2025 மே 19, திங்கட்கிழமை

அதிரடி அரசியல் பேசிய மன்மோகன்சிங்; அரண்டுபோன அனைத்துக் கட்சித் தலைவர்கள்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து அரசியல் தலைவர்களும் அதிர்ச்சியடையும் வகையில் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அரசியல் பேசியிருக்கிறார். ஜி.20 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டுப் புறப்பட்ட பிரதமர் மன்மோகன்சிங், பத்திரிக்கை நிருபர்களை சந்தித்தார். இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் தேக்க நிலைமை பற்றிக் கூறிவிட்டு, மன்மோகன்சிங் பேசிய அரசியல் இதுதான்!
 *  அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை.
 *  அரசியலில் ஒருவார காலம் என்பது மிக நீண்ட காலம். அதனால் கூட்டணி ஏற்படாது என்று நான் சொல்லவில்லை.
 *  எங்களுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகள், குறிப்பாக மதசார்பற்ற கட்சிகள் மீண்டும் ஒன்று சேர வேண்டும்.
 *  மதசார்பற்ற சக்திகளின் கையில் இந்த நாட்டின் அரசியலை ஒப்படைக்க இதுபோன்ற சங்கமம் உதவும்.
 *  2014 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி பொருத்தமானவர்.
 *  ராகுல் காந்தியின் தலைமையின் நான் மகிழ்ச்சியுடன் காங்கிரஸ் கட்சியில் பணிபுரிவேன்.
 
இப்படியெல்லாம் பேசியது எண்ணற்ற காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி அல்ல. ஏன் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் சோனியா காந்தி கூட இது மாதிரி பேசவில்லை. ஆனால் ஏறக்குறைய 9 வருடம் இந்திய பிரதமராக இருந்து வரும் டாக்டர் மன்மோகன்சிங் பேசியிருக்கிறார். மௌன சாமியார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மன்மோகன்சிங், இப்படி அரசியல் பேசி கலக்கியது பல அரசியல் தலைவர்களை வியக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள்ள உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களையே மிரள வைத்திருக்கிறது.
 
பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சில் பல சூட்சுமங்கள் மறைந்து கிடக்கின்றன. காங்கிரஸை விட்டுச் சென்ற மதசார்பற்ற கட்சிகள் எல்லாம் "மீண்டும்" காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜியை "மரியாதைக்குரிய தலைவர்" என்று வர்ணித்துள்ளார். இந்த அழைப்பு மம்தா பானர்ஜியின் திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு என்று வைத்துக் கொண்டாலும், காங்கிரஸை விட்டு வெளியேறி நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இந்த அழைப்பு பொருத்தமானதே. ஏன் இதை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கூட விடப்பட்ட அழைப்பாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் புதிய கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறவில்லை. அதற்கு மாறாக மதசார்பற்ற கட்சிகள் "மீண்டும்" காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர வேண்டும் என்றே குறிப்பிட்டு இருக்கிறார். 
 
பொதுவாக பிரதமர் மன்மோகன்சிங்கைப் பொறுத்தமட்டில் அரசு பணிகளில் மட்டுமே அக்கறை செலுத்துவார். கட்சிப் பணி, கட்சியின் வியூகங்கள், கூட்டணி அமைக்கும் விஷயங்கள் - போன்றவற்றில் மன்மோகன்சிங் எந்த காலகட்டத்திலும் மூக்கை நுழைத்தது கிடையாது. இதையெல்லாம் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியும், அவரது பிள்ளையும், துணை தலைவராகவும் இருக்கும் ராகுல் காந்திதான் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் இப்போது முதல் முறையாக 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி எப்படி அமைய வேண்டும் என்ற வியூகத்தை பிரதமர் மன்மோகன்சிங் வெளிப்படுத்தியுள்ளார். அதுவும் குறிப்பாக மதசார்பற்ற கட்சிகளுக்கு விடப்பட்டுள்ள இந்த அழைப்பை, குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை பிரதமராக அறிவிக்க பாரதீய ஜனதாக் கட்சி போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் விடுத்துள்ளார். சோனியா காந்தியும் உள்நாட்டில் இல்லை. மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருக்கின்ற நேரத்தில் இந்தக் கருத்த பிரகடனப்படுத்தியுள்ளார். 
 
கூட்டணி வியூகம் பற்றிப் பேசியிருக்கும் பிரதமர் அதே நேரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அடுத்த பிரதமர் யார் என்பதையும் பூடகமாக அறிவித்துள்ளார். "நீங்கள் மூன்றாவது முறையும் பிரதமராக களத்திற்கு வருகிறீர்களா" என்பது பத்திரிக்கையாளர்களின் கேள்வி. அதற்கு பிரதமர், "2014 தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி பொருத்தமானவர்" என்கிறார். அப்படியென்றால் 2014 தேர்தல் களத்திற்கு யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு தானே பிரதமர் வேட்பாளர் என்பதை சொல்லாமல்ச் சொல்லியிருக்கிறார். இதன் பின்னணியில் இருக்கும் விஷயம் ராகுல் காந்திதான். பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி விட்டால், காங்கிரஸ் அறிமுகப்படுத்த நினைக்கும் "ராகுல் லீடர்ஷிப்" தேர்தலில் வெற்றி பெற உதவாது என்பதை மற்ற மதசார்பற்ற கட்சிகள் போல் பிரதமர் மன்மோகன்சிங்கும் புரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் 2014 தேர்தலுக்குப் பிறகு ராகுல் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்கிறார். அதற்கு காங்கிரஸ் அதிக எம்.பி.க்களைப் பெற வேண்டும். ஏற்கனவே இரு தேர்தல்களில் அவ்வளவு தொகுதிகளைப் பெறாத காங்கிரஸ் கட்சி, இனி வரும் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்றுவிடும் என்பதில் யாருக்கும் நம்பிக்கையில்லை. இந்நிலையில், 2014இற்குப் பிறகு, ராகுல் - பிரதமர் ஆக வேண்டும் என்றால் அது காங்கிரஸ் கட்சியின் கையில் மட்டுமல்ல, காங்கிரஸுடன் அந்த நேரத்தில் இருக்கும் மற்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கையில் இருக்கிறது.
 
ஏனென்றால் மற்ற கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ராகுல் காந்தியை பிரதமராக்குவதில் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டப் போகின்றன என்ற கேள்வி பிறந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது என்ற இலக்கை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. இந்தப் பயணத்தில் தற்போது காங்கிரஸை ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட அவர் முரண்டு பிடிக்க தயங்கவில்லை. உத்தரபிரதேசத்தில் முலயாம் சிங் யாதவ், பீஹாரில் லாலு பிரசாத் யாதவ், மஹாராஷ்டிராவில் சரத்பவார், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி, மேற்கு வங்க திரினாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் அனைவருமே ராகுலை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு தேர்தலுக்குப் பிறகு எவ்வளவு தூரம் ஒத்துழைப்பார்கள் என்பது சந்தேகமே! அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ராகுல் காந்தி எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளையும், அதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரிக்கும் அல்லது ஆதரித்த கட்சிகளுக்கு அவர் "செக்" வைப்பதையும் இந்த தலைவர்கள் யாருமே ரசிக்கவில்லை.
 
இதே மாதிரிதான் மறைந்த ராஜீவ் காந்தியும் 1984-91களில் காங்கிரஸை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவர் அப்படி மாநிலங்களில் காங்கிரஸ் வளர்ச்சிப் பணிகளை முடுக்கி விட்ட அந்த காலகட்டங்களில் 430 எம்.பி.க்கள் (1984 தேர்தல்) காங்கிரஸ் கட்சிக்கு இருந்தார்கள். எந்த மாநிலக் கட்சியின் தயவும் தங்களுக்கு வேண்டியதில்லை என்ற நினைப்பில் காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் செய்த நேரம் அது. அசுரபலத்தில் இருந்த ராஜீவ் காந்தி செய்ததை இன்று 200 எம்.பி.க்களை ஜெயிக்கவே போராடும் கட்சியை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி செய்து கொண்டிருக்கிறார். காங்கிரஸ் பலமிழந்த நிலையில் இருக்கும் போது, மற்ற மாநிலங்களில் பலமாக இருக்கும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கியைப் இழுக்கும் முயற்சியில் ராகுல் இறங்குகிறார் என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சங்கடப்பட்டு நெளிகிறார்கள். இந்த சூழ்நிலையும் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனக்கு சாதகமாக அமையும் என்று பிரதமர் மன்மோகன்சிங் நினைக்கிறார். அதனால்தான் அப்படி பேட்டி கொடுத்திருக்கிறார். ராகுலுக்குப் பதில் இப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கே மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராகிவிட்டுப் போகட்டும் என்று இந்த கூட்டணிக் கட்சிகள் எல்லாம் நினைக்கும் சூழல் மீண்டும் எழுந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
 
சென்ற மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற "பிரிக்ஸ்" மாநாட்டிற்குச் சென்று திரும்பிய பிரதமர் மன்மோகன்சிங்கிடம், "நீங்கள் மூன்றாவது முறையும் பிரதமர் வேட்பாளராக நிற்பீர்களா?" என்று கேட்டதற்கு, "நாங்கள் பாலத்தின் அருகில் வரும் போது அதைக் கடப்போம்" என்றார். அதாவது "நான் பிரதமர் வேட்பாளர்" என்பது தேர்தல் வரும் போது பார்க்கலாம் என்றே சொன்னார். அதேபோல் ராகுல் காந்தியை தன் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள ஆர்வமாகவே இருக்கிறேன் என்று பிற பேட்டிகளிலும் வெளிப்படுத்தி வந்தார். ஆனால் இப்போது தேர்தலுக்கு இன்னும் ஏழு, எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், "ராகுல் 2014இற்குப் பிறகுதான் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர்" என்கிறார். அதன்படி பார்த்தால் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மன்மோகன்சிங்கே போட்டியிட விரும்புகிறார் என்பது புரிகிறது. அதற்கு காங்கிரஸ் கட்சியின் தயவை மட்டுமல்ல, மற்ற மதசார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் கோருகிறார்.
 
பா.ஜ.க.விற்குள் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த கடந்த சில நாட்களாக பா.ஜ.க.வும் அதன் தாய் வீடான ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தலைவர்களும் கூடிக் கூடிப் பேசுகிறார்கள். இரு தரப்பிலும் இன்னும் கருத்தொற்றுமை வரவில்லை. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான சுஸ்மா சுவராஜ் (தற்போது பா.ஜ.க.வின் லோக்சபா எதிர்கட்சி தலைவர்), அத்வானி போன்றோர் தேர்தலுக்கு முன்பு நரேந்திரமோடியை முன்னிறுத்துவதை எதிர்க்கிறார்கள் என்று செய்திகள் சிறகடித்துப் பறக்கின்றன. நரேந்திர மோடி தாக்கத்தில் இருக்கும் பா.ஜ.க.வை சமாளிக்க களமிறங்குவது ராகுலா, மன்மோகன்சிங்கா என்ற விவாதம் காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில், "நானே களத்திற்கு வருகிறேன்" என்பதைத்தான் ஜி-20 மாநாட்டுக்குச் சென்று திரும்பிய பிரதமர் மன்மோகன் சிங் ஓப்பனாக அறிவித்திருக்கிறார். அதனால்தான் வழக்கத்திற்கு மாறாக பிரதமர் மன்மோகன்சிங் இவ்வளவு தூரம் அரசியல் கருத்துக்களை சரவெடி போல் விமானத்தில் இருந்து கொண்டே வெடித்திருக்கிறார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X