2025 மே 19, திங்கட்கிழமை

வட மாகாண சபை: பிரிவினையின் மையமா? நல்லிணக்கத்தின் மையமா?

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளை வாக்கெடுப்புக்கு முன்னரே மக்கள் அறிந்திருந்தனர். வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறும் என்பதும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாறு காணாத வெற்றியை பெறும் என்பதும் முன்னரே எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

தமிழ் வேட்பாளர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட விக்னேஸ்வரனும் சிங்கள வேட்பாளர்களில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகரவும் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமரின் மகன் அனுராத ஜயரத்னவும் விருப்பு வாக்குகளில் முன்னணியில் இருப்பார்கள் என்பதும் முன்கூட்டியே பலரது அனுமானமாக இருந்தது. சரியான புள்ளி விபரங்களை மட்டுமே மக்கள் அறியாமல் இருந்தனர்.

வட மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அக்கட்சியனர் அதனை தமது பிரிவினைவாத கோரிக்கைக்கு கிடைத்த மக்கள் ஆணை என உலகில் பிரசாரம் செய்யக்கூடும் என்பதால் ஏனைய இரண்டு மாகாணங்களில் மக்கள் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார். இதுவும் வட மாகாணத்தில் தமிழ் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதை முன்கூட்டியே ஏற்றுக்கொண்டதற்குச் சமமாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இருந்தால் தமிழ் கூட்டமைப்பு பிரதேச ரீதியாக மட்டுமே இவ்வளவு பாரிய வெற்றியை பெற்றிருக்க முடியும். மொத்த மாகாண சபையில் அப்போது அக்கூட்டமைப்பு இது போன்ற அறுதிப் பெரும்பான்மையை பெற்றிருக்க முடியுமா என்பது சந்தேகமே. எனவே மாகாணங்களை இணைத்திருக்கலாமே என்று அரசாங்கத்தின் சில தலைவர்கள் இப்போது நிணைக்கவும் கூடும்.

ஏனைய இரண்டு மாகாணங்களிலும் அரசாங்கம் இருந்த இடத்தில் தான் இருக்கிறது. அல்லது சற்று சரிந்திருக்கிறது. இதுவும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மதியாது தமிழ் மக்கள் தம்மை புறக்கணித்து இருப்பதும் அரசாங்கம் தீவிரமாக கருத்தில்கொள்ள வேண்டிய விடயங்களாகும். குறிப்பாக மிகவும் நீண்ட காலமாக அதாவது 1995ஆம் ஆண்டு முதல் அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்திலிருந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் கூடுதலான வீதத்தில் (84 வீதத்தில்) வாக்குகளை பெற்றிருக்கிறது.

ஆனால் அரசியல் கட்சிகளின் கொள்கைகளுக்காகத் தான் மக்கள் வாக்களித்தார்களா என்பது சந்தேகமே. தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் காரணமாகவே தமிழ் மக்கள் தமக்கு இவ்வாறு பெருமளவில் வாக்களித்தார்கள் என்று தமிழ் கூட்டமைப்பும் தமது அபிவிருத்தி திட்டங்களினால் மக்கள் தமக்கு வாக்களித்தார்கள் என்று அரசாங்கமும் இப்போது கூறலாம். தமிழ் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுய நிர்ணயம், சுயாட்சி, மாகாண இணைப்பு ஆகியவற்றை சேர்த்திருக்காவிட்டால் மக்கள் இதை விட குறைவாக அக்கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பார்களா?

அதேவேளை ஒருபுறம் அவசியம் ஏற்பட்டால் நாம் வெளிவாரி சுய நிர்ணயத்தையும் (தனித் தமிழ் நாட்டையும்) கோருவோம் என்றும் தமிழ் உணர்வுகளை பாரதூரமாக தூண்டிய தமிழ் கூட்டமைப்பு அடுத்த நிமிடத்தில் நாம் பிரிவினையை ஒருபோதும் கோரவில்லை என்று கூறியது. இதுவரை கோரவில்லை. ஆனால் அவசியம் ஏற்பட்டால் கோருவோம் என்று தான் கூறினோம் என்று அவர்கள் வாதிடலாம். ஆனால் மக்களுக்கு அவர்கள் வழங்கிய ஒட்டுமொத்த செய்தி என்ன என்பதே கேள்வியாகும். எனவே மக்கள் கொள்கைகளுக்காக வாக்களித்தார்களா என்பது சந்தேகமே.

அதேபோல் அரசாங்கம் மனம் போன போக்கில் நடந்து கொள்கிறது. விலைவாசி வானலாவ உயர்ந்து கொண்டே போகிறது. அண்மையில் மக்கள் மீது பெரும் சுமையாக அமையும் வகையில் அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரித்தது. அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதாக 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குறுதியளிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால் தென் பகுதி மக்கள் இத்தேர்தல்களின் போது ஐ.ம.சு.கூட்டணியை உதறித்தள்ளவில்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான மோசமான பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றன. முஸ்லிம் தீவிரவாதமே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு காரணம் என அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். சமாளித்து பேசுவதைத் தவிர எவரும் எதிர்த்து பேசாத நிலையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மட்டுமே, அவ்வாறாயின் அரசாங்கம் ஏன் முஸ்லிம் தீவிரவாத நாடுகள் என்று பெயர் பெற்றுள்ள ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். ஆனால் மன்னாரில் ஆளும் கட்சியே பெருமளவில் வாக்குகளை பெற்றிருக்கிறது.

தமது அரை நூற்றண்டு கால வரலாற்றில் பொதுச் சொத்தை திருடியதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டப்படவில்லை. மாறாக அக்கட்சி ஊழல், மோசடி, வீண் விரயம் இல்லாமல் இரண்டு முறை திஸ்ஸமகாராம பிரதேச சபையை நடத்திக் காட்டியது. ஆனால் அக்கட்சி இம்முறை மாகாண சபைத் தேர்தலில் மேலும் சரிந்துள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் ஐ.ம.சு.கூட்டணிக்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட எத்தனையோ பேர் இருக்க சில வாரங்களுக்கு முன்னர் தமது சொந்த நலனுக்காக அக்கட்சிக்குத் தாவிய தயாசிறி ஜயசேகரவே அதிகப் பெரும்பான்மை விருப்ப வாக்குகளை (மூன்று லட்சத்திற்கு மேல்) பெற்றிருக்கிறார்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வட பகுதி தமிழ் மக்களும் தம்மை வாட்டிய போரின் போது அரச படைகளுக்குத் தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவையே ஆதரித்தனர். இம்முறையும் பொன்சேகாவை விமர்சிக்க வேண்டாம் என புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் அறிவுறுத்தப்பட்டார் என ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

அவ்வாறாயின் மக்கள் கொள்கைகளுக்காகத் தான் வாக்களிக்கிறார்கள் என்று கூற முடியுமா? உண்மையிலேயே மக்கள் எப்போதும் வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சிக்கே வாக்களிக்கிறார்கள். அதற்கு மேலாக மக்களை வழிநடத்தும் ஒரே சக்தி இன உணர்வே. கிழக்கில் போல் வடக்கிலும் ஐ.ம.சு.கூட்டணி வெற்றி பெறும் அறிகுறிகள் தென்பட்டிருந்தால் நிலைமை இதை விட வித்தியாசமானதாகவே இருந்திருக்கும்.

இத்தேர்தல் முக்கிய விடயமொன்றையும் எடுத்துக் காட்டுகிறது. அதாவது அரசாங்கத்தை விட்டு விலகும் வாக்காளர்கள் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் கட்சியையே ஆதரித்துள்ளனர் என்பதே.

வட மாகாண சபையை தமிழ் கூட்டமைப்பு கைப்பற்றியிருப்பதால் இப்போது அரசாங்கமும் தமிழ் கூட்டமைப்பும் கட்டாயமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியிருக்கிறது. இரு சாராரும் மனம் வைத்தால் நாட்டில் நிரந்தர அமைதிக்கும் இந்த நிலைமையை பாவிக்க முடியும். ஆனால் ஒரு சாரார் அல்லது இரு சாராரும் தமது இனச் சமூகத்தின் இன உணர்வுகளை திருப்திப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கினால் இந்த மாகாண சபையே ஆறாவது அரசியலமைப்பு திருத்தத்தைப் போல இரு சாராரையும் மோத வைக்கும். அது நிச்சயமாக மீண்டும் அழிவுப் பாதையை திறந்து விடும்.

ஆதிகாரப் பரவலாக்கலை தாம் பிரிவினைக்காக பாவிக்கப்போவதில்லை என்று தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும் தென் பகுதி மக்களுக்கும் உணர்த்தும் வகையில் பேசுவதாக இருந்தால், செயற்படுவதாக இருந்தால், அதேவேளை அதிகார பரவலாக்கலானது மத்தியில் ஆளும் கட்சிக்கு அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்காகவன்றி, பிரிவினையின் பக்கம் நகரும் ஒரு இனச் சமூகத்திற்து தமது முக்கிய அலுவல்களை செய்து கொள்வதற்கான அதிகாரங்களை வழங்கி அவர்களை பிரிவினைப் போக்கிலிருந்து அகற்றிவிடுவதே என்பதை அரசாங்கமும் உணர்ந்து கொண்டால் வட மாகாண சபையே நல்லிணக்கத்தின் மத்திய நிலையமாக மாறிவிடும்.

You May Also Like

  Comments - 0

  • thamilan Wednesday, 25 September 2013 03:18 PM

    இவரின் கருதுக்கள் உண்மையல்ல, பிழையான கருத்தை பரப்ப முயல்கிறார்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X