2025 மே 19, திங்கட்கிழமை

காணாமற் போனோர்கள் பற்றிய இலங்கையின் ஒன்பதாவது ஆணைக்குழு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்ற காலத்தில் காணாமற் போனவர்கள் தொடர்பாக ஆராய அரசாங்கம் ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது. போர் முடிவடைந்து எவ்வளவு காலம் கடந்து விட்டது என்ற விடயத்தையும் இலங்கையின் ஆணைக்குழுக்களினதும் ஏனைய விசாரணைக் குழுக்களினதும் வரலாற்றையும் மறந்துவிட்டு இந்த ஆணைக்குழு நியமனத்தை நோக்கினால் மிகவும் பாராட்டக் கூடிய விடயமாகவே அதனை கருத வேண்டும்.

ஆனால் இந்த இரண்டு விடயங்களையும் மறக்க முடியுமா? போர் காலத்து சம்பவங்களைப் பற்றி விசாரணை செய்வதற்கென போர் முடிவடைந்து நான்காண்டுகளுக்கும் பின்னரே அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை நியமித்துள்ளது. இவ்வளவு காலம் இல்லாத தேவை இப்போது எவ்வாறு ஏற்பட்டது என்ற கேள்வி எவர் மனதிலும் எழுவதை தவிர்க்கவே முடியாது.

சில வாயாடி அமைச்சர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் இவ்வளவுகாலம் நியமிக்காததை இப்போதாவது நியமித்ததைப் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பாராட்ட வேண்டும் என்பார்கள். பாராட்டவும் செய்வார்கள். ஒருவகையில் அதுவும் உண்மைத் தான் என அதைக் கேட்ட மேலும் பலர் அப்போது நினைக்கலாம்.

உண்மையிலேயே அரசாங்கம் எதற்காக இந்த ஆணைக்குழவை நியமித்தது என்பது பலராலும் ஊகிக்க முடிகிறது. இது ஜெனிவாவில் இவ் வருடமும் கடந்த வருடமும் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டங்களின் போது இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளின் விளைவாகும். அவ் விரண்டும் இலங்கை அரசாங்கம் தாமே நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த சிபார்சுகளில் காணாமற் போனோர்களின் விடயமும் வருகிறது.

தாம் மனித உரிமை பேரவையின் பிரேரணைகளை நிராகரிப்பதாக அரசாங்கள் எவ்வளவு தான் பகிரங்கமாக கூறிய போதிலும் அப் பிரேரணைகளின் நெருக்குதலுக்கு அமைய சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த நெருக்குதலினாலேயே 2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் மரணங்கள் தொடர்பாக அரசாங்கம் இப்போது மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் அது தொடர்பாக பொலிஸ் அதிரடிப் படையைச் சேர்ந்த 12 பேர் சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை 2006ஆம் ஆண்டு மூதூரில் பிரெஞ்சு அரச சாரபற்ற நிறுவனமொன்றின் 17 பணியாளர்கள் கொலை செய்யப்பபட்டமை தொடர்பாகவும் விசாரணை நடத்துவதாக அரசாங்கம் கூறுகிறது. 2006 ஆம் ஆண்டு இடம் பெற்ற இவ் விரண்டு படுகொலை சம்பவங்கள் தொடர்பாகவும் மீண்டும் விசாரணை நடததுவதாக அரசாங்கம் கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் வாக்குறுதியளித்து இருந்தது. இவ்விரண்டு சம்பவங்களும் பல்வேறு காரணங்களைக் கூறி சமாளித்து காலத்தால் மூடி மறை;றக்கப்பட்ட சம்பவங்களாகும்.

அதே போல் போர் காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்திருந்தது. ஆனால் அது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அவ்வாறு முன் வராதது மட்டுமல்லாது பாதுகாப்புத் துறையினர் அவ்வாறு எவரும் போர் காலத்தில் காணாமற் போகவில்லை என அடித்துக் கூறினர்.

இவ் வருடம் ஜனவரி மாதம் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ டெய்லி மிரர் பத்திரிகையுடன் நடத்திய பேட்டியொன்றின் போதும் போர் காலத்தில் எவரும் காணாமற் போகவில்லை என்று கூறினார். அக் காலத்தில் கைது செய்யப்பட்டோர் மற்றும் சரணடைந்தோர் அனைவருமே ஒன்றில் இந்திய அதிகாரிகள் அல்லது சர்வதேச செஞ்சிலுவை சங்க அதிகாரிகளின் முன்னிலையில பதிவு செய்யப்பட்டதாகவும் எனவே எவரும் காணாமற்போக முடியாது என்றும் அவர் இந்த பேட்டியின் போது வாதிட்டார் காணாமற் போனவர்களாக கூறப்படும் பலர் பேர் களத்தில் கொல்லப்பட்ட புலிகள் என்றும் மேலும் சிலர் வெளிநாடுகளில் வாழ்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் இராணுவம் சம்பந்தப்பட்ட சிபார்சுகள் தொடர்பாகவும் சனல் 4 தொலைக்காட்சி சேவையினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் விசாரணை செய்வதற்காகவென ஆறு போர் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்று நியமிக்கப்பட்டது. அதன் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. அதிலும் போரின் போது எவரும் காணாமற் போகவில்லை என்றே கூறப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் போரின் போது எவரும் காணாமற் போகவில்லை என்று ஜனவரி மாதம்  கூறியிருக்கையில் ஏப்ரல் மாதம் இராணுவ நீதிமன்றமும் அதனையே தீர்ப்பாக வழங்குவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இராணுவ நடவடிக்கைகள் 'பொது மக்கள் எவரும் பாதிக்கப்படாத வகையில்' (zero civilian casualty மேற்கொள்ளப்பட்டதாகவும் அந் நீதிமன்றம் தெரவித்து இருந்தது.

அவ்வாறு உத்தியோகபூர்வ அறிக்கையொன்று இருக்கும் நிலையில் தான் போர் காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் எவரும் காணாமற் போயுள்ளனரா அவ்வாறாயின் அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பனவற்றை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். வேறு விதமாக கூறுவதாயின் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் பாதுகாப்புப் படையினர் 'பொது மக்கள் எவரும் பாதிக்கப்படாத வகையில்' போரின் போது நடந்து கொண்டனர் என இராணுவம் கூறுவதை ஜனாதிபதியே நம்புகிறார் இல்லை  போலும்.

புதிதாக நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழு நேர்மையாகவே நியமிக்கப்பட்டாலும் உலகத்தாரின் பார்வைக்காக நியமிக்கப்பட்டாலும் உலகம் எந்தளவு அதனை நம்பும் என்பது சந்தேகமான விடயமாகும். ஏனெனில் அதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போதும் சர்வதேச அமைப்புக்கள் அதனை ஏற்கத் தயங்கின. சர்வதேச் நெருக்குதல்கள் வரும் போதெல்லாம் இலங்கை அரசாங்கம் ஆணைக்குழுக்களை நியமிப்பது வழக்கமாக இருக்கிறது என ஹியூமன் ரைட்ஸ் வொச் நிறுவனம் அப்போது கூறியது.

எனவே, இப்போது நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு அவ்வாறு உலகை ஏமாற்றுவதற்கானதோர் தந்திரமல்ல என்பதை நிரூபிப்பதே இந்த விடயம் தொடர்பில் இப்போது அரசாங்கத்தின் முன்னுள்ள பாரிய பொறுப்பாகும். ஏனெனில் இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளும் தற்போதைய ஜனாதிபதியும் நியமித்த பல ஆணைக்குழுக்களின் நோக்கம் நிறைவேறவில்லை என்பதே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைமையாகும்.

அதிலும் இது வரை இலங்கையில் பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் ஜே.ஆர் ஜயவர்தனவை தவிர்நத ஏனைய சகல ஜனாதிபதிகளும் காணாமற் போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்து பரிகாரங்களை சிபார்சு செய்வதற்காக ஆணைக்குழுக்களை நியமித்துள்ளனர் என்ற விடயமே விந்தையானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதிலும் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச இதே விடயத்திற்காக மூன்று ஆணைக்குழக்களையும் ஜனரிபதி சந்திரிகா குமாரதுங்க நான்கு ஆணைக்குழுக்களையும் நியமித்தமை குறிப்பிடத்தக்க முக்கியமான விடயமாகும்.

ஜனாதிபதி பிரேமதாக 1991,1992 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் காணாமற் போனவர்கள் தொடர்பாக ஆராயவென இந்த மூன்று ஆணைக்குழக்களையும் நியமித்தார். அவர் கொல்லப்பட்டதன் பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி டீ.பி. விஜேதுங்க இந்த மூன்று ஆணைக்குழுக்களையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு 1993ஆம்ஆண்டே தாமும் இதே நோக்கத்திற்காக மற்றொரு ஆணைக்குழுவை நியமித்தார்.

ஆட்கள் காணாமற் போவதைப் பற்றி ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை திட்டிக் கொண்டு பதவிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க பதவியேற்ற 1994ஆம் ஆண்டே அதே நோக்கத்திற்காக தாமும் பிரதேச வாரியாக மூன்று ஆணைக்குழுக்களை நியமித்தார். பின்னர் இந்த ஆணைக்குழுக்களின் அறிக்ககள் வெளியானதன் பின்னர் மேலும் விசாரணைக்காகவென திருமதி மனோரி முத்தெட்டுவேகம தலைமையல் நாடு தழுவிய ரீதியில் மற்றொர ஆணைக்குழுவை நியமித்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010ஆம் ஆண்டு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படை நோக்கம் காணாமற் போனவர்கள் தொடர்பாக ஆராய்வது அல்ல என்ற போதிலும் அவ் ஆணைக்குழுவும் காணாமற் போனவர்கள் தொடர்பாக சிபார்சுகளை செய்துள்ளது. இவ் அத்தனை ஆணைக்குழுக்கள் செயற்பட்ட போதிலும் இலங்கையில் மனிதர்கள் காணாமற் போதல் தடுத்து நிறுத்தப்படவில்லை. மாறாக அதற்காகவென்றே வெள்ளை வான் கலாசாரம் ஒன்றே உருவாகியது.

மேற்படி வரலாற்றின் படி 1991ஆம் ஆண்டு முதல் இது வரை காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்வதற்காக மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் எட்டு ஆணைக்குழுக்களை நியமித்துள்ளனர். இந்த நிலையில் தான் ஜனாதிபதி தற்போது மற்றொரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார். எனவே இது இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட ஒன்பதாவது ஆணைக்குழுவாகும்.

எனவே தான் இவ் விடயத்தில் சர்வதேச ரீதியாக நம்பிக்கையையூட்டுவது கடினமாக இருக்கும் என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மனம் வைத்தால் இந்த ஆணைக்குழுவை பாவித்தே அரசாங்கத்திற்கு இழந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் முடியும். அது நடக்குமா என்பதை காலம் மட்டுமே சொல்லும். அதுவரை அவரவர் தத்தமது அறிவின் பிரகாரமும் அனுபவத்தின் பிரகாரமும் உணர்வின் பிரகாரமும் என்ன நடக்கும் என்பதை ஊகிக்க வேண்டியது தான். 

புதிய ஆணைக்குழுவில் மக்ஸ்வெல் பரணகம, பிரியந்தி வித்தியாரத்ன மற்றும் மனோ ராமநாதன் ஆகியோர் இடம்பெறுகின்றனர் அவர்களில் பரணகமவும் ராமநாதனும் நல்லிணக்க ஆணைக்குழுவிலும் இடம்பற்றவர்களாவர். தற்செயலாகவோ அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபார்சுகளுக்கு முரணாக அமைந்தால் எப்படியிருக்கும்? 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X