2025 மே 19, திங்கட்கிழமை

ஏன் இந்தப் படுதோல்வி?

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.சஞ்சயன்
 
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 2005இல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், தேர்தல் ரீதியாகவும், அரசியல் ரீதியாக சந்தித்துள்ள மிகப்பெரிய தோல்வி இது.
 
இப்படியொரு தோல்வி அரசாங்கத்துக்கு ஏற்படும் என்றோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தளவு பெரிய இமாலய வெற்றி கிடைக்கும் என்றோ எவரும் நினைத்திருக்கவில்லை.
 
காரணம், வடக்கில் அரசாங்கத்தின் அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களால், அரசியல் ரீதியாக மக்கள் கவரப்படக் கூடும் என்ற கருத்து பரவலாக இருந்து வந்ததால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தளவு பெரிய வெற்றியை எவராலும் கணிக்க முடியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூட இதனை எதிர்பார்க்கவில்லை.
 
அவர்கள், 30 ஆசனங்களை வென்றால், தமது குரலை உலகம் காது கொடுத்துக் கேட்கும் என்று பிரசாரங்களை செய்திருந்தனரே தவிர, எவரும் 30 ஆசனங்களை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவிக்கவில்லை.
 
தேர்தல் காலத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்த இராணுவத் தலையீடுகள், அச்சமான சூழல், அரசாங்கத்தின் பிரசாரங்கள், அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் என்று பல்வேறு காரணங்களால், இந்தத் தேர்தலில் தாம் கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும் என்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் உறுதியாக நம்பினார்கள். அதனால், பிரசாரங்களில் கடுமையாக உழைக்க அவர்கள் தவறவில்லை.
 
கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் அலை வீசியது என்று கூறமுடியாவிட்டாலும், கணிசமானவர்கள் கலந்து கொண்டனர். அதை வைத்துக் கூட வாக்களிப்பு எப்படியிருக்கும் என்று சரிவரக் கணிக்க முடியவில்லை.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்ற கருத்து பரவலாகவே இருந்தாலும், ஆளும்கட்சி கடும் போட்டியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாக்காளர்கள் மெளனமாக செய்த புரட்சி, கூட்டமைப்பை வெற்றியின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளது.
 
சில ஆங்கில ஊடகங்கள் இதனை ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுனாமி என்று குறிப்பிட்டிருந்தன. தேர்தல்களில் சில கட்சிகளுக்கு ஆதரவாக அலை வீசுவதுண்டு. இது அதற்கும் அப்பால், பேரலையாக எழுந்ததால் தான், சுனாமி என்று குறிப்பிடப்பட்டது.
 
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில், இந்தளவுக்கு ஆசனங்களைப் பெறுவதும், வாக்குகளைக் கவர்வதும் அசாதாரணமான விடயங்கள்.
 
இலங்கைத் தேர்தல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான பதிவாக எப்போதும் பேசப்படும்.
 
இந்த வெற்றி எவ்வாறு சாத்தியமானது, கோடி கோடியாக கொட்டியும் ஏன் அரசாங்கம் தோற்றுப்போனது – இந்தக் கேள்விகளுக்கு இப்போதும் பலர் விடைதேடிக் கொண்டிருக்கின்றனர்.
 
வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து, அரசாங்கம் பெரும் மனக்கோட்டை கட்டியிருந்தது என்பதே உண்மை. அதனால் தான், அங்கு தனக்கான ஒரு வலுவான தளம் கட்டியெழுப்பப்படும் வரைக்கும் காத்திருந்தது.
 
போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பின்னரும், வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததற்கு அதுவே காரணம்.
 
அபிவிருத்தித் திட்டங்களின் மூலமும், வேலைவாய்ப்புகள், சலுகைகள் மூலமும், அரசாங்கம் தனக்கானதொரு தளத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டு தான், இந்தத் தேர்தலில் மல்லுக்கட்டியது.
 
அதனால் தான், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், கிளிநொச்சிக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கிலுள்ள மக்களின் மனநிலையை தாம் சரியாக அறிந்து வைத்துள்ளதாகவும், குமார் பொன்னம்பலத்தை தோற்கடித்து விட்டு, ஹெக்டர் கொப்பேகடுவவை வெற்றிபெற வைத்தவர்கள் அவர்கள் என்று தப்பும் தவறுமான உதாரணத்தை காட்டியிருந்தார்.
 
தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக, ஊடக ஆசிரியர்களை சந்தித்த போது, வடக்கு மாகாணத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தனக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். வடக்கில் நடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டிருந்த மக்களைப் பார்த்து, அவர் மட்டுமல்ல, அரசதரப்பிலுள்ள எல்லோருமே புல்லரித்துப் போயினர்.
 
அதனால் தான், வடக்கில், தமக்குச் சாதகமான அலையே வீசுவதாக அரசதரப்பு அமைச்சர்கள் பலரும், கொழும்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி கூறிக் கொண்டிருந்தனர்.
 
ஆனால், அபிவிருத்தித் திட்டங்களும், அரசாங்கத்தின் கூட்டங்களில் கூடும் கூட்டமும், வாக்காளர்களின் முடிவுகளைத் தீர்மானிக்காது என்ற உண்மை, தேர்தலின் பின்னர் தான் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
 
வடக்கைப் பற்றிய – தமிழ் மக்களைப் பற்றிய அரசாங்கத்தின் எல்லாக் கணிப்புகளுமே தவறாகத் தான் முடிந்துள்ளது என்பது முக்கியமானது.
 
போர் முடிவுக்கு வந்த பின்னர், பிரபாகரனுடன் அவரது ஈழக்கனவும் செத்துப் போய் விட்டதாக மார்தட்டிக் கொண்டதும் இதே அரசாங்கம் தான். பின்னர், சில மாதங்களிலேயே, இன்னமும் நாட்டைப் பிரிக்க பலர் சதி செய்கிறார்கள் என்றும், ஈழக் கோரிக்கை சாகவில்லை என்றும் சான்றிதழ் கொடுத்ததும் இதே அரசாங்கம் தான்.
 
வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை முன்வைத்த போது நாட்டைப் பிரிக்க சதி செய்வதாக ஓலமிட்டதும் இதே அரசாங்கம் தான்.
 
போரை, போருக்கான அடிப்படைகளை, போருக்கு வலுச்சேர்த்த காரணங்களை அரசாங்கம் சரியாக கணித்திருந்தால், இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்காது.
 
முப்பதாண்டு காலப் போரின் எல்லாக் காயங்களுமே, அபிவிருத்தி மாயைக்குள் அடக்கமாகி விடும் என்று போட்டதே முதலாவது தப்புக்கணக்கு.
 
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன, அவர்களின் விருப்பங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முனையாமல், தான் வரைந்து வைத்த ஒரு வட்டத்துக்குள் அவர்களை இழுத்து வரலாம் என்று கருதியது அடுத்த தவறு.
 
இப்படியே பல தப்புக்கணக்குகளைப் போட்டுக் கொண்ட அரசாங்கம், வடக்கிலுள்ள தமிழர்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு, தம்மையே ஆதரிப்பார்கள் என்று கருதியது தான் உச்சக்கட்ட தவறு.
 
அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, சலுகைகள் என்று எல்லாவற்றுக்கும் அப்பாலும், வடக்கிலுள்ள தமிழர்கள் தமக்கு அபிலாசைகள் உள்ளன என்பதை வெளிப்படுத்தக் காத்திருந்தார்கள். அதற்கான வாய்ப்பாக மாகாணசபைத் தேர்தலை அவர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர்.
 
அரசதரப்பில் போட்டியிட்ட கட்சிகள், வேட்பாளர்கள் பலரால், இப்படியொரு தோல்வியை நம்பவே முடியவில்லை. ஏனென்றால், அவர்களின் எதிர்பார்ப்பு மிகையானதாக இருந்தது.
 
நியாயமான தேர்தலை நடத்துவதாக உலகத்துக்கு வாக்குறுதி கொடுத்திருந்த அரசாங்கத்தினால், சர்வதேச கண்காணிப்பாளர்களின் கவனம் வடக்கின் மீது குவிந்திருந்த காரணத்தினால், இது மோசடியான வெற்றி என்று கூறமுடியவில்லை.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட இறுதிநேர முயற்சிகள் பல, அருவருக்கத்தக்கவையாகவும், மலினத்தனமானவையாகவும் இருந்தன.
 
ஆனால், அவையெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு இன்னும் வலுச்சேர்க்க உதவியிருப்பதாகவே தெரிகிறது. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இமாலய வெற்றிக்கு, அரசாங்கமே பல வழிகளில் துணைபோயுள்ளது.
 
ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தமிழர் பிரச்சினைக்கு இது தான் தீர்வு என்றோ, பிரச்சினை குறித்து தமிழர்களின் பிரதிநிதிகளுடன் பேசுவோம் என்றோ அரசாங்கம் வாக்குறுதியை கொடுக்கவில்லை. அரசாங்கம் பேசியதெல்லாமே அபிவிருத்தி, நிதியுதவி பற்றித் தான்.
 
ஆனால் தமிழர்கள் தமது அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதையே எதிர்பார்த்தனர். அதனால் தான், உரிமைகள் தொடர்பாக எந்த வாக்குறுதியையும் வழக்கத் தயாராக இல்லாத அரசாங்கத்தை அவர்கள் ஆதரிக்க மறுத்துள்ளனர்.
 
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் அறிக்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், அரசாங்கத்துக்கு இன்னமும் நெருக்கடியை ஏற்படுத்தப் போகிறது. ஏனென்றால், அதனை தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான ஆணையாக உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
 
தமிழ்மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக அரசாங்கம் மீளச் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இது ஒரு முக்கியமானதும் யதார்த்தமானதுமான கருத்து.
 
தமிழர் பிரச்சினை தொடர்பான கொள்கைகளை அரசாங்கம் மாற்றிக் கொள்ள வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளது என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. அரசாங்கம் சாதகமான மாற்றத்துக்குத் தயாராக இருக்குமேயானால், அதுவே நிலையான அமைதிக்கான அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X