2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கைக்கு அதிகரிக்கப் போகும் அழுத்தங்கள்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.சஞ்சயன்
 
அரசாங்கம் விரும்பாவிட்டாலும், இலங்கைப் பிரச்சினை ஒரு சர்வதேச விவகாரமாக மாற்றம் பெற்றுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், வன்னியில் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போது, உலகின் கவனம் இலங்கை மீது ஒன்று குவிந்திருந்தது. அதற்குப் பிந்திய காலகட்டத்தில், அவ்வப்போது மனிதஉரிமை மீறல்கள் விவகாரங்களினால், உலகின் கவனம் இலங்கை மீது திரும்பினாலும், எல்லாத் திசைகளிலும் அது எதிரொலித்திருக்கவில்லை.
 
ஆனால், இப்போது இலங்கை விவகாரம் ஒரு சர்வதேச விவகாரமாக, உலகநாடுகள் மத்தியில் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. நவநீதம்பிள்ளையின் இலங்கைப் பயணம், அதையடுத்து அவர் ஜெனிவாவில் சமர்ப்பித்த அறிக்கை, ஐ.நா பொதுச்சபைக் கூட்டம், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, எல்லாமே இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தியுள்ளன.
 
இது உள்நாட்டு விவகாரம், வெளிநாடுகள் தலையிடவோ கருத்துகளை வெளியிடவோ கூடாது என்று இலங்கை அரசாங்கம் கூறினாலும், தவிர்க்க முடியாமல், இலங்கை அரசாங்கம் சர்வதேச அரங்கில் தன்னை நியாயப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
 
சர்வதேச அரங்கில் தனக்கு ஆதரவான சூழலை உருவாக்குவதற்காக பல்வேறு நாடுகளுடன் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி, இலங்கையின் நிலைமைகளை எடுத்துக் கூறி, இந்த விவகாரத்தை சர்வதேச மயப்படுத்துவதில் இலங்கைக்கும் கணிசமான பங்குள்ளது.
 
ஒரு பக்கத்தில், உள்நாட்டு விவகாரத்தை சர்வதேச மயப்படுத்துவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் பிற தரப்பினர் மீதும் குற்றம்சாட்டும் இலங்கை அரசாங்கமே, மறுபுறத்தில் தானும் அதேபோல சர்வதேச மயப்படுத்தி வந்துள்ளது.
 
இத்தகைய சூழலில், கொமன்வெல்த், ஐ.நா பொதுச்சபை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை, அணிசேரா நாடுகள் அமைப்பு என்று இலங்கை அரசாங்கம் அங்கம் வகிக்கும் சர்வதேச மன்றங்களிலெல்லாம், இலங்கை விவகாரம் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
 
வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தியதன் மூலம், அங்கு மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தி விட்டதாக அறிவித்து, தனக்குச் சாதகமான சூழலை உருவாக்க இலங்கை அரசாங்கம் முயன்ற போதிலும், அது பெருமளவில் பயனளிக்கவில்லை. ஏனென்றால், இலங்கையில் போருக்குப் பிந்திய சூழலை உலகம் எவ்வாறு கவலையுடன் நோக்கியதோ, அதுபோலவே, வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பிந்திய சூழலையும் உலகம் உன்னிப்புடன் அவதானித்து வருகிறது.
 
வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதை மட்டும் உலகம் அக்கறை செலுத்தவில்லை. அதன் ஊடாக, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சூழல் உருவாகுமா என்பதே சர்வதேச சமூகத்தின் கவலையாக உள்ளது. அதுதான் இறுதியான அமைதியை உருவாக்குவதற்கான அடித்தளமாக இருக்கும் என்று உலகம் நம்புகிறது.
 
இதனால், வடக்கு மாகாணசபையின் நிர்வாகம், சிக்கலின்றி இயங்க வேண்டும் என்று வெளிநாடுகளும், சர்வதேச அமைப்புகளும் கவலை கொண்டுள்ளதில் ஆச்சரியமில்லை. 
 
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நியுயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்திருந்தார். வடக்கு மாகாணசபைக்கு வெற்றிகரமாகத் தேர்தலை நடத்தி விட்டோம் என்று பெருமிதப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடுகள் எவ்வாறு இருக்கும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன் கேள்வி எழுப்பியதாகத் தகவல்.
 
உரிய நடைமுறைகளின்படி மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மாகாணசபைக்கான அதிகாரங்கள் குறித்தும், வடக்கு மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசம் சென்றுள்ளதால் இலங்கை அரசாங்கத்தினால் வஞ்சிக்கப்படுமா என்றும் சர்வதேச சமூகம் அஞ்சுகிறது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் எழுப்பிய கேள்வி, இதனைத் தான் வெளிப்படுத்துகின்றது. பான் கீ மூனிடம் மட்டுமன்றி, அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளிடமும் இதே சந்தேகமும் கேள்வியும் இருக்கிறது.
 
வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்த பின்னர், இந்த நாடுகள் வெளியிட்ட தனித்தனியான அறிக்கைகள், மற்றும் கருத்துகளில் அந்தப் பயம் எதிரொலித்ததைக் காணலாம்.
 
மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்றும், வடக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் இந்த நாடுகள் வலியுறுத்தியிருந்தன.
 
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வெளியிட்ட அறிக்கையிலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், குறிப்பாக வடக்கு மாகாணசபையுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுவதன் மூலமே, இலங்கையில் அமைதிக்கான கதவுகளை திறக்க வைக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடு தான் அது. மாகாணசபைக்கான போதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டு, தமிழ் மக்கள் அந்த அதிகாரங்கள் குறித்து திருப்தி கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலமே, இனங்களுக்கு இடையில் தோன்றிய பகைமை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்ற சர்வதேச சமூகத்தின் நம்பிக்கைக்கு ஏற்ற சூழல் இலங்கையில் நிலவுவதாகத் தெரியவில்லை.
இதற்கு இரண்டு தரப்புகள் காரணமாக உள்ளன.
 
முதலாவது, தென்னிலங்கையில் உள்ள சிங்களத் தேசியவாத சக்திகள். இரண்டாவது, அரசாங்கம்.
 
வடக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, அதை நாட்டைப் பிரிப்பதற்கான நடவடிக்கையாக சித்திரித்து, சிங்களத் தேசியவாத சக்திகள் பிரசாரம் செய்யத் தொடங்கின. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதுமே, இந்த தேசியவாத சக்திகளின் பிரசாரங்கள் இன்னும் மோசமடைந்துள்ளன.
 
வடக்கு மாகாணசபையை வைத்து, தனிநாட்டை அமைத்து விடப் போகிறார்கள் என்ற தேவையற்ற பீதியை தெற்கிலுள்ள சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கமும் துணைபோயுள்ளது.
 
இது போருக்குப் பின்னர், இரு இனங்களிடையேயும், இணக்கமான நம்பிக்கையான சூழலைக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமான தடையாக அமைந்துள்ளது.
 
சிங்களத் தேசியவாத சக்திகளின் இத்தகைய பிரசாரங்கள் இன்னும் மோசமடைந்தால், ஒருகட்டத்தில், மாகாணசபையின் அதிகாரங்களை இன்னும் குறைக்க வேண்டும் என்ற சிங்கள மக்களின் அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு அதிகரிக்கும். அது இன முரண்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்தும்.
 
அடுத்து, மாகாணசபைகளுக்கு முக்கியமான அதிகாரங்கள் எதையும் வழங்க முடியாது, வரையறுக்கப்பட்ட அதிகாரங்களையே வழங்க முடியும் என்று அரசாங்கம் இறுக்கமான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால், தேர்தலுக்கு முன்னரே காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் தொடங்கி விட்டன. இன்னமும் இந்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை.
 
இத்தகைய சூழலில், அரசாங்கம் தொடுத்திருந்த மேல்முறையீட்டு வழக்கு ஒன்றில், 13ஆவது திருத்தச்சட்டத்தின்படி, காணி அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு கிடையாது என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
 
இது காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்க முடியாது என்ற வரட்டுப் பிடிவாதத்தில் உள்ள அரசாங்கத்துக்கு சட்டரீதியாக கிடைத்துள்ள ஒரு பெரும் வெற்றி மட்டுமல்ல, பலமும் கூடத் தான். இந்த தீர்ப்பை வைத்துக் கொண்டே, இந்தியாவின் நெருக்குதல்களை அரசாங்கத்தினால் சமாளிக்க முடியும். சர்வதேச சமூகத்துக்கும் பதிலளிக்க முடியும்.
 
ஆனால் காணி, பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கிய - வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு தீர்வைத் தான் இந்தியா, 1987இல் பரிந்துரை செய்தது. அதற்கமையவே, 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன.
 
இப்போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை பிரித்து விட்ட உயர்நீதிமன்றம், மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் கிடையாது என்றும் கைவிரித்து விட்டது. ஆக, 1987இல், இந்திய - இலங்கை உடன்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைத் தீர்வு முறை, மிகவும் பலவீனப்படுத்தப்பட்டுள்ள ஒரு சூழலிலேயே, வடக்கு மாகாணசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 
அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி, வடக்கு மாகாணசபையை நிர்வகிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிக்கலானதாகவே இருக்கும். இது, தமிழ் மக்களிடையே அதிருப்தியையும் அதிகாரமற்றதொரு தீர்வுக்குள் தாம் தள்ளப்பட்டு விட்டதான வெறுப்பையும் ஏற்படுத்தும்.
 
இந்த அதிருப்தியும் வெறுப்பும் ஏற்பட்டு விட்டால், நீறுபூத்த நெருப்பாக உள்ள, பழைய காயங்களில் சீழ்வடியத் தொடங்கும் என்பது சர்வதேச சமூகத்துக்கு நன்கு தெரியும். எனவே மாகாணசபையை பலப்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஏற்பட்டுள்ளது. 
 
ஜனநாயகத்தில் உயர்நீதின்றம் ஒன்றின் தீர்ப்பு இறுதியானதல்ல. நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் படைத்தது, இறைமை கொண்டது என்று, முன்னாள் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க விவகாரத்தின் போது, அரசாங்கமே கூறியுள்ளது.
 
எனவே, மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தடையாக அமைய முடியாது. அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்திலும் போதிய பலம் உள்ள நிலையில், மாகாணசபைகளுக்கான அதிகாரப் பகிர்வை தட்டிக்கழிக்கவும் முடியாது.
 
மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பலப்படுத்துவதன் மூலம், இலங்கையில் அதிகாரப்பகிர்வுப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவதையே சர்வதேச சமூகம் விரும்பும். அடுத்தவாரம், கொழும்பு வரும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இதற்கான பேச்சுக்களை தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
 
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பின் போது, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இலங்கை விவகாரம் குறித்தும் பேசியுள்ளார். இதன் மூலம், சர்வதேச தலைவர்களின் சந்திப்புகளில், பேசப்படும் விவகாரங்களில் ஒன்றாக, இலங்கை விவகாரம் மாற்றமடைந்துள்ளது.
 
உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்ற கொள்கையில் இருக்கும் அரசாங்கத்துக்கு இது மற்றொரு எச்சரிக்கை. இந்தக்கட்டத்தில் அதிகாரப்பகிர்வு விடயத்தில் அரசாங்கம் தீர்க்கமான முடிவுகளை எடுக்கத் தவறினால், இலங்கைப் பிரச்சினை, இன்னும் அதிகளவுக்கு சர்வதேச மயப்படும் நிலை ஏற்படலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X