2025 மே 19, திங்கட்கிழமை

பிரதமர் வராவிட்டாலும் மாநாட்டை இந்தியா பகிஷ்கரிக்காது

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் 15, 16, 17 ஆகிய தினங்களில் கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோஹன் சிங் கலந்து கொள்ள மாட்டார் போல் தான் தெரிகிறது. கடந்த 15ஆம் திகதி அவர் தமிழ் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.கருணாநிதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் மூலம் அவ்வாறு தான் ஊகிக்க முடிகிறது.
 
மாநாட்டை பகிஷ்கரிக்குமாறு கோரி கருணாநிதி அனுப்பியிருந்த கடிதமொன்றுக்கு பதிலளித்து பிரதமர் அனுப்பியிருந்த கடிதத்தில், தமிழக மக்களினதும் தி.மு.க.வினதும் உணர்வுகள் உட்பட சம்பந்தப்பட்ட சகல காரணிகளையும் கருத்தில் கொண்டே மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டு இருந்தார். 
 
பொதுவாக சம்பந்தப்பட்ட சகல காரணிகளையும் கருத்தில் கொள்வதாக கூறாமல் தமிழக மக்களினதும் தி.மு.க.வினதும் உணர்வுகளை துல்லியமாக ஏன் இங்கு குறிப்பிட வேண்டும்? பிரதமர் தமிழக மக்களினதும் தி.மு.க.வினதும் உணர்வுகளை பொருட்படுத்தாமல் முடிவு எடுக்க நினைத்து இருந்தால் தாமாக முன் வந்து அதனை தமது கடிதத்தில் குறிப்பிடத் தேவையில்லை.
 
இவ் விடயம் தொடர்பான தமிழக மக்களினதும் தி.மு.க.வினதும் உணர்வுகள் சகலரும் அறிந்தவையே. அவர்கள் இந்தியா இம்முறை மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டும் என்றே கூறுகின்றனர். அதனை அறிந்திருந்தும் தாமாக முன்வந்து அதனை கூறிப்பிட்டு அதனை கருத்தில் கொள்வதாகவும் கூறுவதாயின் சிங், தமிழக மக்களின் உணர்வுகளின் பிரகாரம் நடந்துகொள்ளப் போகிறார் என்றே தெரிகிறது.
 
53 பொதுநலவாய நாடுகளில் இப்போதைக்கு கனேடியப் பிரதமர் ஸ்டீவன் ஹாப்பர் மட்டுமே தாம் இலங்கையில் நடைபெறும் மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக கூறி அவற்றக்கு எதிர்ப்புத் தெரிவித்தே கனடா மாநாட்டை பகிஷ்கரிக்கிறது.
 
இந்தியா இதுவரை தமது முடிவை தெரிவிக்காவிட்டாலும், இந்திய பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடிய சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவும் அவருக்குப் பதிலாக இந்திய உப ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்து கொள்ளக் கூடும் என்றும் இந்திய ஊடகங்கள் ஏற்கனவே செய்திகள் வெளியிட்டு இருந்தன. 
 
இந்தியா மாநாட்டை பகிஷ்கரித்தாலும் அல்லது பிரதமருக்குப் பதிலாக மற்றொருவரை அனுப்பினாலும் அதற்குக் காரணமாக இலங்கையின் மனித உரிமை நிலைமையை இந்தியா முன்வைக்கும் என்று கூற முடியாது. ஏனெனில் அந்த அடிப்படையில் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் உப ஜனாதிபதிக்கும் அதே காரணம் தடையாக அமையும். இலங்கையின் மனித உரிமை நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தமிழக மக்களும் தி.மு.க.வும் மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கூறிய போதிலும் இந்திய மத்திய அரசாங்கம் நேரடியாக அதனை கூறுமா என்பது சந்தேகமே. எனவே பிரதமர் வராவிட்டாலும் இந்தியா மாநாட்டை பகிஷ்கரிக்கும் சாத்தியக்கூறுகள் குறைவாகவே தென்படுகின்றன. 
 
பொதுநலவாய அமைப்பானது சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் என ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் முன்னாள் காலனித்துவ நாடுகளை ஒன்று சேர்த்து பிரிட்டனே முன்வந்து அமைத்த அமைப்பாகும். அதாவது இந்த அமைப்பானது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் சின்னமாகும். அதன் உச்சி மாநாடானது பிரிட்டன் தமது முன்னாள் அடிமை நாடுகளுடன் சேர்ந்து தமது பழைய சாம்ராஜ்ஜியத்தின் புகழை கொண்டாடுவதற்குச் சமமாகும். அதேபோல் அது காலனித்துவ நாடுகள் தமது பழைய அடிமைத் தனத்தை கொண்டாடுவதற்கும் சமமமாகும்.
 
அந்த அர்த்தத்தில் பார்த்தால் இந்த மாநாட்டுக்கு ஹாப்பர் வந்தாலென்ன வராவிட்டாலென்ன, மன்மோஹன் சிங் வந்தாலென்ன வராவிட்டாலென்ன என்றும் கேட்கலாம். 
 
ஆனால் அதேவேளை இந்த மாநாடு நாடுகளுக்கிடையே உறவுகளை பலப்படுத்திக் கொள்ளவும் வர்த்தக உறவுகளை புதிதாக ஆரம்பிக்கவும் ஏற்கனவே இருக்கும் உறுவுகளை பலப்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது என்பது உண்மை. எனினும் இம்முறை மாநாடு தான் பொதுநலவாய அமைப்பின் முதலாவது உச்சி மாநாடல்ல. இதற்கு முன்னர் நடைபெற்ற மாநாடுகளில் கலந்து கொண்ட இலங்கை எந்த புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டது அல்லது எந்த உறவை பலப்படுத்திக் கொண்டது என்று கேட்பதும் நியாயமான கேள்வியே. 
 
தமிழ் நாட்டில் நிலவும் நிலைமையை காட்டியே இந்தியா இம்முறை மாநாடு தொடர்பான தமது முடிவை எடுக்கக்கூடும் என்பதை ஏற்கனவே கூறினோம். கடந்த வருடமும் இவ் வருடமும் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டங்களின் போது இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா அப்போதும் அதற்குக் காரணமாக தமிழக நெருக்குவாரத்தையே சூசகமாக எடுத்துக் காட்டியது. 
 
இந்திய மத்திய அரசாங்கத்தின் முடிவுகள் மீது தமிழகத்தின் தாக்கத்தை இலங்கையின் முன்னாள் இந்திய தூதுவராகவும் அதன் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளருமாகவிருந்த நிருபமா ராவு ஒருமுறை மிக தெளிவாக எடுத்துக் கூறினார். 2011ஆம் ஆண்டு இலங்கையிலிருந்தும் மாலைத்தீவிலிருந்தும் இந்தியவுக்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் சிலரை வெளியுறவுத்துறை செயலாளர் என்ற முறையில் சந்தித்த அவர், தமிழகம் என்பது இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியென்றும் தமிழக மக்களின் உணர்வுகளை புறக்கணித்து இந்திய மத்திய அரசாகம் செயற்பட முடியாது என்றும் கூறியிருந்தார்.  
 
ஆனால் இது எப்போதும் உண்மையல்ல. தமக்கு வேண்டிய நேரங்களில் இந்திய மத்திய அரசாங்கம் தமிழகத்தை புறக்கணித்து எவ்வளவோ முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மிகவும் உணர்வுபூர்வமான விடயமான இலங்கை விடயத்திலும் இந்தியா - தமிழக உணர்வுகளை பெரிதாக மதியாது நடவடிக்கை எடுத்துள்ளது.
 
இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் இந்தியா நடந்து கொண்ட விதம் அதற்குச் சிறந்த உதாரணமாகும். 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் போர் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது சுமார் மூன்று லட்சம் மக்களை புலிகள் மிகச் சிறியதோர் நிலப் பரப்பில் பணயமாக தடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பெரும் உயிராபத்தை எதிர்நோக்கியிருந்தனர். தமிழகம் இதனால் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியாவானது இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு தொடர்ந்து உதவி வந்தது.
 
போரை நிறுத்தக் கோரி அப்போது தமிழகத்தில் நாள் தோறும் பல்வேறு அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தன. 11 பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். மத்திய அராங்கத்தை நடத்தும் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையில் போர் நிறுத்தப்படாவிட்டால் தாம் பதவி விலகப் போவதாக 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிவித்தனர்.

மத்திய அரசாங்கம் அப்போது ஜனாதிபதியின் ஆலோசகராகவிருந்த பஸில் ராஜபக்ஷவை புதுடில்லிக்கு அழைத்து அவர் மூலம் போர் முனையில் பொதுமக்கள் பாதுகாக்கப்படுவர் என்ற உத்தரவாதத்தைப் பெற்று அதனை தமிழகத்திற்கு அனுப்பியது. பதவி விலகப் போவதாக மிரட்டினாலும் உண்மையிலேயே அந்த நோக்கத்தை கொண்டிருக்காத தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதைக் கேட்டு 'தற்காலிகமாக' பதவி விலகல் முடிவை 'ஒத்திப் போட்டனர்.' போர் தொடர்ந்தது.
 
போரை நிருத்தக் கோரி 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி அப்போது 85 வயதான முதல்வர் கருணாநிதி திடீர் என முன்னறிவித்தல் இல்லாமலேயே (விமல் வீரவன்சவைப் போல்) 'சாகும் வரை' உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்தார். மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை தொடர்பு கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் எனக் கூறியது. இலங்கை அரசாங்கமும் சிவிலியன்கள் சிக்கியிருப்பதால் தாம் போர் முனையில் இனி பாரிய ஆதுதங்களை பாவிக்கப் போவதில்லை என அறிவித்தது. மத்திய அரசாங்கம் அச் செய்தியுடன் அப்போதைய வெளியுறவு அமைச்சாகவிருந்த தற்போதைய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை கருணாநிதியை சந்திக்க அனுப்பியது. 
 
முகர்ஜியை சந்தித்த உடன் பெரும் சாதனை படைத்தவரைப் போல் கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட்டார். காலை உணவுக்குப் பின்னர் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த கருணாநிதி பகல் உணவுக்கு முன்னர் அதனை கைவிட்டார் என சில இந்திய ஊடகங்கள் அப்போது அவரை நையாண்டி செய்தன. கருணாநிதி உண்ணாவிதத்தை கைவிட்டு 20 நாட்களில் புலிகளின் தலைமையும் முற்றாக அழிக்கப்பட்டு போரும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
 
இவ்வாறு தான் தமிழகமும் நடந்துகொள்கிறது. இந்தியாவும் இவ்வாறு தான் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கிறது. 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்திய தலையீட்டோடு ஒப்பிடுகையில் 2009ஆம் ஆண்டு இந்தியா தமிழக உணர்வுகளை எவ்வாறு மதிக்கிறது என்பதை நன்றாக விளங்கிக் கொள்ளலாம்.
 
1987ஆம் ஆண்டு பிரசித்தி பெற்ற வடமராட்சி இராணுவ நடவடிக்கையின் போது இலங்கையின் வடக்கில் இருந்த நிலைமைப் போல் நூறு மடங்குக்கு மேல் மோசமான நிலைமையே 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு அங்கு நிலவியது. 1987ஆம் ஆண்டு லட்சக் கணக்கான மக்கள் உயிராபத்தை எதிர்நோக்கி இருக்கவில்லை. அப்போது வடக்கில் பிரதானமாக உணவுத் தட்டுப்பாடு தான் நிலவியது.
 
ஆனால் இந்தியா 1987ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது கடற்படையை அனுப்பி இலங்கையின் கடற்பரப்பை மீறியும் விமானப் படையை அனுப்பி இலங்கையின் வான் பரப்பை மீறியும் போரை நிறுத்துமாறு இலங்கை மீது நெருக்குவாரத்தை ஏற்படுத்தியது. இந்தியா அப்போது அவ்வாறு செய்து போரை நிறுத்தியது மட்டுமல்லாது தமக்கு வேண்டிய விதத்திலான இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு இலங்கை அரசாங்கத்தையும் புலிகளையும் சம்மதிக்கவும் செய்தது.
 
அதைவிட பல மடங்கு பயங்கரமான நிலைமை வடக்கில் இருந்த போரின் இறுதிக் கட்டத்தின் போது இந்தியா போருக்காக இலங்கை அரசாங்கத்திற்கு பல வழிகளில் உதவியது. புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டு அவர்கள் பேர் தளபாட தட்டுப்பாட்டை எதிர்நோக்கியமையே அவர்கள் தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்திய புலனாய்வு உதவிகளை பாவித்தே அந்த கப்பல்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
புலிகளின் விமானங்கள் வவுனியாவில் இருந்த இராணுவ ரேடார் நிலையத்தை தாக்கிய போது அங்கிருந்த இரு இந்தியர்கள் காயமடைந்த போதே இங்கு இந்தியர்கள் இருந்த தகவல் வெளிவந்தது.
 
எனவே மன்மோஹன் சிங் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் அதற்கு தமிழக உணர்வுகள் தான் ஒரே காரணமல்ல. இலங்கையில் சீன தலையீடும் சம்பூர் மின்சார நிலையம் போன்ற இந்தியாவின் பொருளாதார இலக்குகளும் அதற்கு காரணங்களாகும் என ஊகிக்கலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X