2025 மே 19, திங்கட்கிழமை

அந்த முப்பது நாட்கள்...

Super User   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தொடர் - 10)

-றிப்தி அலி


நான் நியூசியத்திற்கும் சென்றேன். நாம் அனைவரும் மியூசியம் என்ற சொல்லை கேள்விப்பட்டிருப்போம். இது நூதனசாலை என்ற சொல்லின் ஆங்கில வடிவமாகும். அதாவது வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் அனைவரும் குறித்த நாடுகளின் நூதனசாலைக்கு விஜயம் மேற்கொள்வது வழமையாகும்.

இதனால் குறித்த நாடுகளின் நூதனசாலைகள் பிரபல்யமாக காணப்பட்டன. ஆனால் நியூசியம் என்ற சொல் நாம் அனைவருக்கும் புதிய சொல்லேயாகும். அதேபோன்று புதிய இடமுமாகும்.அதாவது புராதன பொருட்களை காட்சிப்படுத்தும் இடத்தை நாம் மியூசியம் என்று அழைப்பது போன்று புராதன பத்திரிகைளை காட்சிப்படுத்தும் இடத்தினை நியூசியம் என அமெரிக்காவில் அழைக்கின்றனர்.

வாஷிங்கடன் நகரில் சுமார் ஏழு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் இந்த நியூசியம் உள்ளது. இங்கு சுமார் 80இற்கு மேற்பட்ட நாடுகளின் நாளாந்த பத்திரிகைகள் காட்சிப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கு மேலதிகமாக புராதன வீடியோ காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன.

1650ஆம் ஆண்டு முதல் இன்று வரை வெளியான முக்கிய பத்திரிகைகள் இந்த நியூசியத்தில் காட்சிப்படுத்தப்பபட்டுள்ளன. இந்த புராதன பத்திரிகைகள் இன்று நாளுக்கு உரிய பத்திரிகைகள் போன்று  கட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நான் கடமையாற்றும் தமிழ்மிரர் இணையத்தளத்தின் சகோதர ஆங்கில பத்திரிகையான டெய்லிமிரர் பத்திரிகையும் இங்கு இன்றுவரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


இதனை கண்டவுடன் நான் மிக்க சந்தோசமடைந்தேன். நம்மால் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு சம்பவமே கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி எமது நாட்டில் ஏற்ப சுனாமி அனர்த்தம். இந்த அனர்த்தம் தொடர்பில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி திங்கட்கிழமை வெளியான டெய்லிமிரர் பத்திரிகையின் தலைப்புச் செய்தி கொண்டிருந்தது.

இதனால் குறித்த தின பத்திரிகையின் முதற் பக்கமே இன்று வரை நியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான முக்கிய செய்திகளை கொண்ட பத்திரிகைகளே அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


ஹொப்போன் ஹொப்போப்


இந்த நியூஸியம் போன்றே ஹொப்போன் ஹொப்போப்பும் புதிய விடயமாகும். இதுவொரு சுற்றுலா பஸ் சேவையாகும். வாஷிங்கடன் மற்றும் சன்பிரன்ஸிஸ்கோ ஆகிய பிரதேசங்களிலேயே இந்த பஸ் சேவையினை காண முடிந்தது. எனினும் ஒக்லஹோமா பிரதேசத்தில் இதனை காண முடியவில்லை.


அதாவது குறித்த பிரதேசத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு குறித்த பிரதேசத்தின் பெருமையினை வெளிகாட்டுவதுடன் இலகுவாக அனைத்து முக்கிய இடங்களுக்கும் செல்வதற்கான ஏற்பாடாக இது உள்ளது.
இதற்கான இரண்டு தட்டுகளை கொண்ட பஸ் பயன்படுத்தப்படுகின்றது. இதன் மேல் தட்டு திறந்த நிலையிலேயே காணப்படும்.

இந்த பஸ்ஸில் பயணிப்பதற்கு சிறு கட்டணமொன்றை செலுத்த வேண்டும். குறித்த கட்டணத்தினை செலுத்தி பெறப்படும் டிக்கெட்டினை 48 மணித்தியாலங்களுக்கு பயன்படுத்த முடியும். காலை 7 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை மேற்கொள்ளப்படும் இந்த பஸ் சேவையில், டிக்கெட்டின் காலம் நிறைவடையும் வரை சுற்றுல்லா பிரயாணி எந்தவொரு வரையாறையுமின்றி எத்தனை தடவை தேவை என்றாலும் குறித்த பஸ்ஸில் பயணிக்க முடியும்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் இந்த பஸ்ஸில் பயணித்தால் போதும் முழு நகரையுமே சுற்றிப்பார்த்தமாகிவிடும். இதற்கு ஏற்ற வகையிலேயே இந்த பஸ்ஸின் வீதி போக்குவரத்து முறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனால் குறித்த நகரங்களுக்கு விஜயம் செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுல்லா பிரயாணிகள் இந்த சேவையினை பயன்படுத்தினர். இந்த அடிப்படையில் நாங்களும் இந்த பஸ் சேவையில் பயணிப்பதற்கான ஏற்பாட்டினை செயலமர்வின் ஏற்பாட்டாளர்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனால் ஏனையோரின் தயவின்றி இந்த பஸ்ஸின் மூலம் முழு நகரையும் சுற்றிப்பார்க்க முடியும். அதாவது சில புதிய நகரங்களுக்கு நாம் விஜயம் செய்யும்போது சுற்றுலா வழிகாட்டிகள் கட்டாயம் அவசியமாகும். சுற்றுலா வழிகாட்டிகளின்றி நாம் பயணிக்கும் போது அனைத்து இடங்களை பார்வையிட சந்தர்ப்பம் கிடைக்காததுடன் வழி தவறி செல்வதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் இந்த பஸ் சேவையில் பயணிக்கும் போது அவ்வாறில்லை.

பஸ்ஸின் சாரதி குறித்த நகரின் வரலாறு, முக்கியத்தும், சிறப்பம்சம், பிரபல்யம் போன்ற விடயங்களை சுற்றுலா பிரயாணிகளுக்கு விளங்கப்படுத்துவார். இதற்கு மேலதிகமாக பிரயாண வழிகாட்டி புத்தமொன்று சுற்றுலா பிரயாணிகளுக்கு வழங்கப்படும்.

இதனால் பிறரின் தயவின்றி நகரை சுற்றிப்பார்க்க முடியும். இந்த பஸ்ஸில் பயணிக்கும் போது நகரின் முக்கிய இடங்களான சந்தை, நூதனசாலை, பூங்கா போன்ற இடங்களில் பஸ் தரிப்பிடம் போன்ற சில நிமிடங்களிற்கு நிறுத்தப்படும். இச்சமயத்தில் நாம் குறித்த இடத்தில் இறங்கி பார்வையிட முடியும். இந்த பஸ் ஒவ்வொரு தரிப்பிடத்திற்கும் 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை விஜயம் மேற்கொள்ளும்.

இதனால் பார்வையிட வேண்டிய இடத்தினை பார்வையிட்ட 30 நிமிடங்களின் பின்னர் தாம் இறங்கிய இடத்திற்கு  மீண்டும் வந்தால் குறித்த பஸ்ஸில் ஏறி எமக்கு வேண்டிய இடத்திற்கு மீண்டும் பயணிக்க முடியும். இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த பஸ் சேவையினை எமது நாட்டில் அறிமுகப்படுத்தினால் சிறந்த விடயம் தானே என நான் நினைத்தேன்.

இதன் மூலம் வெளி மாகாணங்களிலிருந்து வரும் சுற்றுல்லா பயணிகளும் வெளிநாட்டு சுற்றுல்லா பயணிகளும் மிக்க பயனடைவர். அதுமாத்திரமன்றி கொழும்பிலுள்ள முக்கிய இடங்களுக்கு ஏனையோரின் தயவின்றியும் விஜயம் செய்வர்.

இதனால் பலருக்கு தொழில்வாய்ப்பு கிடைக்கும் என நான் இந்த பஸ்லிஸ் பயணிக்கும்போது நினைத்தேன். எனினும் எமது நாட்டிலுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த சேவையினை மேற்கொள்வது சிரமாகும் என எண்ணிக்கொண்டு இந்த பஸ்ஸில் பல இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டேன்.

இவ்வாறு பயணித்தபோது நூதனாசாலைகள், பூங்காக்கள், முக்கிய தலைவர்களின் சிலைகள், பொதுச் சந்தை, பல்கலைக்கழகங்கள் போன்ற பலவற்றை அறிய முடிந்தது.  எமது நாட்டில் நூதனசாலைகள் என்றால் கொழும்பு, பொலநறுவை, காலி மற்றும் அநுராதபுரம் போன்ற சில இடங்களில் மாத்திரமே உள்ளது.

அதுபோன்று பூங்காக்கள் என்றால் பேராதெனிய மற்றும் ஹக்கல ஆகிய இரண்டுமே பிரபல்யம் பெற்றவையாகும். ஆனால் அமெரிக்காவில் அவ்வாறில்லை. செல்லுமிடங்களில் எல்லாம் பூங்காக்களும் நூதனசாலைகளும் சதுக்கங்களும் காணப்பட்டன.

இதனால் அமெரிக்காவில் எத்தனை நூதனசாலைகள் மற்றும் எத்தனை பூங்காக்கள் என்பதை ஒருபோதும் வரையறுத்து கூற முடியாது அமெரிக்க நண்பரொருவருர் குறிப்பிட்டார். சுமார் 15,000க்கு மேற்பட்ட நூதனசாலைகள் அமெரிக்காவில் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பல நூதனசாலைகளுக்கும் பூங்காக்களிற்கும் நான் விஜயம் செய்தேன். அவை அனைத்து முக்கிய இடங்களாகும். அதாவது ஒவ்வொரு துறைக்கும் தனியாக நூதனசாலைகள் காணப்பட்டன. நான் விஜயம் மேற்கொண்டவற்றில் எவற்றை எழுதுவது என நான் நினைத்தேன். எனினும் அனைத்தும் முக்கியம் என்கின்றமையினால் அனைத்தையும் எழுதினால் நல்லது என பலர் எனக்கு அறிவுரை வழங்கினர்.

அவ்வாறு அனைத்தையும் எழுதினால் இந்த தொடர் நீண்டுகொண்டே செல்லும். இதனால் அவை பற்றி எழுதுவதை தவிர்த்துக்கொண்டேன். ஆனால் ஒரு விடயத்தை இங்கு தெரிவிக்க வேண்டும். ஒக்லஹோமா சிட்டி தேசிய ஞாபகார்த்த நூதனசாலைக்கு சென்றேன்.

1995ஆம் ஆண்டு ஒக்லஹோமா பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 168 பேர் கொல்லப்பட்டனர். இதன் ஞாபகார்த்தமாகவே இந்த நூதனசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று 9ஃ11 குண்டுவெடிப்பின் ஞாபகார்த்தமாக நியூயோர் பிரதேசத்தில் நூதனசாலை அமைக்கப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.

ஆனால் நியூயோர்க் பிரதேசத்திற்கு நான் விஜயம் மேற்கொள்ளவில்லை. ஒக்லஹோமா சிட்டி தேசிய ஞாபகார்த்த நூதனசாலைக்கு விஜயம் மேற்கொண்டபோது 1995ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பினை நேரில் பார்த்தது போல் எனக்கு இருந்தது.

அந்த அடிப்படையிலேயே ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் இந்த நூதனசாலையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனால் 1995ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கே எங்களை கொண்டு சென்றது. இப்படியென்றால் எமது நாட்டில் எத்தனை நூதனசாலைகள் எமது நாட்டில் நிர்மாணிக்க வேண்டும் என இதன்போது என்னுடன் கலந்துகொண்ட இலங்கை நண்பி கேள்வி எழுப்பினார்.

அதாவது கடந்த 30 வருடமாக எமது நாட்டில் ஏற்பட்ட யுத்ததினால் நாட்டின் பல பகுதிகள் குண்டுவெடிப்புக்கள் ஏற்பட்டன. இதனால் அனைத்து பகுதிகளும் இது போன்ற நூதனசாலைகள் அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இவ்வாறு நூதனாசாலைகள் அமைத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒவ்வொரு நகரிற்கு ஒவ்வொரு நூதனாசாலைகள் தான் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த கேள்வியுடனேயே குறித்த இடத்திலிருந்து வெளியேறி பஸ்ஸில் ஏறினேன்.

பஸ்கள் சேவை


பஸ் என்றவுடனேயே ஞாபகத்திற்கு வருகின்றது அமெரிக்காவின் பஸ் சேவை. அமெரிக்காவில் தங்கியிருந்த காலப்பகுதியில் பல்வேறு வகையான பஸ்களை காண முடிந்தது. இவை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபட்டவையாக காணப்பட்டதுடன் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டன. அந்த பஸ்களில் ஒன்றுதான் எமது நாட்டில் காணப்படும் சுற்றுலா பஸ்களாகும்.

இந்த இரண்டு நாட்டு பஸ்களும் ஒரே மாதிரியாக காணப்பட்டாலும் அங்குள்ள பஸ்களில் மலசலகூடம் மற்றும் வைபை சேவை போன்றன மேலதிகமாக காணப்பட்டன.அதேபோன்று மற்றுமொரு வகையான பஸ்களை கேபிள் கார் என அழைப்பர். வீதிகளில் ரயில் தண்டவாளங்கள் போல் தண்டவாளம் அமைக்கப்பட்டிருக்கும்.

இதிலேயே இந்த கேபிள் கார் மின்சாரத்தின் உதவியுடன் பயணிக்கும். இந்த கேபிள் காரினை சன்பிரன்ஸிஸ்கோ நகரில் மாத்திரமே என்னால் காண முடிந்தது. இதற்கான டிக்கெட்டினை மாநகராட்சி நிறுவனத்தில் முன்கூட்டி பெற்றுக்கொள்ள வேண்டும்.

கடனட்டைகள் போன்ற இந்த அட்டைகளை காணப்பித்தே பயணிக்க முடியும். ஒரு போதும் பணம் செலுத்தி பயணிக்க முடியாது. இதுபோன்றே மெட்ரோ என அழைக்கப்படும் போக்குவரத்து சேவையினை வாஷிங்கடன் நகரில் காண முடிந்தது. இதனை பஸ் சேவையா அல்லது புகையிரத சேவையா என கூற முடியாது.

காரணம் மேற்குறிப்பிட்ட இரண்டு வடிவத்திலும் காணப்பட்ட இந்த போக்குரத்து முறையினை அமெரிக்காவில் மெட்ரோ என்றே அழைப்பர். நிலத்திற்கு அடியிலான சுரங்க பாதையில் மின்சாரத்தில் மேற்கொள்ளப்படும் இந்த சேவையினால் வாகன நெரிசலின் அளவு வாஷிங்டன் நகரில் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு கடனட்டைகள் போன்ற இந்த அட்டைகளை கொள்வனவு செய்து நுழைவாயில் காணப்பிக்க வேண்டும். காண்பித்தால் மாத்திரமே நுழைவாயில் கதவு திறக்கப்படும். இந்த பஸ் சேவைகள் அனைத்தும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ரயிலை விட அதிக வேகத்திலேயே இந்த மெட்ரோ பயணிக்கும்.


இந்த மெட்ரோ சேவை இந்தியாவில் உள்ளதாக அந்நாட்டு நண்பர்கள் தெரிவித்தனர். இந்த மெட்ரோ அல்லது கேபிள் கார் தரிப்பிடங்களில் மாத்திரமே நிறுத்தப்படும். தேவையற்ற இடங்களில் எல்லாம் நிறுத்தப்படாது. கேபிள் காரில் ஒரு தடவை பயணித்துக்கொண்டிருந்தபோது நான் நித்திரை செய்துவிட்டேன்.

இதனால் நான் இறங்க வேண்டிய தரிப்பிடத்தில் இறங்காமல் வேறொரு இடத்தில் இறங்கியதை மறக்க முடியாது.
அதோபோன்று முதற் தடவையாக மெட்ரோவில் மிகுந்த பயத்துடனேயே பயணித்தேன். ஆனால் போகப்போ...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X