2025 மே 19, திங்கட்கிழமை

தமிழக அரசியல் களம் சந்திக்கும் நேரடிப் போட்டி

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் நேரடிப் போட்டி தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும், பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகப் பவனி வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்குமே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது என்று கூறிவிடலாம். அந்த அளவிற்கு அரசியலில் நட்பாக இருந்த இரு தலைவர்களும் இன்று எதிர் எதிர் முகாம்களில் நிற்க வேண்டிய சூழல் உருவாகி வருகிறது. நண்பர்கள் அரசியலில் எதிரிகளாகிவிடுவது இப்படித்தான் என்று நினைக்கும் அளவிற்கு நரேந்திர மோடிக்கும் ஜெயலலிதாவிற்கும் "மௌன யுத்தம்" நடந்து கொண்டிருக்கிறது.
 
சமீபத்தில் திருச்சிக்கு வந்தார் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. அவர் "இளந்தாமரை" பொதுக்கூட்டத்தில் பேசினார். அக்கூட்டத்திற்கு போதிய பொலிஸ் பாதுகாப்புகளைக் கொடுத்தது தமிழக அரசு. மோடியின் பேச்சு அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள 16 வயது இளைஞரிலிருந்து 60 வயது முதியவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்தது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் இளைஞர்கள். தமிழக பா.ஜ.க. இப்படியொரு கூட்டத்தைப் பார்த்தது இல்லை என்றே கூற வேண்டும். அவ்வளவு பெரிய கூட்டம் திருச்சியில் பா.ஜ.க.விற்காகக் கூடியிருந்ததைப் பார்த்த அரசியல் கட்சிகள் அனைத்துமே மிரண்டு போயிருக்கின்றன. குறிப்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ போன்றவர்கள், "இவருக்கு என்ன மாதிரி இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது. எப்படிப் பேசுகிறார் மோடி" என்றே வியந்து போனார்கள். இத்தனைக்கும் இந்தியில் மோடி பேச, அந்தப் பேச்சை தமிழக பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மொழி பெயர்த்தார். இன்னும் மோடி போன்றவர்கள் முழுவதும் தமிழில் பேசியிருந்தால், தமிழகமே ஆர்ப்பரித்திருக்கும் என்று பல அரசியல் கட்சித் தலைவர்களும் கூறுகிறார்கள்.
 
இந்த பிரமாண்டமான மோடி கூட்டத்தை அனைத்து டி.வி. சேனல்களும் "நேரடி" ஒளிபரப்புச் செய்தன. குறிப்பாக விஜயகாந்த் நடத்தும் டி.வி.யில் மோடி பேச்சை திருப்பித் திருப்பி போட்டுக் கொண்டிருந்தனர். ஏன் தி.மு.க.வின் "கலைஞர் டி.வி"யில் அவரது கூட்டத்திற்கான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. இன்னும் சொல்லப் போனால் மோடியின் பேச்சை பின்னணியாக வைத்து ஒரு விவாதமே நடத்தப்பட்டது. ஆனால் தமிழக டி.வி. சேனல்களில் மோடியின் வருகையையோ, அவரது நிகழ்ச்சிகளையோ, அவரது பேச்சையோ கண்டுகொள்ளாமல் இருந்தது ஒரேயொரு டி.வி.தான். அது அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வமான டி.வி.யான "ஜெயா டி.வி". இது தவிர அனைத்து டி.வி.சேனல்களிலுமே நரேந்திரமோடியின் தமிழக சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
 
அது மட்டுமல்ல, நரேந்திர மோடியின் வருகைக்கு முன்பு பிரபல "துக்ளக்" பத்திரிக்கை ஆசிரியர் சோ தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். நரேந்திர மோடியின் வருகை குறித்தும், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைப்பது பற்றியும் பேசியிருக்க வேண்டும் என்பதே உள்வட்டாரச் செய்தி. ஆனால் அந்த சந்திப்பிற்குப் பிறகு, "ம.தி.மு.க.வுடன் கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்" என்று பா.ஜ.க. முக்கியத் தலைவர்களில் ஒருவரான இல. கணேசன் ஆங்கிலப் பத்திரிக்கையான "டைம்ஸ் ஒஃப் இந்தியா" விற்கு பேட்டியளித்தார். அதில், "தமிழக முதலமைச்சரை பிரதமர் வேட்பாளராக அ.தி.மு.க.வினர் முன்னிறுத்தி விட்டார்கள். அதனால் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் தேர்தலுக்கு முன் இடம்பெறுவதற்கு சாத்தியமில்லை" என்று அறிவித்தார். வெளிப்படையாகவே இப்படிச் சொன்ன இல.கணேசன், "தே.மு.தி.க. மற்றும் ம.தி.மு.க. போன்ற கட்சிகளுடன் சில நண்பர்கள் கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்றும் கூறினார். இந்தப் பேட்டி அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் தேர்தலுக்கு முன்பு கூட்டணி இல்லை என்பதை நரேந்திர மோடியின் வருகைக்கு முன்பே தமிழக வாக்காளர்களுக்கு அறிவித்தது.
 
இந்நிலையில் நரேந்திர மோடி திருச்சிக்கு வந்தார். அக்கூட்டத்தில் பேசினார். பக்கத்து மாநிலமான ஆந்திராவில் உள்ள ஹைதராபாத்திற்கு வந்த போது, "தமிழக அரசின் நிர்வாகம் சிறப்பாக நடக்கிறது. அந்த மாநிலத்தில் நடக்கும் நிர்வாகத்தைப் பார்த்து மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆந்திர மாநில முதல்வர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து நிர்வாகத்தை கற்றுக் கொள்ள வேண்டும்" என்ற தொணியில் பேசினார். இதற்கு ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூட கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டார். ஆனால் தமிழகத்திற்கு வந்த நரேந்திர மோடி அ.தி.மு.க. அரசை பாராட்டவில்லை. தமிழக முதல்வரின் நிர்வாகச் சிறப்பு பற்றியும் பேசவில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை அ.தி.மு.க. எடுத்து விட்டது என்பதை உணர்ந்த நரேந்திரமோடி பாராட்டு வழங்கவில்லை. அதே நேரத்தில் ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் அ.தி.மு.க. அரசை பாராட்டிப் பேசி விட்டதால், தமிழக கூட்டத்தில் அ.தி.மு.க. அரசை விமர்ச்சித்தும் பேச முடியவில்லை. அதனால் பொதுவாக பாகிஸ்தான், இலங்கை தமிழர் பிரச்சினை போன்றவற்றைப் பேசி விட்டு அவரது வழக்கமான "காங்கிரஸ் அட்டாக்கை" தொடுத்து விட்டுக் கிளம்பிச் சென்றார். குறிப்பாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதைத் தொட்டுப் பேசினார். 
 
காங்கிரஸ் அட்டாக் என்பது தமிழகத்தின் தெருக்களில் ஏற்கனவே விற்றுப் போன சரக்கு என்பதை மோடிக்கு ஏனோ இங்குள்ள பா.ஜ.க. தலைவர்கள் எடுத்துச் சொல்லவில்லை போலிருக்கிறது. ஏனென்றால் கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக தமிழகத்தில் உள்ள கட்சிகள் காங்கிரஸ் அட்டாக்கைத் தவிர வேறு எந்த அரசியலும் பேசுவதில்லை என்பதை நரேந்திர மோடி மறந்து விட்டார். ஏன் "நாம் தமிழர் கட்சி" துவங்கி, சீமான் ஊர் ஊராகச் சென்று "காங்கிரஸ் அட்டாக்" மட்டுமே தன் மூலதனமாக வைத்து பாலிடிக்ஸ் பண்ணினார் என்பதையும் பா.ஜ.க.வினர் உணரவில்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் தமிழக காங்கிரஸ் கட்சி தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுக்குமே "காங்கிரஸ் அட்டாக்" என்பதுதான் பிராண வாயு. தமிழகத்தில் ஏற்கனவே புளித்துப் போன காங்கிரஸ் அட்டாக் பற்றி அவருக்கு "என்னென்ன சப்ஜெக்டுகள் பேச வேண்டும்" என்று "ரிசர்ச்" பண்ணிக் கொடுத்தவர்கள் தெரிவிக்க மறந்து விட்டார்கள். அதனால்தான் காங்கிரஸ் மீதான தாக்குதலை பிரதானமாக தொடுத்து விட்டுக் கிளம்பினார் மோடி.
 
நரேந்திர மோடி "காங்கிரஸ் அட்டாக்" பண்ணியதற்குப் பதில், தன் கட்சியினர் அடுத்தடுத்து தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டது குறித்து விரிவாகப் பேசியிருக்கலாம். ஏனென்றால் மோடி திருச்சிக்கு வரும் வேளையில்தான் "தமிழகத்தில் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்கள் கொலை செய்யப்படுவது பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டும்" என்று அக்கட்சியினர் இந்திய சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்து இருந்தனர். அப்படியும் இல்லையென்றால் 2-ஜி அலைக்கற்றை ஊழலில் காங்கிரஸின் பங்கு என்ன என்று கேள்வி எழுப்பியிருக்கலாம். அது குறைந்த பட்சம் தி.மு.க.வையாவது திருப்திப்படுத்தியிருக்கும். இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு, பாகிஸ்தான், காங்கிரஸ் அட்டாக் என்று மட்டும் நரேந்திர மோடி பேசி விட்டுப் போனதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. இன்னும் ஏதாவது ஒரு மாற்றம் அ.தி.மு.க. தலைமைக்கு வந்து விடாதா? அக்கட்சி பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணி வைத்துவிடாதா என்ற ஏக்கம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, பா.ஜ.க.வின் பல முன்னணித் தலைவர்களுக்கும் இருக்கிறது என்பதே இதன் உள்ளர்த்தம். ஆனால் அ.தி.மு.க. தலைமையைப் பொறுத்தமட்டில் "பிரதமர் பதவி" என்ற ஓர் உறைக்குள் இரு கத்திகள் இருக்க முடியாது என்பதில் தெளிவாக இருப்பது போலவே தெரிகிறது. அதனால்தான் நரேந்திர மோடிக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்ற விஷயம் தவிர மற்ற அரசியல் ரீதியான விஷயங்களில் நரேந்திர மோடியின் திருச்சி வருகைக்கு அ.தி.மு.க. தலைமை பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
 
ஆனால் "மோடி பிரச்சினை" அ.தி.மு.க.விற்கு தலைவலிதான் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் கூட்டணி அமைந்தாலும் சரி, பா.ஜ.க. மற்றும் ம.தி.மு.க. கூட்டணி அமைந்தாலும் சரி, தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. கூட்டணி அமைந்தாலும் சரி- இவை அனைத்திலுமே அ.தி.மு.க.விற்குத்தான் வாக்கு வங்கிப் பிரச்சினை ஏற்படும் என்றே எண்ணுகிறார்கள். ஏனென்றால் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு மூன்று வகையான வாக்கு வங்கி இப்போது உருவாகியிருக்கிறது. மோடியின் முகத்தால் இளைஞர்கள் வாக்கு வங்கி. ஏற்கனவே அக்கட்சிக்கு உள்ள இந்துத்துவா வாக்கு வங்கி. மூன்றாவதாக காங்கிரஸ் பலவீனப்பட்டு நிற்பதால் தடுமாறி நிற்கும் தேசிய சிந்தனை கொண்டோரின் வாக்கு வங்கி. இந்த மூன்று வாக்கு வங்கியுமே பா.ஜ.க. பக்கமாக திரளுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நரேந்திர மோடியை முன்னிறுத்தி தமிழகத்தில் உருவாகும் எந்தக் கூட்டணிக்கும் இந்த வாக்கு வங்கிகள் துணை நிற்கும். முன்பெல்லாம் பா.ஜ.க. மட்டும் தேர்தல் களத்தில் நிற்கும். அதனால் பா.ஜ.க. வேட்பாளருக்குப் போடும் வாக்கு அக்கட்சி வேட்பாளர் ஜெயிக்க உதவாது என்று கருதி அ.தி.மு.க.வின் வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். ஆனால் மோடியை முன்னிறுத்தும் சமயத்தில் அந்த வாக்காளர்கள் அ.தி.மு.க. பக்கம் போக மாட்டார்கள். இது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாதிக்கும் வாய்ப்புள்ளது. அது மட்டுமல்ல, அக்கட்சியின் வெற்றி வாய்ப்பிற்கே சிக்கலை ஏற்படுத்தும் சக்தி மிக்கது.
 
ஆகவே தமிழகத்தில் உள்ள இந்த வாக்கு வங்கியை அ.தி.மு.க. தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அக்கட்சி நரேந்திர மோடியை முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற நிலை உருவாகிறது. அதற்கு "எங்கள் அம்மாவே அடுத்த பிரதமர்" என்று கடந்த இரு வருடங்களாக பட்டி தொட்டியெல்லாம் செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரசாரம் தடைக்கல்லாக நிற்கிறது. இரு வருடங்கள் இதையே முன்னிறுத்திப் பிரசாரம் செய்து விட்ட அ.தி.மு.க.வினர் இனி திடீரென்று அதை மாற்றி விட்டு, வேறு பிரசாரத்தில் ஈடுபட முடியாத இக்கட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். 
 
ஆகவே தேசிய அளவில் கம்யூனிஸ்டுகளுடன் இணக்கமாக இருப்போம். பா.ஜ.க.விற்கும், காங்கிரஸுக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், அந்த சூழ்நிலையை கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆதரவுடன் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் அ.தி.மு.க. தலைமை "மோடி தவிர்ப்பு" வியூகத்தைக் கையிலெடுத்துள்ளது. இதனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் தமிழக தேர்தல் களத்தில் நேரடி மோதல் உருவாகும் சூழலுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X