-கே.சஞ்சயன்
சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் குறித்து மீண்டும் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அமர்வுகளை ஒட்டியே, இத்தகைய கோரிக்கைகளும், வாதப் பிரதிவாதங்களும் எழுவது இயல்பு.
ஆனால், இப்போது எழுந்துள்ள இந்தக் கோரிக்கைக்கு முக்கியமான காரணம், வெலிவேரியவில் இடம்பெற்ற பொதுமக்கள் மீதான தாக்குதலேயாகும்.
அதற்கு அப்பால், இந்தமாத இறுதி வாரத்தில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதும் இன்னொரு காரணமாக உள்ளது. 2009ஆம் அண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதில் இருந்து, அவ்வப்போது இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்துக் கொண்டு தான் இருக்கிறது. போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரால் இழைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து, நடுநிலையான - நம்பகமான - சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளையெல்லாம் இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டது.
இத்தகைய கோரிக்கைகள் ஐ.நா நிபுணர் குழுவினால் எழுப்பப்பட்ட போதிலும் கூட, அதைத் தட்டிக்கழித்து விடுவதில் இதுவரை இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றே வந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை, இந்த அரசாங்கம் இவ்வாறு தட்டிக்கழித்து விட்டது.
இதுவரை, போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு, தமிழர் தரப்பில் இருந்து தான் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால் இப்போது வெலிவேரிய தாக்குதலை அடுத்து, முள்ளிவாய்க்கால் போர்க்களம் எவ்வாறு இருந்திருக்கும் என்று சிங்கள மக்களும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். சர்வதேச விசாரணையை அவர்களில் ஒருபகுதியினரும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தரப்புகளின் கரங்களைப் பலப்படுத்தும் வகையிலேயே வெலிவேரிய தாக்குதல், இடம்பெற்றுள்ளது. அண்மையில் ஒரு பேட்டியில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ இந்த அச்சத்தை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிவேரிய தாக்குதல் சம்பவம், எத்தகைய சூழலில் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், அது அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பெரும் இக்கட்டான நிலைக்குள் தள்ளி விட்டுள்ளது. இது அரசதரப்பில் எவருமே எதிர்பாராத ஒரு பெரும் சிக்கல் என்றே குறிப்பிடலாம்.
பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவே சர்வதேச விசாரணையைக் கோரியுள்ள நிலையில், நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் சமாதான ஏற்பாட்டாளராக பணியாற்றியவருமான எரிக் சொல்ஹெய்மும் இதனை வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூ, இலங்கையில் நடப்பது இனஅழிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆக, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தை மறக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயன்றாலும், உலகம் அதை முற்றாக மறந்து விடவில்லை என்பது உறுதியாகிறது. அதிலும் வெலிவேரிய தாக்குதலின் பின்னர், இராணுவத்தினர் போரின்போது எவ்வாறு நடந்து கொண்டிருந்திருப்பார்கள் என்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
ஒரு சாதாரணமான மக்கள் போராட்டத்தை அடக்குவதற்கு இந்தளவுக்குப் படைபலம் பிரயோகிக்கப்பட்ட சூழலை வைத்து கணக்கிடும் எவராலும், முள்ளிவாய்க்காலில் எத்தகைய நிலைமை இருந்திருக்கும் என்று புரிந்து கொள்வது ஒன்றும் கடினமான காரியமாக இருக்காது.
இத்தகைய சூழலில், அரசாங்கமும் படைத்தரப்பும் எப்போதும் கூறிவரும், பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படாமல் போர் நடத்தியதான கதை இனிமேலும் எடுபடப் போவதில்லை.
ஏனென்றால், நிராயுதபாணிகளான பொதுமக்களையே சேதங்கள் ஏற்படாமல் அடக்க முடியாத படையினரால், ஆயுதமோதல் நிகழ்ந்த பகுதியொன்றில் பொதுமக்களுக்கு சேதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதாக கூறுவது நம்புவதற்கு முடியாதது.
அதுவும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஒருவாரகாலம் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் தான், வெலிவேரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இறுதிப் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருபவர் தான் நவநீதம்பிள்ளை. அவரது வருகையை ஒட்டியே வெலிவேரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் துரதிர்ஷ்டம் என்றே கூறலாம்.
இறுதிப் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தில், நம்பகமான உள்ளக விசாரணை நடத்தும்படி வலியுறுத்தப்பட்ட போதிலும், அத்தகைய எந்த விசாரணைகளையும் இலங்கை அரசாங்கம் நடத்தவில்லை. அதற்கான எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படவும் இல்லை.
இந்தநிலையில், போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் வரும் காலத்தில், மேலும் வலுப்பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
குறிப்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த இரண்டு கூட்டத் தொடர்களிலும், இலங்கை அரசாங்கம் இந்த விவகாரத்தில் கடுமையான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கக் கூடும். நவநீதம்பிள்ளை, கொழும்பில் இருந்து திரும்பிய அடுத்த வாரமே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகப் போகிறது.
இதில், இலங்கை விவகாரம் குறித்த விவாதங்கள் இடம்பெறுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. என்றாலும், நவநீதம்பிள்ளை தனது பயணம் குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிக்கட்டப் போர் பற்றிய விசாரணைக் கோரிக்கை மட்டுமன்றி, வெலிவேரிய குறித்த விசாரணைக்கும், கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களைப் பின்பற்றுவோருக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்தும், நவநீதம்பிள்ளை தனது அறிக்கையில், குறிப்பிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இவற்றை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் மூலோபாயம் என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதேவேளை, கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளதா என்று அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள 25ஆவது அமர்விலும் ஆராயப்படும்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம், சர்வதேச போரக்குற்ற விசாரணைகள் குறித்த கோரிக்கை மீண்டும் மேலேழும் வாயப்புகள் உள்ளன. இந்தநிலையில், சர்வதேச போர்க்குற்ற விசாரணை பற்றிய அழுத்தங்களில் இருந்து உலகின் கவனத்தை திருப்பி விடுவதில், அக்கறை செலுத்தி வந்த அரசாங்கத்துக்கு, வெலிவேரிய தாக்குதல் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
சர்வதேச போர்க்குற்ற விசாரணை குறித்த அழுத்தங்கள் இப்போதைக்கு ஓயப் போவதில்லை என்பதையும், வரும் காலத்தில் அரசாங்கம் அதுதொடர்பான அதிகளவிலான அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகும் என்பதையுமே இப்போதைய நிலவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.