2025 மே 19, திங்கட்கிழமை

அந்த முப்பது நாட்கள்...

Super User   / 2013 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தொடர் - 7)

-றிப்தி அலி

சிறு பிள்ளைகள் இல்லாத வீட்டில் எதற்கு பால் போத்தல் என நீங்கள் நினைக்கலாம். அதுபோன்றே நானும் நினைத்து குறித்த பால் போத்தலிற்கு அருகில் சென்றேன். குடிப்பதற்கல்ல பார்ப்பதற்காக...

அப்போது குறித்த போத்தலினுள் டொலர் தாள் மற்றும் நாணயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதை கண்டவுடன் ஆச்சரியடைந்தேன். பால் போத்தலினுள் பணமா? மிகவும் ஆச்சரியமடைந்த நிலையில் பேட் ரொலர் தம்பதிகளிடம் இது தொடர்பாக வினவினேன்.

அவர்கள் ஒரே சொல்லில் சேமிப்பு என்று பதிலளித்தனர். ஆனால், இறுதி கால கட்டத்தில் அவர்களுக்கான சேமிப்பு அல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். பிறருக்கு உதவுவதற்காகவே இந்த சேமிப்பினை தாங்கள் மேற்கொள்வதாக தெளிவுப்படுத்தினர்.

அதாவது அவர்களுடைய வீட்டுக்கு அருகிலுள்ள தேவாலயத்தினால் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான நிதி குறித்த தேவாலயத்தில் பதிவுசெய்யப்பட்ட மக்களிடமிருந்தே பெறப்படுகின்றனது. சேகரிக்கப்படும் இந்த நிதி மூலம் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த அடிப்படையில் திருமணமாகாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு உதவுவதற்கான நிதியை பெட் ரோலர் தம்பதியரின் வீட்டிலுள்ள பால் போத்தலில் சேகரித்து வருகின்றனர். அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் திருமணமாகாத பல பெண்கள் அமெரிக்காவில் கர்ப்பமாகின்றனர். பின்னர் இவர்கள் கருக்கலைப்பில் ஈடுபடுவது வழமையாகும்.

ஆனால் இந்த கருக்கலைப்பினை தடுப்பதற்கான முயற்சியில் தேவாலயங்கள் ஈடுபட்டுள்ளன. பல வீடுகளில் பால் போத்தல்களில் சேகரிக்கப்படும் நிதியினை கொண்டு திருமணமாகாத நிலையில் கர்ப்பமாகும் பெண்களுக்கு உதவப்படுகின்றது.
அதாவது திருமணமாகாத நிலையில் கர்ப்பமாகும் பெண்கள் கருக்கலைப்பினை மேற்கொள்ளாது குழந்தையை பெற்றுக்கொள்வதை தேவாலயங்கள் ஊக்குவிக்கின்றன.

இதற்காக கர்ப்பம் முதல் குழந்தை பிறப்பு வரையான முழுச் செலவையும் தேவாலயங்கள் ஏற்றுக்கொள்கின்றன. பின்னர் பிறக்கும் குழந்தை, தேவாலயத்தின் கீழுள்ள சிறுவர் இல்லத்தில் பாராமரிக்கப்படுகின்றது. இந்த செயற்பாட்டுக்காகவே பால் போத்தலில் நிதி சேகரிக்கப்படுகின்றது. நீங்கள் நிதி சேகரிப்பினை பால் போத்தலில் மேற்கொள்ளாமல் உண்டியலில் மேற்கொண்டிருக்கலாம் என்று நினைக்கலாம்.

பால் போத்தலில் சேகரிக்கப்படுவதன் பிரதான காரணம் என்னவென்றால் குழந்தைகளுக்கு உதவுவதை வெளிக்காட்டுவதாகும். இது போன்று பல உபகரணங்களில் சேகரிக்கப்படும் நிதியின் ஊடாக பல்வேறு திட்டங்கள் குறித்த தேவாலயத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.

மற்றுமொரு முக்கிய விடயத்தினை குறிப்பிட வேண்டும். அதாவது முஸ்லிம் நாடான மெரோக்கோவில் தண்ணீர் பிரச்சினையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி தேவையான தண்ணீர் தங்கியொன்று இந்த தேவாலயத்தின் நிதியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது போன்ற பல சேவைகளை இன, மதம் மற்றும் மொழி வேறுபாடின்றி மேற்கொள்ளும் தேவாலயத்தை பார்வையிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

தேவாலய விஜயம்

கிறிஸ்வதர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு செல்வது வழக்கமாகும். அந்த அடிப்படையில் நான் தங்கியிருந்த வீட்டினரும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்கு செல்வதற்கான அழைப்பினை விடுத்தனர். இந்த அழைப்பினை சந்தோசமாக ஏற்று தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டேன். தேவாலயத்திற்குள் முதற் தடவையாக நுழைகின்றமையினால் சற்று அச்சத்துடனேயே நுழைந்தேன்.

நான் சென்றது சமூக தேவாலயமாகும். இந்த தேவாலயம் ஏஎமது நாட்டில் காணப்படும் கிறிஸ்தவ தேவயாலயங்களுடன் ஒப்பீடும்போது முற்றிலும் வித்தியாசமாகவே காணப்பட்டது. அதாவது எந்தவொரு சிலையினையும் இந்த தேவாலயத்தினுள் என்னால் காண முடியவில்லை. எனினும் இந்த தேவாலயத்தின் நான் அமர்ந்திருந்த அறையில் இளைஞர்களை காணவேயில்லை.

அமெரிக்க இளைஞர்கள் தேவாலயங்கள் செல்வதில்லை என்று  அப்போது நான் நினைத்தேன். ஆனால் பின்னர் நான் அமர்ந்திருந்த அறை முதியோர்கள் வழிபடும் அறை என்று அறிந்துகொண்டேன். அங்கு முதியோர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என வழிபடுவதற்கு என அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அறைகளிலேயே அவர்கள் வழிபாட்டில் ஈடுபடுவர்.

இதற்கு மேலதிகமாக கைக்குழந்தைகளுடன் தேவாலயத்திற்கு வருபவர்கள் வழிபாட்டில் ஈடுபடும்போது கைக்குழந்தைகளை பராமரிக்கவும் அறைகள் ஒதுக்கப்பட்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதியோர் சேவை, சிறுவர் மற்றும் முதியோர் சமய வகுப்புகள், விளையாட்டு போட்டிகள் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை தேவாலயங்கள் ஏற்பாடு செய்கின்றன.அமெரிக்க விஜயத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற தேவாலய விஜயம், முதற் தடவையான அனுபவமாகும்.

மயான விஜயம்

இந்த பெட் ரோலர் தம்பதியினருடன் மயானத்திற்கு விஜயம் செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. பொரளையிலுள்ள மயானத்தினை ஒத்த வடிவில் பாரிய நிலப்பரப்பிலேயே அமெரிக்காவிலும் மயானங்கள் காணப்பட்டன. இந்த மயானத்தில் கிஸ்தர்வர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்ற இன மற்றும் மத வேறுபான்டிறி அனைவரும் ஒன்றாகவே அடக்கம் செய்யப்படுவர்.


சிலரின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் மற்றும் சிலரின் உடல்கள் தகனம் செய்யப்படும். இவ்வாறு நல்லடக்கம் செய்ய விரும்புபவர்கள் குறித்த மையானத்தின் சிறிய பரப்பளவொன்றினை மரணிப்பதற்கு முன்னர் பணம் செலுத்தி ஒதுக்கிவைக்க வேண்டும்.

இந்த சிறிய இடத்தின் பெறுமதி 1,000 தொடக்கம் 2,000 வரையான அமெரிக்க டொலராகும். பெரும்பாலன குடும்ப உறுப்பினர்கள் சடலங்கள் ஒன்றாக அடக்கம் செய்யப்படுவதுடன் இலகுவில் அடையாளம் காணக்கூடிய வகையில் பெயர், பிறந்த திகதி மற்றும் உயிரிழந்த திகதி ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.அதேபோன்று தகனம் செய்யப்படுபவர்களின் சாம்பல் பொதி செய்யப்பட்டு தகரப் பொட்டியொன்றில் சேமித்துவைக்கப்படும். இந்த சடலங்களின் நினைவு தினத்தன்று குடும்ப உறுப்பினர்கள் சென்று இதை தரிசிப்பதுடன் மலர் சாத்துவர்.

இதேவேளை, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மாத்திரம் அவர்களுக்கென்று தனியான முஸ்லிம் மையவாடியும் உள்ளது. முன்னர் ஒக்லஹோமா பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பொது மயானத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என அங்குள்ள முஸ்லிமொருவர் தெரிவித்தார்.

ஆனால் தற்போது ஒக்லஹோமா பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிவாக உள்ளமையினால் ஒக்லஹோமா சிட்டியில் முஸ்லிகளுக்கு என தனியான மையவாடியொன்று உள்ளது என அவர் குறிப்பிட்டார். ஆனால் முஸ்லிம் குறைவாக வாழும் பிரதேசங்களில் பொது மயானத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். பொது மையானத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது முஸ்லிம்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

வோல்மார்ட்

மயான விஜயத்தினை அடுத்து பெட் ரோலர் குடும்பத்தினர் வோல்மார்ட் எனும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். வோல்மார்ட் எனும் பெயரை பலர் முன்னர் கேள்விப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.இது ஒரு சொப்பிங் மோலாகும். இந்த நிறுவனத்திலேயே உலகத்தில் ஆகக்கூடிய ஊழியர்கள் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. தாய் மற்றும் தந்தையினை தவிர தேவையான அனைத்து பொருட்களையும் பெற முடியும்.

இந்த  வோல்மார்ட் சொப்பிங் மோல் எமது நாட்டில் காணப்படும் அங்காடிகளை விடவும் பன்மடங்கு பாரிய நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கு ஊனமுற்றவர்கள் பொருட் கொள்வனவில் ஈடுபடுவதற்காக விசேட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தள்ளுவண்டியினை ஒத்த வடிவில் மோட்டார் இயந்திரமொன்றே ஊனமுற்றவர்கள் பொருட் கொள்வனவில் ஈடுபடுவதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான சக்தி மின்கலத்தில் சேமிக்கப்பட்டிருந்து. இதனை ஊனமுற்றவர்கள் பிறரின் உதவியின் தானாக செயற்படுத்த முடியும். எமது நாட்டில் காணப்படும் புட்சிட்டி போன்று அங்கு செவன் இலவன் காணப்பட்டது. இங்கு அவசரமாக தேவைப்படும் உடனடி மற்றும் சமைத்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

முதியோர் இல்ல விஜயம்

இவ்வாறு முதியோர்களுடன் இரண்டு நாட்கள் வாழ்ந்த எனக்கு முதியோர் இல்லமொன்றுக்கு விஜயம் செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. புல் சேர்க்கில் எனப்படும் இந்த முதியோர் இல்லம் ஒக்லஹோமா பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் அமையப்பெற்றுள்ளது.

இந்த முதியோர் இல்லத்திற்கும் எமது நாட்டில் காணப்படும் முதியோர் இல்லத்திற்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்பட்டது. அதாவது எமது நாட்டில் காணப்படும் முதியோர் இல்லங்களில் பிள்ளைகளை விட்டு பிரிந்தவர்களே காணப்படுவர்.

ஆனால் இங்கு அப்படியில்லை. வேலைக்கு செல்லும்போது பெற்றோர் தனியாக இருக்கக்கூடாது என்ற காரணத்திற்கான பிள்ளைகள் பெற்றோரினை இந்த முதியோர் இல்லத்தில் தங்கவைக்கின்றனர். மாலை நேரத்தில் வேலை முடிந்து செல்லும்போது பெற்றோரை அழைத்துச் சென்றுவிடுவர்.

இதனால் இந்த முதியோர் இல்லங்கள் திங்கட்கள் முதல் வெள்ளிவரை காலை 7.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையும் செயற்படுகின்றது. ஆனால் எமது நாட்டிலுள்ள முதியோர் இல்லங்கள் அவ்வாறில்லாமல் ஏழு நாட்களும் 24 மணித்தியாலங்களும் செயற்படும்.

அரசார்பற்ற நிறுவனமான இந்த முதியோர் இல்லத்தில் கடமையாற்றுபவர்கள் தொண்டர் அடிப்படையிலேயே கடமையாற்றுகின்றனர். இந்த முதியோர் இல்லத்தில் சுமார் 30 பேர் மாத்திரமே நாளொன்றுக்கு தங்கவைக்கப்படுவர். இங்கு முதியோருக்கான கல்வித் திட்டம், பயிற்சிகள் மற்றும் கணணி அறிவு போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள முதியோரிடமிருந்து சிறிய அளவிலான கட்டணம் மாதம் பெறப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது. ஒக்கலஹோமா மாநிலத்தில் செயலமர்வு, கள விஜயம் என சுமார் 20 நாட்கள் கழித்திருந்த நிலையில்... (அடுத்த வாரம் தொடரும்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X