.jpg)
இலங்கையில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் பங்கேற்பது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ஆளுக்கொரு விதமாக கருத்துச் சொல்லி சண்டைபோட்டுக் கொள்கிறார்கள். அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதில் அக்கட்சியின் தமிழக தலைவர்களுக்கு இடையில் பெரும் குழப்பமே நீடிக்கிறது. "தமிழர் உணர்வுகளும்" பாதிக்காமல், "மாநாட்டில் பங்கேற்பதற்கும் சிக்கல் வராமல்" கருத்துச் சொல்ல துடிக்கும் காங்கிரஸ் தலைவர்களால் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை.
தமிழகத்திலிருந்து மத்தியில் உள்ள காங்கிரஸ் அமைச்சரவையில் இருப்பவர்களில் முக்கியமானவர் நிதியமைச்சர் சிதம்பரம். அவர் இது பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கிறார். "இலங்கை தமிழர் பிரச்சினையில் சிதம்பரம்தான் குழப்புகிறார்" என்று இங்குள்ள தமிழ் அமைப்புகள் எழுப்பும் புகார்களை தவிர்க்கவே அவர் அமைதி காக்கிறார். அது மட்டுமின்றி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழர்களுக்கு எதிராக இந்தியா நடக்கிறது என்று நடைபெற்ற பிரசாரம் அவர் போட்டியிட்ட தொகுதியான சிவங்கையில் தீவிரமாக முற்றுகையிட்டது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சினிமா டைரக்டர் பாரதிராஜா என்று பல்வேறு தமிழர் ஆதரவு இயக்கங்களின் தலைவர்கள் எல்லாம் சிவகங்கைக்கு படையெடுத்தனர். இதில் பாதிக்கப்பட்டது சிதம்பரம்தான். மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில், அதாவது சுமார் 3000 வாக்குகள் மட்டுமே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட அதிகமாகப் பெற்று ஜெயிக்க நேர்ந்தது. இந்த வெற்றியும் செல்லாது என்று அறிவிக்கக் கோரி தோற்ற அ.தி.மு.க. வேட்பாளர் கண்ணப்பன் சார்பில் போட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இப்போது நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மீண்டும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியிலேயே போட்டியிட விரும்புகிறார் நிதியமைச்சர் சிதம்பரம். அதற்காக வாரத்தின் கடைசி நாட்களில் கண்டிப்பாக அவர் தொகுதிக்கு வருகிறார். தொகுதி மக்களை சந்திக்கிறார். இதுவரை தொகுதியில் அவர் மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தனியாக புத்தகமே போடும் நிலைக்கு வந்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஏதாவது கருத்துச் சொல்லி, தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் ஆதரவு இயக்கங்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்றே அவர் கருதுகிறார். அதனால்தானோ என்னவோ இதுவரை இலங்கையில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவோ அல்லது இந்தியப் பிரதமரோ பங்கேற்பது குறித்து கருத்து எதுவும் அவர் சொல்லவில்லை. அவர் சொல்லும் கருத்து மட்டுமே தமிழகத்தைப் பொறுத்தவரை முக்கியமான கருத்தாக கருதப்படும். ஏனென்றால் மத்திய அரசின் முக்கிய கொள்கை முடிவுகளில் அவருக்கு நிரம்ப பங்கு இருக்கிறது என்றே இங்குள்ள அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, இலங்கை தமிழர் ஆதரவு இயக்கங்களும் நினைக்கின்றன. தியாகு போன்றவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தது பற்றிக் கூட சிதம்பரம் எந்தக் கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எப்போதும் அமைதியாக இருக்கும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் இப்போது அடிக்கடி கருத்துச் சொல்லுகிறார். அதுவும் குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சினை, மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை, இப்போது கொமன்வெல்த் பிரச்சினை எல்லாவற்றிலும் சற்றும் தயங்காமல் கருத்துச் சொல்லி வருகிறார். வாசன் கருத்து இங்குள்ள இலங்கைத் தமிழர் ஆதரவு இயக்கங்களின் கருத்துக்களைப் போலவே வெளிப்படுகின்றன. குறிப்பாக "கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காத நாடுகள் தனிமைப்படுத்தப்படும்" என்று இலங்கைக்கான டெல்லி ஹைகமிஷனர் காரியம்வாசம் கூறிய கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்தியாவில் இருந்து கொண்டே இப்படி கருத்துச் சொல்லலாமா என்ற கேள்விக்கணைகள் பிறந்தன. இலங்கை தூதரின் கருத்தை கடுமையாக கண்டித்தார் ஜி.கே.வாசன். அதுமட்டுமின்றி "தமிழர்களின் உணர்வுகளை மதித்து பிரதமர் முடிவு எடுப்பார்" என்று கூறினார். கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதுதான் வாசனின் கருத்து.
வாசனைப் பொறுத்தமட்டில் இப்படி கருத்துச் சொல்வதற்கு காரணங்கள் உண்டு. முன்பு காங்கிரஸிலிருந்து விலகிச் சென்று தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் வாசனின் தந்தை மறைந்த மூப்பனார். 2001 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சி காங்கிரஸுடன் இணைந்தது. அதிலிருந்து காங்கிரஸிற்குள் வாசன் தனி அணியாகவே திகழ்கிறார் என்பது மற்ற காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு. தனக்கும், தன் ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸ் கட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் ஜி.கே. வாசனுக்கு இருக்கிறது. ஏற்கனவே, இலங்கை தமிழர் பிரச்சினையை காங்கிரஸ் கட்சி கையாண்ட விதத்தில் தமிழர்கள் மத்தியில் அக்கட்சிக்கு எதிரான கருத்து உருவாகியிருக்கிறது. அதே வழியில் நாமும் செல்லாமல், விலகி நின்று இலங்கை தமிழர் பிரச்சினையில் தனக்கு என்று ஓர் இமேஜை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் வாசன். அதே நேரத்தில் எதிர்காலத்தில் அவர் மீண்டும் தன் தந்தை போல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்க முயற்சிப்பார் என்ற பேச்சும் காங்கிரஸ் வட்டாரத்திலேயே கிளம்பியிருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்து இலங்கை தமிழர்களுக்கான ஆதரவு கருத்துக்களை மட்டுமே வாசன் இதுவரை கூறியிருக்கிறார். வாசனின் கருத்து தமிழகத்தில் உள்ள மற்ற காங்கிரஸ் தலைவர்களையே கலக்கத்தில் இறக்கி விட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். தன் எதிர்காலக் கனவுக்கு ஏற்றவாறு வாசன் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருத்துச் சொல்லுகிறார் என்ற கோபம் அகில இந்திய காங்கிரஸ்காரர்களுக்கே உண்டு என்றால் மிகையாகாது.
இவர்கள் இப்படியிருக்க, இன்னொரு இணை அமைச்சரான சுதர்சனன் நாச்சியப்பனோ மாற்றி வாசிக்கிறார். "இலங்கைத் தமிழர் நலன் காக்க, அவர்களின் பொருளாதாரம் மேம்பட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்" என்று அடித்துப் பேசியிருக்கிறார். "இந்தியா பெயரளவுக்குக் கூட கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது" என்று தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அரசு தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி ஆதரித்துள்ளது. சட்டசபையில் அப்படி ஆதரி்த்த கட்சியின் அமைச்சரான சுதர்சனன் நாச்சியப்பன் வெளியில் இப்படி மாற்றிப் பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது கிளம்பியிருக்கிறது. காங்கிரஸின் சட்டமன்றக் கட்சி ஒரு கருத்தைச் சொல்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு கருத்தைச் சொல்கிறது. காங்கிரஸ் அமைச்சர்கள் வெவ்வேறு கருத்தைச் சொல்கிறார்கள். அதனால்தான் தி.மு.க. தலைவர் கருணாநிதியே, "சுதர்சனன் நாச்சியப்பன் இலங்கை தூதர் கரியம் வாசம் போல் கருத்துச் சொல்கிறார். இது சரியல்ல" என்று சாடியிருக்கிறார்.
ஆனாலும் அமைச்சர் சுதர்சனன் நாச்சியப்பனைப் பொறுத்தமட்டில் இலங்கை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இவர் முழுக்க முழுக்க தமிழக காங்கிரஸ் கட்சியின் தயவில் ராஜ்ய சபை எம்.பி.யானவர் அல்ல. அதேபோல் தமிழக காங்கிரஸ் கட்சியில் பலம் உள்ளவர் என்ற அடிப்படையில் மத்திய மந்திரியானவர் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தயவில் மட்டுமே இந்தப் பதவிகளைப் பெற்றவர். ஆகவே, காங்கிரஸின் டெல்லி தலைமை என்ன நினைக்கிறதோ அதைப் பேசுவதிலேயே சுதர்சனன் நாச்சியப்பன் ஆர்வம் காட்டுகிறார். "யார் வருகிறார்களோ இல்லையோ நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்வேன்" என்று கூறிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் கருத்தைப் பிரதிபலிக்கிறார்.
ஆனால் ஆரம்பம் முதலே பிரதமர் அலுவலக அமைச்சராக இருக்கும் நாராயணசாமி மட்டும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவே கருத்துச் சொல்லி வருகிறார். "கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி தமிழர்களின் உணர்வுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு உரிய நேரத்தில் பிரதமர் முடிவு எடுப்பார்" என்று கூறி வருகிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட அடிக்கடி நாராயணசாமி மற்றும் வாசன் போன்றோரின் கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த விஷயங்களில் கருத்துச் சொல்லி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாராயணசாமியைப் பொறுத்தமட்டில் அவர் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கு இலங்கை தமிழர் பிரச்சினை தமிழகத்தில் உள்ளது போல் வேகமாக இல்லை. அதே நேரத்தில் அவர் தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து போட்டியிடப் போவதில்லை. அவருக்கு புதுவையில் ஜெயிக்க தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணி தேவை. அந்தக் கூட்டணி அமைவதற்கு ஏற்ற வகையில் இலங்கை தமிழர் பிரச்சினையில் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்போம் என்பது மட்டுமே நாராயணசாமியின் கவலை. அதனால்தான் அவர் இலங்கை தூதர் கரியம் வாசத்தின் கருத்திற்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்ற கடுமையாகச் சாடினார்.
கொமன்வெல்த் மாநாடு வந்தாலும் வந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குழம்பிப் போய் தவிக்கிறார்கள். திடமான, தீர்க்கமான கருத்தைச் சொல்ல முடியாமல் திண்டாடுகிறார். அனைத்துக் கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சினையை மீண்டும் விஸ்வரூபம் போல் கையில் எடுத்துள்ள நிலையில், இது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்கு பெரும் சிக்கலை தோற்றுவிக்கும். அந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்கவே ஒவ்வொரு காங்கிரஸ் தலைவர்களும் வெவ்வேறு விதமாக இலங்கை தமிழர் பிரச்சினைகளில் கருத்துச் சொல்கிறார்கள். அது மட்டுமின்றி தங்களின் "சொந்த அஜெண்டாவை" மனதில் வைத்து, "இலங்கை தமிழர் அஜெண்டாவில்" கருத்துச் சொல்கிறார்கள். ஆனால் ஒன்று நிச்சயம். இலங்கை தூதர் கரியம் வாசம் கூறியிருப்பது போல், "இந்தியா தனிமைப்படுகிறதோ இல்லையோ", கொமன்வெல்த் மாநாட்டுப் பிரச்சினையில் தமிழக காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறது. அதை தி.மு.க. வின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான துரைமுருகனே வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்!