2025 மே 19, திங்கட்கிழமை

பிள்ளையைக் குற்றவாளியாக்கும் முயற்சி வெற்றி பெறுமா?

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.சஞ்ஜயன்
 
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பில் தங்கியிருக்கும் வரை, அமைதியாக இருந்த அரசாங்க அமைச்சர்கள் எல்லோரும் இப்போது மீண்டும் அவருக்கு எதிராக வெடித்துப் பொருமத் தொடங்கியுள்ளனர். 
 
வழக்கம் போலவே, அவருக்கு புலி முத்திரை குத்தப்படுகிறது.
 
பக்கச்சார்பான அறிக்கையையே கொடுப்பார் என்று இப்போதே அரசாங்கம் சொல்லத் தொடங்கி விட்டது.
 
இதுவரை நவநீதம்பிள்ளையை தாமே அழைத்து வந்ததாகக் கூறிய அரசாங்கம், இப்போது திடீரென புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைகளை நிறைவேற்றவே இங்கு வந்ததாக கூறத் தொடங்கியுள்ளது.
 
ஆரம்பத்தில் நவநீதம்பிள்ளை உள்ளிட்ட ஐ.நா உயர்மட்டக் குழுக்களின் உண்மை கண்டறியும் பயணங்களை எதிர்த்து வந்த இலங்கை அரசாங்கம், பின்னர் ஒரு கட்டத்தில் அவர்களுக்கான கதவுகளைத் திறக்கத் தொடங்கியது.
 
2011ஆம் ஆண்டிலேயே நவநீதம்பிள்ளைக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து கொழும்புக்கு வந்த அவரையே அரசாங்கத்தினால் திருப்திப்படுத்த முடியாது போனது.
 
நவநீதம்பிள்ளையின் மீது அரசாங்கத்துக்கு ஆரம்பத்திலேயே நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. அவர் தொடர்ச்சியாக இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் குறித்து குற்றம்சாட்டி வந்ததும், சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியதும் தான் அதற்குக் காரணம்.
 
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்களில், இலங்கைப் பிரதிநிதிகள் அவரைத் தனிப்பட்ட ரீதியில் தாக்கி கருத்துகளை வெளியிட்டிருந்தனர். ஆனாலும், உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளும் பொறுப்பை அவரிடமே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கொடுத்திருந்தது.
 
இலங்கை அரசாங்கமும் கூட, அவரைத் தமது செயற்பாடுகளால் திருப்திப்படுத்தலாம் என்று எதிர்பார்த்திருந்தது. அதற்காகவே அவரது பயணத்துக்கு சில நாட்கள் முன்னதாக சில முன்னநர்வுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன.
 
அவர் இலங்கையில் தங்கியிருந்த போது கூட, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்மூலம் அவரைத் திருப்திப்படுத்த அரசாங்கம் முயற்சித்தது.
 
தான் திறந்த மனதுடனேயே இலங்கை வரவுள்ளதாகவும், எந்தவிதமான முன் தீர்மானங்களுமின்றி, பயணத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் நவநீதம்பிள்ளை தனது பயணத்தை ஆரம்பிக்க முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
 
நவநீதம்பிள்ளையின் பயணத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், இன்று அவர் மீது இந்தளவு விமர்சனங்களை முன்வைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்காது. நவநீதம்பிள்ளைக்கு காண்பிப்பதற்காக அரசாங்கம் ஒரு புதிய விம்பத்தை இங்கு உருவாக்க முயன்றது.
 
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் காட்சிகளை மறைத்து – புதியதொரு காட்சியை அவருக்கு காட்ட முயன்றது. இராணுவத்தினரை மறைத்து வைத்து ஒளித்துப் பிடித்து விளையாடியது. பொலிஸ் அதிகாரங்களை சிவில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதாக கூறி, இன்னொரு இராணுவ அதிகாரியின் கையில் அதைக் கொடுத்துக் கேலிக்கூத்தாடியது.
 
இப்படி ஏகப்பட்ட குழப்பங்களையும் குழறுபடிகளையும் அரசாங்கம் அவசர கோலத்தில் செய்து முடித்தது.
 
ஜெனிவாவில் ஒன்றுக்கு இரண்டு தீர்மானங்களை எதிர்கொண்ட அரசாங்கம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் எதிர்பார்ப்பு எத்தகையதாக இருக்கும் என்பதை சரியாக கணிக்க முடியாது போனது மிகப்பெரிய ஆச்சரியம் தான்.
 
எதேச்சாதிக்காரப் பாதையில் இலங்கை பயணிப்பதாக, நவநீதம்பிள்ளை  குறிப்பிடும் நிலையை உருவாக்கிக் கொடுத்ததற்கான பொறுப்பு முற்றிலும் அரசாங்கத்துக்கே உரியது. ஜேவிபி, ஐதேக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுமே இதைத் தான் சொல்கின்றன.
 
நவநீதம்பிள்ளை எதிர்பார்த்த - கேள்விகளுக்கான பதில் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்காத போது, அவர் ஆழமான அதிருப்தி கொள்வது இயல்பானதே.
 
அமைச்சர்கள் சிலர் அவரை விமர்சித்த விதமும், அரசாங்கம் அவரை நடத்திய முறையும், இன்னும் எரிச்சலை அவருக்கு ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை.
 
ஒரு கட்டத்தில், நவநீதம்பிள்ளையை வைத்து அடைய நினைத்த இலக்கை அடைய முடியாது என்ற உண்மை அரசாங்கத்துக்கு விளங்கிப் போனது. அதனால் தான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரைச் சந்தித்த போது, நாட்டு மக்களில் பெரும்பாலானோர், நீங்கள் ஏற்கனவே அறிக்கை தயாரித்து விட்டுத்தான் வந்துள்ளீர்கள் என்று கருவதாக நவநீதம்பிள்ளையிடமே நேரடியாகத் தெரிவித்திருந்தார்.
 
அது அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும், அதை நேரடியாக சொல்ல முடியாததால் தான், பொதுமக்களை துரும்பாக பயன்படுத்தியிருந்தார்.
 
மறுநாள், நவநீதம்பிள்ளை நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மனிதஉரிமை மீறல்கள் குறித்து விபரித்து, எதேச்சாதிகாரப் பாதையில் இலங்கை பயணம் செய்வதாக வெளியிட்ட கருத்து, அரசாங்கத்தை உச்சக்கட்ட கடுப்புக்குள்ளாக்கி விட்டது.
 
ஏனென்றால், நவநீதம்பிள்ளையின் இந்தக் கருத்து கொழும்புடன் நின்று போகவில்லை. அதை உலகின் அனைத்து நாட்டு முன்னணி ஊடகங்களுமே, தலைப்புச் செய்தியாக்கின. அதன் மூலம் இலங்கை எதேச்சாதிகாரப் பாதையில் செல்வதாக உலகெங்கும் தகவல் கொண்டு செல்லப்பட்டது.
 
அடுத்து, அவர் இந்தமாதம் நடக்கவுள்ள, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24ஆவது அமர்வில் வாய்மொழியான அறிக்கையைக் கொடுக்கவுள்ளார். அதன் பின்னர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம், முழுமையான அறிக்கையைக் கொடுக்கவுள்ளார்.
 
கொமன்வெல்த் மாநாட்டை நடத்த இலங்கை தயாராகி வரும் நிலையில், இலங்கையில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தும் பல நாடுகளில் வலுப்பெறுள்ள நிலையிலும் நவநீதம்பிள்ளையின் கருத்து அரசாங்கத்துக்கு எரிச்சலூட்டியதில் ஆச்சரியமில்லை.
 
நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்துகள் மட்டுமன்றி, அவர் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையும் கூட, நியாயமானதாக இருக்காது என்று அரசாங்கம் இப்போதே கூறத் தொடங்கியுள்ளது அதன், ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
 
நவநீதம்பிள்ளை புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுபவர் என்றும், புலிகளிடம் பணம் பெற்றவர் என்றும் விமர்சனம் செய்த அரசாங்கத் தரப்பினர், அவர் கொழும்பில் வைத்து, புலிகளையும் புலம்பெயர் தமிழர்களையும் கடுமையாக விமர்சித்ததை கண்டுகொள்ளவில்லை.
 
புலிகள் இரக்கமின்றி கொலைகளை செய்தவர்கள் என்றும் அத்தகைய அமைப்புக்கு மகத்துவம்மிக்க ஐ.நா பரிந்து பேசும் என்று புலம்பெயர்நதமிழர்கள் எதிர்பார்கக் கூடாது என்றும் நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்தை வேறொரு ஐ.நா அதிகாரி கூறியிருந்தால், அதை அரசாங்கம் மிகப்பெரிய பிரசாரத்துக்குப் பயன்படுத்தியிருக்கும்.
 
ஆனால், இங்கே அரசாங்கம் நவநீதம்பிள்ளையை குற்றவாளியாக்குவதிலேயே குறியாக இருந்தது. அதனால், அவர் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்தை அரசாங்கம் முதன்மைப்படுத்தவில்லை.
 
அந்தக் கருத்து முதன்மைப்படுத்தப்பட்டிருந்தால், நவநீதம்பிள்ளைக்கு எதிரான தமது குற்றச்சாட்டு வலுவற்றதாகி விடும் என்ற பயம் அரசாங்கத்துக்கு இருந்ததால் தான் அவ்வாறு செய்யவில்லை.
 
போருக்குப் பிந்திய, அபிவிருத்தியை வைத்து, மனிதஉரிமைகள் விடயத்தில் உள்ள பலவீனங்களை ஈடுகட்டி விடலாம் என்ற கருத்து அரசாங்கத்திடம் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. அங்கிருந்து தொடங்கிய தவறு தான் அரசாங்கத்தை இப்போதும் படுகுழியில் தள்ளி விட்டுள்ளது.
 
மனிதஉரிமைகள் விடயத்தில் சர்வதேசத்தில் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதன் விளைவுகள் தான், நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுகளுக்கு காரணமாகியுள்ளன. ஆனாலும், அதனை மறுப்பதற்காக நவநீதம்பிள்ளையை குற்றவாளியாக்க முனைந்துள்ளது இந்த அரசாங்கத்தின் உச்சக்கட்ட வங்குரோத்து இராஜதந்திரம் என்றே கருதலாம்.
 
அதேவேளை, நவீதம்பிள்ளையைக் குற்றவாளியாக்கும் அரசாங்கத்தின் இந்த முயற்சியை, சர்வதேச சமூகம் எவ்வாறு பிரதிபலிக்கப் போகிறது என்பது விரைவிலேயே தெரியவரும். ஏனென்றால், அடுத்த வாரமே ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகப் போகிறது.
 
முன்னர், இந்தக் கூட்டத்தொடர் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று அலட்சியமாக இருந்த அரசாங்கத்துக்கு, இது நவநீதம்பிள்ளையின் வாய்மொழி அறிக்கை புதிய சிக்கலாக உருவெடுக்கப் போகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X