2025 மே 19, திங்கட்கிழமை

விக்னேஸ்வரன் தெற்கில் ஏற்படுத்தும் தாக்கம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

தென் பகுதி அரசியல்வாதிகள் விக்னேஸ்வரனிடமும் சம்பந்தனிடமும் சுமந்திரனிடமும் அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெற்கில் பலர் தனிப்பட்ட சந்திப்புக்களின் போது 'கஷுவலாக' கூறுகிறார்கள். கடும் போக்குள்ள பேரினவாதிகளையும் அரசாங்கத்தை சார்ந்தவர்களையும் தவிர்ந்த தெற்கில் பலர் வட மாகாண சபையின் தற்போதைய போக்கை முதிர்ந்த அரசியல் என்றே வர்ணிக்கிறார்கள்.

வட மாகாண சபையில் நடைபெறும் விடயங்களில் தெற்கில் சில கடும் போக்காளர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இது வரை பிடி கொடுக்கவே இல்லை. அவர்களுக்கு கூச்சலிட இது வரை ஒரே ஓரு சந்தர்ப்பம் தான் கிடைத்தது. அது தான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்த கூட்டத்தின் போது தேசிய கொடி ஏற்றாமல் இருந்த சம்பவம்.

அதன் பின்னர் வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டு நடைபெற்ற பல வைபவங்களின் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தமையினால் அந்த விமர்சனமும் தெற்கில் அவ்வளவாக எடுபடவில்லை. இலங்கை கடலுக்குள் அத்து மீறி வரும் தென் இந்திய மீனவர்களை தாம் எதிரிகளாக கருதவில்லை என்று வட மாகாண கடற்றோழில் அமைச்சர் கூறியதாக வெளியான செய்தியொன்றை பெரிதுபடுத்த விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹம்மத் முஸம்மில் எடுத்த முயற்சியும் பிசுபிசுத்துப் போய்விட்டது.

ஆனால், வடக்கில் சகலதும் சுமுகமாகவும் பரிபூரணமாகவும் நடைபெறவில்லை என்பதையும் தெற்கில் மக்கள் அறிந்துள்ளனர். வடக்கில் கடும் போக்காளர்களுக்கும் மிதவாதிகளுக்கும் இடையே தீவிர முறுகல் நிலை இருப்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்களில் இனவாத போக்குள்ள சிலர் இந்த முறுகல் வளர வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார்கள். விந்தை என்னவென்றால் இந்த முறுகலின் போது தீவிரவாதிகளின் கை ஓங்க வேண்டும் என்றே அவர்கள் நினைக்கிறார்கள் ஏனெனில் அப்போது தான் அவர்களுக்கு பிழைப்புக்கான தீனி கிடைக்கும்.

சம்பந்தனுக்கு வேண்டும் என்றால் ஏ-9 வீதியினு10டாக வந்து தெற்கிலுள்ள மக்களுடன் சுமுகமாக வாழலாம் அல்லது புதுமாத்தளன் ஊடாக பிரபாகரன் சென்ற பாதையிலும் செல்லலாம் என அண்மையில் தொழிலநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார்.

அனேகமாக சந்பந்தன் புதுமாத்தளன் ஊடான வழியை தேர்வு செய்வதையே அவர் விரும்பியிருக்கலாம். ஆனால் இது வரை இடம்பெற்ற சம்;பவங்களால் அவரும் ஏமாற்றமடைந்திருப்பார்.

இருந்த போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை கடும் போக்காளர்களினதும் வடக்கின் யதார்த்தத்திற்கும் இடையே அகப்பட்டுக் கொண்டு இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. முதலமைச்சர் வேட்பாளரை தெரிவுசெய்தல், முதலமைச்சின் சத்தியப்பிரமாணம், மாகாண அமைச்சரவையை தெரிவு செய்தல், மாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் போன்ற விடயங்களின் போது ஏற்பட்ட நிலைமைகள் இந்த கடும் போக்கு- மிதவாத மோதலையே எடுத்துக் காட்டுகிறது.

முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனை நியமித்ததோடு வட மாகாண சபையின் போக்கே மாறியது எனலாம். சிங்கள சமூகத்தை அறிந்த அச் சமூகத்தோடு பழகிய ஒருவர் என்ற முறையில் அவர் அப் பதவியை ஏற்றமை வட மாகாண சபை மத்திய அரசாங்கத்தோடு கடமையாற்றுவதற்கு வசதியாக அமையும் என்று ஊகிக்கலாம். மரபு ரீதியான தமிழ் தலைவர் ஒருவர் அப் பதவியை ஏற்றிருந்தால் இப்போதே மத்திய அரசாங்கத்தோடு முரண்பாடுகளும் மோதல்களும் தோன்றியிருக்லாம்.

வட மாகாண முதலமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தமை தெற்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வட பகுதி அரசியல்வாதிகள் எடுத்தற்கெல்லாம் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவதும் செயற்படுவதும் வழமையாகிவிட்ட நிலையில் விக்னேஸ்வரன் தமது கட்சித் தலைவர் முன்னிலையில் அல்லது ஜனாதிபதி அல்லாத வேறு ஒருவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செயவார் என்றே தெற்கில் பலர் நினைத்தனர்.

போனஸ் ஊறுப்பினர்கள் இருவரை நிமிக்கும் போது தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியும் நியமிக்கப்படுவார் என் பலர் நினைத்தனர். ஏனெனில் தெற்கில் அவ்வாறு தான் அரசியல் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அனேகமாக தேர்தலில் தோல்வியடைந்தாலும் பெயர் உள்ளவர்களுக்கு அரசியலில் இடம் கிடைக்கும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த மரபையும் மீறியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பெரும் சர்சசையை ஏற்படுத்திய வட மாகாண அமைச்சரவையை நியமித்த போதும் தெற்கில் பலருக்கு அது நம்ப முடியாத விடயமாகியது. ஒரு கூட்டணி ஆட்சி அமைத்தால் அனேகமாக கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் தலைவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே அமைச்சர் பதவிகள் வழங்கப்படும். அதேவேளை சிவாஜிலிங்கம், சித்தார்த்தன் மற்றும் ஆனந்தி போன்ற பிரபலமானவர்களே பதவிகளை பெற்றுக்கொள்ளக் கூடும்.

ஆனால் திறமையானவர்களே அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படுவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியதாக செய்திகள் கூறின. அது உண்மையா என்பது காலம் போகப் போகத் தான் தெரிய வரும். மத்திய அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுக்கள் வழங்கப்படும் போது பல சந்தர்ப்பங்களில் ஒரே துறை பல பிரிவுகளாக பிரித்து பல அமைச்சர்களுக்கு வழங்கப்படும். சில சந்தர்ப்பங்களில் காணி அமைச்சராக ஒருவரும் காணி அபிவிருத்தி அமைச்சராக மற்றொருவரும் நியமிக்கப்பட்டதும் உண்டு.

ஒரு முறை கல்வி அமைச்சராக ஒருவரும் உயர் கல்வி அமைச்சராக மற்றொருவரும் கல்விச் சேவைகள் அமைச்சராக ஒருவருமாக மூன்று அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்த குழப்ப நிலையும் வட மாகாண அமைச்சரவையில் அவ்வளவாக காண்பதற்கில்லை.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமக்குரிய அமைச்சுக்களை பொறுப்புபேற்கும் போதும் ஜனாதிபதியன் முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் செய்தார்.

வட மாகாண சபை தமக்குரிய பணிகளை மேற்கொள்வதற்காக நிதியினை பெற்றுக் கொள்ள நிதி ஆணைக்குழுவுடன பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக கடந்த வெள்ளிக் கிழமை செய்தியொன்று வெளியாகியிருந்தது. தெற்கில் வழமையாக நடப்பது என்னவென்றால் பதவிக்கு வரும் மாகாண முதலமைச்சர்கள் அரசாங்கம் தமக்கு வழங்கும் நிதியைக் கொண்டு மத்திய அரசாங்கம் சொல்வதை செய்வதே. அந்த விடயத்திலும் வட மாகாண சபை வித்தியாசமாக நடந்து கொண்டுள்ளது.

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாகாண சபை முறையைப் பற்றியும் மாகாண சபை அதிகாரங்களைப் பற்றியும் செயலமர்வொன்றை நடத்த வேண்டும் என்று வட மாகாண சபை தமது ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெற்கில் எந்தவொரு மாகாண சபையும் இது போன்றதோர் கோரிக்கையை இது கால வரையும் விடுத்ததில்லையென்றும் நிதி ஆணைக்குழுவின் தலைவர் ஆரியரத்ன ஹேவகே கூறியிருக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலம் புலிகள் மறுபிறவி பெற்றிருக்கிறார்கள் என்றும் ஆயுத பலத்தினால் பெற முடியாது போன தமிழீழத்தை அரசியல் ரீதியாக பெற்றுக் கொள்வதற்காகவே தமிழ் கூட்டமைப்பு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகிறது என்றெல்லாம் கூறிய தென் பகுதி அரசியல்;வாதிகள் வட மாகாண சபை தமக்குரிய அதிகாரங்களைப் பற்றி விளக்குமாறு மத்திய அரசாங்கத்தின் நிதி ஆணைக்குழுவிடமே கோரியதை எவ்வாறு விளங்கிக் கொள்வார்கள்?

இவ்வாறு வட மாகாண சபையின் புதிய நிர்வாகம் தென் பகுதி அரசியல் மீது ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி வந்த போதிலும் தமிழ் அரசியலில் காணப்படும் தீவிரவாதத்தின் கை ஓங்கினால் இந்த நிலைமை மாறும் என்பதும் தென் பகுதி அரசியல்வாதிகளுக்குத் தெரியும். உண்மையிலேயே வடக்கில் தற்போது காணப்படும் அரசியல் பக்குவம் திவீரவாதத்தின் கை ஓங்கினால் காணாமற் போய்விடும் தான். அந்த நிலைமையை உருவாக்க தென் பகுதி அரசியல்வாதிகள் மாகாண சபை நிர்வாகத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் வகையில் செயற்படவும் கூடும். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X