2025 மே 19, திங்கட்கிழமை

அந்த முப்பது நாட்கள்...

Super User   / 2013 செப்டெம்பர் 05 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தொடர் - 9)

-றிப்தி அலி

நான் மறந்துவிட்டு விமானத்தில் ஏறியது வேறெதனையும் அல்ல கோர்ட்டை. அது சாதாரண கோர்ட் என்றாலும் பரவாயில்லை திருமண கோர்ட். வாழ்நாள் முழுவதும் திட்டிதீர்த்துக் கொண்டே இருப்பார்கள். கோர்டா, விமானமா என்ற மன போராட்டத்தில் இருந்தபோதுதான் அந்த கோர்ட் கிடைக்குமென செயலமர்வில் தன்னுடன் கலந்துகொண்ட அமெரிக்க விரிவுரையாளாரான கிறீஸ் குரு நம்பிக்கையூட்டினார்.

சன்பிரன்ஸிஸ்கோ நகரில் நான் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலுள்ள அலுமாரியிலேயே எனது கோர்ட்டினை வைத்துவிட்டு வந்துவிட்டேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம் ... நிச்சயமாக கோர்ட் கிடைக்குமென செயலமர்வில் தன்னுடன் கலந்துகொண்ட அமெரிக்க விரிவுரையாளர் அளித்த நம்பிக்கையுடன் சன்பிரன்ஸிஸ்கோ நகரிலிருந்து வாஷிங்டன்னிற்கு விமானத்தில் புறப்பட்டேன்.

சுமார் ஆறு மணித்தியாலயத்தில் வாஷிங்டன் நகரை விமானம் சென்றடைந்தது. அதாவது, கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவிலுள்ள ஜித்தாவிற்கு விமானம் செல்வதற்கு எடுக்கும் நேரம் அமெரிக்காவின் மேற்கு பகுதியான சன்பிரன்ஸிஸ்கோவிலிருந்து கிழக்கு பகுதியான வாஷிங்டனிற்கு பயணிப்பதற்கு தேவைப்பட்டது.

ஏற்கெனவே நான் கூறியது போன்று அமெரிக்காவில் உள்ளூர் விமான சேவைக்கு அதிக கிராக்கி காணப்பட்டாலும் குளிர்பானங்களை தவிர எந்தவிதமான உணவுகளும் இலவசமாக பரிமாறப்படமாட்டாது. எமக்கு உணவு தேவைப்பாட்டால் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு மேலதிமாக வைபை வசதியும் அமெரிக்க உள்ளூர் விமானங்களில் காணப்படுகின்றது.

இதற்காக நாம் சுமார் 10 டொலரை கடன் அட்டை மூலம் மாத்திரமே செலுத்த வேண்டும். அமெரிக்காவின் சிகாக்கோ, ஒக்லஹோமா, சன்பிரன்ஸிஸ்கோ மற்றும் வாஷிங்டன் ஆகிய விமான நிலையங்களுக்கு செல்வற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்த வரப்பிரசாங்களில் ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.

வாஷிங்கடன் நகர்

இந்த விமான நிலையங்களில் வாஷிங்கடன் விமான நிலையம் வித்தியாசமானதாகும். இயற்கையாக வளர்க்கப்பட்ட அடர்ந்த காட்டு பகுதிக்கு மத்தியிலேயே இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. வாஷிங்டன் நகரிற்கு மத்தியிலும் வெளியிலும் இரண்டு விமான நிலையங்கள் உள்ளன. அதில் டளஸ் விமான நிலையத்திற்கே நான் சென்றேன்.

அங்கு சென்றடைந்தவுடன் கடிகாரத்தின் முள்ளை மீண்டும் மூன்று மணித்தியாலங்கள் முன்நோக்கி நகர்த்த வேண்டும். அப்படியென்றால் பாருங்கள் விஜயம் மேற்கொண்ட மூன்று மாநிலங்களிலும் வித்தியாசமான நேரங்கள். ஒரு நாட்டுக்குள்ளே இப்படி கடிகார முள்ளை மூன்று தடவைகள் சுழற்றியமை எனக்கு மட்டுமல்ல என்னுடன் பயணித்தவர்களுக்கு ஆச்சரியமாக காணப்பட்டது.

இந்த நகரை ஆங்கிலத்தில் வாஷிங்கடன் டீ.சி என்றே அழைப்பர். இந்த டீ.சி என்ற சொல்லின் முழு வடிவம் டிஸ்றிக் ஒப் கொலம்பியாவாகும். அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதியான ஜோர்ஜ் வாஷிங்டனை கௌரவிப்பதற்காகவே இந்த நகருக்கு வாஷிங்கடன் என 1790ஆம் ஆண்டு காலப் பகுதியில் பெயர் சூட்டப்பட்டது.

மூன்று பேரைக் கொண்ட ஆணைக்குழுவொன்றினாலேயே இந்த பெயர் சூட்டப்பட்டதே தவிர ஜனாதிபதியான ஜோர்ஜ் வாஷிங்கடனினால் சூட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதே காலப் பகுதியில் மாநகர சபையான இந்த வாஷிங்டன் நகரை அமெரிக்காவிலுள்ள எந்தவொரு மாநிலத்துடனும் இணைக்காது தனி மாவட்டமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டன் தெரிவித்தார்.

இது தொடர்பில் விசேட பிரேணையொன்றை அமெரிக்க காங்கிரஸில் ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டன் சமர்ப்பித்து சட்டமாக்கியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தனியொரு நகராக செயற்படும் வாஷிங்டனின் நிர்வாகம் வாஷிங்டன் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது கொழும்பை விட பல மடங்கு பரப்பான நகராக இந்த நகர் காணப்பட்டது. கொழும்பிலுள்ள புகையிரத நிலையங்கள், பஸ் தரிப்பிடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் காணப்படும் அதிக சனநடமாட்டம் போன்றே வாஷிங்டன் நகர புகையிரத நிலையங்கலும் பஸ் தரிப்பிடங்களிலும் சன நடமாட்டம் காணப்பட்டது.

அமெரிக்காவில் தங்கியிருந்த காலப் பகுதியில் எமது கொழும்பை போன்ற நகரினை வாஷிங்டனிலேயே அவதானிக்க முடிந்தது. அத்துடன் இந்த நகரின் காலநிலையும் எமது நாட்டை போன்று காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகை

இந்த நகரில் நான்கு நாட்கள் தங்கியிருப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டோம். அந்த அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர் வாசஸ்தளமான வெள்ளை மாளிகை செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. வெளிப் பகுதியிலிருந்து புகைப்படம் பிடிக்க மாத்திரம் அனுமதிக்கப்பட்டோம். குறித்த இடத்திலிருந்து படம்பிடித்துகொள்வதற்கு பலர் சண்டை பிடித்துக்கொண்டனர். நானும் அப்படிதான். எனக்கு மட்டும் ஆசையிருகாதா என்ன?

இராஜாங்க திணைக்களம்

இதனையடுத்து மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியிலிருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு விஜயம் செய்தேன். இந்த திணைக்களத்தின் வரவேற்பு பகுதியில் அமெரிக்க அரசாங்கத்துடன் இராஜதந்திர உறவினை கொண்டுள்ள நாடுகளின் தேசிய கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரணமின்றி எந்தவொரு நபரும் இராஜாங்க திணைக்களத்திற்குள் நுழைய முடியாது. குறித்த திணைக்களத்திற்குள் நுழைந்தவுடன் கையடக்க தொலைபேசிகளின் வலையமைப்பு தானாகவே நிறுத்தப்பட்டுவிடும். அமெரிக்க அரசாங்கத்தின் பரிமாற்றல் திட்டத்தின் கீழ் அந்த நாட்டுக் செல்வோர் பயணத்தின் இறுதியில் இராஜாங்க திணைக்களத்திற்கு விஜயம் செய்வர்.

என்னுடன் செயலமர்வில் கலந்துகொண்ட அனைவரும் இராஜாங்க திணைக்களத்திற்கான விஜயத்தின் போது கோர்ட் அணிந்திருந்தனர். ஆனால் நான் மாத்திரமே அணியவில்லை. இதனால் மிக கவலையடைந்தேன். எனினும் என்ன செய்வது என்ற மனதை சமாளித்துக்கொண்டேன்.

இலங்கை தூதரகம்

அமெரிக்காவில் சுமார் ஐந்து வாரங்கள் தங்கியிருந்து பல இடங்களுக்கு விஜயம் செய்த எனக்கு இலங்கையர் ஒருவரைகூட சந்திக்க முடியவில்லையே என்ற மனக் கவலையில் இருந்தேன். இந்த சமயத்தில் என்னுடன் மின்னஞ்சல் ஊடாக இலங்கையிலிருந்து தொடர்புகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாஷிங்டன் நகரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் வர்த்தக அமைச்சரான பந்துலவின் தொலைபேசி இலக்கத்தை வழங்கினார்.

இதனை அடுத்து அவருடன் தொடர்புகொண்டபோது கட்டாயம் தூதரகத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தார். இதனால் இலங்கையர் ஒருவரை சந்திக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது என்ற சந்தோஷத்தில் தூதுவராலயத்திற்கு சென்றேன்.

இதன்போது, பிரதி தூதுவர் ஏசெல வீரக்கோன் (தற்போது கனடாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர்) மற்றும் தூதுதரகத்தின் வர்த்தக அமைச்சரான பந்துல ஆகியோரை சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது எமக்கு இராப்போஷனம் வழங்கி இலங்கை தூதுவராலயத்தினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நான் தூதுவராலயத்திற்கு சென்றபோது தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய இலங்கை வந்திருந்தமையினால் அவரை சந்திக்க முடியவில்லை. 1948ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இலங்கை தூதரகம் வாஷிங்கடன் நகரிலேயே திறக்கப்பட்டது. இந்த தூதரகத்தில் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் விசா என பல பிரிவுகள் காணப்படுகின்றன.

பின்னர் நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள் நிரந்தர பிரதிநிதியின் தலைமையில் அங்கு ஒரு பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.  கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கலிபோனியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இலங்கையின் கொன்சியூர் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பொறுப்பதிகாரியாக ஓய்வுபெற்ற கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹெக்டர் விஜேயசிங்க தற்போது கடமையாற்றுகின்றார்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுமார் 65 வருட இராஜந்திர உறவு காணப்படுகின்றது இந்த நிலையில் சுமார் 15 பேர் இலங்கை தூதுவர்களாக அமெரிக்காவில் கடமையாற்றியுள்ளனர். இவர் அனைவரினதும் புகைப்படங்கள் தூதுவராலயத்தில் இன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவர்களின் பெரும்பாலானோர் வெளிநாட்டு சேவையில் உள்வாங்கப்படாதவர்களே தூதுவர்களாக பணியாற்றியுள்ளனர்.
இந்த அடிப்படையில் இலங்கையின் முதல் ஜனாதிபதியான சேர். வில்லியம் கொப்பலவவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக 1961ஆம் 1962ஆம் ஆண்டு காலப் பகுதியில் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதேபோன்று மற்றுமொரு முக்கிய இடத்திற்கு நான் விஜயம் மேற்கொண்டேன். அந்த இடம் எதுவொன்றால்.... (அடுத்த வாரம் தொடரும்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X