2025 மே 19, திங்கட்கிழமை

அந்த முப்பது நாட்கள்...

Super User   / 2013 செப்டெம்பர் 30 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தொடர் - 11)

-றிப்தி அலி

பின்னர் மெட்ரோவில் எந்தவித அச்சமுமின்றி தனியாக பயணித்தேன். இன்று எமது நாட்டில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் தொடர்பில் பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சர்சைக்களுக்கு மத்தியிலேயே 25 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக வட மாகாணத்;திற்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த மாகாண சபை முறைமை இந்தியாவினாலேயே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து எமது நாட்டில் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண அரசாங்கள் காணப்படுகின்றன. இது போன்றே அமெரிக்காவிலும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் காணப்படுகின்றன. ஏற்கெனவே நான் கூறியது போன்று அமெரிக்காவிலுள்ள ஒரு மாநிலம் ஒரு நாட்டுக்கு சமனானதாகும்.

இதனால் அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்திடம் மாத்திரம் குவியப்படுத்தப்படாமல் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாநிலங்களுக்கு தேவையான பொலிஸ், காணி மற்றும நீதி போன்ற அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆம்.... பொலிஸ் என்றவுடனேயே தான் ஞாபகம் வருகின்றது. அங்கு பொலிஸாரை என்னால் இலகுவில் அடையாளம் காண முடியவில்லை. காரணம் ஆயுதங்களுடன் பொலிஸாரை கண்ட எனக்கு அங்கு ஆயதங்களின்றி பல்வேறு நிற ஆடைகளுடன் பல்வேறு வகையிலான பொலிஸாரை காண முடிந்தது. இதன் காரணமாகவே பொலிஸாரை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. 

ஆளுநரினாலேயே இந்த மாநிலங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. நான்கு வருட பதவி காலத்தை கொண்ட ஆளுநர்கள், பொதுமக்களினால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர். அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டோ அதிகாரங்களை ஒத்த அதிகாரங்கள் ஆளுநர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை குறித்த மாகாணங்களுக்குள்ளேயே வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு மேலதிகமாக மாகாண பாதுகாப்பு படைகளின் தலைமை கட்டளை அதிகாரியாகவும் ஆளுநர் செயற்படுவர்.
இந்த மாநில சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை சனத்தொகைக்கு ஏற்பட மாறுபாடும். ஆனால் இந்த மாநில சபைகளினால் தேவையான சட்டங்களை ஏற்ற முடியும். இதற்காக மத்திய அரசாங்கத்தின் அனுமதியை பெற வேண்டிய அவசியமில்லை.

இதன் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் வேறுபட்ட சட்டங்கள் காணப்படும். அதாவது ஒக்லஹோமா மாநிலத்தில் மோட்டர் சைக்கிளில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை.ஆனால் கலிபோனியா மாநிலத்தில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இதற்கு காரணம் என்னவென்றால் மாநிலங்களுக்கு இடையிலான மாறுபட்ட சட்டங்களாகும்.

இவ்வாறு தனியான சட்டங்கள் காணப்படுவது போன்று தனியான நீதிமன்றங்களும் உள்ளன. எமது நாட்டில் கொழும்பில் மாத்திரமே உயர் நீதிமன்றம் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஓர் உயர் நீதிமன்றம் காணப்படுகின்றது. மாகாணங்களுக்கு இடையில் சட்டம் மற்றும் அரசியலமைப்பு தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டால் அது தொடர்பில் இரண்டு மாநிலங்களும் கலந்துரையாடி இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்வது வழமையாகும்.

இதேபோன்று எமது நாட்டிலுள்ள நாடாளுமன்றத்தினை ஒத்ததாகவே அமெரிக்காவில் காங்கிரஸ் காணப்படுகின்றது. இந்த காங்கிரஸில் இரு வகையான உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்கள்.இரண்டு வருட பதவிக் காலத்தைக் கொண்ட வாக்களிக்கும் உறுப்பினர்களும் ஆறு வருட பதவி காலத்தைக் கொண்ட செனட்டர்களும் ஆவர்.

இவர்கள் அனைவரும் தேர்தல் மூலமே தெரிவு செய்யப்படுவர். இந்த தேர்தல்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அமெரிக்க பிரஜைகள் வாக்களிக்க முடியும். மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான இந்த தேர்தல்கள் பெரும்பாலும் நவம்பர் மாதத்திலேயே நடைபெறும் என அமெரிக்க பிரஜையொருவர் தெரிவித்தார்.

அமெரிக்க காங்கிரஸிலும் மாநில சட்ட சபையிலும் வாக்களிக்கும் உறுப்பினர்கள், செனட்டர்கள் என்ற வித்தியாசம் உண்டு
மத்திய, மாநில, மாவட்ட மற்றும் மாநகரம் என்ற அமைப்பு முறையிலேயே நிர்;வாகங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் ஒக்கலஹோமா மாநில அவைக்கும் அமெரிக்க காங்கிரஸிற்கும் விஜயம் மேற்கொள்வதற்கு எனது விஜயத்தின்போது சந்தர்ப்பம் கிடைத்தது.

பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியிலேயே இந்த இடங்கள் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் நான் விஜயம் செய்த சந்தர்ப்பத்தில் அங்கு விவாத நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. ஆனால் ஒரு பாரிய வித்தியாசமொன்றை இதன்போது அவதானிக்க முடிந்தது.  அதவாது எமது நாட்டின் நாடாளுமன்றம் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு அப்படியிருக்கவில்லை. நிரல் வரிசையிலேயே ஆசனங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வைபை

நான் விஜயம் செய்த பல இடங்களில் வைபை சேவையினை அவதானிக்க முடிந்தது. அதாவது அரசாங்க முக்கிய நிறுவனங்கள் தவிர்ந்த அனைத்து இடங்களிலும் வைபை சேவை காணப்பட்டது. இந்த சேவை தற்போது எமது நாட்டின் முக்கிய இடங்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இதிலொரு சிறப்பம்சம் என்னவென்றால் உணவகங்களில் உணவு உண்னும் போது வைபை சேவையின் ஊடாக இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும் என்றால், குறித்த உணவகத்தின் பேஸ்புக் பக்கத்தை நாம் லைக் (விருப்பம்) செய்ய வேண்டும். லைக் செய்தால் மாத்திரம் குறித்த வைபை சேவையினை நாம் பெற முடியும்.

நாய்கள்

அமெரிக்காவில் வீடுகளின்றி நாய்கள் இருக்கலாம். ஆனால் அங்கு நாய்களின்றி வீடுகள் இல்லை. அதாவது அமெரிக்காவிலுள்ள 97 சதவீதமான வீடுகளில் நாய்கள் காணப்படும். அந்தளவிற்கு அமெரிக்கர்களுக்கு நாய்கள் மீது பாசம். சில வீடுகளில் குழந்தைகளை விட நாய்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடொன்றில் குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையுடன் விளையாடுவதற்காக நாய்களும் வீட்டில் இணைந்துக்கொள்வர். இதனால் குறித்த குழந்தை பிறந்த நாள் கொண்டாடும் போது செல்லப்பிராணியான நாயும் பிறந்த தினத்தை கொண்டாடும். சில வீடுகளில் நாய்க்கு தனியான அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தளவிற்கு நாய்க்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

நாய்க்கு சுகயீனம் எற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வர். நாய்களின் சுகயீனத்திற்காக சுமார் 3,000 தொடக்கம் 30,000 அமெரிக்க டொலர் வரை அமெரிக்கர் செலவலிப்பர்.  இதனால் அமெரிக்காவில் மிருக வைத்தியர்களுக்கு அதிக கிராக்கியாகும்.

கூடைப்பந்தாட்டம்

எமது நாட்டில் கிரிகெட் விளையாட்டு அதிக பிரபல்யம் காணப்படுவது போன்று அமெரிக்க மக்கள் மத்தியில் கூடைப்பந்தாட்ட விளையாட்டுக்கு அதிக மவுசு காணப்படுகின்றது.எமது நாட்டின் பெருமபாலான இடங்களில் மைதானங்கள் காணப்படுகின்றது போன்று அமெரிக்காவிலுள்ள அனைத்து தொடர்மாடி பகுதிகளிலும் கூடைப்பந்தாட்ட திடல் காணப்படும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடைப்பந்தாட்ட விளையாட்டில் ஆர்வம் காட்டுவது போன்று அந்த போட்டிகளை பார்வையிடுவதற்கும் அதிக முக்கியத்துவம் வழங்குவர். எமது நாட்டில் மாலை வேலைகளில் கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்களில் போன்று அங்கு மாலை நேரங்களில் கூடைப்பந்தே அதிகம் விளையாடப்படும்.

அங்கு இரவு 10 மணி வரை மின்னொளியில் கூடைப்பந்தட்டாத்தில் ஈடுபடுவர். எமது நாட்டில் மாலை நேரங்களில் கால்பந்தாட்டம் விளையாடும்போது அனைவரும் டி-சேர்ட் அணிவதனால் இலகுவில் அடையாளம் காண முடியாது. இதன் காரணமாக முதலில் கோல் போடத் தவறிய அணியினர் தங்களின் டிசேர்டினை கழற்ற வேண்டும்.

இதனை அமெரிக்கர்கள் கூடைப்பந்து விளையாடிய போது என்னால் அவதானிக்க முடிந்தது. எனினும் இதன்போது எனக்கு ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இந்த முறைமை அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்ததா இலங்கையிலிருந்து அமெரிக்கா சென்றதா என்பதே அது.

எமது நாட்டில் உள்ள தேசிய அடையாள அட்டையை போன்று அமெரிக்காவில் ஆள் அடையாள அட்டை உள்ளது. இந்த ஆள் அடையாள அட்டைக்காக 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். எனினும் இந்த ஆள் அடையாள அட்டைக்காக இளைஞர்களே அதிகம் விண்ணப்பிப்பது வழமையாகும்.

இதற்கு காரணம் என்னவென்றால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே சிகரெட் மற்றும் மதுபானங்கள் விற்பனை செய்ய முடியும். இதனால் தாங்கள் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் என காண்பிப்பதற்காகவே ஆள் அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கின்றனர். முதியோர்கள் இதற்கு விண்ணப்பிப்பது குறைவாகும்.

இதேபோன்று 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாகன அனுமதி பத்திரத்தினை பெற முடியும். இதற்காக மாநில மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான நிபந்தனைகளில் மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசம் காணப்படும்.

அதேபோன்று கடவுச்சீட்டுக்களை பெறுவதற்கு தபால் திணைக்களங்களிலேயே விண்ணப்பிக்க வேண்டும். இதனை கேட்டவுடன் உங்களுக்கு நம்ப முடியாமல் ஆச்சரியமாக இருக்குமே. என்ன செய்வது நம்பியே ஆக வேண்டும். அது தான் உண்மை. ஆனால் கடவுச்சீட்டினை பெறுவதற்கு வயதெல்லை கிடையாது. யாரும் பெற முடியும்.

எமது நாட்டில் கடவுச்சீட்டினை வழங்கும் குடிவரவு திணைக்களத்தினர் விமான நிலையங்களில் கடுமையாக செயற்படுவர். அமெரிக்காவினுள் நுழையும் போதே கடவுச்சீட்டில் பதிவு மேற்கொள்ள வேண்டும். எனினும் குறித்த நாட்டை விட்டு வெளியேறும்  போது அந்த பிரச்சினையில்லை. அதேபோன்று வெளிநாட்டவர்கள் மாநிலத்திற்கு மாநிலம் விமானத்தின் மூலம்  பயணிக்கும் போதும் கடவுச்சீட்டை மாத்திரம் காண்பித்தால் போதும்.

இவ்வாறு அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கு விஜயம் செய்து ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்தேன். அத்துடன் நிறுத்தி விடாமல் அமெரிக்க அனுவபம் தொடர்பில் 11 பகிர்வுகளையும் எழுதி முடிந்துவிட்டேன். ஆனால் ஒரு உண்மையை உங்களுக்கு கூறியேயாக வேண்டும். ஏனென்றால் கனவிலும் கூட அமெரிக்கா பயணிப்பேன் என நினைக்கவில்லை.

ஏனென்றால் வாய்க்கு ஏட்டியது கைக்கு எட்டவில்லை என்ற கதைபோன்று தான் அது. அதாவது கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தினால் குறித்த செயலமர்வில் பங்குபற்றுவதற்கு நான் தெரிவுசெய்யப்பட்டேன். இதனை அடுத்து தூதுவரால கொன்ஸியூலர் பிரிவிற்கு விசா நேர்முக பரீட்சைக்காக சென்றேன். என்னுடன் குறித்த விசா நேர்முக பரீட்சையில் கலந்துகொண்ட நண்பி டியென் சில்வாவிற்கு 48 மணித்தியாலயத்திற்குள் விசா கிடைத்தது.

ஆனால் எனக்கு மாத்திரம் குறித்த நேர்முக பரீட்சையின்போது கடவுச்சீட்டு திருப்பி கையளிக்கப்பட்டது. என்னவோ இறைவனின் நாட்டம் 14 நாட்களின் பின்னர் விசா வழங்கப்பட்டது. எனினும் விசா நேர்முக பரீட்சையின்போது கடவுச்சீட்டு திருப்பப்ட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவேயில்லை...(முற்றும்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X