2025 மே 19, திங்கட்கிழமை

அந்த முப்பது நாட்கள்...

Super User   / 2013 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தொடர் - 6)

-றிப்தி அலி

அவ்வாறில்லை, அமெரிக்க கலண்டர்களிலும் விடுமுறை தினங்கள் காணப்பட்டன. எனினும் எமது நாட்டைப் போன்று அதிக விடுமுறை தினங்கள் காணவில்லை.  சுமார் 10 விடுமுறை தினங்கள் காணப்பட்டன.

எனினும் எமது நாட்டில் காணப்படுவது போன்று பொது விடுமுறை, வங்கி விடுமுறை, தனியார் விடுமுறை மற்றும் போயா விடுமுறை என்ற வித்தியாசங்களின்றி அனைத்து விடுமுறைகளும் தேசிய விடுமுறைகளாகவே இருந்தன. முக்கிய தினங்களை மாத்திரமே அமெரிக்க அரசாங்கம் தேசிய விடுமுறையாக பிரகடணப்படுத்தியுள்ளது. அவையானவன:



மேற்குறித்த தினங்கள் மாத்திரமே அமெரிக்க அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விடுமுறை தினங்களாகும். இவற்றில் பல விடுமுறை தினங்கள் திங்கட்கிழமைகளிலேயே அமைகின்றன.  அத்துடன் இந்த விடுமுறை தினங்கள் சில பிரமுகர்களை கௌரவிப்பதற்காகவே நினைவு கூரப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக போரடியதற்காகவே மார்டின் லூத கிங் விடுமுறை தினமாகும். ஏற்கனவே ஜோர்ஜ் வொஷிங்டன் மற்றும் ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட சில ஜனாதிபதிகளின் பிறந்த தினங்கள் விடுமுறை தினங்களாக முன்னர் கொண்டாடப்பட்டுள்ளன.

எனினும் பின்னர் அனைத்து முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரையும் ஒன்றாக நினைவு கூருவதற்காகவே பெப்ரவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை ஜனாதிபதி தினமாக விசேடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று யுத்தத்தினால் கொல்லப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாகவே இந்த ஞாபகார்த்த தினம் கொண்டாடப்படுகின்றது.

இதன்போது கொல்லப்பட்ட இராணுவத்தினர், கடற் படையினர் மற்றும் விமான படையினர் ஆகியயோர் ஒன்றாக நினைவு கூரப்படுகின்றனர். நான் அமெரிக்காவில் தங்கியிருந்த காலப்பகுதியில் ஒரேயொரு விடுமுறை தினம் வந்தது. அது இந்த ஞாபகார்த்த தினமாகும். இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனினும் குறித்த நிகழ்வுகளில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.

அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என எனது இந்த கட்டுரை தொடரின்  முதலாவது பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இவரின் ஞாபகார்த்தமாக ஒக்டோபர் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையில் கொலம்பஸ் தினம் கொண்டாடப்படுகின்றது. இதேபோன்றே ஓய்வுபெற்ற படை வீரர்களை கௌரவிக்கும் முகமாகவே முன்னாள் படை வீரர் தினம் கொண்டாடப்படுகின்றது.

இந்த முன்னாள் படை வீரர் தினமும் ஞாபகார்த்த தினமும் ஒன்று என நினைத்து குழப்பமடைய வேண்டாம்.  இந்த இரண்டு விடுமுறை தினங்களும் வேறுபட்டவையாகும். தேசிய விடுமுறை தினங்களில் அமெரிக்காவிலுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க குடும்பத்தினருடன்

இவ்வாறான விடுமுறை தினங்களுக்கு மத்தியில் ஏற்கனவே நான் குறிப்பிட்டது போன்று சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களும் வார இறுதி விடுமுறை நாட்களாகும்.  இப்படியான ஒரு சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் அமெரிக்க குடும்பமொன்றுடன் தங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. எமது அமெரிக்க விஜயத்தில் அமெரிக்க குடும்பமொன்றுடன் தங்குதல் முக்கிய செயற்பாடாகும்.

இந்த செயலமலர்வில் கலந்துகொண்ட அனைவரும் தனித்தனியாக அல்லது இருவர் என்ற அடிப்படையில் பிரிந்து அமெரிக்க குடும்பத்தினருடன் தங்கவைக்கப்பட்டனர். இதன் செயற்பாட்டின் முக்கிய நோக்கம் என்னவென்றால், அமெரிக்கர்களின் அன்றாட செயற்பாடுகளான உணவு, உடை மற்றும் குடும்ப வாழ்க்கை போன்ற பழக்கவழக்கங்களை அறிதலாகும்.

இந்த அடிப்படையில் 82 மற்றும் 78 ஆகிய வயதினைக் கொண்ட பெட் ரொலர் மூத்த தம்பதியினருடன் நான் தங்கவைக்கப்பட்டேன். இதன்போது அமெரிக்கர்களின் பல விடயங்களை அறிய முடிந்தது. அத்துடன் இந்த குடும்பத்தினருடன் பல புதிய இடங்களுக்கும் புதியர்வர்களை சந்திப்பதற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தொடர்ச்சியாக அமெரிக்க குடும்பத்தினருடன் வாழ விரும்புவதாக என்னுடன் செயலமர்வில் கலந்துகொண்ட பலர் இந்த அனுபவத்தின் பின்னர் தெரிவித்தனர். இதில் எந்தளவென்றால் நேபாளத்தினைச் சேர்ந்த எனது நண்பியொருவர் இவர்கள் தான் எனது பெற்றோர் என தெரிவித்தார்.

அந்தளவிற்கு அமெரிக்க குடும்பத்தினர் எங்களை நன்றாக கவனித்தனர். அவர்கள் ஒருபோதும் வேறு நாட்டவர், இனத்தவர் மற்றும் மதத்தவர் என்ற நோக்கத்தில் கணக்கெடுக்கவில்லை. அவர்கள் எங்களை ஒரு விருந்தாளி என்றில்லாமல் இராஜதந்திரி போன்றே கவனித்தனர். அதனைப் போன்றே அவர்களின் உறவினர்களிடமெல்லாம் அறிமுகப்படுத்தினர். இந்த குடும்பத்திருனருடன் துல்சா எனும் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. இது ஒக்லஹோமா மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

ஓய்வூதியம்

நான் தங்கியிருந்த பெட் ரொலர் தம்பதியினர் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றவர்களாவர். இவர்கள் இருவருக்கும் எமது நாட்டில் வழங்கப்படுவதை போன்று ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. எமது நாட்டில் ஓய்வூதியம் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. ஆனால் அங்கு மாநில அரசாங்கங்களினால் வழங்கப்படுகின்றது.

ஆசிரியர்களான இவர்கள் இருவருக்கும் மாதாந்தம் தலா 2,200 அமெரிக்க டொலர் பணம் வழங்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக சுகாதார காப்புறுதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரி விலக்களிப்பும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த வசதிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வீதிகள்

நேர்மனிலிருந்து இந்த பிரதேசத்திற்கு காரில் செல்வதற்கு சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தேவைப்படும். குறித்த நகரிற்கும் செல்லும் வீதி உட்பட அனைத்து வீதிகளும் எமது நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் போன்றே காணப்பட்டன.

அத்துடன் மேம்பாலங்களையும் அதிகம் காணமுடிந்தது. இந்த வீதிகளில் செல்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் மணித்தியாலத்திற்கு 40 – 70 மைல் என்ற அடிப்படையிலேயே பயணிக்க முடியும். இந்த வீதியில் நான் தங்கியிருந்த வீட்டின் 82 வயதான குடும்ப தலைவர் மிக வேகமாக வான் ஓட்டியதை அவதானித்தபோது எனக்கு மிக ஆச்சரியமாவிருந்தது.

அமெரிக்காவிலுள்ள கார் மற்றும் வான் ஆகியவற்றில் பயணிப்பவர்களில் முன் ஆசனங்களில் இருப்பவர்கள் மாத்திரமன்றி வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் ஆசன பட்டி அணிவது கட்டாயமாகும். இந்த சட்டத்தினை மீறினால் பாரிய தொகையிலான தண்டப் பணமாக செலுத்த வேண்டும். 

இப்படி 82 மற்றும் 78 ஆகிய வயதினைக் கொண்ட பெட் ரொலர் தம்பதியினருடன் சந்தோசமாக அவர்களின் வீட்டிலிருந்த சந்தர்ப்பதில் குழந்தைகளுக்கான பால் போத்தலொன்றை காண முடிந்தது... (அடுத்த வாரம் தொடரும்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X