.jpg)
"பொலிஸ் பக்ருதீன்" உள்ளிட்ட முக்கிய தீவிரவாதிகள் தமிழக பொலிஸால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி தலைவர்கள் பலரையும் குறி வைத்து வெட்டிக் கொலை செய்த இந்தக் கும்பலைப் பிடிக்க 20 லட்சம் ரூபாய் பரிசே அறிவித்து இருந்தது தமிழக காவல்துறை. இந்தக் கைதுகள் மாநில பொலிஸாருக்கு ஒரு நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றால் மக்கள் மத்தியில் இருந்த பீதியையும் கரைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். பொலிஸுக்கு டிமிக்கி கொடுத்த இந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டது எப்படி?
தமிழகத்தில் "விநாயகர் சதுர்த்தி" எப்படி பிரபலமோ, அதை விட பிரபலமானது "திருப்பதி கொடை" நிகழ்ச்சி. இதில் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்வார்கள். அனைவரும் ஊர்வலமாக திருப்பதி சென்று ஏழுமலையானைத் தரிசிப்பார்கள். உலகத்தில் இருப்போர் அனைவரும் தேடி வரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் அந்த பக்தர்கள் கூட்டத்தில் நாசவேலை செய்யக் காத்திருந்தவன்தான் பொலிஸ் பக்ருதீன். அது என்ன "பொலிஸ்" பக்ருதீன்? அவன் தந்தை பொலிஸ்காரர். அதனால் பிள்ளைக்கு இந்த அடைமொழி இணைந்து கொண்டது. "அல் கொய்தா" எப்படியோ அதே மாதிரி தமிழகத்தில் "அல் உம்மா" தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவன் இந்த பொலிஸ் பக்ருதீன். சென்னை பெரியமேடு பகுதியில் இந்த ஊர்வலம் வரும்போது அதை தாக்குவதற்கே இந்த வேவு பார்ப்பில் ஈடுபட்டிருந்தான் பொலிஸ் பக்ருதீன். அதிர்ஷ்ட வசமாக அங்கே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் தமிழக சிறப்பு நுண்ணறரிவுக் காவல் பிரிவின் இன்ஸ்பெக்டர் லட்சுமணன். இவர் தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை விரல் நுணியில் வைத்திருப்பவர். வேவு பார்த்துக் கொண்டிருக்கும் பக்ருதீனைப் பார்த்த அவர், அருகில் சென்று விசாரிக்க, அவன் இன்ஸ்பெக்டர் மீதே தாக்குதல் நடத்தினார். கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொல்ல முயற்சித்தான். அதே பகுதியில் வேறு பணியில் நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் வீரக்குமார் அதைப் பார்த்து விட, இருவருமாகச் சேர்ந்து பொலிஸ் பக்ருதீனைப் பிடித்தார்கள்.
பிறகு நடைபெற்ற விசாரணையில்தான் அதிர்ச்சித் தகவல்களைக் கொட்டித் தீர்த்தான் பக்ருதீன். அவற்றுள் "ஏழுமலையான்" கோவில் மீது தாக்குதல் நடத்துவது, "திருப்பதி கொடை" நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்துவது, சில இந்து அமைப்பு தலைவர்களைத் தீர்த்துக் கட்டுவது- என்று அவன் வெளியிட்ட பகீர் தகவல்கள் பொலிஸை நிலை குலைய வைத்து விட்டது. அவன் கொடுத்த தகவலின் பேரில் அடுத்த ஆப்பரேஷனுக்கு தயாரானது தமிழக பொலிஸ், அது அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் உள்ள புத்தூர். பொலிஸ் பக்ருதீனின் கூட்டாளிகள் இங்கு ஒரு வீட்டில் "இரும்பு வியாபாரிகள்" போல் வேடம் போட்டு குடியிருந்து வருவதாகத் தகவல். அந்த வீட்டை தமிழக இன்டர்னல் செக்யூரிட்டி ஐ.ஜி. கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பொலிஸார் சுற்றி வளைத்தார்கள். அது நள்ளிரவு நேரம். அதற்குள் ஆந்திர மாநிலத்தில் நக்ஸலைட் தீவிரவாதிகளை ஒழிக்க உருவாக்கப்பட்ட அதிரடிப் படையையும் அழைத்துக் கொண்டார்கள். அந்தப் படைக்கு "ஒக்டோபஸ்" என்ற பெயர். ஆனால் வீட்டிற்குள் அதிரடியாக உள்ளே நுழைய முடியவில்லை. ஏனென்றால் பெண், குழந்தைகள் என்று தீவிரவாதிகள் உள்ளே இருந்ததுதான் காரணம். அங்கே தங்கியிருந்த பன்னா இஸ்மாயில், மாலிக் ஆகிய இருவரும் தீவிரவாதிகள். அதில் மாலிக்கின் மனைவி, பிள்ளைகளும் அங்கு இருந்தனர். அதனால் "பொலிஸ் ஆப்பரேஷனை" நிறுத்தி வைத்து விட்டு, அமைதி காத்தார்கள்.
அதிகாலையில் "பால்காரன்" போல் இன்ஸ்பெக்டர் லட்சுமணனும், உள்நாட்டுப் பாதுகாப்பு சிறப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. சங்கரும் அந்த தீவிரவாதிகள் இருந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள். என்ன பயங்கரம்? உள்ளே முதலில் நுழைந்த லட்சுமணன் என்ற இன்ஸ்பெக்டரை அப்படியே வீட்டிற்குள் இழுத்து கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தாக்கத் தொடங்கினார்கள் தீவிரவாதிகள். குக்கர் மூடிகள், கையில் கிடந்த பொருள்கள் எல்லாவற்றிலும் லட்சுமணனைத் தாக்க, அவர் செத்தார் என்ற நினைத்து விட்டார்கள் வெளியில் நின்றிருந்த பொலிஸ் அதிகாரிகள். இதற்கிடையில் வீட்டிற்குள் இருந்த சமையல் கேஸையும் திறந்து விட்டு, தீ வைக்கப் போகிறேன் என்ற எச்சரிக்கை வேறு. "என்கவுன்டர் ஆப்பரேஷனுக்கு" ஏற்ற சூழ்நிலைகள் உருவாகி விட்டன என்று பொலிஸ் நினைத்தாலும், வீட்டிற்குள் உள்ள பெண் மற்றும் குழந்தைகள் உயிர் தடுத்தது. அப்படியும் கூட ஒரு கட்டத்தில், "இதுபோன்ற ஆப்பரேஷனில் இதெல்லாம் தவிர்க்க முடியாது. பொலிஸ் ஆப்பரேஷனைத் தொடங்கலாம்" என்றே கூட பொலிஸ் படை முடிவு செய்தது. ஆனால் பொலிஸ் உயரதிகாரிகள் பொறுமை காத்து, இன்ஸ்பெக்டர் லட்சுமணனை பத்திரமாக மீட்டு படுகாயமடைந்த அவரை சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகம் சிதைந்து, விலா எலும்புகள் நொருங்கிப் போன நிலையில் இருந்தாராம் லட்சுமணன்.
இதன் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒன்று "சரண்டர்" அல்லது "சாவு" என்ற நிலைக்கு தீவிரவாதிகள் தள்ளப்பட்டனர். அதன் விளைவாக பன்னா இஸ்மாயில், மாலிக் உள்ளிட்ட இரு தீவிரவாதிகளும் சரண்டர் ஆனார்கள். ஏற்கனவே பொலிஸ் பக்ருதீனையும் சேர்த்து தேடப்பட்டு வந்த மூன்று தீவிரவாதிகளும் தமிழக பொலிஸின் வலையில் சிக்கினார்கள். இம்மூவரில் பன்னா இஸ்மாயிலுக்கு மட்டும் இன்ஸ்பெக்டரை மீட்பதற்காக பின்புறமாக இருந்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வயிற்றில் குண்டு பாய்ந்தது. சென்னையில் உள்ள ராஜீவ் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். மீதி இருவரும் ஜெயில் மற்றும் பொலிஸ் கஸ்டடியில்! பொலிஸ் பக்ருதீன் கொடுத்துள்ள வாக்குமூலங்களில் தமிழகத்தில் தாங்கள் செய்த இந்து அமைப்பு தலைவர்கள் கொலை, முன்னாள் துணை பிரதமர் அத்வானியை கொலை செய்ய பைப் வெடிகுண்டு வைத்தது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தாக்குதல் நடத்த சதி செய்தது அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளான். அது அப்படியே நீதிபதி முன்பு வாக்குமூலமாகவும் பெறப்பட்டுள்ளது.
கோவையில் 1998 வாக்கில் நடந்த தொடர் குண்டு வெடிப்பிற்குப் பிறகு தமிழகத்தில் அல் உம்மா தீவிரவாதிகள் அடக்கப்பட்டிருந்தனர். இந்த இயக்கம்தான் கோவை குண்டு வெடிப்பிற்கு மிக முக்கியக் காரணம். ஆனால் திரைமறைவில் தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை தமிழக பொலிஸாரும் கவனமுடன் கவனித்தே வந்தனர். ஆனாலும், பொலிஸின் கவனத்தைத் திசை திருப்ப வெடிகுண்டிற்குப் பதில் வீச்சரிவாள் என்ற புதிய கலாசாரத்தை கையிலெடுத்தார்கள் இந்த தீவிரவாதிகள். அரிவாளைப் பயன்படுத்தி கடந்த ஒன்றரை வருடமாக பா.ஜ.க. தலைவர்கள் பலரையும் கொலை செய்து வந்தனர் அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த இந்த தீவிரவாதிகள்.
கடைசியாக சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் என்ற பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகியை கொலை செய்த போதுதான் பக்ருதீன் உள்ளிட்ட தீவிரவாதிகள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்து பொலிஸ் தேடுதல் வேட்டை துரிதப்பட்டுத்தப்பட்டது. ஏனென்றால் தமிழகத்தை அந்தக் கொலை குலுக்கி விட்டது. பா.ஜ.க. வின் அகில இந்தியத் தலைவர்களே சேலத்திற்கு வந்தார்கள். அத்வானி வந்து ஆடிட்டர் ரமேஷின் அஞ்சலிக் கூட்டத்தில் பேசினார். டெல்லியில் இருந்து பா.ஜ.க.வின் குழு ஒன்று வந்து விசாரணை நடத்தி விட்டு தமிழக டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தது. இப்படியொரு சூழ்நிலையில்தான் பொலிஸ் பக்ருதீன் உள்ளிட்ட நால்வரைப் பற்றி தகவல் தருவோருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம், 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜம் அறிவித்தார்.
தலைக்கு ஐந்து லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பொலிஸ் பக்ருதீன் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் கையில் சிக்கிக் கொண்டான். தீவிரவாதிகள் கைது பா.ஜ.க. தலைவர்களை நிம்மதியடைய வைத்துள்ளது. ஏனென்றால் இந்த தீவிரவாதிகள் வெளியில் திரிந்திருந்தால் அடுத்து வரும் தேர்தல் பிரசார நேரத்தில் அந்த பா.ஜ.க. தலைவர்கள் எல்லாம் பாதுகாப்பு சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஆபத்து நேரிட்டிருக்கும். இந்தக் கைதின் மூலம் "சென்னை" இன்னொரு கோவையாக மாறாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு பா.ஜ.க. தலைவர்கள் யாரும் இந்த கைது குறித்து பெரிய அளவில் அறிக்கைகள் விடவில்லை. அதே போல் அரசு தரப்பிலும் கைது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளனவே தவிர பெரிய அளவில் பப்ளிஷிட்டி செய்யவில்லை. ஏனென்றால் விரைவில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமையப் போகும் கூட்டணியை அடிப்படையாக வைத்தே, தீவிரவாதிகள் கைது குறித்த அடுத்த கட்ட அறிக்கைப் போர் தொடங்கும்.
அதே நேரத்தில் வருகின்ற 18ஆம் திகதி குஜராத் முதல்வரும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னையில் உள்ள மியூசிக்க அகாடமியில் ஒரு விழாவில் பங்கேற்க வருகிறார். அந்த விழாவில் மறைந்த பிரபல வழக்கறிஞர் பல்கிவாலாவின் உரைகளின் தொகுப்பு புத்தகமாக வெளியிடப்படுகிறது. மோடியின் விழாவிற்கு முன்பு இந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது சென்னை மாநகரப் பொலிஸிற்கும் நிம்மதி. "மோடியை டார்கெட் பண்ணி ஏதும் நாங்கள் செய்யவில்லை" என்ற ரீதியில் பொலிஸ் பக்ருதீன் உள்ளிட்டோர் கூறியிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவந்தாலும், பொலிஸ் மோடி விடயத்தில் சான்ஸ் எடுக்க முடியாது. ஏனென்றால் நான்கு தீவிரவாதிகளில் முக்கியமான அபுபக்கர் சித்திக் தப்பி விட்டான். அவன் சென்னைக்கு எல்லாம் வந்து இந்த மூவருக்கும் உதவிகரமாக இருந்து விட்டு "எஸ்கேப்" ஆகிவிட்டதாக தகவல். அது மட்டுமின்றி, பல பேருக்கு குண்டு வைப்பது உள்ளிட்ட பயிற்சிகளை இந்தக் குழு கொடுத்திருப்பதாகவும் பொலிஸுக்கு தகவல் சிக்கியுள்ளது.
தேர்தல் நேரம் என்பதாலும், அவர்களுடன் பெண்ணும், குழந்தைகள் இருந்ததாலும், இந்த மூன்று தீவிரவாதிகளில் குறிப்பாக பன்னா இஸ்மாயிலும், மாலிக்கும் தப்பித்துள்ளார்கள். இல்லையென்றால் பொலிஸ் "என்கவுன்டரை" சந்திக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கும். ஏனென்றால் பொலிஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் அந்த அளவிற்கு படு காயம் அடையும் அளவிற்கு தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளார். அதேபோல் பொலிஸ் பக்ருதீனுக்கும் "என்கவுன்டர் ஆபத்துதான். ஆனால் அவரது சார்பில் ஒருவர் கைதான அன்றே உயர்நீதிமன்றத்தில் "ஆள்கொணர்வு மனு" தாக்கல் செய்து விட்டார். அதனால் பொலிஸ் பக்ருதீனை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய சூழ்நிலை பொலிஸுக்கு உருவாகிவிட்டது. தமிழகத்தில் உள்ள பக்ருதீன் போன்ற தீவிரவாதிகள் இதுவரை பொலிஸை தாக்கியதில்லை என்று கூறும் சில பொலிஸ் அதிகாரிகள், "இமாம் அலி என்ற தீவிரவாதியை என்கவுன்டரில் பொலிஸ் சுட்டுக் கொன்றதற்கு பழி வாங்கும் விதத்தில் இப்போதெல்லாம் பொலிஸ் மீதும் பாய்கிறார்கள். நாங்கள்தான் எச்சரிக்கையுடன் இந்த தீவிரவாதிகளை கையாள வேண்டியதிருக்கிறது" என்கிறார்கள்.
முக்கியத் தீவிரவாதியான அபு பக்கர் சித்திக் தப்பி விட்டதால், மோடியின் சென்னை விஸிட்டை மிகவும் உஷாராகக் கண்காணித்து வருகிறது தமிழக பொலிஸ். 1998க்குப் பிறகு ஏறக்குறைய 15 வருடங்கள் கழித்து அல் உம்மா தீவிரவாத இயக்கம் வலுப்பெறும் ஆபத்து உருவாகியுள்ளதைக் கண்டிபிடித்து பொலிஸ் தகர்த்துள்ளது. ஆனால் இதன் கிளைகள் எங்கெல்லாம் இருக்கிறது என்ற விசாரணை இப்போது தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் பொலிஸ் அதிகாரிகள். அல்உம்மாவின் முக்கிய தீவிரவாதிகளை தமிழக பொலிஸ் சுற்றி வளைத்துப் பிடித்திருப்பது மாநிலத்தின் எதிர்கால சமூக அமைதிக்கு வித்திடும் என்றே அனைவரும் கருதுகிறார்கள். அது மட்டுமல்ல, உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரவிருந்த ஆபத்தும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.