-கே.சஞ்சயன்
வடக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், முக்கியமான மூன்று விவகாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
முதலாவது, இராணுவப் பின்னணி கொண்ட ஆளுநரான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை நீக்குவது. இரண்டாவது, வடக்கிற்கு தனியான பொலிஸ் பிரிவை உருவாக்குவது. மூன்றாவது, வடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் வாழ்வில் இராணுவத் தலையீடுகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது.
இவையனைத்தும் தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டு, பிரசாரப்படுத்தப்பட்ட விவகாரங்கள் தான்.
ஆனால், அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவற்றை வலியுறுத்தியதற்கும், இப்போது வடக்கு மாகாண அரசை நிறுவிய பின்னர், அதனை வலியுறுத்த ஆரம்பித்துள்ளதற்கும் வேறுபாடுகள் உள்ளன.
வடக்கு மாகாணசபையின் முதல் அமர்வு கடந்த 25ஆம் திகதி நடந்த போது, தமது முதலாவது உரையிலேயே, இந்த மூன்று விவகாரங்கள் குறித்தும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருந்தார். இதனால், இந்த விவகாரங்கள் கடும் வாதப், பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இராணுவப் பின்னணி கொண்ட ஆளுநரான மேஜர் ஜெனரல் சந்திரசிறி, தேர்தலின் போது எவ்வாறு பக்கசார்புடன் நடந்து கொண்டார் என்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர் விக்னேஸ்வரன், அவரை நீக்கிவிட்டு, ஜனாதிபதி வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளக்கூடிய சிவில் ஆளுநர் ஒருவரை நியமிப்பார் என்று நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனை, உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசராக இருந்த போதிலும், முதல்வர் விக்னேஸ்வரன் இதனை அதிகாரத்தொனியில் குறிப்பிடவில்லை. பரிவான முறையிலேயே - பவ்வியமான முறையிலேயே இதனை வெளிப்படுத்தியிருந்தார்.
ஏனென்றால், இது சிக்கலான காரியம் என்பதும், அரசாங்கத்துடன் முட்டி மோதுவதன் மூலம் இதனைச் சாதிக்க முடியாது என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும். அரசியல் களத்துக்கு அவர் வந்த பின்னர் இதனை பலமுறை எடுத்துக் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணசபையில் தனது முதல் உரையில் கூட 13ஆவது திருத்தச்சட்டத்தை ஓர் ஓட்டைப் பாத்திரம் என்று குறிப்பிட்டிருந்தார். இத்தகைய 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபையின் அதிகார வரையறை எது என்பது முதல்வர் விக்னேஸ்வரனுக்குத் தெரியாததல்ல. அதனால் தான், அவர் இந்த விடயத்தை கடுந்தொனியில் கூறாமல் விட்டிருந்தார்.
குறிப்பாக, வடக்கில் தமிழ் பேசும் பொலிஸாரைக் கொண்ட படைப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்பதையும், வடக்கில் இருந்து இராணுவத்தினர் விலக்கப்பட்டு – இராணுவத் தலையீடுகளற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதில் காட்டிய கடுந்தொனியை அவர் ஆளுநர் விடயத்தில் காட்டவில்லை.
ஆனால், இராணுவ ஆளுநரை ஏற்பதில்லை என்று உறுதிப்பாட்டில், முதல்வர் விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இருந்ததால் தான், ஆளுநர் முன்பாக பதவியேற்பதையும் தவிர்த்திருந்தனர்.
ஆளுநரை நீக்கும் விடயத்தில் முதல்வர் விக்னேஸ்வரன் கடும் போக்கை வெளிப்படுத்த தயங்குவதற்கு காரணம், ஆளுநரை நியமிக்கும் அதிகாரங்கள் ஜனாதிபதிக்கே உரியவையாகும். யாரை ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி விரும்புகிறாரோ அவரை நியமிக்கலாம். அதுபோலவே ஆளுநரை நீக்கும் விடயத்திலும் அவரே தன்னிச்சையாக முடிவெடுக்கலாம்.
மத்திய அரசில் ஜனாதிபதி எந்தளவுக்கு நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ளாரோ, அதுபோலவே மாகாணங்களில் ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநர், ஒரு சிற்றரசர் போலவே செயற்படுகிறார். இதில் மாகாணசபைகளின் விருப்பு வெறுப்புகள் குறித்தெல்லாம் கவனிக்கப்படுவதில்லை.
வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர் தான் அங்கு ஆளுநர் விவகாரம் வெடித்தது. அதற்கு முன்னதாகவே, கிழக்கிலும் அத்தகைய பிரச்சினை தோன்றி விட்டது. இந்தளவுக்கும், அங்கே ஆளும் கட்சியாக இருப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தான். அங்குள்ள ஆளுநரும் ஓர் இராணுவப் பின்னணி கொண்டவர் தான்.
கடற்படைத் தலைமை அதிகாரியாக இருந்த வைஸ் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம, அங்கு மாகாணசபையின் எல்லா நடவடிக்கைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக ஆளும் தரப்பினரே குற்றம்சாட்டுகின்றனர்.
கிழக்கில் ஒரு மாகாணசபை செயற்படுகிறது என்றே கருத முடியாதளவுக்கு ஆளுநரின் தலையீடுகள் அங்கு காணப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸ் கூறுகிறது. இதுபோன்று சூழல் வடக்கில் இன்னமும் ஏற்படவில்லை. ஏனென்றால், இப்போது தான் வடக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கியுள்ளது.
ஆனால், கிழக்கினை ஒத்தநிலை விரைவிலேயே வடக்கிலும் ஏற்படலாம். எனினும் ஒரு சிக்கல் உள்ளது. வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளில் அளவுக்கதிகமாக குறுக்கிடுவாரேயானால், தனது அதிகாரத்தனத்தை வெளிப்படுத்துவாரேயானால், அது சர்வதேச அளவில் இலங்கை அரசாங்கத்துக்கு கெட்டபெயரை ஏற்படுத்திக் கொடுக்கும்.
எனவே கிழக்கில் ஆளுநர் செயற்படுவதை விட, வடக்கு ஆளுநர் அதிகாரப்போக்குடன் செயற்படுவதற்கு கொஞ்சம் தயங்கக்கூடும். வடக்கு மாகாணசபையின் சுதந்திரமான சிவில் நிர்வாகத்துக்கு இராணுவ ஆளுநர் தடையாக இருப்பார் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது கருத்தை அரசாங்கம் ஏற்குமா என்பது தான் முக்கியமான கேள்வி.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தக் கோரிக்கைக்கு ஊடகங்களில் பதிலளித்துள்ள வடக்கு மாகாண ஆளுநர், தாம் ஜனாதிபதியின் பிரதிநிதி என்றும், தம்மை நீக்கும்படி கோரும் உரிமை முதலமைச்சருக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆளுநரை நீக்கும்படி கோரும் சட்டரீதியான உரிமை முதலமைச்சர் ஒருவருக்கு இல்லை என்பது உண்மையே என்றாலும், மாகாண அரசுடன் இணங்கிச் செயற்படும் ஒருவரையே ஆளுநராக நியமிக்க வேண்டியது ஜனாதிபதியின் கடமையாகும்.
ஏனென்றால், அத்தகைய இணக்கப் போக்கைக் கொண்டிராதவரை நியமிப்பதால், மாகாணசபையின் செயற்பாடுகள் முடங்கி விடும். இந்தியாவில் பெரும்பாலும் மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும் ஒருவரையே மத்திய அரசு ஆளுநராக நியமிப்பது வழக்கம்.
மத்திய ஆட்சியை சார்ந்தவர்களாக இருக்கும் அவ்வாறான ஆளுநர்கள் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ளும் போக்கையே பெரும்பாலும் கடைப்பிடிப்பதுண்டு.
உதாரணத்துக்கு, தற்போது தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அரசுக்கும், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கும் பெரிய இடைவெளி இருந்தாலும், தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் காங்கிரஸின் மூத்த பிரமுகரான ரோசையா மாநில நிர்வாகத்தில் அதிகம் தலையிடுவதில்லை.
ஆனால், வேறு சில மாநிலங்களில் ஆளுநர் அளவுக்கு மீறி செயற்படுவதான குற்றச்சாட்டுகளும் உள்ளன. தமிழ்நாட்டில் அதிமுக அரசுடன் இணங்கிச் செயற்படும் ஆளுநர் போன்று ஒருவரையே வடக்கு மாகாணசபை விரும்புகிறது. கிழக்கும் கூட அதற்கு விதிவிலக்கானதாக இருக்க முடியாது.
வடக்கு மாகாணசபையின் இந்தக் கோரிக்கையை ஐதேகவும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், இதனைப் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாய்திறக்கவேயில்லை. பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தகைய கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த முடிவையும் எடுக்காமல் இழுத்தடிப்பாரேயானால், அது ஆளுநருக்கும் வடக்கு மாகாணசபைக்கும் இடையிலான இடைவெளிகளை அதிகப்படுத்தும்.
சிலவேளைகளில், முன்னாள் இராணுவ அதிகாரியான ஆளுநரை கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நீக்கி விட்டார் என்ற குற்றச்சாட்டு தெற்கிலிருந்து வருவதைத் தவிர்ப்பதற்காக, அவர் சிறிதுகாலம் அமைதி காக்கலாம்.
வடக்கு மாகாணசபையை அரசாங்கம், அபிவிருத்தி நோக்கியும் நல்லிணக்கப் போக்குடனும் அணுகப்போகிறதா என்பதை, ஆளுநர் விவகாரமே தீர்மானிக்கப் போகிறது.
வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்தோ, இராணுவத்தை விலக்குவது குறித்தோ முடிவெடுக்க ஜனாதிபதி கூடுதல் அவகாசத்தை எடுக்கலாம். ஏனென்றால், அதில் அதிகமான சிக்கல்களை தாண்ட வேண்டும் என்று அவர் நியாயப்படுத்தலாம்.
ஆனால், ஆளுநர் விவகாரம் அப்படியன்று. அது ஒரு சாதாரண விடயம். அதைச் செய்வதற்கு அதிகம் யோசிக்கவோ, எவருடைய அனுமதியையும் பெறவோ வேண்டியதில்லை. அதற்கான தற்துணிவு ஜனாதிபதியிடமே உள்ளது.
இதையும் மீறி, வடக்கில் இருந்து இராணுவப் பின்னணி கொண்ட ஆளுநரை மாற்ற முடியாது என்று அரசாங்கம் கடும் பிடிவாதத்தில் இருக்குமேயானால், அது வடக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகம் ஏற்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை என்ற சமிக்ஞையைத் தான் வெளியுலகிற்கு வெளிப்படுத்தும்.