2025 மே 19, திங்கட்கிழமை

சிறுபான்மை நலன்களை பாதுகாக்க பலமான எதிர்க்கட்சி உதவும்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு காலத்தில், அதாவது 1991ஆம் ஆண்டுக்கு முன்னர் ரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகள் ஒன்றிணைந்த சோவியத் ஒன்றியம் என்ற பெயரிலான சமஷ்டி நாடொன்று இருந்தது. அது எந்தவொரு விடயத்திலும் அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடிய அளவிற்கு பலமான வல்லரசாக இருந்தது. அமெரிக்கா வாயைத் திறந்தால் கௌவிக் கொள்ளக் கூடிய அளவுக்கு அமெரக்காவிற்கு அருகிலுள்ள கியூபாவை தாக்க அமெரிக்கா முற்பட்ட பல சந்தர்ப்பங்களில் சோவியத் ஒன்றியத்தின் மிரட்டல் காரணமாக அமெரிக்கா பின்வாங்க நேரிட்டது.

இது தான் ஒரு பலமான எதிக்கட்சிக்கான சிறந்த உதாரணம் எனலாம். இப்போது அந்த உலக எதிர்க்கட்சி இல்லை. சோவியத் ஒன்றியம் சிதறி 15 நாடுகளாக பிரிந்துவிட்டன. எனவே அமெரிக்கா வைத்தது தான் உலகில் சட்டம் என்ற நிலை இப்போது உருவாகியிருக்கிறது.

இலங்கையிலும் அந்த நிலை தான் உருவாகியிருக்கிறது. இங்கும் பலமான எதிக்கட்சியொன்றில்லை. இது பொதுவாக நாட்டை பாதித்தாலும் சிறுபான்மை மக்களை விசேடமாக பாதிக்கிறது. குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை, ஆளும் ஐக்கிய மக்கள் தந்திரக் கூட்டணியின் அளவிற்கே இனவாத போக்குடையதல்ல என்பதால் ஐ.தே.க.வின் தற்போதைய நிலை சிறுபான்மை மக்களுக்கு கவலையையே தருகிறது.

1994ஆம் ஆண்டு முதல் ஒரு சில தேர்தல்களில் பெற்ற வெற்றிகளைத் தவிர ஏனைய தேர்தல்களில் தோல்விக்கு மேல் தோல்வி அடைந்து வருவதன் காரணமாகவே ஐ.தே.க.விற்குள் பிணக்குகள், பூசல்கள் உருவாகியிருக்கின்றன. இப்போதைக்கு அது தலைமைத்துவத்தைப் பற்றி பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

அதாவது தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே கட்சியின் தோல்விக்குக் காரணம் என கட்சிக்குள்ளேயே பலர் கூறி வருவதானாலேயே தற்போதைய உட்கட்சி நெருக்கடி உருவாகியிருக்கிறது. அவருக்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகனும் அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசவை அல்லது கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவை நியமிக்க வேண்டும் என்பதே அவர்களது வாதமாக இருக்கிறது. ஐ.தே.க.வின் பல சிறுபான்மையினத் தலைவர்கள் இந்த விடயத்தில் சற்று பதற்றமடைந்து இருப்பதாக தெரிகிறது.

கடந்த மாதம் மூன்று மாகாணங்களில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களை அடுத்து ஐ.தே.க.வின் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்திருக்கிறது. அதன் ஒரு கட்டத்தில் எதிர்வரும் தென் மாகாண சபைத் தேர்தலின் போது சஜித் பிரேமதாசவை தென் மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட வைக்க வேண்டும் என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. இது தம்மை தேசிய அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கான சூழ்ச்சி எனக் கூறி பிரேமதாச அதனை நிராகரித்துள்ளார்.

அவரது வாதத்தில் உண்மை இருந்த போதிலும் அது நல்லதோர் சவால் என்பதிலும் சந்தேகமே இல்லை. தென் மாகாணத்தை கட்சிக்காக வென்றால் அது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியன் வேட்பாளராவதற்கு சிறந்ததோர் தகைமையாகும் என விக்கிரமசிங்கவிற்கு மிகவும் நெருக்கமான கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியிருந்தார்.

ஆனால் அவ்வாறு சஜித் தென் மாகாண முதலமைச்சரானாலும்; அத்தநாயக்க ரணிலை விட சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் என்று ஏற்றுக் கொள்வார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இருந்த போதிலும் இது நல்லதோர் வாதமாக இருக்கிறது. அதேவேளை இந்த வாதம் ரணில், கரு ஜயசூரிய போன்றோர்களுக்கும் பொருத்தமாகும்.

அவர்களும் மேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது ஆளும் ஐ.ம.சு.கூட்டணியை தோற்கடித்துக்காட்டி ஜனாதிபதி வேட்பாளராவதற்கு தமக்கே தகுதியிருக்கிறது என உரிமை கூறலாம். ஏன் அத்தநாயக்கவும் கூட கடந்த மாதம் நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அம்மாகாண முதலமைச்சராகி தாமும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தகுதியானவர் என்பதை நிரூபித்திருக்கலாம்.

ஆனால் இவர்கள் எவரும் இந்த சவாலை ஏற்கத் தயாரில்லை. அது தான் உண்மை. இவர்களில் மற்றவர்களைப் பார்க்கிலும் சிறுபான்மை மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர் ரணில் விக்கிரமசிங்கவே. ஆனால் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழும் மேல் மாகாணத்தில் போட்டியிட அவரும் விரும்ப மாட்டார். அது முதலமைச்சர் பதவி அவரது அந்தஸ்திற்கு பொருத்தமானதல்ல என்பதற்காகவல்ல. தோல்வியடைவோம் என்ற பயத்தினாலேயே.

இரண்டு அரச தலைவர்களின் மகளாகவிருந்தும் சந்திரிகா 1993ஆம் ஆண்டு மேல் மாகாண சபை முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட்டே அரசியலில் மிக வேகமாக முன்னோக்கிச் சென்றார். இதில் அந்தஸ்த்து பிரச்சினையாகவில்லை.

ஒரு மாகாணத்திலாவது வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஐ.தே.க. தலைவர்களிடையே இல்லாவிட்டால் அடுத்து பதவிக்கு வரப் போவது ஐ.தே.க.வே என்ற நம்பிக்கையை அவர்கள் மக்கள் மனதில் எவ்வாறு ஊட்ட முடியும்? அந்த நம்பிக்கை இருந்தால் மட்டுமே மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களிப்பார்கள். மிகச் சிலரே வெற்றி தோல்வி எதுவானாலும் ஒரு கட்சியின் கொள்கைகளுக்காகவோ அல்லது அது தமது கட்சி என்ற உணர்வினாலோ வாக்களிப்பார்கள்.

இப்போது என்ன நடக்கிறது என்றால் ஐ.தே.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லாததால் பெரும்பாலான மக்கள் அக்கட்சிக்கு தேர்தல்களின் போது வாக்களிப்பதில்லை. அதனால் ஐ.தே.க. தலைவர்கள் நம்பிக்கையிழந்து இருக்கிறார்கள். நம்பிக்கையிழந்த நிலையில் அவர்கள் மக்களிடம் செல்கிறார்கள். மக்களுக்கும் ஐ.தே.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லாததால் பெரும்பாலான மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கே வாக்களிக்கிறார்கள். இது பைத்தியம் தீர்ந்தால் மணமாகும், மணமானால் பைத்தியம் தீரும் என்பதைப் போன்ற நிலைமையாகும். இதைத் தான் விஷச் சுழல் (vicious circle) என்பார்கள்.

இதனை புரிந்து கொள்ளாததால் தான் ஐ.தே.க. தலைவர்கள் சண்டை பிடித்துக் கொண்டு காலத்தை வீணாக்கிறார்கள். இது தனி நபருடைய பிரச்சினை என்பதை விட ஐ.தே.க.வே 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் விகிதாசார தேர்தல் முறையின் நேரடி விளைவாகும்.

மக்கள் பிரதானமாக கொள்கைகளுக்காக வாக்களிப்பதில்லை, மாறாக 'அலை வீசும்' கட்சிக்கே வாக்களிகிகிறார்கள். தேர்தல்களின் போது இந்த அலையை உருவாக்கிக் கொள்ள நிறைவேற்று ஜனாதிபதி தமது கட்சிக்கு மட்டுமே இடமளிக்கிறார். பொலிஸ், இராணுவம் மற்றும் அரச இயந்திரம் ஆகியவை அவரது கையில் இருப்பதால் அவர் மற்றைய கட்சிகளுக்காக அலை உருவாக இடமளிப்பதில்லை.

இருந்த போதிலும் 1978ஆம் ஆண்டுக்கு முன்னர் போல் தொகுதி அடிப்படையில் தேரதல்கள் நடைபெற்றால் ஜனாதிபதிக்கு எதிரான கட்சிகளில் உள்ள சில தனி நபர்கள் தமது பண, சாதி மற்றும் குடும்ப செல்வாக்கு போன்றவற்றைப் பாவித்து ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரை தமது தொகுதியில் தோற்கடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறானவர்கள் ஒன்று கூடும் போது அங்கு பதவிக்கு வருவது ஒரு புறமிருக்க பலமான எதிர்க் கட்சியாவது உருவாகும்.

ஆனால் தற்போதைய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் அவ்வாறு தனி நபர்களுக்காக அலை வீசுவதில்லை. கட்சிகளுக்கே அலை வீசும். எனவே தேர்தல்களின் போது தாம் விரும்பும் வேட்பாளர்கள் ஏனைய கட்சிகளில் இருந்தாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற உத்தரவாதம் இல்லாததால் மக்கள் அனேகமாக அலை வீசும் கட்சிக்கே வாக்களிக்கிறார்கள்.

இது ஐ.தே.க. என்றும் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக அன்றைய ஐ.தே.க. தலைவர் ஜே.ஆர் ஜயவர்தன 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் அறிமுகப்படுத்திய ஒரு பொறி முறையாகும். உண்மையிலேயே 1991ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர்களான லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஐ.தே.க. தலைவராகவிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கு எதிராக கிளர்ச்சியொன்றை உருவாக்கியிருக்காவிட்டால் 1994ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சி கவிழ்ந்து இருக்காது.

ஜே.ஆர். ஜயவர்தன அன்றைய நிலையில் அரசியலமைப்பை திருத்தி ஐ.தே.க.விற்கு சாதகமாக நடந்து கொண்ட போதிலும் தமக்கு அடுத்ததாக பல தலைவர்களை வைத்திருந்த காரணத்தினால் அவருக்குப் பின்னர் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால் 1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐ.தே.க.வே இன்னமும் பதவியில் இருக்கும்.

ஐ.தே.க. என்றும் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக அன்று ஜயவர்தன அரசியலமைப்பின் மூலம் அறிமுகப்படுத்திய பொறி முறையானதா அவரது கட்சியான ஐ.தே.க.வையே இன்று வாட்டுகிறது. நாட்டைப் பற்றி சிந்திக்காமல் தமது குடும்பத்தை அல்லது கட்சியை மனதில் வைத்து நாட்டுக்கு அரசியலமைப்பொன்றை தயாரிப்பதால் மக்கள் நன்மையடையப் போவதில்லை.

அதேவேளை அவ்வாறு  தமது குடும்பத்தை அல்லது கட்சியை மனதில் வைத்து நாட்டுக்கு அரசியலமைப்பொன்றை தயாரித்துவிட்டு சறுகினால் தமக்கும் படுகுழி தான் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும். இன்றைய ஆட்சியாளர்கள் இன்று மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளும் எதிர்க்காலத்தில் இவ்வாறே அமையலாம்.  

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் கவர்ச்சியில்லாதவர் என்பதனாலேயே ஐ.தே.க. தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது என பலர் கூறுகிறார்கள். அவர் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று அரசியல் கவர்ச்சியுள்ளவர் அல்ல தான். ஆனால் அரசியல் கவர்ச்சி என்பது அதிகாரத்தைப் பெற அவசியமாவதைப் போலவே அரசியல் அதிகாரமும் அரசியல் கவர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. புலிகள் வடக்கில் தேர்தல் பகிஷ்கரிப்பில் ஈடுபடாவிட்டால் விக்கிரமசிங்க 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து இருப்பார் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

அவ்வாறு நடந்து இருந்தால் நிறைவேற்று ஜனாதிபதி பதவியின் பலத்தைக் கொண்டு விக்கிரமசிங்க தம்மை மேலும் பலப்படுத்திக் கொண்டிருப்பார். அவ்வாறு நடைபெற்று இருந்தால் இப்போது மஹிந்த ராஜபக்ஷவைப் பார்க்கிலும் விக்கிரமசிங்கவே அரசியல் கவரச்சிமிக்கவராக இருந்திருப்பார்.

எனவே இது தனி நபர் ஒருவருடைய பிரச்சினையல்ல. இது இந்த தேர்தல் முறையின் விளைவாகும். எனவே இதை உணர்ந்து ஐ.தே.க. தலைவர்கள் தமக்குள் சண்டையில்லாமல் தீர்வு தேட வேண்டும். ஏனெனில் நாட்டுக்கு பலமான எதிர்க்கட்சியொன்று தேவையாக இருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X