2025 மே 19, திங்கட்கிழமை

அந்த முப்பது நாட்கள்...

Super User   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தொடர் - 4)

-றிப்தி அலி

அமெரிக்காவிலுள்ள இளைஞர்கள் 18 வயதை அடைந்தவுடன் தங்களின் பெற்றோரில் தங்கி வாழமாட்டார்கள். அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டாலும் தெரிவு செய்யப்படாவிட்டாலும் பெற்றோரை விட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிடுவர்.

நான் அமெரிக்காவில் தங்கியிருந்த காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களை அதிகமாக சந்திக்க முடிந்தது. இவர்கள் அனைவரும் 18 வயதானவுடன் பெற்றோரை விட்டு பிரிந்து நண்பர்களுடன் இணைந்து தனியாக வாழ்ந்து வருகின்றார்கள். நான் தங்கியிருந்த நேர்மன் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் அதே பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்போது பெற்றோரைப் பிரிந்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது.

ஆண் மற்றும் பெண் என்ற வேறுபாடின்றி நண்பர்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் நாடு, மதம், இனம், சாதி வேறுபாடுகளின்றியே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வாழும் காலப் பகுதியில் இவர்கள் மத்தியில் காதல் மற்றும் திருமணம் போன்றனவும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலானோர் மரணிக்கும் வரை தனித்தே வாழ்வர்.

வேலையற்றோர்:

எனினும் தற்போது பெரும்பாலானோர் இந்த நிலையிலிருந்து மாறி பல்கலைக்கழகம் நிறைவடைந்தவுடன் மீண்டும் பெற்றோருடன் இணைந்துகொள்கின்றனர் என அமெரிக்கரொருவர் தெரிவித்தார். தொழிலின்மையே இதற்கு பிரதான காரணம் என அவர் குறிப்பிட்டார்.

"அதாவது பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் அமெரிக்காவில் தற்போது தகுதியான தொழில் கிடைப்பதில்லை. இதனாலேயே பல்கலைக்கழக கல்வியினை அடுத்து இளைஞர்கள் மீண்டு பெற்றோர்களுடன் இணைகின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார்.

எமது நாட்டில் பட்டதாரிகளே தொழிலின்றி காணப்படுகின்றனர். ஆனால் அமெரிக்காவில் முதுமானி கல்வியினை நிறைவு செய்தவர்கள் கூட தகுதியான தொழிலின்றி உள்ளதாக அமெரிக்கரொருவர் தெரிவித்தார். அப்படியென்றால் எத்தனை இலட்சக்கணக்கான பட்டதாரிகள் அமெரிக்காவில் தகுதியான தொழிலின்றி காணப்படுவர்.

நான் சந்தித்த பட்டதாரியொருவர், பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியொருவரின் உதவியாளருக்கு உதவியாளராக செயற்பட்டார். அப்படியொன்றால் நினைத்துப் பாருங்கள். தற்போது எமது நாட்டில் தகுதியான அரச தொழில் வாய்ப்புக்கு ஆகக் குறைந்த தராதரம் பல்கலைக்கழக பட்டமாகும்.

ஆனால் அமெரிக்காவில் தகுதியான தொழில் வாய்ப்புக்கு ஆகக் குறைந்த தராதரம் முதுமானி அல்லது கலாநிதி பட்டங்களாகும். இந்த பட்டங்களின்றி தகுதியான தொழில்களை பெறுவதென்பது அமெரிக்காவில் கடினமாகும். அப்படியொன்றால் முதற் பட்டம் மாத்திரம் பெற்ற எத்தனை இலட்சக்கணக்கானோர் தொழிலின்றி அமெரிக்காவில் இருப்பர் என்பதை நினைத்துப் பாருங்கள்.

கறுப்பினத்தவர்:

இந்த நிலையில் கறுப்பினத்தவர்கள் பலரை அமெரிக்காவில் சந்திக்க முடிந்தது. இவர்கள் அமெரிக்காவில் சிறுபான்மையினராக காணப்பட்டனர். இவர்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல சமயங்களை பின்பற்றுபவர்கள் காணப்பட்டனர்.

கறுப்பினத்தவர்களின் மத்தியில் மத வேறுபாடுகள் காணப்பட்டாலும் இவர்கள் அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர் என அழைக்கப்படுவர். இவர்களின் மூதாதையர்கள் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்களாவர். வெள்ளையர்கள் மற்றும் கறுப்பினத்தவர்கள் ஆகியோருக்கிடையிலான கலாசாரத்தில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

எனினும் இவர்கள் ஒருபோதும் பிரித்துப் பார்ப்பதில்லை. அனைவரும் அமெரிக்க பிரஜை என்றவொரு கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகின்றனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெள்ளையன் கறுப்பன் என்ற வேறுபாடு காட்டப்படுவதில்லை. அனைவரும் சமமாக மதிக்கப்படுவதுடன் அனைவருக்கும் சம உரிமைகளே வழங்கப்பட்டுள்ளன என அங்குள்ள ஆபிரிக்க அமெரிக்கர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில், நான் செயலமர்வில் கலந்துகொண்ட ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக கறுப்பினத்தை சேர்ந்த ஏர்னஸ்ட் என்பவர் காணப்பட்டார். "தேர்தல் மூலமே மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவுசெய்யப்படுவார். அதேபோன்று தான் நானும் தெரிவுசெய்யப்பட்டேன். கறுப்பு, வெள்ளை என்ற எந்த வேறுபாடுகளுமின்றி அனைவரும் ஒன்றிணைந்து என்னை தெரிவுசெய்தனர்' என அவர் குறிப்பிட்டார்.

பிறப்பு முதல் இறப்பு வரை வெள்ளையன் - கறுப்பர் என்ற வேறுபடின்றி மிகவும் ஒற்றுமையாக செயற்படுகின்றோம்' என ஏர்னஸ்ட் தெரிவித்தார். இந்த சிறுபான்மையினத்தை சேர்ந்த பராக் ஒபாமாவே இன்று அமெரிக்க ஜனாதிபதியாக காணப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது. சில நாடுகளில் சிறுபான்மையினர் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை.

அவ்வாறாதொரு நிலையில் அமெரிக்காவில் சிறுபான்மையினருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளமை எவ்வளவோ மெச்சத்தக்க விடயமாகும். இவ்வாறு சந்தோசமாக அமெரிக்காவில் நாட்கள் கழிந்துகொண்டிருந்த நிலையில் அன்று வெள்ளிக்கிழமை... (அடுத்த வாரம் தொடரும்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X