2025 மே 19, திங்கட்கிழமை

நரேந்திர மோடிக்கு ஆதரவாக களமிறங்குவாரா நடிகர் விஜய்?

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் திக்குத் தெரியாத திசையில் நிற்கிறார். "தலைவா" படத்திற்கு அவர் பட்ட சிரமங்கள், விஜய்க்கு மட்டுமல்ல, அவரது ரசிகர்களுக்கும் ஏகப்பட்ட பதற்றத்தைக் கொடுத்திருக்கிறது. அவரது தந்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான எஸ்.ஏ. சந்திரசேகரனும் ஏகப்பட்ட குழப்பத்தில் இருக்கிறார். "நாம் ஆதரித்து, பிரசாரம் செய்து கொண்டு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் நமக்கு பிரயோஜனம் இல்லையே. நம் மகனின் படத்தைக் கூட தடையின்றி ஓட்டமுடியவில்லையே" என்ற வருத்தத்தில் இருக்கிறார். அதனால் இதற்கு எல்லாம் வடிகால் தன் மகன் நடிகர் விஜய்க்கு அரசியல் பாதையை தேர்வு செய்து கொடுப்பதுதான் என்று முடிவு செய்து "தக்க நேரத்திற்காக" காத்திருக்கிறார் என்ற திரையுலக வட்டாரத்தில் பேசுகிறார்கள்.
 
அரசியல் என்ற ஆசைத் தீயில் குதித்து விட்ட நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் ஆகியோர் புலி வாலை பிடித்த கதையாக திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் அரசியல் கல்வி போதித்தது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் சென்ற முறை ஆட்சியிலிருந்த போது விஜய்க்கும், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் "மங்காத்தா" பட ரீலீஸில் சிக்கல் எழவே, இருவரும் எதிர் எதிர் துருவங்களாக மாறினார்கள். தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. விற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தார். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவில்லை. ஒரு காலத்தில் காங்கிரஸுடன் இணைவது போல் போக்குக் காட்டி டெல்லி சென்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அதிலும் அவர் உறுதியாக நிற்கவில்லை. இப்படி தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என்று மூன்று முக்கியக் கட்சிகளிடமும் அவர் முயற்சி செய்து பார்த்து அவரது அரசியலுக்கு சாதகமான சூழ்நிலை அமையவில்லை.
 
இந்த நிலையில் இப்போது "தலைவா" படத்திற்கு ஏற்பட்ட தடங்களை சமாளிக்க முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டினார். படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கு உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இது போன்ற அணுகுமுறை அவரது ரசிகர்களை சுணங்க வைத்து விட்டது. "அரசியல் என்று வந்தால் பல பிரச்சினைகள் இருக்கும். நடிகர் கமல்ஹாசன் தன் "விஸ்வரூபம்" படத்திற்கு வந்த சிக்கலை சமாளித்து வெளியே வந்தது போல் வந்திருக்க வேண்டும். இவர் ஏன் பாராட்டி அறிக்கை விட்டார்" என்றே பல ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். "தலைவா" படம் பெரும் வசூலைப் பெறவில்லை என்ற நிலையிலும் கூட தியேட்டர்களில் கூடும் ரசிகர்கள் "தலைவா" "தலைவா" என்று நடிகர் விஜய் மீது அக்கறை கொண்டு கோஷங்கள் எழுப்புவதை கேட்க முடிகிறது. அந்த அளவிற்கு உணர்ச்சிகரமாக நிற்கும் ரசிகர்களை விஜய் தன் பக்கம் நிற்க வைப்பதற்கான முயற்சிகள் எதையும் "தலைவா" பட விஷயத்தில் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அவரது ரசிகர் மன்றத் தலைவர்கள் மத்தியில் இருக்கிறது.
 
இது பற்றிப் பேசிய விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஒருவர், "பாட்ஷா" படத்திற்கு பிரச்சினை வந்த போது ரஜினி சிலிர்த்து எழுந்து நின்றார். "விஸ்வரூபம்" பட ரிலீஸை எதிர்த்துப் போராட்டம் வந்த போது நடிகர் கமல்ஹாசன் நிமிர்ந்து நின்றார். "நான் தமிழகத்தை விட்டு வெளியேறி என்னை ஏற்றுக் கொள்ளும் மாநிலத்தில் குடியேறுவேன்" என்று கூறி தமிழக மக்கள் மத்தியில் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள பல்வேறு தலைவர்கள் மத்தியில் அனுதாபத்தைத் தட்டிச் சென்றார். ஆனால் விஜய் முதலில் "துப்பாக்கி"ப் பட பிரச்சினை எழுந்த போதும் சரி, இப்போது "தலைவா" படத்திற்கு விவகாரம் ஏற்பட்ட போதும் சரி துவண்டு போனார். ரஜினி, கமல் போல் தைரியமாக தனது படத்திற்கு உரிய பிரச்சினைகளை சந்திக்கவில்லை. அதனால்தான் ரசிகர்கள் சோர்வடைந்து போயிருக்கிறார்கள்" என்று கவலையுடன் தெரிவித்தார்.
 
இந்த நிலைமை நடிகர் விஜய்க்கும் தெரியாமல் இல்லை. "தலைவா" படத்திலிருந்து அவர் எதிர்பார்த்த "மவுஸ்" கிடைக்கவில்லை. அதனால் அடுத்து எந்தக் கட்சியின் துணையுடன் அரசியல் களத்தை சந்திப்பது என்பதில் அவரது தந்தையும் தீவிர ஆலோசனையில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. விஜய்க்கு இருக்கும் ரசிகர்களில் பல தரப்பட்ட சமுதாயத்தினரும் இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆதரவு பெற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடமிருந்து விலகிச் சென்று விட்டார்கள். அதே நேரத்தில் மைனாரிட்டி சமுதாய ரசிகர்கள் அவருக்கு அதிக அளவில் இருப்பதாகவும் ஒரு விதக் கருத்து மேலோங்கி நிற்கிறது. இந்த அடிப்படையில்தான் முதலில் அவர் காங்கிரஸுடன் நெருக்கமாகப் போகலாம் என்று நினைத்தார். ஆனால் இனி காங்கிரஸுடன் தோழமை கொள்வது நல்ல சகுணமாக இருக்காது என்றே நடிகர் விஜய் நினைக்கிறார். அதற்கு காரணம் ஆல் இந்தியா அளவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் என்பதை விட அக்கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு மூன்றாவது முறையாக வருமா என்ற கேள்வி அவர் மனதில் ஓங்கி ஒலிக்கிறது.
 
இதுபோன்ற சூழ்நிலையில் வருகின்ற செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி தமிழகத்திற்கு வருகிறார் நரேந்திர மோடி. இன்றைக்கு தமிழகத்தில் திரையுலக பிரபலங்கள் ஆதரவு இல்லாமல் இருப்பது பா.ஜ.க. தான். அக்கட்சிக்கு முன்பு இருந்த சுகுமாரன் நம்பியாரும் இப்போது இல்லை. இந்த சூழ்நிலையில் தமிழக வாக்காளர்களை கவர்ந்து இழுக்க, நடிகர் விஜய் பக்கம் கவனம் செலுத்தலாமா என்ற சிந்தனை தமிழக பா.ஜ.க. மேலிடத் தலைவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எந்தக் கட்சிக்குப் போகலாம் அல்லது அரசியலை எப்படி மேலும் தொடரலாம் என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவிப்பார் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவரை பா.ஜ.க.விற்கு இழுக்கலாம், அல்லது பா.ஜ.க. அமைக்கும் கூட்டணியில் முன்னிலைப்படுத்தலாம் என்று கருதுகிறது பா.ஜ.க. தலைமை. குறிப்பாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என்பது அ.தி.மு.க. தலைமையின் எண்ணம். அதை சமீபத்தில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கத்தின் மகன் திருமண விழாவில் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இது ஒரு முக்கியத் திருப்பமாக பா.ஜ.க. நினைக்கிறது. "கூட்டணியே இல்லை" என்ற நிலைப்பாட்டை அ.தி.மு.க. எடுத்து விட்டதோ என்று எண்ணுகிறது பா.ஜ.க. தலைமை.
 
இது தவிர சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்தார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத். அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அந்த சந்திப்பு முடிந்த பிறகு வெளியே வந்த பிரகாஷ் காரத், "அ.தி.மு.க.வும், கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து மத்திய அரசின் முடிவுகள் பலவற்றை எதிர்க்கிறோம். அந்த வரிசையில் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன்" என்று பேட்டியளித்தார். குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பிரசார நிமிர்த்தமாக தமிழகத்திற்கு வரும் வேளையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏன் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத்தை சந்தித்தார் என்ற கேள்வி பா.ஜ.க.வின் மேலிடத் தலைவர்களுக்குள் எழுந்த வண்ணம் இருக்கிறது. "முதல்வர் ஜெயலலிதா- பிரகாஷ் காரத் அரசியல் சந்திப்பு" பா.ஜ.க.விற்கு பாஸிட்டிவாகத் தெரியவில்லை. இது போன்ற சூழ்நிலையில் தமிழகத்தில் தங்களுக்கு என்று ஓர் அணி உருவாக்க வேண்டும். அதற்கு நடிகர் விஜய் போன்றவர்களை சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள். 
 
அடுத்து நடிகர் விஜய் புதிய படம் எப்போது எடுக்கப் போகிறார்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. அதற்கு காரணம் "அரசியல் அபிலாஷைகளில்" இருக்கும் அவரின் படங்களை அமைப்புகள் சில ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எதிர்க்கக் கூடும். அப்படி எதிர்க்கும் போது ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க.வால் என்ன உதவி கிடைக்கும் என்பதெல்லாம் அவருக்கு தூக்கத்தைக் கலைக்கும் விஷயமாகவே இருக்கிறது. சரி, நடிப்பு வேண்டாம். அரசியல் பக்கம் போய் விடுவோம் என்று நடிகர் விஜய் கருதினாலும், அதற்கு ஏற்ற சூழ்நிலை இப்போது பா.ஜ.க.வில் மட்டுமே இருக்கிறது. அவரால் தி.மு.க. பக்கம் போக முடியாது. அ.தி.மு.க.வையே மீண்டும் "சப்போர்ட்" பண்ணுவதில் தயக்கும் இருக்கும். காங்கிரஸ் பக்கம் போவது "மூழ்கும் கப்பலில்" பயணம் செய்வது போல் அமைந்து விடும். ஆகவே இப்போதைக்கு பயணிக்க பத்திரமானது "பா.ஜ.க. கப்பல்" மட்டுமே என்று நடிகர் விஜய் நினைப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "நடிப்பு என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி நமக்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் ரசிகர்கள். "தலைவா" பட விவகாரத்தில் நாம் அடித்த பல்டியில் அந்த ரசிகர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள். 
 
அவர்களை தட்டி எழுப்பவாவது நாம் இப்போது நரேந்திர மோடி பக்கமாகப் போக வேண்டும்" என்றே நடிகர் விஜய்க்கு அவரது நெருங்கிய வட்டாரம் அட்வைஸ் பண்ணுகிறதாம். அதனால் மோடிக்கு ஆதரவாக களமிறங்குவாரா விஜய் என்பதே இப்போதைக்கு "ஹாட் டாபிக்"! 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X