2025 மே 19, திங்கட்கிழமை

நவநீதம்பிள்ளை; உடைந்துபோன விம்பம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல மாதங்களாக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின், இலங்கைப் பயணம் முதற்கட்டத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்த நவநீதம்பிள்ளை, கொழும்பில் ஒரு சுற்றுச் சந்திப்புக்களை நடத்தி விட்டு, நேற்றுடன் வடபகுதிக்கான பயணத்தையும் முடித்துள்ளார்.

நேற்று முன்தினமிரவே திருகோணமலை வந்தடைந்த அவர், இன்று கிழக்கில் பயணங்களை மேற்கொண்ட பின்னர், கொழும்பு திரும்பி, அரசாங்கத் தரப்புடனும், எதிர்க்கட்சிகளுடனும், அடுத்த கட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

நவநீதம்பிள்ளை இலங்கையில் கால் வைக்க முடியாது - தமது பிணங்களின் மீது தான் அது நடக்கும் என்று மிரட்டி வந்த சிங்கள அரசியல்வாதிகள் எவருமே, இப்போது வாய்திறக்காமல் மௌனமாக இருப்பதைக் காணமுடிகிறது. விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களே கடந்த காலங்களில் நவநீதம்பிள்ளை இலங்கை வந்து நிலைமைகளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்று எச்சரித்து வந்தனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் இதுபோன்ற எத்தனையோ மிரட்டல்களை விடுத்திருந்த போதிலும், நவநீதம்பிள்ளை கொழும்பில் கால் வைத்த போது எல்லோருமே பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டார்கள். நவநீதம்பிள்ளை கொழும்பு வந்ததும், பெரியளவில் அவருக்கு எதிரான போராட்டங்களை நடத்தப் போவதாக எச்சரித்த எவருமே இதுவரை அவ்வாறான போராட்டங்களை கொழும்பில் நடத்தவில்லை.

கடந்த திங்கட்கிழமை, ராவண பலய அமைப்பு மட்டும் ஒரு போராட்டத்தை கொழுமுபிலுள்ள இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியின் செயலகம் முன்பாக நடத்தியிருந்தது. அதில் கூட, வழக்கமாக, சிங்களத் தேசியவாத அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்கும் அளவுக்கு பெருமளவிலானோர் பங்கேற்கவில்லை.

சுமார் 100இற்கும் குறைவானோரே அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை விட பலமடங்கு அதிகமான பொலிசாரே அங்கு பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர். சிங்களத் தேசியவாதத் தலைவர்களும் அமைப்புகளும்,  நவநீதம்பிள்ளையின் வருகையை விரும்பாது போனாலும், இத்தகைய கட்டத்தில் சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. சர்வதேச அமைப்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கொடுத்த பொறுப்பை நிறைவேற்றவே, நவநீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளார். அவரது பயணத்தைக் குழப்பும் வகையில் மேற்கொள்ளக் கூடிய எந்த நடவடிக்கையும் இலங்கைக்கு மேலும் சிக்கலையே கொண்டு வரும் என்ற யதார்த்தத்தை சிங்களத் தேசியவாத தலைமைகள் ஓரளவுக்குப் புரிந்து கொண்டுள்ளன என்பது முதல் காரணம்.

அதற்காக, நவநீதம்பிள்ளையின் வருகையை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக கருத முடியாது. நவநீதம்பிள்ளையின் பயணத்துக்கு அவர்கள் ஒத்துழைக்காது போனாலும், வேறுவழியின்றி அமைதியாக இருந்து கொள்கிறார்கள்.

அடுத்து, போருக்குப் பிந்திய மனித உரிமை மீறல்கள் தெற்கிலுள்ள மக்களுக்கும் பல உண்மைகளை புரிய வைத்துள்ளது. குறிப்பாக அண்மையில் வெலிவேரியவில் நடந்த தாக்குதல் சம்பவம், போரின் போது என்ன நடந்திருக்கும் என்று சிங்கள மக்களை சிறியளவிலேனும் யோசிக்க வைத்துள்ளது.

இதனால், நவநீதம்பிள்ளையின் வருகை இலங்கைக்குப் பாதகமானது என்ற கருத்து, தெற்கில் வலுக் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலைமைக்குக் காரணம், அரசாங்கமும், இராணுவமும் தான் என்பதில் சந்தேகமில்லை.

ஒருவகையில், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இது கைகொடுக்கும் ஒன்றாகவும் கருதலாம். போர் முடிவுக்கு வந்த பின்னர், போர்க் குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, தெற்கில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

போரில் வெற்றியை ஈட்டிக் கொடுத்த படையினரை, குற்றக் கூண்டில் நிறுத்த விடமாட்டோம் என்று அரசாங்கமே, குரல் எழுப்பி தெற்கிலுள்ள மக்களை தூண்டிவிட்டது. ஆனால், போரில் போது நடந்த மீறல்களுக்கு பொறுப்புக்கூறியே ஆக வேண்டிய சூழல் மெல்ல மெல்ல உருவாகி வருவதை அண்மைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

உலக நாடுகள் இதனை வலியுறுத்திய போதெல்லாம், அதற்கு எதிராக குரல் கொடுத்த அரசாங்கம், சர்வதேச அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக மெல்ல மெல்ல தனது பிடியைத் தளர்த்த வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது, திருகோணமலை மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணை உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் தனது இறுக்கமான பிடியைத் தளர்த்தியுள்ளது.

இவை தொடர்பாக முற்றிலும் சுதந்திரமானதாகவோ, நடுநிலையானதாகவோ விசாரணைகளை மேற்கொள்ளத்தக்க பொறிமுறைகளை அரசாங்கம் உருவாக்காது விட்டாலும், ஓரளவுக்கேனும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய விசாரணைகளில் விளைவாக, படையினர் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டால் கூட, அதற்கு தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புக் கிளம்பப் போவதில்லை என்பதை, நவநீதம்பிள்ளையின் பயணம் பெரும்பாலும் சுமுகமாகவே இடம்பெறுவதைக் கொண்டு உணர முடிகிறது.

நவநீதம்பிள்ளையையும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையையும், இலங்கைத் தீவையே விழுங்கப் போகும் பெரிய பூதமாகக் காண்பித்து, தெற்கிலுள்ள மக்களை மிரட்டி வந்த அரசாங்கத்துக்கும் சரி, சிங்களத் தேசியவாத சக்திகளுக்கும் சரி, இனிமேல் அத்தகைய விம்பத்தை காட்ட முடியாது. மிரட்ட முடியாது.

அதுபோலவே, தமது பிணங்களில் மீது கால்வைத்து தான் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரமுடியும் என்று மிரட்டியவர்களாலும் இனிமேல் அத்தகைய மிரட்டல்களை விடுக்க முடியாது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X