2025 மே 19, திங்கட்கிழமை

பிழையான நேரத்தில் சரியான கருத்தை தெரிவித்த விக்னேஸ்வரன்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணசபை தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன், சென்னையில் வெளியிடப்படும் இந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தமிழ் நாட்டுத் தலைவர்களைப் பற்றி கூறிய ஒரு கருத்து இப்போது சர்ச்சையாகிக் கொண்டு வருகிறது. எதிர்ப்பார்த்ததைப் போலவே அக்கருத்துக்கு தமிழ் நாட்டிலிருந்தும் இலங்கை தமிழர்களில் சிலரிடம் இருந்தும் எதிர்ப்பு வரத் தொடங்கியுள்ளது.

தமிழ் நாட்டுத் தலைவர்கள் தமது அரசியல் நலனுக்காக இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை பாவிப்பதாகவும் அதனால் இலங்கை தமிழர்களே பாதிக்கப்படுகிறார்கள் என்றும் விக்னேஸ்வரன் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

'தமிழ் நாட்டுத் தலைவர்கள் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு பந்தாடுகிறார்கள். அவர்களின் செயல்களினால் நாமே பாதிக்கப்படுகிறோம். அவர்கள் எம்மைப் பார்த்து பிரிந்து விடுங்கள், பிரிந்து விடுங்கள் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். இதைக் கேட்டு சிங்கள மக்களில் ஒரு சாரார் நாம் இந்தியாவுடன் சேர்ந்து தனித் தமிழ் நாடொன்றை உருவாக்க முற்படுவதாக நினைக்கிறார்கள். இது எம்மை அசௌகரியத்துக்குள்ளாக்குகிறது. அது அவர்களது வேலையல்ல, அது எமது வேலை' என்று அவர் கூறியிருக்கிறார்.

ஒரு வகையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படாத தமிழ் தலைவர் ஒருவர் இக்கருத்தை கூற அவரிடம் பெரும் தைரியம் இருக்க வேண்டும். அல்லது அவர் தற்கால அரசியல் களம் என்ன என்பதை அறியாத ஒருவராக இருக்க வேண்டும். ஏனெனில் இக்கருத்து தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் வாழும் தமிழர்களில் ஒரு சாராரின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுக்கக்கூடிய ஒன்றாகும். குறிப்பாக தேர்தல் காலமொன்றில் இவ்வாறான கருத்துக்களால் நட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

இதற்கு முன்னரும் விக்னேஸ்வரன் தமது புதிய அரசியல் பிரவேசத்தின் காரணமாக வெளியிட்ட சில கருத்துக்களால் தமிழர்கள் சிலரின் விமரசனத்துக்கு உள்ளானார். புலிகளின் தலைவர் பிரபாகரன் பயங்கரவாதியல்ல, விடுதலைப் போராளியே என அவர் அண்மையில் பிரபாகரன் பிறந்த பிரதேசமான வல்வெட்டித்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது கூறயிருந்தார்.

அதைக் கேட்ட ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர், 'அவ்வாறாயின் விக்னேஸ்வரன் நீதியரசராக இருக்கும் போது அவரும் அவரது சகாக்களான நீதியரசர்களும், புலி உறுப்பினர்கள் மீதான வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் எந்தளவு நாகரிகமானவை என்றும் அவர் 6ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லையா?' என்றும் கேள்வியெழுப்பி இருந்தார்.

தமிழ் நாட்டுத் தலைவர்கள் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு பந்தாடுகிறார்கள் என்ற விக்னேஸ்வரனின் கருத்து பிழையானதல்ல. அது முற்றிலும் உண்மையானதே. இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் விடயத்தில் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் எதைச் செய்தாலும் எதைக் கூறினாலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி அதனை ஒருபோதும் சரி என ஏற்றுக்கொள்வதில்லை. அதனை ஆதரிப்பதில்லை. மாறாக அது அரசியல் இலாபத்திற்காக செய்யும் செயல் அல்லது கூறும் கருத்து என்றே அவர் கூறுவார்.

அதேபோல் கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்காக எதைச் செயதாலும் எதைக் கூறினாலும் ஜெயலலிதாவும் அதில் குறை மட்டுமே காண்பார். இலங்கைத் தமிழர்களுக்காக தாம் மட்டுமே உண்மையாகவே செயற்படுவதாக காட்டிக் கொள்வதே அவர்களது நோக்கமாக இருக்கிறதேயல்லாமல் கூட்டாக எதனையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் இரு சாராரும் கனவிலும் கூட சிந்திப்பதில்லை. குறைந்த பட்சம் மற்றைய கட்சி செய்வதை விமர்சிக்காமலாவது இருப்பதில்லை. அது விக்னேஸ்வரன் கூறுவதைப் போல் அரசியல் பந்தாட்டம் அல்லாமல் வேறென்ன? 

அது மட்டுமல்லாது காலத்துக்குக் காலம் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழ் ஆயுதக் குழுக்களைப் பற்றிய தமது நிபை;பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள். விந்தை என்னவென்றால் ஒரு கட்சி தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் போது மற்றைய கட்சியும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதே. 1980களில் அதிமுக தலைவரும் அப்போதைய முதலமைச்சருமான எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) புலிகளை ஆதரித்ததோடு கருணாநிதி டெலோவை ஆதரித்தார்.
 
எம்.ஜி.ஆர்.இன் மறைவை அடுத்து ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக புலிகளை எதிர்த்ததோடு கருணாநிதி புலிகளை ஆதரித்தார். ராஜிவ் காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஜெயலலிதா புலிகளின் பரம எதிரியாக செயற்பட்டார். அதனால் அவர் புலிகளின் கொலைப் பட்டியலிலும் இடம்பெற்றார். அக்காலத்தில் கருணாநிதியே முதலமைச்சராக இருந்தார்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபா உட்பட அவ்வியக்கத்தின் மூத்த தலைவர்கள் 11பேர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அது தொடர்பான விசாரணைகள் முறையாக நடைபெறவில்லை என்றே கூறப்பட்டது. ஜெயலலிதாவும் இதனை விமர்சித்தார்.

இலங்கையின் போரின் இறுதிக் கட்டத்தின் போது இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் பெரும் அனுதாப அலை உருவாகியது. அப்போது தமிழ் நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் ஏட்டிக்கு போட்டியாக இலங்கை தமிழருக்காக குரல் எழுப்பினர். ஆனால் அப்போதும் ஒருகட்சி மற்றைய கட்சியின் செயல் நேர்மையற்றது என்றே கூறியது.

இதேவேளை போர் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது அவர்கள் இரு சாராரும் புலிகளை எதிர்த்து இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாகும் வகையிலும் கருத்து வெளியிட்டு இருந்தனர். எந்தவொரு போரிலும் சாதாரண மக்கள் கொல்லப்படுவது சகஜம் என ஜெயலலிதா ஒரு கட்டத்தில் கூறியிருந்தார். அதே காலகட்டத்தில் கருணாநிதியும் புலிகள் வன்முறைகளில் ஈடுபட ஆரம்பித்ததை அடுத்து தமது கட்சி அவர்களை கைவிட்டதாக கூறியிருந்தார்.

2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கருணாநிதி தமிழீழமே இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீரவாகும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதாகக் கூறி டெஸோ மாநாட்டை கூட்டினார். அதில் கலந்துகொள்ள வேண்டாம் என இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வைகோ, நெடுமாறன் மற்றும் சீமான் ஆகியோர் தொலைபேசி மூலம் தெரிவித்ததாக இந்து பத்திரிகை தெரிவித்தது.

எனவே தமிழ் நாட்டுத் தலைவர்கள் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு பந்தாடுகிறார்கள் என்று கூறும் போது விக்னேஸ்வரன் உண்மையைத் தான் கூறுகிறார். தமிழ் நாட்டுத் தலைவர்;களின் செயல்களினால் நாமே பாதிக்கப்படுகிறோரம் என்ற விக்னேஸ்வரனின் கருத்தும் பல சந்தர்ப்பங்களில் உண்மையானதே.

அண்மையில் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்குச் சென்ற பௌத்த பிக்குகள் சிலர் தாக்கப்பட்டார்கள். அவர்களை ஓட ஓட விரட்டி விரட்டி தாக்கும் காட்சி தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது. சிங்களவர்களை கேவலப்படுத்தும் வகையிலான வார்த்தைகளும் அவற்றில் பாவிக்கப்பட்டன. அந்நாட்களில் கொழும்பு போன்ற இடங்களில் வாழும் தமிழர்களின் மனதில் இருந்த பதற்றத்தை தமிழ் நாட்டுத் தலைவர்கள் உணர்ந்து இருக்க மாட்டார்கள். இது நாடு தழுவிய ரீதியிலான எத்தனையோ இனக் கலவரங்களை கண்ட நாடு என்பதை அவர்கள் சிந்தித்தாக தெரியவில்லை.

இலங்கை தமிழர்களின் பிரச்சினையை விக்னேஸ்வரன் ஒரு வீட்டில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனையோடு ஒப்பிட்டு இருக்கிறார். இதில் அயல் வீட்டார் தலையிடுவதற்கு ஒன்றும் இல்லை. இதை நாம் தீர்த்துக் கொள்வோம் என்ற அர்த்தத்தில் அவர் கருத்து வெளியிட்டு இருக்கிறார். பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியொன்றின் மூலம் இதற்கு பதிலளித்துள்ள தமிழ் நாட்டு திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் தமிழ் நாட்டுத் தலைவர்கள் கொடுத்த நெருக்குவாரத்தின் காரணமாகவே இலங்கை அரசு வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டியேற்பட்டது என்றும் அதனாலேயே விக்னேஸ்வரன் வேட்பாளராக முடிந்தது என்றும் கூறியிருந்தார்.

அதுவும் முற்றிலும் உண்மையே. நோக்கம் எதுவாக இருந்தாலும் தமிழ் நாட்டுத் தலைவர்களின் நெருக்குதல் காரணமாகவே இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை நெருக்கியது. எனவே தான் 13ஆவது அரசியலமைப்பை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த இலங்கை அரசாங்கம் மாகாண சபை சட்டத்தில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராமல் வட மாகாண சபை தேர்தலை நடத்த முன்வந்தது.

தமிழ் நாட்டுத் தலைவர்களின் இந்த அரசியலைப் பற்றி இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் அதைப் பற்றிப் பேசுவதனால் தமிழ் நாட்டில் தமக்குள்ள ஆதரவு குறைந்து விடும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அது இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாக அமையும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனவே இது போன்ற விடயங்கள் மட்டுமன்றி வட பகுதி மீனவர்களின் பிரச்சினைகளைப் பற்றியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைத் தவிர இலங்கை தமிழ் தலைவர்கள் எவரும் பேசுவதில்லை. பிக்குகளை தாக்கியதைப் போன்ற தமிழ்நாட்டுத் தலைவர்களின் சில செயற்பாடுகள் இலங்கை தமிழர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்பதையும் அவர்கள் கூறுவதில்லை.

பொதுவாக இவர்கள் தமது அரசியலுக்காக அவர்களை பாவிக்கிறார்கள், அவர்கள் தமது அரசியலுக்காக இவர்களை பாவிக்கிறார்கள். இலங்கை தமிழ் மக்களுக்கு இதில் நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. இரு நாடுகளிலும் அரசியல்வாதிகள் நன்மையை மடடுமே அடைகிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு இதில் எவ்வித நன்மையும் இல்லை. விக்னேஸ்வரன் ஒரு முழுமையான அரசியல்வாதியல்ல. அவர் ஒரு தொழில்சார் நிபுணர், ஒரு சட்ட நிபுணர், ஒரு 'புரொபெஷனல்.' எனவே தான் தாம் காண்பதை அவ்வாறே கூறியிருக்கிறார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X