2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை, இந்திய, தமிழக தலைவர்களுக்கு அரசியல் ஆயுதமாகிவிட்ட 'ஷோகம்'

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

கம்பியா என்ற ஆபிரிக்க நாடு கடந்த மாதம் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது. காலனித்துவத்தின் சின்னமாக இருக்கும் காலனித்துவ அமைப்பொன்றில் அங்கத்துவம் வகிப்பது சுதந்திர நாடொன்றுக்கு பொருத்தமாகாது என்று கூறியே அந் நாட்டுத் தலைவர்கள் அந்த முடிவை எடுத்தனர்.

ஒரு நாட்டின் தன் மானம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அது சரியான முடிவாகும். ஏனெனில் பொதுநலவாய அமைப்பானது முன்னாள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் இருந்த நாடுகளை (காலனிகளை) தொடர்ந்தும் ஓரளவுக்காவது தமது ஆதிக்க வீச்சுக்குள் வைத்திருப்பதற்காக பிரிட்டன் 1949ஆம் ஆண்டு அமைத்த அமைப்பாகும்.

பிரிட்டிஷ் அரசாங்கம் தமது சாம்ராஜ்ஜியத்திலிருந்த நாடுகளுக்கு சுதந்திரத்தை வழங்கியதில் பெருந்தன்மை ஏதும் இல்லை. நிர்ப்பந்தத்தின் காரணமாகவே அந் நாடுகளுக்கு சுதந்திரம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் காலனித்துவ நாடுகளில் சுதந்திர போராட்டங்கள் வளர்ந்தன. அக் காலத்தில் கம்யூனிஸ தத்துவம் வேகமாக பரவி வந்த காரணத்தினால் அப் போராட்டங்கள் சோசலிஷப் புரட்சிகளாக வெடித்து தமது வருமான வழிகள் பறிபோகலாம் என்ற அச்சமும் பிரிட்டனுக்கு ஏற்பட்டு இருந்தது. உலகப் போரின் காரணமாக பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து இருந்த பிரட்டனால் அவ்வாறான புரட்சித் தொடரொன்றை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது.

எனவே அந்தந்த காலனித்துவ நாடுகளில் தம்மை சார்ந்தவர்களிடம் ஆட்சியை கையளித்து அந் நாடுகளில் இருந்த தேயிலை தோட்டங்கள் போன்ற தமது வருமான வழிகளை பாதுகாத்துக் கொள்வதே காலனித்துவ நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதன் நோக்கமாகும். உலகப் போரின் பின்னர் ஒரே காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான நாடுகள் சுதந்திரம் அடைவதற்குக் காரணம் இதுவாகும்.

சுதந்திரம் என்று ஒன்று வழங்கப்பட்டாலும் பிரிட்டிஷ் மகா ராணியாரின் பிரதிநிதியான மகா தேசாதிபதி ஒருவர் அந் நாடுகளில் நியமிக்கப்பட்டு இருந்தார். இலங்கை போன்ற பல நாடுகளில் பிரிட்டிஷ் படை தொடர்ந்தும் நிலை கொண்டிருந்தது. அந் நாடுகளின் நீதி மன்றங்கள் தொடர்தும் பிரிட்டிஷ் பிரிவு கவுன்சிலுக்கு கீழ்பட்டே இருந்தது. 'சுதந்திரம் அடைந்த' அந் நாடுகளை ஒன்று சேர்த்து பொதுநலவாய அமைப்பு என்ற அமைப்பொன்றும் 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

எனவே அந்த அமைப்பு காலனித்துவத்தின் சின்னமாகும் என்ற கம்பிய தலைவர்களின் வாதம் பிழையானதல்ல. ஆனால் இந்த வாதம் அக் காலத்திலேயே இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டு இருந்தது. அதனை புரிந்து கொள்ள கம்பிய தலைவர்களுக்கு அறுபது ஆண்டுகளுக்கு மேல் சென்றுள்ளது.

இந்த அமைப்பு ஆசியான், ஆபிரிக்க ஒன்றியம் போன்ற தாக்கமுள்ள அமைப்பல்ல. இப்போதைக்கு அது பல நாடுகளால் தமது குறுகிய கால அரசியல் நோக்கங்களுக்காகவே பாவிக்கப்படுகிறது. இம் முறை இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் தாம் பங்குபற்றுவதை இந்தியப் பிரதமர் கடைசி நேரம் வரை கூறாமல் இருப்பது, தமிழ்நாட்டுத் தலைவர்களும் கனடாவும் மாநாடு இலங்கையில் நடைபெறுவதை எதிர்த்தல், தேசப் பற்றைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளும் இலங்கை அரசாங்கம் மாநாட்டின் காலனித்துவ பன்பைப் பற்றி கவனியாது அதனை நடத்தும் வாய்ப்பை பெற்றமை பாரியதோர் சாதனையாக காட்டிக் கொள்ளல் ஆகிய அனைத்தும் அது போன்ற அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியாக எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை பொறுத்தவரை இந்த மாநாடு இலங்கைக்கு வெகுவாக சாதகமாக இருக்கிறது. 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பொதுநலவாய அமைப்பின் 'எஸோ ரொக'; பிரகடனத்தின் பிரகாரம் பொதுநலவாய அமைப்பின் நோக்கங்களில் மனித உரிமைகளை வலியுறுத்துவதும் ஒன்றாகும். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தற்போது சர்வதேச ரீதியாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவதானது இலங்கையின் மனித உரிமை நிலைமை அவ்வளவு மோசமானதல்ல என்று பொதுநலவாய அமைப்பு கூறுவதற்கு சமமாகும். இது இலங்கை சர்வதேச ரீதியாக பெற்ற மாபெரும் அங்கீகாரமாகும்.

ஆனால்; இலங்கை மண்ணில் நடைபெறும் இதே மாநாட்டில் வைத்து மனித உரிமை விடயத்தில் இலங்கை கண்டிக்கப்படும் அபாயமும் இல்லாமல் இல்லை. மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற புலம் பெயர் தமிழர்களின் பெரும் நெருக்குதலின் மத்தியில் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்கனவே அதை கோடிட்டுக் காட்டியுள்ளது. நாம் கடும் செய்தியுடனேயே மாநாட்டுக்குச் செல்கிறோம் என கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி பிரிட்டிஷ் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவல்கள் தொடர்பான செயலாளர் ஹியூகோ ஸ்வயர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வைத்துக் கூறியிருந்தார்.

மனித உரிமை விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கப் போகும் அங்கீகாரத்தை தடுப்பதற்காகவே தமிழ்நாட்டுத் தலைவர்கள் இலங்கையில் மாநாடு நடைபெறக் கூடாது என்றும் நடைபெற்றால் இந்தியா அதனை பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் அதுவும் முடியாவிட்டால் இந்திய பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் இந்த நிலைப்பாடானது இலங்கை தமிழர்களையே பாதிக்கக் கூடும் என இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையின் பிரதம புலனாய்வுத் துறை அதிகாரியாகவிருந்து தற்போது சென்னையில் அரசியல் ஆய்வாளராகவிருக்கும் கேர்ணல் ஆர். ஹரிஹரன் வாதிடுகிறார். மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளாவிட்டால் அது தம்மை இழிவு படுத்திய செயல் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருதலாம் எனவும் அது ஏற்கனவே சீனாவுடன் நெருங்கிப் பழகும் இலங்கையை மேலும் சீனாவின் பக்கம் தள்ளிவிடும் என்றும் நற்பு ரீதியாகவே இலங்கையின் மீது செல்வாக்கு செலுத்தக் கூடிய தன்மையை இந்தியா இழந்து விடும் என்றும் அவர் வாதிடுகிறார்.

இதே வாதத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகளும் முன்வைக்கின்றனர். இந்த நற்பு ரீதியான செல்வாக்கின் மூலமே 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்யவும் பின்னர் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கவும் இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சியை இந்தியா தடுத்தது என அவ் அதிகாரிகள் வாதிடுகிறார்கள்.

இலங்கை அரசாங்கமும் சீனாவின் பக்கம் சாய்ந்து இந்தியாவுடன் முட்டி மோத விரும்பவில்லை. ஆனால் தாம் எதை செய்தாலும் இந்தியா தமக்கு எதிராகவே செயற்படும் என்று இலங்கை அரசாங்கம் நினைக்கும் நிலை ஏற்பட்டால் அவ்வரசாங்கம் இந்தியாவை புறக்கணித்து மேலும் சீனாவின் பக்கம் சாயலாம். அப்போது இலங்கையில் அதிகார பரவலாக்கல் இந்திய மீனவர்கள் பிரச்சினை ஆகிய விடயங்கள் மேலும் மோசமாகலாம் என அவ் அதிகாரிகள் மேலும் வாதிடுகிறார்கள்.

அதேவேளை தமது வரவை பற்றிய ஏக்கத்தை இலங்கை அரச தலைவர்களின் மனங்களில்  ஏற்படுத்தி தமது பெறுமதியை இலங்கை அரசாங்கம் உணரும் வகையில் இந்திய அரசாங்கம் தமது முடிவை முன்கூட்டியே அறிவிக்காமல் 'ஸஸ்பென்ஸில்' வைத்திருக்கிறது.

ஆனால் தமிழ் நாட்டுத் தலைவர்கள் அவ்வாறான பக்குவ நிலைப்பாட்டை கொண்டிருக்க விரும்பவில்லை. அங்கு இலங்கை தமிழர்கள் விடயத்தில் பரிந்துப் பேசி அடுத்த தேர்தலுக்காக வாக்குத் திரட்டும் போட்டியொன்று நடைபெறுவதால் உணர்ச்சிகளை தூண்டும் போட்டியொன்றும் நடைபெற்று வருகிறது. எனவே அவர்கள் இந்திய தேசிய நலன் ஒரு புறமிருக்க எந்த இலங்கை தமிழர்களுக்காக தாம் குரல் கொடுப்பதாக கூறுகிறார்களோ அதே தமிழர்களுக்கு எது நடந்தாலும் அதே தமிழர்களின் பெயரால் மாநிலத்தில் போட்டிக் கட்சியை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டே செயற்படுகிறார்கள்.

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இந்த இரண்டு நிலைப்பாட்டையும் கொண்டவர்கள் இருக்கிறார்கள். சிலர் இந்திய பிரதமர் மாநாட்டுக்கு வருகை தராமல் இலங்கை அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கி அதன் மூலம் திருப்தியடைய காத்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலர் இலங்கை அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் தமது ஆற்றலை இந்தியா பறிகொடுக்கக் கூடாது என்று கடந்த வாரம் சென்னையிலிருந்து வெளியிடப்படும் இந்து பத்திரிகையிடம் கூறியிருந்தனர்.

இறுதியில் 'ஷோகம்' (CHOGM)  என்று சுருக்கமாக அழைக்கப்படும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு இலங்கை, இந்தியா, தமிழ்நாடு, கனடா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவர்களால் தமது சொந்த அரசியல் நலன்களுக்காக பாவிக்கப்படுகிறது. அதில் பிழையேதும் இல்லை. இந்த அமைப்பில் வேறு பயனும் இல்லையே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X