.jpg)
இம் மாதம் நடுப் பகுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்வார் போல் தான் தெரிகிறது. இந்திய மத்திய அரசாங்கம், தமிழ் நாட்டுத் தலைவர்களின் நெருக்குதல்களை விட முழு இநதியாவினதும் நலன்களை கருத்தில் கொண்டே தீர்மானம் எடுக்கிறது என்று கடந்த வாரம் நாம் கூறியதையே இது எடுத்துக் காட்டுகிறது.
இந்தியா இந்த மாநாடு இலங்கையில் நடைபெறும் ஒரே காரணத்திற்காக அதனை பகிஷ்கரிக்கப் போவதில்லை என்பது ஆரம்பத்திலிருந்தே தெரிவித்திருந்தது. இதற்கு முன்னர் இந்தியாவானது மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி அனுப்பிய கடிதமொன்றுக்கு அளித்த பதிலிலும் தமிழக மக்களினதும் தி.மு.க.வினதும் உணர்வுகள் உட்பட 'ஏனைய காரணிகளை' கருத்தில் கொண்டே 'தாம் பங்கு பற்றுவதை' தீர்மானிக்கப் போவதாக பிரதமர் மன்மோஹன் சிங் கூறியிருந்தார். மாநாட்டை பகிஷ்கரிப்பது தொடர்பாக அவர் அதிலும் எதனையும் கூறியிருக்கவில்லை.
ஆனால், இப்போது இந்தியாவானது மாநாட்டை பகிஷ்கரிக்காதது மட்டுமல்லாது பிரதமரும் அதில் கலந்து கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன. அவரது ஆலோசகர்கள் அனைவரும் அவர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றே ஆலோசனை கூறி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் கடந்த ஓகஸ்ட் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வரவிருந்த போது, இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் எல்லோரும் அவர் வரத் தான் வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். ஆனால் அவருக்கு அழைப்பு விடுத்த இலங்கை அரசாங்கம் அவர் வராமல் இருந்தால் நல்லது என்பதைப் போல் நடந்து கொண்டது.
இப்போது நிலைமை அதற்கு நேர்மாறானதாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம் பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 54 நாடுகளினதும் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்க, இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் எந்த நாட்டுத் தலைவரும் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடுகளின் போது எந்த நாடு கலந்து கொள்ளும், எந்த நாடு கலந்து கொள்ளாது என்ற பிரச்சினை எழவில்லை. பொதுவாக அமைப்பின் சகல நாடுகளினதும் தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். உடல் நிலைமை அல்லது உள்நாட்டுப் பிரச்சினைகள் காரணமாக ஏதாவது ஒரு நாட்டின் தலைவர் சமூகமளிக்காமல் இருந்தாலும் அது அரசியல் பிரச்சினையாவதில்லை. ஆனால் மாநாட்டுக்கு இன்னமும் இரண்டு வாரங்களுக்குக் குறைந்த காலமே இருக்கும் நிலையிலும் பத்துக்கு மேற்பட்ட நாடுகளின் வரவு இன்னமும் உறுதிப்படுத்தப்படாமை இலங்கைக்கு அவ்வளவாக நல்லதல்ல.
ஆனால், பொதுநலவாய அமைப்பின் பெரும்பாலான நாடுகளின் (சுமார் 40 நாடுகளின்) தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதை இப்போது உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மாநாட்டை பகிஷ்கரிப்பதாக கனடாவைத் தவிர்ந்த எந்தவொரு நாடும் கூறவில்லை. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு 1973ஆம் ஆண்டு ஆரம்பித்ததிலிருந்த பிரிட்டிஷ் மகாராணி கலந்து கொள்ளாத ஒரே மாநாடு இதுவாக இருந்த போதிலும், உடல் நிலை காரணமாகவே அவர் இம்முறை கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
பொதுநலவாய அமைப்பின் முக்கிய தலைவர்களில் இந்திய பிரதமரின் பங்களிப்பைப் பற்றிய முடிவு மட்டுமே இன்னமும் திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த வாரம் நாம் கூறியதைப் போல் அந்த முடிவு தமிழ்நாட்டிலிருந்து வரும் நெருக்குவாரத்தின் மீது மட்டும் தங்கியிருக்கப் போவதில்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது.
தமிழ் நாட்டின் நெருக்குதலைப் பார்க்கிலும் இந்தியாவின் பிராந்திய நலன்களே முக்கியம் என்பதை இப்போது இந்திய ஊடகங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்திய பிராந்திய நலன்களின் அடிப்படையில் இந்தியாவானது இலங்கைக்கு சாதகமான முடிவையும் எடுக்கலாம், பாதகமான முடிவையும் எடுக்கலாம். இலங்கைக்கு பாதகமான முடிவை எடுத்தால் இந்தியா அதன் மூலம் தமது பிராந்திய நலனையும் பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பதோடு தமிழ்நாட்டையும் திருப்திப்படுத்தும்.
அப்போது தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஒவ்வொருவரும் அது தமது சாதனையாகவே எடுத்துக் காட்டி அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் தேர்தல்களின் போது வாக்காளர்களை தம் பக்கம் சாய்த்துக் கொள்ள அதனை பாவிக்கக் கூடும். கடந்த வருடமும் இந்த வருடமும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைகளின் போதும் இந்தியா, தமிழ் நாட்டின் நெருக்குதலினால் தான் பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. அப்போதும் முழு இந்தியாவினதும் நலனையே இந்திய தலைவர்கள் கருத்திற்கொண்டனர்.
இந்தியா இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தைப் பற்றி எப்போதும் அக்கறையுடன் தான் இருக்கிறது. அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகள் இந்தப் பிராந்தியத்தில் மூக்கை திணிப்பதை இந்தியா அவ்வளவு விரும்புவதில்லை. இந்த நாடுகள் அளவுக்க அதிகமாக பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் சமூக பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் இந்தியா விரும்புவதில்லை. ஆனால் அதற்காக அந்த வல்லரசு நாடுகளுடன் மோதவும் இந்தியா விரும்பவில்லை. எனவே இந்த விடயத்தில் இந்தியா, இந்தவல்லரசு நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளையே கட்டுப்படுத்த முற்படுகிறது.
இலங்கையும் அண்மைக் காலமாக சீனாவுடன் மிகவும் நெருங்கிய பொருளாதார உறவுகளை வளர்த்துக் கொண்டு வருகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் அதற்கு சிறந்த உதாரணமாகும். இந்தியா இந்த நிலைமையை விரும்புவதாக கூற முடியாது. அதேவேளை இந்தியாவும் இலங்கையில் சம்பூர் மின்சார நிலையம் போன்ற சில பொருளாதார நலன்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது. சம்பூர் மின்சார நிலையம் இந்தியாவுக்கு இலாபகரமானதாக இருந்தாலும் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் பாதகமானது என்றே கூறப்படுகிறது.
பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை பாதுகாத்துக் கொள்ளும் விடயத்தில் இந்தியா சில வேளைகளில் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளை ராஜதந்திர ரீதியாக தண்டிக்கவும் முற்படுவதுண்டு. உதாரணமாக நேபாலத்தை எடுத்துக் கொள்ளலாம். நேபாலம் என்பது கடல் இல்லாத நாடு. ஏனைய நாடுகளினூடாகவே நேபாலம் உலக நாடுகளுடன் தொடர்பு வைத்துள்ளது.
இதற்காக நேபாலத்திலிருந்து வெளி நாடுகளுக்கு போகக்கூடிய 15 வீதிகள் இருக்கின்றன. அவற்றில் 13வீதிகள் இந்தியா ஊடாகவே செல்கின்றன. அந்த நாடு ஆயுத கொள்வனவுக்காக சீனாவை நாடியதற்காக 1989ஆம் ஆண்டு இந்தியா இந்த 13 வீதிகளையும் மூடிவிட்டது. சில காலத்திற்குப் பின்னர் தான் இந்த வீதிகள் திறக்கப்பட்டன.
இதேபோல் 1980களில் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன இந்தியாவுக்கு பிடிக்காத இரு நாடுகளான அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுடன் அளவுக்கு அதிகமாக தொடர்பு வைத்த போது இந்தியாவானது இலங்கை தமிழ் இயக்கங்களுக்கு பணம், ஆயுதம், இராணுவ பயிற்சி ஆகிவற்றை வழங்கி இலங்கையை தண்டிக்க முற்பட்டது. அது நெடுமாறன் போன்ற தமிழ்நாட்டுத் தலைவர்கள் விரும்பியதற்காக செய்தது அல்ல.
ஆனால் இப்போது நிலைமை வித்தியாசமாக இருக்கிறது. இலங்கையை ஓரளவுக்கு பயமுறுத்திக் கொள்ளவும் இந்தியா விரும்புகிறது. அதேவேளை அதற்கான தமது நடவடிக்கைகள் சீனா தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளுமா என்ற பயமும் இந்தியாவுக்கு இருக்கிறது. இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் சில தலைவர்கள் கூறிய போது இந்தியா அவ்வாறு இலங்கை படைகளுக்கு பயிற்சி வழங்காவிட்டால் இலங்கைப் படையினர் பயிற்சிக்காக சீனாவை நாடலாம் என்று சில இந்திய ஊடகங்கள் கூறின.
இதே பிரச்சினை தான் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு சம்பந்தமாகவும் எழுந்துள்ளது. இலங்கையானது சீனா பக்கம் சாய்வதை தடுப்பதற்காக இலங்கை தலைவர்களை அசௌகரியத்துக்குள்ளாக்கலாம். இந்தியா மாநாட்டை பகிஷ்கரிக்கலாம். அல்லது இந்திய பிரதமர் மாநாட்டுக்கு வராமல் இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்வதே சிலவேளை இலங்கை மேலும் சீனா பக்கம் சாய்வதற்கும் காரணமாகலாம்.
தமிழ்நாட்டுத் தலைவர்களும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களும் இலங்கை தலைவர்களை அசௌகரியத்திற்குள்ளாக்கினால் போதும் என்ற நிலையில் இலங்கை அரசாங்கம் விரும்பும் எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள். சிலவேளைகளில் இலங்கையில் வாழும் தமிழர்களைக்கூட கவனியாது இலங்கை தலைவர்களை அசௌகரியத்திற்குள்ளாக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறார்கள். ஆனால் இந்திய மத்திய அரசாங்கம் பிரச்சினைகளை அதை விட விரிவான நோக்கில் பார்க்கிறது.
பிராந்தியத்தில் நடைபெறும் சர்வதேச மாநாடொன்றின் போது பிராந்தியத்தின் தலைமை நாடு கலந்து கொள்ளாவிட்டால் அது இலங்கைக்கு விழும் அடியாக அமைவது உண்மை தான். ஆனால் அதைப் போலவே அது வல்லரசு நாடுகள் பிராந்தியத்திற்குள் வந்து இந்தியாவை மதியாது நடந்து கொள்ளவும் காரணமாக அமையும் என இந்திய ஊடகவியலாளர் ஒருவர் வாதிட்டு இருந்தார்.
இந்த மாநாடு இலங்கையில் நடைபெற்றால் அதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் இலங்கை ஜனாதிபதியே பொதுநலவாய அமைப்பின் தவிசாளராக இருப்பார். ஆனால் இலங்கையில் சில அமைச்சர்கள் கூறுவதைப் போல் அவர் தான் அக்காலகட்டத்தில் அமைப்பின் தலைவராகப் போவதில்லை. எலிசபெத் மகாராணியாரே அவர் மரணிக்கும் வரை எப்போதும் அமைப்பின் தலைவராக இருப்பார். அதன் பின்னர் இளவரசர் சார்ள்ஸ் தலைவராக இருப்பார்.
எனவே இந்த பரந்த நோக்கில் பார்த்துத் தான் இந்தியா மாநாட்டை பகிஷ்கரிப்பதைப் பற்றியோ அல்லது பிரதமர் வருவதைப் பற்றியோ அல்லது ஏனைய நாடுகளைப் போல் முழு மூச்சுடன் கலந்து கொள்வதைப் பற்றியோ தீர்மானிக்கும்.
பிரதமர் மாநாட்டில் கலந்து கொண்டால் பாரிய பிரச்சினை ஏற்படும் என கருணாநிதி கூறுகிறார். ஆனால் அவ்வாறு ஒன்றும் ஏற்படாது என்று தான் வரலாறு கூறுகிறது. அடுத்த பொதுத் தேர்தலில் மோடி வருவார் போல் இருந்தால் மட்டும் கருணாநிதி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவார்.