2025 மே 19, திங்கட்கிழமை

ஜெனீவாவைச் சமாளிக்கப் புதிய உத்தி

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.சஞ்ஜயன்

சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் காலத்துக்கு காலம் புதிய புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைக்கு எதிரான, போர்க்குற்றச்சாட்டுகளும், மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்ட போது, அவற்றை அடியோடு நிராகரிப்பதில் அரசாங்கம் உறுதியான கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது.

போரின் போது எந்த மீறல்களுமே நடக்கவில்லை, சர்வதேச சட்டங்களுக்கு அமையவே போரை நடத்தினோம் என்று அரசாங்கம் கூறிவந்தது. ஆனால், அரசாங்கத்துக்கு எதிரான பல போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியான நிலையிலும், சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வந்த நிலையிலும், அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், போரின்போது எங்காவது சில மீறல்கள் நடந்திருக்கலாம், அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று மெல்ல சுருதியை மாற்றிக் கொள்ளத் தொடங்கியது. ஆனால், மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை மட்டும் அரசாங்கம் வெளியார் யாருக்கும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை.

நாமே விசாரணை நடத்துகிறோம், குற்றங்கள் நடந்திருந்தால்  கண்டுபிடிக்கிறோம் என்பதில் உறுதியாகவே இருந்தது. ஆனால், அதில் பெரிதாக எந்த முன்னேற்றமும் காணப்படாத நிலையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றிய போது, சில விடயங்களில் விட்டுக் கொடுத்து நடந்தாக வேண்டிய நிலை உருவானது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பலவற்றை நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்ததற்குக் காரணம் அதுதான். ஆனாலும், இலங்கை அரசின் நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தக் கூடியளவுக்கு இருக்கவில்லை என்பதே இப்போதுள்ள பிரச்சினை.

இதனால், இலங்கை அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளைச் சமாளிக்க அரசாங்கம் இப்போது, மற்றொரு வியூகத்தை வகுத்துள்ளது. குற்றங்கள், மீறல்களுக்கு சாட்சியங்கள் உள்ளதா - ஆதாரங்கள் உள்ளதா? என்று கேள்வி எழுப்புவதே இந்தப் புதிய உத்தி.

மனித உரிமை மீறல்களுக்கு ஆதாரங்களை அல்லது சாட்சியங்களைத் திரட்டுவது மிகப் பெரிய சிக்கலான விடயம். அதுவும் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்ட ஏற்பாடுகள் ஏதும் இல்லாத ஒரு நாட்டில், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களையும், சான்றுகளையும் திரட்டுவது மிகவும் கடினமான காரியம். பல சந்தர்ப்பங்களில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் மட்டும் இருக்கும். சிலவேளைகளில் அதுவும் இருக்காது.

குறிப்பாக சட்டத்துக்குப் புறம்பான கொலைகளுக்குப் பெரும்பாலும் நேரில் கண்ட சாட்சியங்களும் இருக்காது, கொலை செய்யப்பட்டவர்கள் சாட்சியமளிக்க வரப்போவதுமில்லை. இத்தகைய மீறல்களுக்கு எந்த ஆதாரங்களும் இருக்காது.

அதுபோலவே, அடையாளம் தெரியாதவர்களாலும், முகமூடி அணிந்தவர்களாலும் கொல்லப்பட்டவர்கள், கடத்தப்பட்டு காணாமற்போனவர்களுக்கும் எத்தகைய ஆதாரங்களையும் சமர்ப்பிக்க முடியாது. எவருமே ஆதாரங்களை கொடுத்து விட்டு மனிதஉரிமைகளை மீறுவதில்லை.

அதுவும், முப்பதாண்டு ஆயுதப் போராட்டத்தை எதிர்கொண்ட ஒரு அரசாங்கத்தின் படையினர், ஆதாரங்களைக் கொடுத்துக் கொண்டு மீறல்களை இழைத்திருப்பர் என்று எதிர்பார்க்கவே முடியாது. எனவே தான், அரசாங்கம் துணிச்சலாக, ஆதாரங்களை சமர்ப்பித்தால் விசாரணை நடத்தலாம் என்ற துரும்பைத் தூக்கிப் போட்டது.

போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமற்போனவர்கள் குறித்து, எங்கிருந்து ஆதாரங்களைத் தேடிக் கொள்ள முடியும்?. பல நாட்கள் பதுங்கு குழிகளுக்குள், உணவு, குடிநீர் இன்றி வாடிப் போய், உயிர் மட்டும் தப்பினால் போதும் என்று, படையினரிடம் வந்து சேர்ந்தவர்களிடம் ஆதாரம் கேட்டால், எதைத் தான் கொடுக்க முடியும்?

போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள் எவரும் சரணடையவில்லை என்றும், எவரும் எவரையும் ஒப்படைக்கவில்லை என்றும் எழிலனின் ஆட்கொணர்வு மனு மீதான வழங்கில், இராணுவத் தரப்பு மேல்நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அவ்வாறு சரணடைந்திருந்தால் அவர்களுக்குப் படையினர் அவர்களைப் பொறுப்பேற்றதற்கான உறுதிச்சீட்டைக் கொடுத்திருப்பர் என்று இராணுவத் தரப்பு கொடுத்துள்ள விளக்கம் நகைப்புக்கிடமானது. போர்முனையில் சரணடையும் எவருக்காவது, உறுதிச்சீட்டுக் கொடுக்கும் வழக்கம் இலங்கையில் மட்டுல்ல, உலகில் கூட எங்கும் நடந்திருக்காது.

இந்த ஆட்கொணர்வு மனுக்களில், காணாமற்போனவர்களைத் தாம் படையினரிடம் ஒப்படைத்த போது பெருமளவு மக்கள் அதனைக் கண்டதாக கூறியுள்ளனர். இருந்தாலும், படையினருக்கு எதிராக அவர்களில் எத்தனை பேர் சாட்சியமளிக்க முன்வருவார்கள் என்ற கேள்வி உள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் பல சம்பவங்களுக்குச் சாட்சிகளாக இருந்தவர்கள், அச்சத்தின் காரணமாக நாட்டை விட்டும் வெளியேறி விட்டனர். எனவே, சரணடைந்தவர்கள் குறித்த ஆதாரங்களை தேடிப்பிடித்து அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சிரமமான காரியம் தான்.

இந்த விவகாரத்தில் மட்டுமன்றி, எல்லா விடயங்களிலுமே அரசாங்கம் ஆதாரம், சாட்சியத்தைத் தான் கேட்கிறது. அண்மையில், இலங்கைக்கு உண்மை கண்டறியும் களப்பயணத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்த பலர், அச்சுறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கொழும்பில் மட்டுமன்றி, ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து நிகழ்த்திய உரையிலும், நவநீதம்பிள்ளை இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.

அதற்கு, அவ்வாறு அச்சுத்தப்பட்டிருந்தால், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கத் தயார் என்று அரசாங்கம் பதிலளித்துள்ளது. இத்தகைய அச்சுறுத்தல் குறித்த ஆதாரங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவை சமர்ப்பிக்காது என்பது அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும்.

சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழலில், அத்தகைய சான்றுகளை ஐ.நா வழங்க முன்வராது. அதனால் தான், அரசாங்கத்தினால் துணிச்சலுடன், ஆதாரங்களைக் கோர முடிகிறது. எவ்வாறாயினும், இலங்கையில் நடந்த மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள் ஏதுமில்லாமல் தான், அமெரிக்கா போன்ற நாடுகள், இலங்கை மீது குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றன என்று கருதிவிட முடியாது.

முள்ளிவாய்க்காலில் போர் நடந்த போது, அமெரிக்க செய்மதிகளும், ஐ.நா செய்மதிகளும், கண்களை மூடிக் கொண்டிருந்திருக்கவில்லை. போர் வலயத்தை, அவை படம் பிடித்துக் கொண்டிருந்தன.
அத்தகைய சில படங்கள் ஐ.நாவினால் வெளியிடப்பட்டும் உள்ளன. இன்னும் வெளிப்படுத்தப்படாத ஆதாரங்களும், படங்களும் ஐ.நாவிடமும், அமெரிக்காவிடமும் இருக்கலாம்.

உள்ளக செயல்முறைகளின் மூலம் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்காது போனால், சர்வதேச விசாரணை அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று, தெற்கு, மத்திய ஆசியாவுக்கான துணை இராஜாங்கச் செயலராக பெயரில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிஷா தேசாய் பிஸ்வால், கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.

அத்தகையதொரு விசாரணைப் பொறிமுறை பற்றிய விவகாரம் வெடிக்கும் போது, அமெரிக்கா அந்த ஆதாரங்களை வெளியே தூக்கிப் போடலாம். இப்போதைக்கு அரசாங்கம், ஆதாரங்களை சமர்ப்பித்தால், விசாரிக்க முடியும் என்ற உத்தியை வைத்து, சர்வதேச சமூகத்தைச் சமாளிக்க முடிந்தாலும் அது நெடுநாட்களுக்கு கைகொடுக்குமா என்பது சந்தேகம் தான்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X