2025 மே 19, திங்கட்கிழமை

அந்த முப்பது நாட்கள்...

Super User   / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தொடர் - 5)

-றிப்தி அலி

அன்று வெள்ளிக்கிழமை... வெள்ளிக்கிழமை என்றால் உங்களுக்கு தெரியும் முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசலுக்கு செல்வது வழக்கம். நேர்மன் பிரதேசத்தில் பள்ளிவாசல் எங்குள்ளது என்பது தொடர்பில் விசாரித்தேன்.

அதன்போது ஒருவர்... கவலைப்பட வேண்டாம் நான் அழைத்துச் செல்கின்றேன் என்று என்னிடம் தெரிவித்தார். தனது வானில் என்னை அழைத்துச் சென்று பள்ளிவாசலை காட்டியதுடன் நின்றுவிடாது தொழுது முடியும் வரை எனக்காக பள்ளிவாசலின் வெளியே காத்திருந்தார்.

அவர் யார் தெரியுமா? ஒக்லஹோமா பல்கலைக்கழகத்திலுள்ள ஊடகவியல் மற்றும் பொதுசன கற்கைகளுக்கான ஹோலோட் நிறுவனத்தின் உப பீடாதிபதியான ஜோன் ஹொக்வூட் என்பவராவார். நண்பர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள். எமது நாட்டு பல்கலைக்கழகங்களிலுள்ள பீடாதிபதிகளோ அல்லது விரிவுரையாளர்களே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவார்களா?

தொழுகையினை நிறைவுசெய்த பின்னர் அவரிடம் நன்றி தெரிவித்ததற்கு, அவர் தெரிவித்தது என்னவென்றால், சமய கடமைகளை மேற்கொள்வதற்கு உதவிபுரிந்தால் எனக்கும் நன்மை கிடைக்கும் அல்லவா என்றார். அவரின் இந்த எண்ணத்தை எந்தவகையில் நாம் பாராட்டுவது...

ஒக்லஹோமா மாநிலத்தில் தங்கியிருந்த மூன்று வாரங்களில் நேர்மன் மற்றும் ஒக்லஹோமா சிற்றி ஆகிய நகரங்களிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்கு மூன்று தடவைகள் ஜும்ஆ நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது. எனினும் கலிபோனிய மாநிலத்தின் சென்பிரன்ஸிஸ்கோவில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டேலிற்கும் பள்ளிவாசலுக்கும் இடையில் நீண்ட தூரமாகும் என்பதனால்  ஜும்ஆ தொழுகையை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

எமது நாட்டிலோ அல்லது மத்திய கிழக்கிலுள்ள பள்ளிவாசல்களின் முகத்தோற்றம் முனவ்வராக்களினால் வடிவமைக்கப்பட்ட முஸ்லிம் அடையாளங்களுடன் காணப்படும். ஆனால், அமெரிக்காவில் அவ்வாறில்லை. அங்குள்ள பள்ளிவாசல்களின் வெளித்தோற்றம் எமது நாட்டிலுள்ள கலாசார மண்டபங்கள், சனசமூக நிலையங்கள் போன்ற தோற்றத்திலேயே காணப்படும்.

ஆனால் உள்ளே சென்றால் மாத்திரமே பள்ளிவாசல் போன்று காணப்படும். எமது நாட்டில் பள்ளிவாசல்களை பதிவுசெய்வதற்காக அரச நிறுவனமான முஸ்லிம் சமய, கலாசார திணைக்களம் உள்ளது. ஆனால் அங்கு அவ்வாறான ஒரு திணைக்களமோ அல்லது அமைப்போ அங்கில்லை.  ஆனால் இந்த பள்ளிவாசல்கள் ஓர் அரசசார்பற்ற நிறுவனம் அல்லது நிதியம் அல்லது சமூக சேவை இயக்கம் போன்ற அமைப்புகளினால் நிர்வகிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் சமூக நிறுவனங்களை பதிவு செய்வதற்கான அரச அங்கீகாரத்தை பெற்ற நிறுவனமொன்றிலேயே இந்த அமைப்புக்கள் பதிவு செய்யப்படுவதுடன் இதன் கீழ் பள்ளிவாசல் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

இந்த பள்ளிவாசல்களில் ஐந்து நேர தொழுகைகள் நிறைவேற்றப்படுவதுடன் ஜும்ஆ தொழுகைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கு மேதிலதிகமாக வார இறுதி இஸ்லாமிய நிகழ்வுகள், பயான் விரிவுரைகள், சிறுவர், முதியோர் மற்றும் வயதுவந்தோருக்கான இஸ்லாமிய நிகழ்சிகள் என பல செற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

இவற்றுடன் நின்றுவிடாது, கூட்டு ஸகாத் சேகரிப்பு, கல்விக்கான புலமைப்பரிசில் திட்டம், தொண்டர் நடவடிக்கைகள், அநாதைகளுக்கு உதவுதல், சுகாதார திட்டங்கள் போன்ற பல செயற்பாடுகளை மேற்கொள்ளகின்றனர். அதாவது டொனாடோ புயல் ஏற்பட்டபோது மீட்பு, நிவாரணம் போன்ற நடவடிக்கைகள் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு இஸ்லாமிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டதை காண முடிந்தது.

இதற்கு மேலதிகமாக நிதித் தேவைக்காக பள்ளிவாசல் நிர்வாகத்தினால் உணவு தயாரித்து விற்பனை செய்யட்டமை குறிப்பிடத்தக்கது. அதுபோன்று பள்ளிவாசல் கட்டிட நிர்மாணத்திற்காக விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இலகுவில் அறிவதற்காக இணையத்தளம் மற்றும் சஞ்சிகைகள் வெளியிடப்படுகின்றன. இவற்றின் ஊடாக பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளும் வெளியிடப்படுகின்றன.

ஜும்ஆ தொழுகை

நான் ஜும்ஆவிற்கு சென்றபோது பெண்கள் கலந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது. இது எனக்கு பெரிய ஆச்சரியமாகவே இருந்தது. இது தொடர்பாக அமெரிக்கரொருவரிடம் வினவியதற்கு, ஜும்ஆ தொழுகையில் பெண்கள் கலந்துகொள்வது வழமை என்றார். எனினும் ஆண்கள் மற்றும் பெண்கள் என பிரிந்து நின்று இந்த ஜும்ஆவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்பாடு முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இடம்பெற்றுள்ளது. எனினும் பின்னர் அது சில பிரதேசங்களில் வழக்கொழிந்துள்ளது. இதுபோன்று எமது நாட்டில் நடைபெறும் ஜும்ஆ குத்பாக்களில் பெண்கள் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்குவது சிறந்த விடயமாகும் என நான் நினைக்கின்றேன்.

நவீன இலத்திரனியல் பொருட்களின் பாவனையுடன் ஜும்ஆ குத்பா (விரிவுரை) மேற்கொள்ளப்பட்டதை அவதானிக்க முடிந்தது. அதாவது ஜும்ஆவில் உரையாற்ற வேண்டிய விடயங்களை ஐப்பாட்டில்  குறித்துக்கொண்டு வந்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

தொப்பியின்றி முன்வரிசையில் தொழ முடியாது என எமது நாட்டிலுள்ள சில பள்ளிவாசல்களில் சுவரொட்டிகள் மூலம் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் அறிவிக்கப்படுவதுண்டு. இவ்வறான நிலையில் அமெரிக்காவில் இடம்பெற்ற ஜும்ஆவில் தொப்பியின்றி ஒருவர் குத்பா (விரிவுரை) நிகழ்த்தியதை என்னால் அவதானிக்க முடிந்தது.

அத்துடன் இந்த ஜும்ஆ தொழுகையில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு விதமான ஆடைகள் அணிந்திருந்தனர். சில இளைஞர்கள் முக்கால் காற்ச்சட்டை அணிந்திருந்தனர். தொப்பியின்றி முன்வரிசையில் தொழ முடியாத நிலையில் எப்படி முக்கால் காற் சட்டையுடனும் தொப்பியின்றி குத்பாவை எமது நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் மேற்கொள்ள முடியும்.

சில நாட்களில் முக்கால் காற் சட்டையுடன் நான் பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்காக சென்ற சமயங்களில் சிலர் என்னை வித்தியாசமாக கண்ணோட்டத்தில் பார்வையிட்டதை அவதானிக்க முடிந்தது. இதுதான் அமெரிக்க முஸ்லிம்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையிலான வேறுபாடாகும்.

அமெரிக்காவில் மதச் சுதந்திரத்திற்கு பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனால் எங்களின் மதத்தை எந்த பிரச்சினைகளுமின்றி பின்பற்ற முடியும் என ஓய்வுபெற்ற தொழிலதிபரான அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். இங்குள்ள முஸ்லிம்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளுமில்லை. அவர்கள் மிகச் சுதந்திரமான முறையிலேயே நடமாடுகின்றனர் சமயக் கிரியைகளை மேற்கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

ஓக்லோஹேமா மாநிலத்தில் மாத்திரம் 10 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. எனினும், இந்த பள்ளிவாசல்களில் தொழுகைக்காக அழைக்கும் அதான் (பாங்கு) ஒலிபெருக்கி மூலம் மேற்கொள்ளப்படுவதில்லை.  குறைந்தளவான முஸ்லிம்கள் வாழ்கின்றமையே இதற்கான காரணமாகும்.

ஆனால் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளான நியூயோர்க் மற்றும் சிக்காகோ போன்ற பிரதேசங்களில் ஒலிபெருக்கி மூலம் அதான் (பாங்கு) செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவில் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் அராபிய முஸ்லிம்களே அதிகம் வாழ்கின்றனர்.

எனினும் இலங்கை முஸ்லிம்கள் நியூயோர்க் மற்றும் சிக்காகோ ஆகிய பிரதேசங்களிலேயே செறிந்து வாழ்கின்றனர். இதனால் நான் தங்கியிருந்த பகுதிகளில் இலங்கை முஸ்லிம்களை மட்டுமன்றி இலங்கையர்களையே காண முடியாதிருந்தது. இதனால் அமெரிக்காவில் இலங்கையர் ஒருவரைக்கூட சந்திக்க முடியவில்வையே என்ற கவலை ஏற்பட்டது.

ஹலால் சான்றிதழ்

எமது நாட்டில் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை அமெரிக்காவில் எந்தவிதமான பிரச்சினையுமின்றி மேற்கொள்ளப்படுகின்றது. 

அதாவது, அமெரிக்க சனத்தொகையில் ஒரு சதவீதத்திற்கு குறைவானவர்களே முஸ்லிம்களாக காணப்படாலும் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என எனது அமெரிக்காவைச் சேர்ந்த ஹுமைரா கான் தெரிவித்தார்.

வரையறுப்பட்ட ஐக்கிய அமெரிக்க ஹலால் வர்த்தக சம்மேளனத்தின் கண்காணிப்பிலுள்ள ஐ.எஸ்.டப்ளியூ.ஏ. ஹலால் சான்றிதழ் நிறுவனத்தினாலேயே இந்த ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனத்தினாலேயே அமெரிக்க முழுவதும் ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகின்றன என தெரிவித்த ஹுமைரா கான், பல அரச மற்றும் தனியார் உற்பத்தியாளர்கள் இந்த சான்றிதழை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த ஹலால் செயற்பாட்டிற்கு அமெரிக்க அராசங்கத்தினாலோ  அல்லது அங்குள்ள மக்களினாலோ எந்த எதிர்ப்பும் வெளியிடப்படுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார். ஒரு சதவீதத்தினைக் கொண்ட அமெரிக்க முஸ்லிம்களுக்காக ஹலால் சான்றிதழ் வழங்கு முடியுமென்றால், ஏன் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்காக ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டினை மேற்கொள்ள முடியாது..?

சூரிய உதயம்:

ஓக்லஹோமா மாநிலத்தில் நான் தங்கியிருந்த காலப் பகுதி கோடை காலமாகும். இந்த காலப் பகுதியில் சூரியன் காலை ஆறு மணிக்கு உதித்து  பிற்பகல் 8 மணிக்கே மறையும். அதாவது பிற்பகல் ஆறு மணி என்றால் எமது நாட்டில் இருளாக காணப்படும். ஆனால் அங்கு வெயிலே காணப்பட்டது.

இதனை அவதானித்தவுடன் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த வித்தியாசத்திற்கு ஏற்றவகையில் என்னை மாற்றிக்கொள்ளவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். எனினும் இந்த செயற்பாடு  இலங்கையைப் போன்று நிலையானதல்ல. காலத்திற்கு காலம் மாற்றமடையும்.

அப்படியொன்றால் இந்த நோன்பு காலத்தில் குறித்த மாநில மக்கள் சுமார் 17 மணித்தியாலங்கள் நோன்பு பிடிக்க நேரிடும். சுமார் 10 மணித்தியாலம் நோன்பு பிடிக்கவே நம் நாட்டு மக்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்றால் அங்குள்ள முஸ்லிம்கள் எவ்வளவு கஸ்டப்படுவார்கள். சற்று நினைத்துப் பாருங்களேன். 

எமது நாட்டைப் போன்றல்லாது அங்கு தொழுகை நேரங்கள் முற்றிலும் மாறுப்பட்டதாகவே காணப்பட்டது. தொழுகை நேரங்கள் சூரிய அஸ்தமனத்தை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகின்றமையே இதற்கான பிரதான காரணமாகும்.

விடுமுறை தினங்கள்

இலங்கையைப் போன்று சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்கள் விடுமுறை தினங்களாகும். அத்துடன் திங்கள் முதல் வெள்ளி வரை எமது நாட்டை போன்று அமெரிக்காவிலும் வேலை நாட்களாகும். எமது நாட்டு கலண்டரில் ஒவ்வொரு மாதமும் போயா விடுமுறை காணப்படும். அவ்வாறு அமெரிக்க கலண்டர்களிலும் காணப்படுகின்றதா என்று பார்த்தேன்.  ஆனால் அப்படியாக விடுமுறை தினங்களை காணவேயில்லை. அவ்வாறென்றால் அமெரிக்காவில் விடுமுறை தினங்களில்லையா...... (அடுத்த வாரம் தொடரும்)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X