2025 மே 19, திங்கட்கிழமை

மன்மோகன்சிங்: கடைசிவரை அவிழ்க்காத முடிச்சு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்
 
கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கையளித்து விட்டுத் திரும்பியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். கடந்த திங்கட்கிழமை புதுடெல்லியில் ரேஸ்கோஸ் வீதியில் உள்ள இந்தியப் பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் வைத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்தனுப்பிய அழைப்பிதழ், மன்மோகன்சிங்கிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 
 
அதைப் பெற்றுக் கொண்ட அவர், கொமன்வெல்த் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். மாநாட்டுக்கு வருவேன், நிச்சயம் கலந்து கொள்வேன் என்று எந்த வாக்குறுதியையும் மன்மோகன்சிங் கொடுக்கவில்லை.
 
வெளிவிவகார அமைச்சர் பீரிஸிடம் மட்டுமல்ல, இது குறித்து வெளிப்படையாக இப்போதைக்கு அவர் எந்தக் கருத்தையும் வெளியிடப் போவதில்லை என்பதே உண்மை. ஏனென்றால், கொமன்வெல்த் மாநாடு குறித்தும் அதில் பங்கேற்கும் மட்டம் குறித்தும் முடிவுகளை எடுக்கும் விவகாரத்தில், இந்தியாவுக்கு வெளிவிவகாரக் கொள்கைகளுக்கு அப்பாலும் சில அழுத்தங்கள் உள்ளன.
 
குறிப்பாக, இலங்கை தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள கருத்துகளை மன்மோகன்சிங்கினாலோ அவரது அரசாங்கத்தினாலோ அவ்வளவு இலகுவாக புறக்கணித்துச் செயற்பட முடியாது. கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் தலைவர்களும் கருதுகின்றனர்.
 
இதற்கு வெளிப்படையாக யாரும் இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டாலும், சுப்பிரமணியன் சுவாமி போன்ற விரல் விட்டு எண்ணி விடத்தக்கவர்கள் தமிழ்நாட்டில் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனாலும், அவர்கள் புறக்கணிக்கத்தக்களவாகவே உள்ளதால், பெரும்பாலானோரின் கருத்தாக, கொமன்வெல்த் மாநாட்டுப் புறக்கணிப்புக் கோரிக்கையே உள்ளது.
 
அரசியலில் எப்போதுமே கீரியும் பாம்புமாகச் செயற்படும் திமுகவும், அதிமுகவுமே இந்த விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கும் போது, இவற்றில் ஏதாவதொரு கட்சியுடனேயே, கூட்டணி வைத்துப் பழகிவிட்ட காங்கிரஸ் கட்சிக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
கொமன்வெல்த் மாநாட்டைப் பொறுத்தவரையில், முடிவுகளை எடுப்பதற்கு இந்தியாவுக்கு மூன்று தெரிவுகள் உள்ளன. இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பது போன்று, முழுஅளவில் மாநாட்டில் பங்கேற்பது முதலாவது தெரிவு. தமிழ்நாட்டின் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஒட்டுமொத்த மாநாட்டையும் புறக்கணிப்பது இரண்டாவது தெரிவு. தமிழ்நாட்டின் கருத்துகளை மதித்து - அதேவேளை, இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல், கீழ்மட்டக் குழுவை அனுப்புவது மூன்றாவது தெரிவு.
 
மன்மோகன்சிங் தலைமையிலான அரசும், காங்கிரஸ் கட்சியும் இந்த மூன்றில் ஒன்றையே தெரிவு செய்தாக வேண்டும்.
 
ஆனால், இந்த முடிவுகளில் எதை எடுத்தாலும், இந்தியாவின் மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நிறையவே சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். முதலாவது தெரிவான, இலங்கையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், முழுஅளவில் பங்கேற்பது மத்திய அரசு மீது, தமிழ்நாட்டின் விரோதத்தை சம்பாதிக்க வைக்கும். மத்திய அரசு ஏழு கோடி தமிழர்களினதும் கருத்தை அவமானப்படுத்தி விட்டதான பழிச்சொல்லுக்கு இலக்காக நேரிடும்.
 
அதேவேளை, இந்தியாவின் கருத்தையும், இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் இலங்கை மதிக்கவோ, நிறைவேற்றவோ இல்லை என்ற கருத்து இந்திய அரசிடம் உள்ளது. எனவே, தமிழ்நாட்டின் வலுவான புறக்கணிப்பு அழைப்புகளை உதாசீனம் செய்து கொண்டு, கொமன்வெல்த் மாநாட்டுக்கு முழுஅளவிலான பிரதிநிதிகளை அனுப்பினால், இந்தியாவை மேலும் அவமதிக்க இடமளித்ததாகவும் ஆகி விடும்.
 
இரண்டாவது தெரிவான, முழு அளவில் மாநாட்டைப் புறக்கணிப்பது இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகவும் சிக்கலானதும் இக்கட்டானதுமான முடிவாகவே இருக்கும். அண்டை நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொள்ளும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இதனால் கேள்விக்குள்ளாகும்.
 
ஏனென்றால் இது இலங்கை நடத்துகின்ற மாநாடே தவிர, முற்றிலும் இலங்கையின் நலன்கருதி, இலங்கைக்காக நடத்தப்படுகின்ற மாநாடு அல்ல. 54 நாடுகளின் தலைவர்கள் கூடுகின்ற ஒரு சர்வதேச மாநாடு. இதில் பங்கேற்பதால், உலகத் தலைவர்களை சந்தித்து பேசுகின்ற வாய்ப்புக் கிடைக்கும். அது இந்தியாவுக்கு அரசியல், பொருளாதாரம், இராஜதந்திரம், பாதுகாப்பு போன்ற துறைகளில் நலன்களை ஏற்படுத்தித் தரக் கூடிய ஒரு களம். இத்தகையதொரு வாய்ப்பை இந்தியாவினால் முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
 
இலங்கை என்ற ஒரு நாட்டுக்காக, ஏனைய 52 நாடுகளினதும் நட்புறவு வாய்ப்புக்களை புறக்கணிப்பது நியாயமா என்று கேள்வி எழும். எனவே, மாநாட்டில் முழுஅளவில் பங்கேற்பதற்கு இந்தியா எந்தளவுக்கு யோசிக்குமோ, அதைவிட இன்னும் அதிகமாக முற்றிலும் புறக்கணிப்பதற்கு யோசிக்கும், பின்நிற்கும்.
 
அடுத்து, மூன்றாவது தெரிவையே இந்தியா அதிகம் விரும்பக் கூடும்.
 
தமிழ்நாட்டின் கருத்துக்கும் மதிப்பளித்துக் கொண்டு, இந்திய வெளிவிவகாரக் கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்ளும் இந்தத் தெரிவு தான், இந்தியாவுக்கு இருக்கும் தெரிவுகளிலேயே மிகவும் யதார்த்தமானது.
 
அதாவது, இலங்கை எதிர்பார்க்கின்ற அளவுக்கு முழு அளவிலான உயர்மட்டக் குழுவையும் அனுப்பாமல், அதேவேளை, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முற்றிலும் புறக்கணிக்காமல், நடந்து கொள்வதே இது.
 
இத்தகையதொரு முடிவை எடுப்பது குறித்து இந்தியா அதிகம் யோசிக்க வேண்டியிருக்காது. ஏனென்றால், அது இலங்கை, தமிழ்நாடு என்ற இருதரப்புகளினது தெரிவுகளுக்கு நடுவேயுள்ள ஒன்று. இத்தகைய முடிவை இந்தியா எடுத்தால், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொமன்வெல்த் மாநாட்டுக்கு வரமாட்டார். அது தமிழ்நாட்டைத் திருப்திப்படுத்தும், அதேவேளை, ஓர் அமைச்சர் மட்டக்குழுவை அனுப்பி வைப்பதன் மூலம், தலை வராது போனாலும் தலைப்பாகையாவது வந்ததே என்று இலங்கையும் திருப்தி கொள்ளும்.
 
மேலும், இந்தியப் பிரதமராக மன்மோகன்சிங் 2004இல் பதவியேற்றதில் இருந்து, அதற்குப் பின்னர் நடந்த எல்லா கொமன்வெல்த் மாநாடுகளுக்கும் செல்லவில்லை. 2005இல் மால்டாவில் நடந்த மாநாட்டுக்கும், 2011இல் கடைசியாக நடந்த மாநாட்டுக்கும் அவர் செல்லவில்லை.
 
2007இல் உகண்டாவிலும், 2009இல் ரினிட்டாட் அன் டுபாகோவில் நடந்த மாநாட்டிலும் தான் அவர் பங்கேற்றுள்ளார். எனவே, கொழும்பு மாநாட்டையும் அவர் ஏதேனும் காரணத்தைக் கூறி தவிர்த்துக் கொள்ளலாம்.
 
ஆனால், இவற்றில் எந்த முடிவையும் இந்திய அரசினால் உடனடியாக எடுத்து விடமுடியாது. அவ்வாறு எடுத்தால் ஆபத்தானதாகி விடும். ஏனென்றால், வடக்கு மாகாணசபைக்கு நியாயமான தேர்தலை நடத்துவது, 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாப்பது உள்ளிட்ட பல விவகாரங்களில், கொமன்வெல்த் மாநாட்டை வைத்து இந்தியா காய்களை நகர்த்தி வருகிறது. எனவே புறக்கணிப்பை அறிவித்தால், இவையிரண்டும் கேள்விக்குள்ளாகி விடும்.
 
அதுபோலவே, மாநாட்டுக்கு செல்லப் போவதாக அறிவித்தால், தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கவும், அரசியல் எதிர்ப்பலை உருவாகவும் காரணமாகிவிடும். எனவே முடிந்தளவுக்கு இந்திய அரசாங்கம் இந்த விடயத்தில் மெளனத்தைக் காக்கவே முற்படும்.
 
எத்தகைய முடிவு எடுக்கப்பட்டாலும், அதை இந்தியா கடைசிநேரம் வரைக்கும் வெளியிடாமல் இருக்கும். அல்லது முடிவு எடுப்பதை கடைசி நேரம் வரை இழுத்தடிக்கும்.
 
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலக்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது எப்படி வாக்களிப்பது என்று ஒரு சில மணிநேரத்துக்கு முன்னர் முடிவு செய்தது போலக் கூட புதுடெல்லி நடந்து கொள்ளலாம்.
 
எவ்வாறாயினும், முழு அளவில் மாநாட்டில் பங்கேற்பது என்று முடிவு தவிர்ந்த, இந்தியா எடுக்கப் போகும் எத்தகைய முடிவும், இலங்கைக்கு சாதகமாக இருக்காது. ஏனென்றால், இந்தியா பாதி அளவில் பங்கேற்றாலோ, முழுஅளவில் புறக்கணித்தாலோ இலங்கைக்கு அவமானமாகி விடும்.
 
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை தனிப்பட்ட ரீதியாக அழைத்தும் வராமல் போனால், அது இலங்கையை மிகவும் அவமானப்படுத்தியதாகி விடும். ஏனென்றால், மன்மோகன்சிங் 2005இலும், 2011இலும் பங்கேற்காத மாநாடுகளில் இத்தகைய சிறப்பு அழைப்பு அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. எல்லாத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது போலவே அழைக்கப்பட்டார். சிறப்பாக அழைக்கப்பட்ட தலைவர் வராமல் போனால், அந்த மாநாடு தோல்வி என்று தானே அர்த்தம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X