2025 மே 19, திங்கட்கிழமை

வடக்கில் கூட்டமைப்பு எதிர்கொள்ளப்போகும் சவால்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.சஞ்சயன்
 
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய வெற்றியைப் பெற்றிருந்த போதிலும், முதலமைச்சர் பதவியேற்பு, அமைச்சர்கள் நியமனம் குறித்து முடிவுகளை எடுப்பதற்கு இரண்டு வாரகாலம் பிடித்துள்ளது. 
 
ஒரு பிரமாண்டமான தேர்தல் வெற்றிக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இந்த விவகாரங்களில் நீடித்த இழுபறியும் சிக்கல்களும், வடக்கு மாகாணசபையை வெற்றிகரமாக கொண்டு நடத்துவதில் உள்ள சவால்களை வெளிப்படுத்தியுள்ளன.
 
முதலமைச்சர் யார் முன்னிலையில் பதவியேற்பது என்ற விவகாரத்திலும், அமைச்சர்கள் நியமனம் குறித்தும் எழுந்த இழுபறிகள், ஒரு பிரமாண்டமான வெற்றிக்குப் பிந்திய சூழலை, கவலைக்குரிய விவகாரமாக்கி விட்டது.
 
வடக்கு மாகாண முதல்வராக யாரை நிறுத்துவது என்று, மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், கிட்டத்தட்ட இதேபோன்றதொரு இழுபறி நிலை கூட்டமைப்புக்குள் தோன்றியிருந்தது. ஆனால், கடைசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிறுத்திய, ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனே முதன்மை வேட்பாளர் என்ற ஒருமித்த முடிவுக்கு இணங்கும் நிலை ஏற்பட்டது.
 
ஒரு கட்டத்தில், இது இரா.சம்பந்தனின் தன்னிச்சையான நியமனம் என்ற விமர்சனங்கள் எழுந்த போதிலும், இந்த முடிவை தமிழ் மக்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு, மாகாணசபைத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அளிக்கப்பட்ட, ஒரு இலட்சத்து 31 ஆயிரம் விருப்பு வாக்குகளே சாட்சியாக உள்ளன.
 
விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்தாமல் போயிருந்தால், இத்தகைய பிரமாண்டமான வெற்றியை தமிழ் மக்கள் கொடுத்திருப்பார்களா – வேறொரு முதன்மை வேட்பாளரால், இந்தளவுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்க முடியுமா என்பதெல்லாம் கேள்விக்குரிய விடயங்கள் தான்.
 
தேர்தல் அறிவிப்பு வெளியானதும், முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், சற்று சலசலப்புகள் நிலவினாலும், சி.வி.விக்னேஸ்வரன், முன்னிறுத்தப்பட்ட பின்னர் அவையெல்லாமே அடங்கிப் போயின.
 
அதுபோலவே தான், தேர்தலில் வெற்றி பெற்றதும், யார் முன் பதவியேற்பது – யார் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்ற விடயத்திலும் இழுபறிகள் தோன்றின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வேட்பாளர்களை அறிவித்த போது, அவர்களில் அரசியல்வாதிகளல்லாத துறைசார்ந்த விற்பன்னர்கள் பலரும், உள்ளடக்கப்பட்டிருந்ததால், தேர்தலில் வெற்றி பெற்றால், அமைச்சர்கள் நியமனத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தப் பிரச்சினை தான் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் வெடித்தது.
 
முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்தியே போட்டியிட்டதால், தேர்தல் வெற்றிக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அதுகுறித்த முரண்பாடுகள் ஏற்படவில்லை. ஆனால், முதலமைச்சர் யார் முன்னிலையில் பதவியேற்பது என்ற விடயத்தில், கிட்டத்தட்ட ஒரு தேவையற்ற சர்ச்சையே தோன்றியதாகத் தெரிகிறது. சட்டவிதிகளையும், மரபுகளையும் மட்டுமன்றி, காலச் சூழலையும் கவனத்தில் கொண்டு செயற்படுவது தான் வெற்றிகரமான அரசியல் தலைமைகளின் பண்பாக இருக்க முடியும்.
 
இந்த விடயத்தில் இரா.சம்பந்தனும் சி.வி.விக்னேஸ்வரனும் எடுத்த முடிவுகள், ஒரு தரப்பினருக்கு ஜீரணிக்க முடியாததாக இருந்தாலும், தற்போதைய அரசியல் நடைமுறைக்கு அதைவிடப் பொருத்தமான அணுகுமுறை வேறேதும் இருந்திருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், கடும்போக்காளர்களும் மென்போக்காளர்களும் மட்டுமன்றி, இரண்டுக்கும் இடைப்பட்டவர்களும் உள்ளனர்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பதன் மூலம், அரசாங்கத்துக்கு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, சர்வதேச சமூகத்துக்கும் ஒரு தெளிவான செய்தியைக் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதிலும் தான் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள ஒரு தரப்பினர் பிரசாரத்தில் இறங்கியது தான் வேடிக்கையான விடயம்.
 
தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு வேட்பாளரும் எந்தவொரு கட்சியும் தாம், இலங்கை அரசாங்கத்தின் உதவிகளைப் பெறாமல் ஆட்சியை நடத்துவோம் என்றோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்பாக பதவியேற்க மாட்டோம் என்றோ வாக்குறுதி கொடுத்திருக்கவில்லை.
 
அப்படி வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றிருந்தால், அது வடக்கு மாகாண மக்களின் தீர்ப்புக்கு எதிரானது என்ற முடிவுக்கு வர முடியும். மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மாகாணசபையில், வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் எதிர்க்கட்சி ஒன்றினால் ஆட்சியை நடத்துவது எத்தனை சிரமமான காரியம் என்பதை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே வெளிப்படுத்தியிருந்தார்.
 
மேல் மாகாணத்திலேயே இத்தகைய நிலை என்றால், வடக்கில் நிர்வாகத்தை நடத்துவதற்கு எந்தளவுக்கு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஊகிப்பது எவருக்கும் கடினமாக இருக்காது.
 
எல்லாவற்றுக்கும் மத்திய அரசையே நம்பியிருக்க வேண்டியதொரு சூழலில், தமக்கு வாக்களித்த மக்களின் தேவைகளை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டுமானால், வடக்கு மாகாணசபை, அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டால் தான் சாத்தியமாகும்.
 
தேசியப் பிரச்சினை விடயத்தில் கடைப்பிடிக்கப்படுவது போன்று, மாகாணசபை நிர்வாகத்தையும், முரண் அரசியல் போக்கில் அணுக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தனிக்குமேயானால், அடுத்த தேர்தலின் போதும் அரசாங்கம் எதையும் தரவில்லை, எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றே வாக்குக் கேட்கும் நிலை ஏற்படும்.
 
மத்திய அரசாங்கத்திடம் உதவியைப் பெறாமல், மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல், மாகாண நிர்வாகம் ஒன்றை இயக்குவதால், யாருக்கும் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.
 
இதனால், அடுத்த தேர்தலில் இத்தகையதொரு நிர்வாகம் எதற்கு என்று சிந்திக்கும் நிலைக்கு வடக்கிலுள்ள மக்கள் தள்ளப்படுவார்கள். அதற்காக, இணக்கப்போக்குடன் செயற்பட்டால், மாகாணசபைக்கான எல்லா உதவிகளையும் மத்திய அரசாங்கம் செய்யும் என்று முழுமையாக கருதிவிட முடியாது.
 
ஆனால், அத்தகையதொரு நிலைக்கு ஒருபோதும், மாகாண நிர்வாகம் பொறுப்பல்ல என்ற உண்மையை, மக்களால் மட்டுமன்றி, சர்வதேச சமூகத்தினாலும் விளங்கிக் கொள்ள முடியும்.
 
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில், பதவியேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் எடுத்த முடிவு, தூரநோக்குக் கொண்டவை.
 
இந்தச் சூழலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் புரிந்து கொண்டாலும், அவர்கள் தமது நிலையில் இருந்து வெளிவரத் தயாராக இல்லை. இது தான் இந்தச் சிக்கலின் அடிப்படை.
 
இந்தளவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அனைவரும், நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள அனைவருமே, இலங்கையை துண்டாடுவதற்குத் துணைபோக மாட்டோம் என்ற சத்தியக்கடதாசியை கொடுத்துள்ளவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமைச்சர்கள் நியமன விடயத்திலும் எழுந்த சிக்கல் சற்று வேறுபட்டது. நான்கு கட்சிகள், ஐந்து மாவட்டங்கள், துறைசார் நிபுணத்துவம் என்று பல்வேறு சிக்கல்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகம் கொடுக்க நேரிட்டது.
 
ஆனால், கடைசியில் முதல்வர் விக்னேஸ்வரன் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வார் என்று அறிவிக்கப்பட்டதும் தான் அந்த விவகாரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி பிறந்தது.
 
இவையெல்லாம், வடக்கு மாகாணசபையை கொண்டு நடத்துவது ஒன்றும் சுலபமான காரியமாக இருக்காது என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளன.
 
அதாவது, ஒருபக்கத்தில் மத்திய அரசாங்கம், இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும் போக்காளர்கள், மற்றொரு பக்கத்தில் சர்வதேச சமூகம், என்று மும்முனை அழுத்தங்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல், வடக்கு மாகாண நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்வது மிகவும் சவாலுக்குரிய விடயம் தான்.
 
ஆனாலும், நீதிமன்றத்தில் எப்போதும் இருவேறு முரண்பட்ட வாதங்களுக்குள் நடுநிலையுடன் செயற்பட்டுப் பழகிப் போனவர் என்பதால், எத்தகைய முரண்பட்ட கருத்துகள் எழுந்தாலும், அதைச் சமாளிக்கும் திறன் பெற்றவராக வடக்கு மாகாண முதல்வர் இருப்பது தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப்பெரிய பலம்.

You May Also Like

  Comments - 0

  • Ragu Wednesday, 09 October 2013 07:30 PM

    நீங்கள் நடு நிலைமையாக எழுதியிருக்கிறீர்கள். மத்திய அரசிடம் உதவி பணம் பெறவேண்டுமா? அல்லது சட்டப் படி பணம் பெற்று ஆட்சி நடத்துவதா! அதாவது உரிமையோடு வாழ்வதா அல்லது துதிபாடி வாழ்வதா, அன்பானவரே! இரகு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X