-கே.சஞ்சயன்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ – இந்தியாவுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.
அண்மையில் சனெல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட, விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியில் பணியாற்றிய இசைப்பிரியா கொல்லப்பட்டது தொடர்பான வீடியோவினால் இலங்கை அரசாங்கத்தை விட, அதிகம் கலங்கிப் போனது இந்தியா தான்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இதுபோன்று எத்தனையோ வீடியோக்கள், ஒளிப்படங்கள், போர்க்குற்ற ஆதாரங்கள், கண்டனக் குரல்களை இலங்கை அரசாங்கம் கேட்டு விட்டது. அதனால், இலங்கை அரசாங்கம் இதைப் பெரிதாக எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. எப்போதும் போலவே, இது வெறும் நாடகம் என்ற ஒற்றை வரி மறுப்புடன் அது அடங்கிப் போய் விட்டது.
போர்க்குற்றங்கள் நிகழவில்லை என்று மறுத்து வந்த இலங்கை அரசாங்கம், பின்னர் ஆதாரங்களை சமர்ப்பித்தால், விசாரிக்கத் தயார் என்றது.
எனினும், இதுபோன்ற போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியாகின்ற போதிலும் அதை ஆராயாமல், விசாரணைக்கு நடவடிக்கை எடுக்காமல், எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விடும் வழக்கத்தையே அரசாங்கம் கொண்டிருக்கிறது.
இத்தகைய நிலையில், சனெல்-4 வெளியிட்ட இசைப்பிரியா தொடர்பான வீடியோவினால் அதிகளவில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது இந்தியா தான்.
வரும் 15ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்பது தொடர்பான விவகாரத்தில், இந்த வீடியோ கடுமையான சிக்கலை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து பல மாதங்களாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்தியா மாநாட்டை முழுமையாகப் புறக்கணிக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்துள்ளது.
இதுதொடர்பாக, அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.
அதுபோலவே, தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் - கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக இன்னமும் தனது முடிவை அறிவிக்காது போனாலும், அந்த முடிவு தமிழ்நாட்டுக்கு சாதகமானதாக இருக்காது என்ற கருத்தே நிலவியது.
தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு அமைய, சாதகமான முடிவை எடுப்பதானால், அதை இந்திய அரசு எப்போதோ எடுத்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல், முடிவெடுப்பதற்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதாக கூறி இழுத்தடித்து வந்தது.
கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதில்லை என்ற முடிவினால் தான், பிரதமர் மன்மோகன்சிங் முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்தார். கொழும்பு செல்லும் முடிவை ஏன் முன்கூட்டியே அறிவிக்கவில்லை என்றால், அது தமிழ்நாட்டில் பெரியளவில் போராட்டங்கள் வெடிக்கக் காரணமாகி விடும்.
அதனால் கடைசிநேரம் வரை மௌனம் காக்கும் திட்டத்தில் இருந்தது மத்திய அரசு.
அதேவேளை, இந்தியப் பிரதமர் கொழும்பு செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் புதுடெல்லி மேற்கொண்டு வந்தது. இதுதொடர்பான தகவல்களும் பிரதமர் மன்மோகன்சிங்கின் கொழும்பு பயணத்துக்கு காங்கிரஸ் உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்த செய்தியும் வெளியானது.
இதனால், மன்மோகன்சிங் கொழும்பு செல்வது ஏறக்குறைய உறுதியானது.
இந்தச் சூழலில் தான் இசைப்பிரியா தொடர்பான வீடியோவை சனெல்-4 தொலைக்காட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அது வெளியான போது, கொமன்வெல்த் மாநாடு நடைபெறும் சூழலில் இது இலங்கைக்குத் தான் நெருக்கடியை ஏற்படுத்தப் போகிறது என்றே பலரும் கருதினர்.
ஆனால், இலங்கை அரசாங்கம் இதனைப் பெரியளவில் அலட்டிக் கொள்ளவில்லை. இந்தியா தான் சிக்கலில் மாட்டிக் கொண்டது.
இந்த வீடியோ தமிழ்நாட்டில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னரும், இந்தியா கொமன்வெல்த் மாநாட்டிற்கு செல்ல வேண்டுமா என்று மத்திய அமைச்சர்கள், ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், ஏ.கே.அன்ரனி, நாராயணசாமி போன்றவர்கள் போர்க்கொடி தூக்க, மத்திய அரசு இரண்டுபட்டு நிற்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், கொழும்பு செல்வது குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இசைப்பிரியாவின் வீடியோவின் தாக்கம், மத்திய அரசுக்குள் இருப்பவர்களின் மனச்சாட்சியை உலுப்பத் தொடங்கியுள்ளதன் விளைவே இது. இதுபோன்று போர்க்குற்ற ஆதாரம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தது இது தான் முதல்முறையல்ல.
ஏற்கனவே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த ஆண்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இந்தியா முடிவெடுக்கத் தயங்கிக் கொணடிருந்த சூழலில் தான், பாலச்சந்திரனின் உடல் குண்டுதுளைத்துக் கிடக்கும் ஒளிப்படங்களை வெளியிட்டது சனெல்-4 தொலைக்காட்சி.
அதற்குப் பின்னர், கடந்த மார்ச் மாதம், இரண்டாவது தடவையாக இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் இந்தியா, கடைசி நிமிடம் வரை தனது முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்தது.
அப்போது தான், பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு ஆதாரமான ஒளிப்படங்கள் வெளியாகின.
இது தமிழ்நாட்டில் மட்டுமன்றி, புதுடெல்லி, மும்பை போன்ற நகரங்களிலும் பெரும் போராட்டங்களை நடத்தும் அளவுக்கு தாக்கத்தை செலுத்திருந்தது.
கடைசியில், இந்தப் போர்க்குற்ற ஆதாரங்களுக்கு அடிபணிந்து, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதுபோலத் தான் இப்போதும், நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சனெல்-4 வெளியிட்ட இசைப்பிரியாவின் வீடியோ, தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்திய ஆட்சியாளர்களினதும் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே போராட்டங்களும் வெடிக்கின்றன.
இன்னமும் இத்தகைய போராட்டங்கள் பெரியளவில் தீவிரம் பெறவில்லையாயினும், கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டால், அது பெரியளவில் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு இந்தியாவும் ஆதரவளித்தது என்பது வெளிப்படையான உண்மை. இந்தப் போரை நடத்தி முடிப்பதற்காக, இலங்கை - இந்திய அதிகார மட்டங்களில், ஒரு கூட்டுக் குழுவும் அமைக்கப்பட்டு, பிரச்சினைகள் ஏற்படாமல், விவகாரங்கள் கையாளப்பட்டன.
அதைவிட போரை நிறுத்துவதற்கான, வெளியுலக முயற்சிகள் பல முன்னெடுக்கப்பட்ட போது, இந்தியாவே அவற்றைக் கெடுத்து விட்டதான குற்றச்சாட்டுகளும் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன.
புலிகளை முடக்குவதற்குத் தேவையான போர்க்கப்பல்கள் மற்றும் நவீன போர்க்கருவிகளை, இந்தியா நேரடியாகவே இலங்கைக்கு வழங்கியும் இருந்தது.
இந்தியா நினைத்திருந்தால், போரை நிறுத்தி மீறல்கள் நிகழாமல் தடுத்திருக்கலாம் என்று பெரும்பாலான தமிழ்மக்கள் கருதுகின்றனர். இத்தகைய நிலையில், இந்தப் போருக்குத் துணை நின்றதற்கான பலனை இந்தியா இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
போர்க்குற்றங்கள் தொடர்பான இன்னும் பல வீடியோக்களும், ஒளிப்படங்களும் இனிவரும் காலங்களிலும் வெளியாகலாம். அவற்றையெல்லாம், இலங்கை அரசாங்கம் கண்டுகொள்ளுமா இல்லையா என்பதை விட, இந்தியாவே அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கும்.
ஏனென்றால், அவை இந்தியாவினது வெளியுறவுக் கொள்கையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தவையாக உள்ளன.