2025 மே 19, திங்கட்கிழமை

வெலிவேரிய: “முன்னை இட்ட தீ”

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

வெலிவேரியவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், உள்ளூரில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் அரசாங்கத்துக்கு எதிரான கண்டன அலைகளைத் தோற்றுவித்துள்ளன. இந்தத் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில், அரசாங்கம் பல்வேறு காரணங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளது.
 
வெலிவேரிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், இறப்பர் கையுறைத் தொழிற்சாலைக் கழிவுகள், குடிநீரில் கலப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சை தான், அங்கு மூன்று பேரின் மரணத்துக்குக் காரணமாகியுள்ளது. அந்தப் பகுதி மக்கள் சுத்தமான குடிநீருக்காக போராடக் கிளம்பிய போது, அதை அடக்குவதற்கு கொமாண்டோக்களை உள்ளடக்கிய இராணுவ அணிகள் களமிறக்கப்பட்டது தான், பெரும் சர்சையாக வெடித்துள்ளது.
 
இத்தகையதொரு சம்பவத்தை தெற்கிலுள்ள மக்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை உணரமுடிகிறது. அதாவது இலங்கை இராணுவத்தினரே, தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள் என்று அங்குள்ள மக்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
 
கடந்த காலங்களில் ஜேவிபி கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, இராணுவத்தினர் தெற்கிலும் கூட பொதுமக்களுடன் கடும் போக்குடன் நடந்து கொண்டிருந்தாலும், அதற்குப் பிந்திய காலத்தில் நிலைமை முற்றிலும் மாறியிருந்தது.
 
விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான போர், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான போராகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்பட்ட நிலையில், தெற்கிலுள்ள சிங்கள மக்கள் மத்தியில் இராணுவத்தினர் பெரிதும் கௌரவத்துக்குரியவர்களாக மாறினர்.
 
புலிகளுக்கு எதிரான போர், ஜேவிபி கால இராணுவத்தினரின் செயற்பாடுகளையெல்லாம் மறந்து, சிங்கள மக்கள் ஒன்றிணையக் காரணமாகியது. இராணுவத்துக்கும் தெற்கிலுள்ள மக்களுக்கும் இடையில் தோன்றியிருந்த இந்த இணக்கமான நிலை, வெலிவேரிய தாக்குதலால் உடைந்து போனது.
 
1971இலும், 1987-89 காலத்திலும், ஜேவிபி கிளர்ச்சியை முறியடிக்கும் நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அண்மையில், மாத்தளையில் இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் ஒரு பாரிய புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட போது கூட, அதன் உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் ஜேவிபியினர் அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள் தான்,அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
ஐதேக ஆட்சிக்காலத்தில் நடந்த படுகொலைகளாக இருந்தாலும், இப்போதைய அரசாங்கமும் கூட அதில் அக்கறை காட்டவில்லை. காணாமற்போனவர்களின் உறவினர்களே பெரியளவில் அதில் ஈடுபாடு காட்டவில்லை.
 
ஏனென்றால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரும், அதில் அவர்கள் ஈட்டிய வெற்றியும், இராணுவத்தினர் மீது குற்றம்சாட்ட இடமளிக்கவில்லை. கடந்த காலத்தை மறக்காது விட்டாலும், மன்னித்துக் கொள்ளும் அளவுக்கு சிங்கள மக்களில் அநேகரை கொண்டு சென்றிருந்தது.
 
ஆனால், வெலிவேரிய தாக்குதல் சம்பவம், இராணுவத்தினரை அவநம்பிக்கையோடு பார்க்கும் நிலையை – வெறுப்போடு நோக்கும் நிலையை உருவாக்கி விட்டுள்ளது. வெலிவேரிய தாக்குதலை, புதுமாத்தளனுக்கும், முள்ளிவாய்காலுக்கும், வன்னிப் போருக்கும் ஒப்பிட்டு சிங்கள மக்கள் தெரிவிக்கும் கருத்துகளே இதற்குச் சாட்சி.
 
இராணுவத்தினர் இந்தளவுக்கு மோசமாகவும், இழிவாகவும் நடந்து கொள்வார்கள் என்று நினைக்கவில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரே கூறியுள்ளார் என்றால், இது தெற்கில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.
 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, பொதுமக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக இராணுவத்தினர் மீது குற்றம்சாட்டப்பட்ட போதெல்லாம், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று இராணுவத்தினரைக் காத்து நின்றவர்களில், அரசதரப்பைத் தவிர வேறு யாருமே, இப்போது அவர்களின சார்பில் பேசவில்லை.
 
எல்லோருமே ஒரே குரலில், வெல்வேரிய தாக்குதல் தவறானது என்கின்றனர், மோசமாக இராணுவத்தினர் நடந்து கொண்டதாக விமர்சிக்கின்றனர். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்ற இன்னும் சிலர், தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினரில் தவறில்லை என்றும், தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அரசாங்கமே அதற்குப் பொறுப்பு என்கின்றனர். எவ்வாறாயினும், அரசாங்கம் யார் தாக்குதலுக்கு உத்தரவிட்டது என்று வெளிப்படுத்தவில்லை.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க உத்தரவிட்டுள்ள போதிலும், அது எந்தளவுக்கு நியாயமாக நடக்கும் என்பதில், நிறையவே சந்தேகங்கள் உள்ளன. இராணுவத்தின் இந்த உள்ளக விசாரணை குறித்து சந்தேகம் எழுப்புபவர்களும், தெற்கிலுள்ள அரசியல்வாதிகளும், கட்சிகளும் தான்.
 
ஆனால், இதே அரசியல்வாதிகளும், கட்சிகளும், இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து, இராணுவத்தரப்பு உள்ளக விசாரணை நடத்தியபோது, அது நியாயமாக நடக்காது என்று கூறவில்லை. அது குறித்து சந்தேகம் எழுப்பவில்லை. பொதுமக்களைக் குறிவைத்து, ஒருபோதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தவேயில்லை என்று இராணுவ விசாரணை நீதிமன்றம் அறிக்கையைக் கொடுத்தபோது, அதை வாயாரப் பாராட்டியவர்கள் தான், இப்போது, இராணுவ விசாரணையில் நம்பிக்கையில்லை என்கின்றனர்.
 
தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கென்று அடிக்குமாம் என்று தமிழில் உள்ள பழமொழியைத் தான் இது ஞாபகப்படுத்துகிறது.
 
அதுமட்டுமல்ல, வெலிவேரிய தாக்குதல் குறித்த உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையில்லை என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐதேகவே கோரியிருக்கிறது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான ஐதேக ஒரு போதுமே, வன்னிப் போரில் நடந்த மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணையைக் கோரியதும் இல்லை, அத்தகைய விசாரணைக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததும் இல்லை.
 
தாக்குதலில் ஈடுபட்ட படையினர், தாக்கப்பட்ட பொதுமக்கள் என்று முள்ளிவாய்க்காலுக்கும், வெலிவேரியவுக்கும் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. இரண்டிலுமே, மனிதஉரிமை மீறல் என்ற பொதுமையே இருந்தாலும், அது வடக்கில் நிகழ்ந்ததா, தெற்கில் நிகழ்ந்ததா - சிங்களவர் மீதா, தமிழர் மீதா, என்பதை அடிப்படையாக வைத்தே, அதன் பெறுமானம் கணிக்கப்படுகிறது. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கழிந்தாலும், இந்தப் போக்கு மாறவில்லை.
 
ஒருவகையில், சிங்கள மக்கள், தமிழர்கள் மீதான மீறல்களைக் கண்டிக்காமல் ஊக்குவித்ததன் விளைவு என்று கூட இதனைக் குறிப்பிடலாம். இன்னொரு புறத்தில், வெலிவேரிய தாக்குதலை தமிழ்கட்சிகள் பெரியளவில் கண்டிக்கவில்லை என்பது தவறான அணுகுமுறையாகவே பார்க்க வேண்டும்.
 
தமிழர்களின் உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டன என்ற நியாயத்தை சிங்கள மக்கள் உணர முனையும் போது, அவர்களுடன் இணைந்து கைகோர்ப்பது தான் நியாயமானது, தமிழர்களின் பலத்தை அதிகரிக்கக் கூடியது. இந்த உண்மை, தமிழர் தலைமைகளால் உணரப்பட வேண்டும். சிங்களக் கட்சிகளும், தலைமைகளும் இழைத்த தவறை அவர்களும் இழைத்து விடக் கூடாது.

You May Also Like

  Comments - 0

  • AJ Wednesday, 07 August 2013 09:02 AM

    அன்று எங்களுக்கு வலி, இன்று உங்களுக்கு. இதே வலி தான் எங்களுக்கும்... உங்களின் வெற்றி மமதை இன்னும் உடையும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X