2025 மே 19, திங்கட்கிழமை

சில மனித உரிமை பிரச்சினைகளை அரசாங்கம் இலகுவில் தவிர்த்திருக்கலாம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் தற்போதைய இலங்கை விஜயம் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற போதிலும் இலங்கை அரசாங்கம் அவர் இங்கு வருவதை விரும்பவில்லை என்பதே உண்மையாகும். அதாவது அரசாங்கம் விருப்பத்தோடு அவரை அழைக்கவில்லை. மறுபுறத்தில் அரசாங்கம் அழைத்த காரணத்தினால் அவர் இங்கு வரவும் இல்லை. ஒரு வகையில் ஐ.நா மனித உரிமை பேரவை இந்த அழைப்பை கேட்டுப் பெற்றது என்றே கூற வேண்டும்.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் அல்லது ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கும் இடையே நல்ல உறவு இருப்பதாக கூற முடியாது. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையே நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சர்டுக்களினால் இலங்கை அரசாங்கத்திற்கும் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் அல்லது ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கும் இடையே ஒருவித கசப்பான உறவே நிலவி வருகிறது.

இதனால் கடந்த வருடம் மார்ச் மாதத்திலும் இவ் வருடம் மார்ச மாதத்திலும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டங்களின் போது இலங்கை தொடர்பாக இரண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேவேளை இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என நவநீதம் பிள்ளை இவ் வருடம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகிறார். எனவே, மனித உரிமை பேரவையும் மனித உரிமை ஆணையாளரும் இலங்கை அரசாங்கத்தின் நல்ல நண்பர்கள் என்று கூற முடியாது.

போர் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்குப் புறம்பாக அதற்குப் பின்னர் இடம்பெற்ற மற்றும் இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பாகவும் ஐ.நா. மனித உரிமை பேரவையும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றனர். அதிகார பரவலாக்கல், நல்லாட்சி, ஊடக சுதந்திரம், மதச் சுதந்திரம் மற்றும் நீதித் துறையின் சுதந்திரம் ஆகியவை தொடர்பாகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

உண்மையிலேயே இவற்றில் பல பிரச்சினைகளை இலங்கை அரசாங்கம் இலகுவாகவே தவிர்த்துக் கொண்டிருக்கக் கூடியவையே. ஆனால் உள்நாட்டு அரசியலுக்காக அரசாங்கமும் ஆளும் கூட்டமைப்பில் உள்ள சில சிறு கட்சிகளும் அப் பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டுள்ளன. ஆனால் அதனால் அரசாங்கமோ ஆளும் கட்சியில் உள்ள சிறு கட்சிகளோ பெரிதாக அடைந்த நன்மையும் இல்லை.

போர் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையும் சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பையும் குற்றஞ்சாட்டி வந்த போதிலும் பொறுப்புக் கூறல் என்று வரும் போது அரசாங்கத்தை மட்டுமே குறை கூறி வருகின்றன. இதனால் சர்வதேச சமூகம் மனித உரிமை விடயத்தில் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்ட அரசாங்கத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அது முற்றிலும் தவறானதும் அல்ல.

உதாரணமாக புலிகள் மக்களை கேடயமாக பாவித்ததாக சர்வதேச சமூகம் குற்றம் சுமத்திய போதிலும் கிழக்கு மாகாண போரில் போலல்லாது வட மாகாண போரின் போது பாரியளவில் உயிர் சேதம் ஏற்படுவதற்கு மக்களை கேடயமாக பாவித்தமையும் பிரதான காரணம் ஒன்றாகும் என்பதை சர்வதேச சமூகமோ சனல் 4 போன்ற ஊடகங்களோ கூறுவதில்லை.

இதனால் சர்வதேச சமூகம் நடுநிலையானதல்ல என்று கூறும் இலங்கை அரசாங்கம் அந்த குற்றச்சாட்டைக் கொண்டு உண்மையான மனித உரிமை மீறல்களையும் மூடி மறைக்க முற்பட்டது. மூதூரில் இடம்பெற்ற தொண்டர் நிறுவன ஊழியர்களின் படுகொலையும் திருகோணமலை மாணவர் படுகொலையும் அதற்கு உதாரணமாகும். சர்வதேச நெருக்குதல் காரணமாக இப்போது அரசாங்கம் அந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக புதிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதிகார பரலாக்கல் விடயத்தில் அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கத்தின் சில முக்கியஸ்தர்களும் அரசாங்கத்தில் உள்ள சில சிறு கட்சிகளுமே காரணமாகும். இலங்கையில் அதிகார பரவலாக்கல் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை அறிந்திருந்தும் இந்திய நெருக்குதலை இலங்கை அரசாங்கத்தால் மீற முடியாது என்று அறிந்திருந்தும் அவர்கள் அதிகார பரவலாக்கல் முறைமையை எதிர்த்து வருகிறார்கள்.

அவர்களது இந்த நிலைப்பாட்டின் காரணமாகவே அரசாங்கமே நியமித்த திஸ்ஸ வித்தாரண குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. அதேபோல் அரசாங்கமே நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அதிகார பரவலாக்கலைப் பற்றிக் கூறப்பட்டுள்ள விடயங்களும் புறக்கணிக்கப்பட்டன. எனவே, அதிகார பரவலாக்கல் என்ற விடயமும் மனித உரிமை பிரச்சினையாக மாறி ஐ.நா.மனித உரிமை பேரவையினால் இலங்கை தொடர்பாக நிவைற்றப்பட்ட  பிரேரணைகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

போதாதக்குறைக்கு அரசாங்கத்தின் சில தலைவர்கள் அண்மையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்து அதிகார பரவலாக்கல் முறைமையை முற்றாக ரத்துச் செய்ய முயற்சித்தனர். மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை ரத்துச் செய்வும் அண்மையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்திய நெருக்குதல் காரணமாக எவ்வித மாற்றங்களுமின்றி தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுகின்றன.

அவர்களிது இந்த முயற்சியின் காரணமாக மனித உரிமை ஆணையாளரும் அது தொடர்பாக அக்கறை கொண்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் அதிகார பரவலாக்கலானது மனித உரிமை பேரவை அக்கறை கொண்டுள்ள விடயமாக இருக்கிறது. அவர் இம் முறை தமது விஜயத்தின் போது அரசாங்கத்தின் இம் முயற்சி தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் வினவியுள்ளார்.

அரசாங்கத்தினதும் அதன் உறுப்புக் கட்சிகளினம் இம்முயற்சி பயனளித்திருந்தால் நிலைமை வேறு. ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. அம் முயற்சியின் காரணமாக மனித உரிமை பேரவையின் அக்கறையையும் புதிதாக தூண்டப்பட்டது. அதற்குப் புறம்பாக மூக்குடைபட்டது என்ற கருத்தும் பரவியது. இது தேவையற்றதாகும்.

நாட்டில் அடிக்கடி தலை தூக்கும் சமயப் பிரச்சினை ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கவனத்தை ஈர்த்துள்ள மற்றொரு விடயமாகும். அவர் இது தொடர்பாகவும் நீதி அமைச்சரிடம் வினவியுள்ளார். இதுவும் அனாவசியமாக அல்லது அரசாங்கத்தின் கவனயீனம் காரணமாக வளர்ந்த ஒரு பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினையை தீர்க்க புதிய சட்டங்கள் தேவையில்லை. நாட்டில் தற்போதுள்ள சட்டங்களை அமுலாக்கினாலே போதுமானதாகும். இதுவும் எவ்வித நன்மையையும் அடையாமல் மனித உரிமை பேரவையின் விமர்சனத்திற்கு உள்ளானதற்கு மற்றொரு உதாரணமாகும்.

அண்மையில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றப் பிரேரணை நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பாக அரசாங்கம் மனித உரிமை பேரவையின் விமர்சனத்திற்கு உள்ளாவதற்கு முக்கிய காரணமாகியது. இது திவிநெகும் சட்டத்தின் விளைவாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கையாகும். அச் சட்டமானது சிலர் கூறுவதைப் போல் அதிகார பரவலாக்கலுக்கு பாதகமானதும் அல்ல, அரசாங்கம் கூறியதைப் போல் நாட்டுக்கு பெரும் நன்மையை பயக்கக் கூடியதும் அல்ல.

ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது உண்மையான காரணங்களுக்hகவோ ஷிராணி பண்டாரநாயக்க அச் சட்டத்திற்கு சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தை பெற வேண்டும் என வழங்கிய தீர்ப்பு அரசாங்கத்தின் சில தலைவர்களை சீற்றம் கொள்ளச் செய்தது. அதன் விளைவே குற்றப் பிரேரணையாகும். குற்றப்ப பிரேரணையில் இருந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் இறுதியில் அக் குற்றப் பிரேரணையும்; மனித உரிமை பிரச்சினையாகிய ஐ.நா. மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலும் நீதித்துறையின் சுதந்திரம் என்ற விடயம் குறிப்பிடப்பட்டது. இந்த விடயத்தையும் அரசாங்கம் தவிர்த்திருக்கலாம்.

மறுபுறத்தில் போருக்குப் பின்னாலான மறுவாழ்வுப் பணிகளும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஆராயவிருக்கும் முக்கிய விடயமாகும். குறைபாடுகள், பிரச்சினைகள் இருந்த போதிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில்; வீதிகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், தொலை தொடர்பு வசதிகள், மின்சாரத் திட்டங்கள் போன்றவை அபிவிருத்தி செய்யப்படுவதை எவரும் மறுக்க முடியாது.

இவ்வாறு மனித உரிமை நிலைமை மற்றும் மறுவாழ்வு தொடர்பான விடயங்களைப் பற்றி சர்வதேச ரீதியில் இரண்டு வகையான பிரசாரம் நடைபெற்று வருகிறது. சிலர் எந்த நன்மையும் இல்லை என்கிறார்கள். சிலர் எந்தவொரு குறையும் இல்லை என்கிறார்கள். எனவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளரர் நிலைமையை நேரில் பார்ப்பதே பொருத்தமாகும். விரும்பி விடுத்தாலும் விரும்பாமல் விடுத்தாலும் அரசாங்கத்தின் அழைப்பு அந்த வகையில் நல்லதோர் நடவடிக்கையாகும்.     

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X