங்கியவர்கள் மாத்திரமன்றி ஏனைய அறைகளில் தங்கியவர்களும் என்னால் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்டு சுவைத்ததுடன் நின்றுவிடாது பாராட்டினர்.

ஆனால் ஒரு கவலை. அதாவது நான் சமைத்த உணவினை எனது மனைவி உண்ணவில்லையே என்பதாகும். எனினும் நாடு திரும்பிய பின்னர் அந்த கவலை தீர்ந்துவிட்டது. எமது நாட்டிலுள்ள தொடர்மாடிகளை போன்று இந்த தொடர்மாடிகள் காணப்பட்டலும் மிக அமைதியாகவும் சுத்தமாகவும் காற்றோட்டமுள்ளதாகவுமே காணப்பட்டன. இந்த தொடர்மாடியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு நடந்து செல்வதற்கு 15 நிமிடங்கள் தேவைப்படும்.

பஸ் சேவை

எனினும், தொடர்மாடிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் விசேட பஸ் சேவை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எமது நாட்டில் இலங்கை போக்குவரத்து சபையினால் பல்கலைக்கழக மாணவர்களின் நன்மை கருதி பல்கலைக்கழக விரிவுரைகள் நடைபெறும் காலப் பகுதயில் காலை மற்றும் மாலை ஆகிய நேரங்களில் விசேட பஸ் சேவையை போன்று இது இருந்தது.

இந்த பஸ் சேவை பல்கலைக்கழத்தினாலேயே நிர்வகிக்கப்படுகின்றது. அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த பஸ் சேவையில் இலவசமாக பயணிக்க முடியும். ஆனால், பல்கலைக்கழக அடையாள அட்டையினை காண்பித்தால் மாத்திரமே பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாகும். இல்லாவிடின் ஏனையோரை போன்று கட்டணம் செலுத்த வேண்டும்.

முன் மற்றும் பின் ஆகிய இரு பகுதிகளில் இந்த பஸ்ஸிற்கு கதவுகள் காணப்படாலும் முன் கதவின் ஊடாகவே உள்நுழைய வேண்டும். காரணம் பஸ்ஸின் முன் கதவு பகுதியிலேயே கமெரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் முன் பகுதியில் நுழைந்தால் மாத்திரமே, அவர் கமெராவில் ஒளிப்பதிவு செய்யப்படுவார். இவ்வாறு ஒளிப்பதிவு செய்யப்படாவிட்டால் பஸ் முன் நோக்கி செல்லாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டிலுள்ள பஸ்களில் புகைத்தல் மாத்திரமே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பஸ்களில் புகைத்தல், ஆயுதம் கொண்டு செல்லல், உணவு உண்ணல், குடிபானம் அருந்துதல் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரை மணி நேர வித்தியாசத்தில் இந்த பஸ்கள் பஸ் தரிப்பிடத்தை அடையும்.

அதாவது மணித்தியாலத்தின் 15ஆவது நிமிடத்தில் பஸ் தரிப்பிடத்தை அடைந்தால் 45ஆவது நிமிடத்தில் மீண்டும் வரும். ஒரு நிமிடம் முந்தவோ அல்லது பிந்தவோமாட்டாது. பாடசாலை மாணவர்களுக்கான விசேட பஸ் சேவையினையும் என்னால் அங்கு அதானிக்க முடிந்தது.

பெண் பஸ் சாரதி

இந்த பஸ்களுக்காக நாமே காத்திருக்க வேண்டுமே தவிர, எமக்காக பஸ் காத்துக்கொண்டிருக்காது. இதனால் சில தடவைகள் பஸ்ஸினை தவற விட்டு பல்கலைக்கழகத்திற்கு நடந்து சென்ற அனுபமும் எனக்கு உண்டு. இந்த பஸ்ஸின் சாரதியாக பெண்மணி ஒருவர் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த 20 வருடங்களாக சாரதியாக செயற்பட்டு வருகின்றார். அத்துடன் இந்த பஸ்களில் நடத்துனர்களே இல்லை. அனைத்து செயற்பாடுகளும் சாரதியினாலேயே மேற்கொள்ளப்படும். அது ஆணாக இருந்தலும் சரி பெண்ணாக இருந்தலும் சரி.
எனினும், எமது நாட்டில் காணப்படுகிறது போன்ற நகரங்களுக்கு இடையிலான பஸ் சேவையினை என்னால் காண முடியவில்லை.

கல்வி முறைமை

இலங்கையை போன்ற இலவச கல்வி முறைறையே அமெரிக்காவிலும் காணப்படுகின்றது. அதாவது பிள்ளைகளுக்கு நான்கு வயதாகியவுடனேயே முன் பள்ளி செல்ல தயாராகிவிடுவர். ஆறு வயதில் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

தரம் ஒன்று முதல் தரம் ஆறு வரை ஆரம்ப பிரிவு என்றும் தரம் ஏழு தொடக்கம் ஒன்பது வரை மத்திய பிரிவு என்றும் தரம் 10 தொடக்கம் தரம் 12 வரை உயர் பாடசாலை என்பர். இறுதி தரமான 12ஐ மாணவரொருவர் அடையும்போது அவருக்கு வயது 18ஆகின்றது.

பாடசாலை கல்வி இலசமாகவே வழங்கப்படுகின்றது. பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்களில் 60 வீதமானோர் பல்கலைக்கழகத்திலும் ஏனையோர் தொழிநுட்ப கல்லூரிகளிலும் தங்களின் கல்வியினை மேற்கொள்வர். எனினும், இகுவான முறையில் பல்கலைக்கழகம் நுழைய முடியாது.

பல்கலைக்கழக நுழைவிற்கான பரீட்சையொன்றில் தோற்றி தெரிவுசெய்வதற்கான வெட்டுப்புள்ளியினை பெற வேண்டும். அவ்வாறு பெற்றவர்கள் மாத்திரம் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்ய முடியும். ஏனையோர் தொழிநுட்ப கற்கை நெறிகளை மேற்கொள்வர் அல்லது சுயதொழில்களை மேற்கொள்வதற்காக செல்வர்.

எமது நாட்டில் பல்கலைக்கழங்களில் இலவசமாக கற்பிக்கப்பட்டாலும் அமெரிக்காவில் கட்டணம் செலுத்தியே பல்கலைக்கழக கல்வியினை மேற்கொள்ள வேண்டும். எனினும் பல்கலைக்கழகத்தினால் மாணவர்களுக்கு கடன் வசதி போன்ற நிதியுதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கடன் வசதிகள் நீண்ட கால அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன.

அத்துடன் பல்கலைக்கழக நுழைவிற்கான பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இந்த புலமைப்பரிசில்கள் பாடநெறியின் முழுக் கட்டணம், அரைப்பகுதி, கால் பகுதி, விடுதியுடனான வசதி என பல வகைகளில் வழங்கப்படுகின்றது. எமது நாட்டில் 18 வயதை அடைந்தால் பராயமடைந்தவர் என கணிக்கப்படுவர்.

இது போன்று அமெரிக்காவில் 16 வயதை அடைந்தால் பாரயமடைந்தவர் என அழைக்கப்படுவார். இவ்வாறான நிலையில் 18 வயதில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் ஒருவர்.... (அடுத்த வாரம் தொடரும்)

அனுபவ பகிர்வு:

தொடர் - 2

தொடர் - 1

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X