2025 மே 19, திங்கட்கிழமை

இது அரசியல் முதிர்ச்சியேயன்றி பலவீனமல்ல

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து வட மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பதவி ஏற்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு அக்கட்சியின் மூத்த தலைவர்களின் அரசியல் முதிர்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது எனலாம். அது தமிழ் கூட்டமைப்புக்கு எதிர்க்காலத்தில் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக பாதுகாப்பாகவும் அமையலாம்.

நாட்டின் ஜனாதிபதியாக இருந்த போதிலும் மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கட்சியினதும் தலைவராக இருக்கிறார். அக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாண சபையில் பதவிக்கு வருவதை தடுப்பதற்கு நீண்ட காலமாக பல்வேறு விதமாக செயற்பட்டு வந்துள்ளது. தமிழ் கூட்டமைப்பு வட மாகாண சபையின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் என்ற காரணத்தினாலேயே அரசாங்கம் நீண்ட காலமாக வட மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருந்தது.

பின்னர் அதே காரணத்தினால் மாகாண சபை முறையையே ரத்துச் செய்யவும் அரசாங்கம் முயற்சி செய்தது. ஆனால், இந்தியா உட்பட சர்வதேச சமுகத்தின் நெருக்குவாரத்தின் விளைவாக அத் தேர்தலை நடத்த அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. அப்போதும் அரசாங்கத்தின் சில தலைவர்கள் மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கவும் முயற்சி செய்தனர்.

எதையும் செய்ய முடியாத அளவிற்கு சர்வதேச நெருக்குதல் வரவே அரசாங்கம் தேர்தலை நடத்தினாலும் அரச அதகாரத்தையும் அரச வளங்களையும் பாவித்து தமிழ் கூட்டமைப்பின் தேரதல் வெற்றியை தடுக்க முயற்சி செய்தது. ஆனால் ஏற்கனவே இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்திலும் மனித உரிமை தொடர்பான விடயங்களிலும் தமிழ் உணர்வுகளோடு முரண்பட்டு இருந்த அரசாங்கத்திற்கு எதிராகவே பெரும்பான்மையான வட மாகாண மக்கள் வாக்களித்தனர்.

இந்த விரோத மனப்பான்மையினாலேயே சிலர் வட மாகாண புதிய முதலமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வதை எதிர்த்தனர். ஆனால் சத்தியப் பிரமாணம் என்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி தமது தந்தை முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தும் பதவியேற்று இருக்கிறார்.

ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வதன் அர்த்தம் மஹிந்த ராஜபக்ஷ என்ற நபருக்கு அடிபணிவது அல்ல. அதேவேளை ஜனாதிபதி பதவி என்பது முதலமைச்சர் பதவியைப் பார்க்கிலும் உயர்ந்தது என்பதால் அவர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்வதில் ஒன்றும் குறைந்து விடுவதுமில்லை. அதனால் ஜனாதிபதி நியாயமற்ற முறையில் நடந்து கொண்டால் அதற்கும் தலைசாய்ப்பது என்றும் அர்த்தமாகாது.

முதலமைச்சர் தமது கட்சித் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வது சட்ட விரோதமானதல்ல தான். அதனால் ஏற்படப் போகும் பாரிய நட்டமும் இல்லை தான். ஆனால் வட மாகாண மக்கள் அரசியல் ரீதியாக புதியதோர் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அது தனித் தமிழ் நாட்டுக்கான பயணம் அல்ல. தேர்தல் காலம் முழுவதிலும் தாம் தனித் தமிழ் நாட்டுக்காக போராடவில்லை என்று தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் கூறித் திரிய வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் இந்திய தலைவர்களும் இந்திய ஊடகங்களும் இனி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அரசியல் பக்குவம் தேவை என்பதை வலியுறுத்தி இருந்தனர். அவர்கள் அவ்வாறு வலியுறுத்திக் கருத்து வெளியிட்டது ஏன் என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. அவ்வாறான சந்தேகங்களை களைவது பிழையான காரியம் அல்ல.

அதேவேளை இது தமிழ் ஈழத்திற்கான பயணம் அல்ல என்பதால் சிங்கள மக்களுக்கும் நல்லதோர் செய்தியை வழங்க இந்த சத்தியப் பிரமாணம் சிறந்த சந்தர்ப்பமாகும். தாம் நெகிழ்வுத் தன்மையுள்ளவர்கள் என்பதையும் அவசியமில்லாமல் அரசாங்கத்துடன் முட்டி மோதப் போவதில்லை என்பதையும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைக்கவும் இந்த பதவிப் பிரமாணம் உதவலாம்.

ஆனால் இதனால் அரசாங்கத்தின் கொள்கைகளோ அல்லது நடத்தை முறைகளோ மாறும் என்று எதிர்ப்பார்ப்பதும் ஏமாற்றுத் தனமாகும். அரசாங்கம் சில இனவாதிகளின் பிடியில் அகப்பட்டு இருப்பது மட்டுமல்லாது அரசாங்கத்திலும் சில இனவாதிகள் இருக்கிறார்கள். எனவே வட மாகாண சபை தமக்கு இருக்கும் அதிகாரங்களையாவது முறையாக பாவித்து இருக்கும் வளங்களைக் கொண்டாவது சில அபிவிருத்தி மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள முற்படும் போது பல்வேறுபட்ட தடைகள் வரலாம்.

13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு பாரியளவில் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. காணி அதிகாரம் என்பதன் உண்மையான நிலைமையை அண்மையில் உயர் நீதிமன்றம் எடுத்துக் காட்டியது. வளங்கள் என்று வரும் போது அண்மைக் காலம் வரை மொத்த விற்பனை வரி அறவிடும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு இருந்தது.

ஆனால் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அந்த வரியையையும் மத்திய அரசாங்கமே அறவிட முடியும். மாகாண சபைகள் வாகன தரிப்பிட வரி போன்ற அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தாத வரிகளை மட்டுமே அறவிட முடியும்.

எனவே இப்போது மாகாண சபைகள் ஏறத்தாழ மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியின் மீதே தங்கியிருக்க வேண்டியுள்ளது. மாகாண சபைகள் போதிய அதிகாரங்களையும் வளங்களுக்கான வாய்ப்புக்களையும் பெற்றதன் பின்னர் தான் வட மாகாண சபை வட மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று அரசியலை பேசிக் கொண்டு இருந்தால் மக்களின் நிலைமை மிவும் கவலைக்குரியதாகிவிடும்.
ஏனைய மாகாண சபைகளைப் பார்த்தால் அவை ஒரு சில அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு பணிகளையாவது மேற்கொண்டு வருவதை காணலாம். அதற்காக மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் தேவையாக இருக்கிறது என்பத வேறு விடயம்.

எனவே முடிந்தவற்றை செய்து கொண்டு தான் முடியாதவற்றுக்க காரணங்களை கண்டு பிடிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் வடக்கில் சில அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக வடக்கின் வசந்தம் என்ற பெயரில் சில
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அப் பணிகளை தேர்தலின் பின்னர் வட மாகாண சபையிடம் ஒப்படைப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தேர்தல் பிரசார காலத்தில் கூறினார். உண்மையிலேயே அமைச்சர் அப்பணிகளை வட மாகாண சபையிடம் ஒப்படைப்பதாக இருந்தால் அந்தப் பணிகள் வட மாகாண மக்களின் நலனுக்காக முக்கியமானவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு பணிகளுக்காக மட்டுமன்றி வட மாகாண மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளியிடும் களமாகவும் வட மாகாண சபையை பாவிக்கலாம் என்பது உண்மையே. ஆனால் நிச்சயமாக அதில் ஆபத்துக்கள் மறைந்திருக்கின்றன. ஏனெனில் மாகாண சபையை அரசியல் களமாக பாவிக்க முற்பட்டு 1990ஆம் ஆண்டு அன்றைய வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராகவிருந்த அ. வரதராஜப் பெருமாள் செய்ததைப் போன்ற அரசியல் பிழைகள் வட மாகாண சபையின் தற்போதைய தலைவர்களும் செய்வார்களேயானால் அது அரசாங்கத்தில் உள்ள அரசியல் பருந்துகளுக்கே உதவியாக அமையும்.

உண்மையிலேயே அரசாங்கத்தில் உள்ள இனவாத சக்திகள் வட மாகாண சபையை வீழ்த்துவதற்காக அவ்வாறான சந்தர்ப்பங்களை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் ஊகிக்கலாம். சிலவேளைகளில் அவர்களே மாகாண சபைக்கு அநாவசிய இடையூறுகளை ஏற்படுத்தி மாகாண சபைத் தலைவர்களை ஆத்திரமூட்டி மாகாணத் தலைவர்கள் வரம்பு மீறிச் செயற்படச் செய்யலாம். பொறுமையும் பக்குவமும் தான் கிடைத்த இந்த அதிகாரத்தை பாதுகாக்கும்.

தமிழ் தலைவர்கள் இவ்வளவு காலமும் எதிர்க்கட்டசிகளிலேயே செயற்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளில் இருக்கும் போது பொறுப்புடன் செயற்படுவதோ அல்லது பொறுப்புடன் பேசுவதோ அவ்வளவு தேவையான விடயம் அல்ல. எதிர்க்கட்சிகளில் இருக்கும் போது மக்கள் முன் தோன்றி வீராப்பு பேசலாம். ஆனால் பொறுப்புள்ள பதவிகளில் இருக்கம் போது அவ்வாறு வீராப்பு பேசுவத ஆபத்தாக அமையலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X