2025 மே 19, திங்கட்கிழமை

அந்த முப்பது நாட்கள்...

Super User   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தொடர் - 8)

-றிப்தி அலி


தயாராகுங்கள்.... தயாராகுங்கள் என்ற சத்;தமொன்று அதிகாலையிலேயே காதில்விழுந்தது. அடுத்த சில நிமிடங்களுக்குள் விமானத்தில் செல்வதற்காக தயாராகிவிட்டோம். சுமார் 20 நாட்கள் ஒக்லஹோமா பிரதேசத்தில் சந்தோசமாக கழித்த நாங்கள் கலிபோனியா மாநிலத்திற்கு செல்ல தயாராகினோம். இது அமெரிக்காவின் மேற்கு பிரதேசத்திலே அமைந்துள்ளது.

இந்த மாநிலத்திலுள்ள சன்பிரன்ஸிஸ்கோ எனும் நகரிலே எமது செயலமர்வு நடைபெற்றது. சொந்த ஊரினைப் போன்று 20 நாட்களாக நோர்மன் பிரதேசத்தில் வாழ்ந்த நாங்கள், மிகுந்த கவலையுடன் றித்த பிரதேசத்திலிருந்த வெளிக்கிளம்ப தயாராகினோம்.

கலாசார இரவு

இதற்கு முன்னர் நோர்மனில் எமது செயலமர்வின் இறுதி நிகழ்வாக கலாசார இரவு எனும் தொனிப்பொருளில் நிகழ்வொன்று இடம்பெற்றது. தமது நாட்டு கலாசாரத்தினை ஏனைய நாட்டவருடன் பகிர்ந்துகொள்வதே இந்த நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் நேபாளம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கலாசாரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இதன்போது எமது நாட்டு கலாசாரம் மற்றும் உணவு வகைகளும் அங்கு காண்;பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு முடிந்த கையோடு தொடர்மாடிக்கு திரும்பிய நாங்கள் பொருட்களை கொள்வனவு செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டதுடன் பொட்டிகட்டுவதற்கும் தயாராகினோம். எமது நாட்டில் பஸ் மற்றும் புகையிரத சேவைகள் பிரபல்யமானதை போன்று அமெரிக்காவில் விமான சேவையே பிரயல்யம் பெற்றிருந்தது.

இதனால் மாநிலங்களுக்கு இடையில் பிரயாணங்களை மேற்கொள்வர் அதிமாக விமானங்களையே பயன்படுத்துவர். இதன் மூலம் அதிக நேரத்திதையும் பணத்தினை சேமிக்க முடியும். இதனை தவிர்த்து தரை மார்க்கமாக செல்ல முற்றப்பட்டால் அதிக நேரத்தினையும் பணத்தினையும் செலவளிக்க வேண்டி ஏற்படும்.

உதாரணமாக கலிபோனியா மாநிலத்திலிருந்து வோஷிங்கடன் நகரிற்கு தரை மார்க்கமாக செல்வது என்றால் சுமார் ஐந்து நாட்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடப்படத்தக்கது. அப்படியென்றால் நினைத்து பாருங்கள். இதனால் ஊள்ளூர் விமான சேவை அங்கு பிரபல்யடைந்துள்ளது. அந்தடிப்படையில் ஒக்லஹோமா நகரிலிருந்து சன்பிரன்ஸிஸ்கோவிற்கு உள்ளூர் விமானத்தில் செல்வதற்கு சுமார் நாலரை மணித்தியாலங்கள் தேவைப்பட்டன.

இதன்போது லெஸ் வேர்கஸ் எனும் நகரிலுள்ள விமான நிலையத்தில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தங்க வேண்டி ஏற்பட்டது. இந்த லெஸ் வேர்கஸ் நகர் உலகில் சூதாட்டத்திற்கு பிரபல்யம் பெற்ற நகர் என்பது குறிப்பிடத்க்கது. இதனால் ஒக்லஹோமாவிலிருந்து லெஸ் வேர்கஸ் 2 மணி நேர விமான பயணம். பின்னர் லெஸ் வேர்கஸ் விமான நிலையத்தில் சுமார் ஒன்றை மணித்தியால தரிப்பு பின்னர் லெஸ் வேர்கஸிலிருந்து சன்பிரன்ஸிஸ்கோ விமான நிலையத்திற்கு ஒரு மணி நேர பயணம். என மிகுந்த களைப்புடனேயே குறித்த நகரை சென்றடைந்தோம்.

அங்கு சென்றவுடன் கைக்கடிகாரத்தின் முள்ளினை இரண்டு மணித்தியாலங்கள் பின்நோக்கி திருப்ப வேண்டி ஏற்பட்டது. எனினும், குறித்த பிரதேசத்தின் குளிர் அதற்கு நேரமளிக்கவில்லை. அதாவது எமது நாட்டின் நுவரெலியா போன்றே சன்பிரன்ஸிஸ்கோ நகரின் காலநிலை காணப்பட்டது.

காலை என்றும் இல்லை இரவென்றுமில்லை, எப்போதும் குளிராகவே காணப்பட்டது. குளிரிற்கு பாதுகாப்பாக அணியும் ஆடையின்றி வெளியே செல்ல முடியாது. அவ்வளவு குளிர். அதாவது 16 பாகை செல்சியஸ் வெப்ப நிலையே அங்கு காணப்பட்டது.

சமூக ஊடக நிறுவனங்களுக்கு விஜயம்

இந்த காலநிலைக்கு மத்தியில் சுமார் நான்கு நாட்களை கழிக்க வேண்டி ஏற்பட்டது. இந்த சன்பிரன்ஸிஸ்கோ நகரிலேயே உலகில் முக்கிய சமூக ஊடகங்களான கூகுள், பேஸ்புக், மற்றும் ஸ்டோரிபை போன்ற நிறுவனங்களின் தலைமையகங்கள் அமைந்துள்ளன.

இந்த முக்கிய இடங்களை நேரில் சென்று பார்வையிடலாம் என்ற சந்தோஷத்துடன் பயணத்தினை ஆரம்பித்தோம். ஆனால் இந்த இடங்களில் ஊழியர்கள் தவிர்ந்த வெளிநபர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்கள் அறிவித்தனர்.

பாதுகாப்பை கவனத்தில் கொண்டே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பெரும் எதிர்ப்பார்ப்பில் மண்ணைவாரி போட்டுவிட்டார்களை என்று நினைக்கையில் குறித்த இடங்களில் புகைப்படம் எடுக்கலாம் என்ற செய்தி மனத்திற்கு ஓரளவிற்கு ஆறுதலளித்தது.

இவ்வாறு புகைப்படங்களை பிடித்து சமூக இணையத்தளங்களில் உடனடியாக பிரசுரித்தபோது, எனது நண்பர்கள் அனைவரும் குறித்த நிறுவனங்களின் விஜய அனுபவத்தினை பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டினர். அப்போது உள் நுழைய அனுமதியில்லை என்றே அவர்களுக்கு பதிலளித்தேன். நான் 1999ஆம் ஆண்டு தரம் ஆறில் கல்வி கற்கும்போது பாடசாலை ஆசிரியர்களினால் கல்முனையிலிருந்து கொழும்பிற்கு கல்விச் சுற்றுல்லாவிற்கு அழைத்து வரப்பட்டேன்.

அதன்போது, இரத்மலானை விமான நிலையம், காலி சீமெந்து தொழிற்சாலை, அலரி மாளிகை மற்றும் மத்திய வங்கி போன்ற முக்கிய இடங்களுக்கு அழைத்து செல்வதாக ஆசிரியர்கள் உறுதியளித்தனர். ஆனால் குறித்த இடங்களுக்கு முன்னால் பஸ்ஸை நிறுத்தி அதிலிருந்தவாரே அந்த இடங்களை காட்டி எங்களை ஏமாற்றினர். அந்த ஞாபகங்களே கூகுள் மற்றும் பேஸ்புக் தலைமையகங்களுக்கு சென்று திருப்பப்பட்டபோது ஞாபகத்திற்கு வந்தன.

ஸ்டோரிபை நிறுவன விஜயம்

எனினும், ஸ்டோரிபை எனும் சமூக ஊடக நிறுவனத்தின் தலைமையகத்திற்கு விஜயம் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. ஸ்டோரிபை தற்போது வளர்ந்து வரும் ஒரு நவீன ஊடகமாகும். கூகுள் மற்றும் பேஸ்புக் போன்று இது பாரிய நிறுவனமல்ல. இது ஒரு சிறிய நிறுவனமாகும். டுவிட்டர் நிறுவனத்தில் 1,000 பேர் வேலை செய்யும் நிலையில்  ஸ்டோரிபையில் ஆக ஒன்பது பேரே வேலை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது குறித்த நிறுவனத்தின் இணை ஸ்தாபகரை சந்திக்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும் இந்த ஸ்டோரிபை நவீன ஊடகம் பேஸ்புக், டுவிட்டர் போன்று எமது நாட்டில் இன்னும் பிரபல்யமடையவில்லை. இந்த சன்பிரன்ஸிஸ்கோ நகர் கடலை அண்டிய பிரதேசமாகும். அத்துடன் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டேலும் கடலிற்கு அண்மையிலான பிரதேசமாகும்.

இதனால் எங்களை சுற்றி மீனவர்களே அதிகம் காணப்பட்டனர். எனினும் அந்த பிரதேசம் எமது நாட்டை போன்று காணப்படவில்லை. இங்கு பல்வேறு வகையான கடலுணவு உண்ணக்கூடிய சந்தர்ப்பம் அதிகம் கிடைத்தது. அத்துடன் இந்த பிரதேசத்தில் புறக்கோட்டையிலுள்ள கடைகளை போன்றே கடைகளை அதிகம் காண முடிந்தது. இவற்றில் சீனர்களின் ஆதிக்கமே அதிகமாகும்.

கப்பல் பயணம்

அமெரிக்க விஜயத்தின்போது மொத்தமாக சுமார் 10 விமானங்களில் பயணிக்க சந்தர்ப்பம் கிடைந்த எனக்கு கப்பலில் பயணிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்காமல் சென்றுவிடவில்லை. கப்பல் பயணத்தின் ஊடாக முழு சன்பிரன்ஸிஸ்கோ நகரையும் பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. 

மாலைப் பொழுதில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் கப்பலில் பயணிப்பதற்கு இதன்போது சந்தர்ப்பம் கிடைந்தது. மூன்று மாடிகளை கொண்ட இந்தக் கப்பல் பயணம் ஒவ்வொரு நாட்களும் மாலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை இடம்பெறும். சுமார் 500 பயணிகளை உள்ளடக்கும் இந்த கப்பலில் திருமணம் வைபவம், பிறந்த நாள் நிகழ்வு போன்ற பல நிகழ்வுகள் நாளாந்தம் இடம்பெறும்.

கோல்டன் கேட் பிரிஜ்

இவ்வாறான கப்பலில் முதற் தடவையாக பயணிப்பதற்கு கிடைந்த சந்தர்ப்பத்தினை ஒருபோது மறக்க முடியாது. இவ்வாறு கப்பலில் பயணித்துக்கொண்டிருந்தபோது கோல்டன் கேட் பிரிஜையும் அவதானிக்க முடிந்தது. கோல்டன் கேட் பிரிஜ் எனும் இடம் திரைப்படம் பார்ப்பவர்களுக்கு புதிய சொல்லல்ல என நான் நினைக்கின்றேன்.

ஏனென்றால் திரைப்பட படப்பிடிப்புகள் இந்த இந்த இடத்தில் இடம்பெறுவது வழமையாகும். சன்பிரன்ஸிஸ்கோ என்றால் கோல்டன் கேட் பிரிஜ். கோல்டன் கேட் பிரிஜ் என்றால் சன்பிரன்ஸிஸ்கோ. அந்தளவிற்கு இது புகழ்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. சன்பிரன்ஸிஸ்கோ நகரினை பிரபல்யப்படுத்துவதற்கு கோல்டன் கேட் பிரிஜ் முக்கிய பங்கு வகித்துள்ளது.

சன்பிரன்ஸிஸ்கோ நகரிற்கு செல்பவர்கள் இந்த கோல்டன் கேட் பிரிஜினை நேரில் சென்று பார்வையிடாமல் திரும்பமாட்டார்கள். அவ்வாறு பார்வையிடாமல் திரும்பினால் சன்பிரன்ஸிஸ்கோவிற்கு செல்லவில்லை என்றே கருதப்படுவர். செஞ்சிவப்பு நிறத்திலான கோல்டன் கேட் பிரிஜின் பாலம் மற்றும் கதவு ஒன்ரோடொன்று இணைந்ததாகவே உள்ளது.


சுமார் 35 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் சுமார் 3.7 மைல் நீளமாக இந்த கோல்டன் கேட் பிரிஜ் 1937ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மூன்று நாட்களை பல இடங்களுக்கு விஜயம் செய்து சன்பிரன்ஸிஸ்கோ நகரில் சந்தோசமாக கழிந்த நாங்கள், நான்காம் நாள் அதிகாலையிலேயே அங்கிருந்து அடுத்த நகரத்திற்கு செல்வதற்கு தயாராகினோம்.

இதற்காக அதிகாலைபொழுதிலேயே மிக அவசரமாக வெளிக்கிளம்பி விமான நிலையத்தை அடைந்தோம். இதன்போது ஏதோ ஒன்றினை தவறவிட்ட எண்ணமொன்று வந்தது. விமான நிலையத்திற்குள் நுழைந்து விமானம் புறப்படுமிடத்திற்கு சென்றபோதே ஞாபகம் வந்தது தவறவிட்டேனே... (அடுத்த வாரம் தொடரும்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X