2025 மே 19, திங்கட்கிழமை

தென் பகுதியிலும் கூட்டமைப்புக்காக பிரசாரம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலுக்காக வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தென் பகுதி அரசியல்வாதிகளின் கடும் விமர்சனத்தை எதிர்நோக்கி வருகிறது. அவ் விமர்சனங்கள் எவ்வாறாறனனவை என்பதை அறியாமல் இருந்தாலும் தென் பகுதி அரசியல்வாதிகள் அதனை விமர்சிக்கிறார்கள் என்ற நிலைமையே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சாதகமானதாகும்.

தென் பகுதி அரசியல்வாதிகளனதும் ஊடகங்களினதும் விமர்சனத்தினால் பெருமளவில் நன்மையடைந்த ஒருவர் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான். அவரது காலத்தில் தோட்டப்புற மக்கள் மட்டுமல்லாது நாட்டில் சகல பகுதிகளிலும் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு தமது குறைகளைப் பற்றி முறையீடு செய்ய இருந்த ஒரே பலம் வாய்ந்த நிறுவனம் இ.தொ.கா.வே. எனவே பெரும்பான்மையின அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினதும் விமர்சனங்களை கண்ட அம் மக்கள் மென் மேலும் அவரை ஆதரித்தனர்.

ஆனால், இன்றும் நாட்டில் மிகக் கூடுதலான போசாக்கின்மையும் மிகக் முறைவான கல்வி, சுகாதார, போக்குவரத்து வசதிகளும் உள்ள பகுதி தோட்டப் பகுதியே. 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்தே இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜா உரிமையையும் வாக்குரிமையையும் வழங்குவதற்காக இரண்டு அரசியலமைப்புத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல் இன்று தென் பகுதி அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினதும் விமரசனங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. ஆயுத பலத்தினால் பெற முடியாது போன தமிழீழத்தை சட்ட நுணுக்கங்களினால் பெறுவதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சி. வுp. விக்னேஸ்வரனை தமது தலைமை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது என்ற வாதம் அவ்வாறானதோர் உதவியாகும்.

அவர்களது இந்த வாதத்தை கேட்கும் தென் பகுதியில் வாழும் சிங்கள் மக்கள் அதனை நம்பினால் சிலவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கோபம் கொள்ளலாம், ஆத்திரம் கொள்ளலாம். ஆனால் வட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் அந்த வாதத்தை நம்பினாலும் இல்லாவிட்டாலும் அது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே சாதகமாகும்.

தமிழ் மக்கள் அதனை நம்பினால் அவர்கள் அதற்காக கூட்டமைப்பை வெறுக்கப் போவதில்லை. மாறாக பெரும்பாலான தமிழர்கள் அதனை ஆதரிப்பார்கள். மறுபுறத்தில் அவர்கள் அதனை நம்பாவிட்டாலும் இந்த வாதத்தின் பின்னல் உள்ள தமிழ் விரோத போக்கை உணர்ந்து கொள்வார்கள். அதுவும் தமிழ் மக்களை மேழும் கூட்டமைப்பின் பக்கம் வளைத்து விடும்.

ஒரு வகையில் இந்த வாதம் சிறுபிள்ளதை;தனமான வாதமாகும் தமிழீழத்தை அடைவதே கூட்டமைப்பின் நோக்கமாக இருந்தால் விக்னேஸ்வரனும் அதை விரும்பியிருநந்தால் அவரே வட மாகாணத்தின் முதலமைச்சராக இருக்கத் தேவையில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றொருவர் முதலமைச்சராக இருந்தாலும் அவரது சட்ட அறிவை பாவித்து அந்த நோக்கத்திற்காக செயற்படலாம்.

ஆயுதம் இருந்தால் உரிமைகளை பெறலாம், இல்லாவிட்டால் உரிமைகளை பெற முடியாது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியதை பாவித்து தென் பகுதி அரசியல்வாதிகள் தெற்கில் மற்றொரு பெரும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டு இருக்கிறார்கள். பிரேமச்சந்திரனின் இந்த உரையை பாவித்து தென் பகுதியில் மட்டுமே அரசியல் ஆதாயம் பெறலாம் வட பகுதியில் அது கூட்டமைப்புக்கு சாதகமான வாதம் என்பதை இந்த சர்ச்சையை கிளப்பிக் கொண்டு இருக்கும் தென் பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு விளங்கவில்லை.

இதேபோல் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதையும் வைத்து தென் பகுதி அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறார்கள் கூட்டமைப்பு தமிழீழத்தை அடைவதற்காகவே வடக்கையும் கிழக்கையும் இணைக்கப் போகிறது என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

இதில் அரை உண்மை தான் இருக்கிறது. உண்மையிலேயே வடக்கு கிழக்கு இணைப்பானது அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு முரணானதாகும். இரண்டு மாகாணங்களை இணைத்தால் இணைந்த மாகாண சபையின் தலைமையகத்தை அடைய பொத்துவில் மற்றும் நெடுந்தீவு போன்ற அம் மாகாணத்தின் இரு கோடிகளில் வாழும் மக்கள் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கும்.

உண்மையிலேயே தமிழீழத்தை அடைவதற்காகவே 1970களில் தமிழ் தலைவர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று போராடினர். எனவே வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் கோரும் போது தமிழீழத்தை அடைவதற்காகவே அவர்கள் அவ்வாறு கோருகிறார்கள் என்று தென் பகுதி அரசியல்வாதிகள் கூறுவதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. இருந்த போதிலும் வடக்கு கிழக்கு இணைப்பானது இப்போது தமிழ் சிங்கள அரசியல்வாதிகளிடையே ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் மாறியிருக்கிறது.

எனவே, மாகாண இணைப்பின் மூலம் கூட்டமைப்பு தமிழீழத்தை அடையப் போகிறது என்ற தென் பகுதி அரசில்லாதிகளின் கூச்சல் கூட்டமைப்புக்காக மேற்கொள்ளும் பிரசாரம் போன்றதாகும். இந்தப் பிரசாரத்தின் மூலம் அவர்கள் தென் பகுதி மக்களின் மனதில் மேலும் தமிழ் வெறுப்பையுட்டுவதே இங்குள்ள பெரும் பிரச்சினையாகும். நல்லிணக்கம் தேவைப்படும் நேரத்தில் மக்கள் மனதில் வெறுப்பையூட்டுவது நாட்டுக்கு செய்யயும் உபகாரமாகாது.

அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமது வரையறைகளை கவனமாக உணர்ந்து செயல்படுவதே பொருத்தமாகும். ஏனெனில் பிரிவினையின் சாயல்களை கண்டாலும் மாகாண சபைகளை கலைத்துவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இருக்கவில்லை. ஆனால் 1990ஆம் ஆண்டு பிரேமதாச அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த காலத்தில் அம் மாகாண சபையை கலைத்து விடுமாறு புலிகள் அமைப்பு பிரேமதாசவை வற்புறுத்தி வந்தது. பிரேமதாசவும் அதற்கு வழிகளைத் தேடிக் கொண்டு இருந்தார்.

அப்போது தான் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் 1990ஆம் ஆண்டு மாரச் 1 ஆம் திகதி மாகாண சபையை தமிழீழத்திற்கான அரசியலமைப்பை தயாரிக்கும் சபையாக பிரகடனப்படுத்தினார். அதனை பாவித்து புலிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பிரேமதாச மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரத்தை பெறும் வகையில் சட்டம் கொண்டு வந்தார். அதேபோல் 1990 ஆம் ஆண்டு அவர் அம் மாகாண சபையை கலைத்துவிட்டார்.

எனவே, உண்மையிலேயே கூட்டமைப்பு தமிழீழத்திற்காக பாடுபடாவிட்டால் இந்த விடயத்தில் கவனமாக இருப்பது பத்திசாலித்தனமாகும். வெற்றி பெறுவதற்கு கூட்டமைப்பு தீவிரவாத பிரசாரத்தில் ஈடுபட வேண்டிய அவசியமும் இல்லையே.

You May Also Like

  Comments - 0

  • nathan Monday, 09 September 2013 05:24 AM

    President can't dissolve a PC without the consent of the respective chief minister. That is why President tried his best to get the consent of EPC chief minister, last year.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X