வட மாகாண சபை தேர்தலுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமது முதலமைச்சர் வேட்பாளராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமித்ததையிட்டு விளக்கமளிக்கும் நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச, சில விசித்திரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இந்திய நெருக்குதலின் காரணமாகவே கூட்டமைப்பு தமது மூத்த தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜாவை ஒதுக்கித் தள்ளிவிட்டு நீதியரசர் விக்னேஸ்வரனை பிரதம வேட்பாளராக தெரிவு செய்துள்ளது என்பது அவற்றில் ஒன்றாகும். ஆயுத பலத்தினால் வென்றெடுக்கத் தவறிய தமிழீழத்தை சட்ட நுணுக்கங்களை பாவித்து வென்றெடுப்பதற்காகவே கூட்டமைப்பானது முன்னாள் நீதியரசரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது என்பது மற்றொரு வாதமாகும்.
சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் இந்திய நெருக்குதலையும் சட்ட நுணுக்கங்களை பாவித்து சுட்டிக் காட்டி கூட்டமைப்பும் அரசாங்கத்தை குறை கூறுவதே. இந்திய நெருக்குதலின் காரணமாகவே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்றும், அதிலும் குறிப்பாக மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்காத நிலையில் அவற்றுக்கான தேர்தல்களை நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கூட்டமைப்பு கூறுகிறது.
அதேவேளை மாகாண சபைகளுக்கு எதிரான வழக்குகள் போன்ற சட்ட உபாயங்கள் மூலம் மாகாண சபை தேர்தலைகளை, அதிலும் குறிப்பாக வட மாகாண சபைத் தேர்தலை ரத்துச் செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார்.
வீரவன்சவின் குற்றச்சாட்டுக்களைப் போலன்றி கூட்டமைப்பின் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையாகவே இருக்கின்றன. முதலில் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்ற அரசாங்கத்தின் சில அமைச்சர்கள், மாகாண சபைகளுக்குரிய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்துச் செய்யாது வட மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்றனர். அக் கருத்தை ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் ஏனைய பல தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் மாகாண சபை முறையையே இல்லாதொழிக்கும் வகையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே ரத்துச் செய்ய வேண்டும் என ஜாதிக்க ஹெல உறுமய கூறியது. அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் அரசியல் பேசும் ஒரே அரசாங்க அதிகாரியான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் அதற்கு ஆதரவாக குரல் எழுப்பினர். ஆனால் மாகாண சபை முறையை ரத்தச் செய்வது ஒரு புறமிருக்க, மாகாண சபைகளின் அதிகாரங்களில் கைவைக்காமலே அரசாங்கம் வட மாகாண சபை உட்பட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை பிரகடனப்படுத்தியிருக்கிறது.
நிறைவேற்று ஜனாதிபதி பதவியையும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு மேட்பட்ட அதிகாரத்தையும் வைத்திருக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி ஜனாதிபதியும் பலம்வாய்ந்த அவரது சகோதரர்களும் விரும்பியும் மாகாண சபைகளில் கைவைக்காதது ஏன் என்பது அரசியல் அரிச்சுவடியை படித்தவர்களுக்கும் தெரியும்.
மாகாண சபைகளை ரத்துச் செய்வது மட்டுமல்ல, அவற்றின் அதிகாரங்களை குறைப்பதையும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்று கடந்த மே மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் - இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு அறிவித்ததையும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் ஷங்கர் மெனன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த மாதம் திட்டவட்டமாக அறிவித்ததையும் அடுத்தே அரசாங்கம் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் தமது திட்டத்தை கைவிட்டு, இந்த மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த முற்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.
எனவே இந்திய நெருக்குதலின் பிரகாரமே அரசாங்கம் செயற்படுகிறது என்ற கூட்டமைப்பின் வாதம் உண்மையே. ஆனால் அதைப் பற்றி வாய் திறக்க அரசாங்கத்தில் உள்ள சிங்கள தேசியவாத சக்திகள் விரும்பவில்லை. அவர்களின் 'தேசப்பற்றின்' அளவு இதன் மூலம் தெளிவாகிறது.
ஆனால், இந்திய நெருக்குதலினாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்னேஸ்வரனை வட மாகாண சபைத் தேர்தலுக்கான தமது முதன்மை வேட்பாளராக நிறுத்தியது என்பதை நிரூபிக்க ஆதாரங்களை சமர்பிக்க வீரவன்ச தவறிவட்டார். அவரது கருத்தையொத்த ஒரு கருத்தை ஏஷியன் டிரிபியூன் இணையத்தளமும் முன்வைத்து இருந்தது. சேனாதிராஜா 2004ஆம் ஆண்டு மிதவாத தமிழ் தலைவர்களை தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக இந்தியா கருதுவதாகவும் அதனாலேயே இந்தியா அவரை விரும்பவில்லை என்றும் இவ் இணையத்தளம் குறிப்பிட்டு இருந்தது.
விக்னேஸ்வரனுக்குப் பின்னால் இந்தியா இருக்கிறது என்றும் தமிழீழத்தை வென்றெடுப்பதே விக்னேஸ்வரனை நிறுத்தியதன் நோக்கமாகும் என்றும் வீரவன்ச வெளியிட்டு இருக்கும் கருத்துக்களின் பிரகாரம், இந்தியா - விக்னேஸ்வரன் மூலம் தமிழீழத்தை வழங்க சதி செய்கிறது. ஏஷியன் டிரிபியூன் இணையத்தளத்தின் கருத்துப்படி தமிழீழத்திற்காக போராடிய புலிகளுக்கு நெருக்கமாக சேனாதிராஜா செயற்பட்டதனாலேயே இந்தியா அவரை விரும்பவில்லை. இதில் எதை நாம் நம்ப வேண்டும்?
இந்தியா ஒரு காலத்தில் இலங்கை தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதம், பணம் மற்றும் இராணுவப் பயிற்சி போன்றவற்றை வழங்கியது உண்மை தான். ஆனால், அப்போதும் இந்தியாவானது இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவாகுவதை விரும்பவில்லை. 1988ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சார்க் உச்சி மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஊடகவியலாளர்களிடையே உரையாற்றிய அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.கே.சிங், இந்தியா ஒருபோதும் தமிழீழம் உருவாகுவதை விரும்பாது என்றும், இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவாவது இந்தியாவில் தமிழ் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் என்றும் கூறினார்.
பாகிஸ்தான் டைம்ஸ் பத்திரிகை இதனை அப்போது வெளியிட்டு இருந்தது. இந்த சார்க் மாநாட்டில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இது தான் இந்தியா அன்றும் இன்றும் இலங்கை விடயத்தில் கடைப்பிடித்த கொள்கையாகும்.
அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அப்போதைய இந்தியாவின் எதிரிகளான பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த காரணத்தினால் ஜயவர்தனவை தண்டிப்பதற்காகவும் தமிழ்நாட்டின் கொந்தளிப்பான நிலைமை ஏற்படாதிருப்பதற்காகவும் மட்டுமே இந்தியா அப்போது தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது. அதேவேளை இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவாகாமல் இருக்குமாறும் இந்தியா பார்த்துக் கொண்டது. எனவே இந்தியா, இலங்கையை பிரிப்பதற்காக விக்னேஸ்வரனை நிறுத்த நடவடிக்கை எடுத்தது என்பது தர்க்க ரீதியாக அமையாத வாதமாகும்.
சட்ட நுணுக்கங்களை பாவித்து தமிழீழத்தை அடைவதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு விகனேஸ்வரனை நிறுத்தியது என்பதும் சிறுபிள்ளைத்தனமான வாதமாகும். கூட்டமைப்பின் நோக்கம் அதுவாக இருந்தால் அதேவேளை விக்னேஸ்வரனும் அதற்கு உடன்பட்டு இருந்தால் அந்த நோக்கத்திற்காக அவரையே நிறுத்தத் தேவையில்லை. மற்றொருவரை நிறுத்தியும் அவரது சட்ட அறிவை பாவித்து அந்த நோக்கத்தை அடைய முயற்சிக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக வீரவன்ச, வடக்கில் தேர்தல் நடைபெறும் காலம் என்பதை மறந்து இருக்கிறார் போலும். ஏனெனில் சட்ட ரீதியாக தமிழீழத்தை அடைவதே விக்னேஸ்வரனை நிறுத்தியதன் நோக்கம் என்று அவர் கூறும்போது அந்த வாதம் வட மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சாதகமாக அமையுமா அல்லது அரசாங்கத்திற்கு சாதகமாக அமையுமா என்று அவர் சிந்தித்து இருக்க வேண்டும். தென் பகுதியில் சிங்கள மக்களை பயமுறுத்தி வைத்துக் கொள்ள மட்டுமே இந்த வாதம் உதவும். விக்னேஸ்வரன் பற்றிய பிரச்சினைகள் வட பகுதிக்கே முக்கியமாகிறது.
இதுபோன்ற வீண் வாதங்களை முன்வைப்பதை விட, அரசாங்கத்தின் அமைச்சர்கள் வட பகுதி மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்த்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்தால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை ஒன்றினாலாவது அதிகரிக்கும். தொடர்ந்து அவ்வாறு செய்வார்களேயானால் இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது அது அரசாங்கத்திற்கு உதவும்.